Sunday, October 25, 2015

கவிதைகள்-3



தமிழ்ப் பண்பாடு தேவை!அம்மா, அப்பா என்ற வார்த்தை
அரிச் சுவடியோடு போயே போச்சு!
மம்மி, டாடி என்றால் இப்போ
பெத்தவங்க மனம் குளிர்வ தென்றாச்சு!
தமிழ் என்றால் நாகரிகம் அற்றவராம்!
அயலவர் மொழிகள்தாம் சுவாசக் காற்றாம்!
நாகரிகம் தோன்றிய ஆதி நாட்களின்
தாய் மொழியே தமிழ் மொழிதானே!
இதை மறுப்பவர் வருவீர் என்னோடு!
பல ஆதாரம் செப்புவேன் பதத்தோடு!
பண்பட்ட சமூகம் தோன்றிட வந்த
மூத்த மொழி தமிழ் மொழி!
புண்பட்டு நிற்குது இன்றைய தலைமுறையில்!
புடம் போட வருவீர் இளையோரே!
முன்னேறிய உலகில் பண்பாடு தேவை!
மூச்சுக் காற்றில் தாய்மொழியை நீவை!
எத்தேசம் சென்றாலும் எந்நிலை நோற்றாலும்
பொற்காசு கிடைத்திடுமென பொல்லாங்கு செய்யாதே!
அப்பால் உளரெல்லாம் ஆர்ப்பரிப்பர் உன்மீதல்ல
இப்பால் உள்ளஉன் தாய்மொழி தமிழ்மீதே!
எந்நாளும் இதை மறவாதீர் இளையோரே!
பொன்நாளும் அமையுமே பண்பட்ட தமிழாலே!
இந்நாளே வளர்த்திடு இனியதமிழ்ப் பண்பாடு!
முன்னேறிய உலகிலே முன்னாலே சென்றிடு!
                            
==============================
=========================
அலைகளின் மீதலைதல்!

கடற்கரைக் காற்றினை
சுவாசிப்பவர்களே....
அலைகளில் கால்
நனைப்பவர்களே....
கொஞ்சம் நில்லுங்கள்.
வெட்டி வீழ்த்திய
மரக் கிளைகளாய்
மனித உடல்கள்
பிணக் குவியல்களாய்
ஈழ தேசம்
சவக் காடாய்....
உரிமைகள் கேட்டு
உடைமைகளை இழந்து
உறவுகளை விட்டு
புலம் பெயர்ந்தவர்கள் - நடுக்கடலில்
அக்கரையா இக்கரையா
தெரியாத வைகறையில்
உடைந்துபோன படகில்
உயிரை விட்டு.
காற்றோடு சேர்ந்து - அலை
கரை சேர்க்குது
பிரிந்துவிட்ட உயிர்களின்
மரண ஓலங்களை.....
மறந்தும்
கால் நனைப்பதாய்
மிதித்து விடாதீர்கள்
கரை தேடியே
அலைகளின் மீதலைகின்றது
அவர்களின் ஆன்மாக்கள்!

========================================================
முதிர்கன்னி!
மிக்சரும் பபல
தேநீர்க் குவளைகளும்
பரிமாறியாச்சு.......
இன்னும்
சில நாட்களில் - வயது
நாற்பதை எட்டிவிடும்
ஏக்கத்தோடு
முதிர்கன்னி!

========================================================
அழகி!
கறுப்புப் பேரழகி
கிளியோபாட்ரா
இந் நூற்றாண்டில்
வாழ்ந்திருந்தால்.....
அழகி எனும்
அந்தஸ்து கிடைக்காமல்
அழுதழுதே இறந்திருப்பாள்!
சிவப்புத் தோல் - மட்டுமே
அழகெனத் தீர்மானிக்கின்றன
விளம்பர நிறுவனங்கள்!

========================================================
சுதந்திர தேசத்தின் அடிமைகள்!
யார் சொன்னது
இந்த நாடு
வெள்ளைய ரிடமிருந்து
சுதந்திரம் பெற்றதென?
டோமினாஸ் பீட்ஷாவுக்கும்
கே ஃ எப் சி சிக்கனுக்கும்
இன்றைய
இளைய தலைமுறை
அடிமையாகி இருக்கையில்!

========================================================
நகரத்து மழை!
கொட்டித் தீர்த்த
கோடை மழையில்
கால் நனைத்து - காகிதக்
கப்பல் விட்டு
கொண்டாட முடியவில்லை....
நகரத்தின் கழிவுகளோடு
பயணிக்கிறது
மழை நீர்!

========================================================

தீ....

அக்னி
மீது ஏனோ
அடங்காத
கோபம் எனக்கு....
மழை நனைத்த
ஏழையின் குடிசையில்
அடுப்பெரிக்கத் தடுமாறிய
தீ....
கெட்டவர்
கரம் தீண்டியதும்
எப்படி முடிந்தது
சட்டென்று
பற்றி எரிக்க? - அந்த
ஏழையின் குடிலை!
==========================================================

நினைவுகளில்!

கிளுவை முள்முருக்கு
பூவரசமரக் கதியால்களோடு
தென்னை
பனையோலை வேலியென
நிழல் தரும்
ஒழுங்கைகளில் நான்
ஓடியாடி விளையாடினேன்!
ஆளுயர
நெல் வயலில்
பட்டம் விட்டு
மகிழ்ந்திருந்தேன்!
உப்புக்
காற்று வீசும்
அந்தி
மாலைப் பொழுதுகளில்
கடல்
அலைகளில் கால்நனைத்து
களிப்புற்றிருந்தேன்!
மாரி
காலக் குளங்களில்
மீன்
என எண்ணி
வால்
பேத்தைகள் பிடித்து
இரசித்திருந்தேன்!
அழகிய
என் கிராமத்தின்
இந்த
நினைவுகளைத் தவிர
இன்று
என் தேசமும்
என்னிடமில்லை!
=======================================================

பிக்காசோக்கள்!
தூரிகைகள் எதுவுமின்றி - வண்ணச்
சுண்ணம் கொண்டு...
தேசப்பற்று முதல்
தெய்வபக்தி வரை - அனைத்தையும்
அழகழகாய்த் தீட்டுகிறான்.
அவன்
வாழ்வில் மட்டும் - ஏனோ
கருப்பு வண்ணம்
நீங்க மறுக்கிறது.
பரபரப்பான
அந்தச் சாலையில் - பார்த்து
ரசிக்காது செல்லும்
மக்கள் மத்தியில்...
ஆட்சி மாற்றங்களை
விரைவாகவே நிகழ்த்துகிறான்!
அனைத்து மதங்களையும்
ஒன்றாக்கி வெல்கின்றான்!
பறவைகள், விலங்குகள் - ஏன்
பரபரப்பாய் பறக்கும் - இந்த
மனித இயந்திரங்களையும்
அவன் வண்ணமாக்கியிருக்கிறான்!
எனக்குத்
தெரிந்த வரையில் - பிக்காசோ
இவனாகத்தான் இருக்கமுடியும்!
ஆம்
நெட்டித் தள்ளும் - அவன்
நெஞ்சு எலும்புகளின்
எண்ணிக்கையை காட்டிலும் எண்ணிலடங்கா
ஓவியங்களை - அவன்
தீட்டிக் கொண்டேயிருக்கிறான்!
அடுத்தடுத்த சாலைகளிலும்
இவன்போல்...
ஆயிரமாயிரம் பிக்காசோக்கள்
இன்னுமின்னும் எதையெல்லாமோ
தீட்டிக் கொண்டேயிருப்பார்கள்
ஒருவேளை உணவுக்காக.
            
- சுகன்யா ஞானசூரி.



No comments:

Post a Comment