"முதல் பரிசும் சிறுகதைக்கான எனது முதல் பதிவும்"
- சுகன்யா ஞானசூரி.
கவிமதி சோலச்சியின் "முதல் பரிசு" சிறுகதைத் தொகுப்பு இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இந்நூல் கவிஞரின் முதல் நூலும் கூட. சிறுகதையை முதல் தொகுப்பாக வெளிக்கொண்டு வந்த கவிஞருக்கு முதலில் எனது வாழ்த்துகள்..... 43 சிறுகதைகள்... நூல் முழுமையும் நிறைய பாத்திரப் படைப்புகள்.... பாக்யா வார இதழ், தாழம்பூ இதழ் ஆகியவற்றில் பிரசுரமான கதைகளும் அடக்கம்.
புதுக்கோட்டை மண் மணம் மாறாத பாத்திரப் படைப்புகள். சமூகத்தில் பீடித்திருக்கும் வறுமை, சாதியக் கொடுமை போன்றவைகள் இவரது சிறுகதைகளில் விரவிக் கிடக்கிறது. விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாகவும் சில சிறுகதைகள் படைத்துள்ளார்.
இத்தொகுப்புக்கு "சாம்பல்" அல்லது "கீரிமலை" எனப் பெயர் சூட்டியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. முதல் தொகுப்பு என்பதால் சென்டிமென்ட் கருதி தலைப்பை மாற்றியிருக்கக் கூடுமென கருதுகிறேன். இது ஆசிரியரின் உரிமை.
43 சிறுகதைகளில் என் மனதைத் தொட்டவை, தைத்தவை மொத்தம் 28 கதைகளே. மற்றக் கதைகள் பிடிக்கவில்லை என்பது அர்த்தமில்லை.... பெரிதாக எனக்கு தாக்கத்தை உண்டுபணவில்லை. அவ்வளவே. சில கதைகளை வேகமாக முடித்து விடுகிறார். "ஆட்டுக்கறி" கதையை இன்னும் சற்று நீட்டி விடமாட்டார எனும் ஆர்வத்தை வாசிப்பாளனிடம் தூண்டவும் செய்கிறார். இதுதான் சிறந்த கதையாளனுக்கான உக்தி.
"கீரிமலை" கதையில் வரும் இரவி கதாபாத்திரம் இன்றைய தலை சிறந்த மனிதர் சகாயம் அவர்களை பிரதிபலிக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நாம் எதையும் விட்டுச் செல்லப் போவதில்லை எனும் ஆதங்கம் மேலிடுகிறது. அந்த கீரிமலையும் மேலூர் கீழவளவு மலையும் ஒன்றாகவே வாசிக்கும் என் மனதுக்குள் படர்கிறது.
கவுரவக் கொலைகளில் பலியான இளவரசன், கோகுல்ராஜ் போன்றவர்கள் இப்படித்தான் இரையாகிப் போயிருப்பார்கள் என்பதை "சாம்பல்" சிறுகதை உணர்த்துகிறது. அந்த மீனாட்சியின் கதறல் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது எரியும் நெருப்பின் ஜுவாளைகளினூடாக. அடக்கியாளும் சமூகத்தின் காதுகளுக்கு அவளின் கதறல் கேட்பதில்லை.
இதுபோன்ற இன்னும் நிறைய சிறுகதைகளை யாக்குவதற்கு கவிஞர் சிறுகதைகளின் முன்னோடிகளின் எழுத்துகளை நிறைய வாசிக்க வேண்டும். சில கதைகள் சிறுகதை வரையறைக்குள் வராமல் குறுங்கதை, ஒரு நிமிடக் கதையின் தொனியிலும் வருகிறது. இவற்றைச் சரிசெய்து இன்னுமொரு சிறப்பான தொகுப்பைத் தருவார் நண்பர் கவிமதி.சோலச்சி எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
புதுக்கோட்டை மண் பல படைப்பாளிகளை உருவாக்கும் கலைக்கூடம்.... அந்தக் கலைக்கூடத்தின் முதல் படியில் சோலச்சி தனது தடத்தை பதித்து விட்டார் என்றால் மிகையல்ல. புதிய படைப்பாளர்களின் பதிப்புகளை வெளியிட்டு அறிமுகம் செய்கின்ற இனிய நந்தவனம் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.....உங்கள் எழுத்து சிறக்க வாழ்த்துகள் சோலச்சி.....
(பின்குறிப்பு: இது விமர்சனம் அல்ல; எனது வாசிப்பு அனுபவக் கருத்தே)
நூல் : முதல் பரிசு (சிறுகதைகள்)
ஆசிரியர் : சோலச்சி
முதல் பதிப்பு : ஜூலை 2015
வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி.
விலை : ரூ 80/-
தொடர்புக்கு பேச : 9443284823 (பதிப்பகம்), 9788210863 (ஆசிரியர்).
No comments:
Post a Comment