Friday, April 19, 2019

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

தமிழக நண்பர்கள் சிலரது முகநூல் பக்கத்தில் ஈழத் தமிழர்கள் மீதும், ஈழ அகதிகள் மீதும் ஒவ்வாமை இருப்பதைக் காண முடிந்தது. இதை பாசிசவாதிகள் செய்திருந்தால் நாம் கடந்து செல்லலாம். அல்லது சிறு கண்டணத்தையாவது பதிவு செய்யலாம். ஆனால் கருஞ்சட்டைக்காரர்களும், செஞ்சட்டைக்காரர்களும் ஆகிய எம் நண்பர்கள், தோழர்கள் செய்திருப்பதுதான் மனசை வலிக்கச் செய்கிறது.

"அம்மணமாக ஓட விடுவோம் என்பதும்",  "உங்களுக்குத்தான் ஓட்டு உரிமை இல்லைல மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே", உன் எல்லையோடு நீ நின்றுகொள்". என எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? இப்படியான மனநிலை பாசிச மனநிலை இல்லையா? இதைத்தான் பெரியாரிசமும், கம்யூனிசமும் கற்றுத் தருகிறதா? தேசமற்று அலையும் அகதி தேசியங்களை பேசக்கூடாதா? அவர்களுக்கு அந்த உரிமை இல்லையா? இது தனிநபர் சார்ந்த பிரச்சினை என தோழர்கள் யாரும் சமரசம் செய்வீர்களா?

தொப்புள்க்கொடி உறவுகள் எனச் சொல்வதெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா? அகதிகள் மீதான உங்கள் பார்வை முற்போக்கு முகமூடி அணிந்த பாசிச மனம்தானா?

அகதிகளில் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள், பெரியாரிசம் பேசுபவர்கள், கம்யூனிசம் பேசுபவர்கள் என பலர் இருக்கிறார்கள். அது அவரவர் புரிதல் சார்ந்தது. அவரவர் சமூக, மனநிலை சார்ந்தது. நாம் நல்லவற்றை புரிய வைக்க முயற்சி செய்யலாமே ஒழிய கட்டாயப்படுத்தக்கூடாது. ஏற்றுக்கொள்ளவில்லை எனில் சகிப்புத் தன்மையோடு கடந்து செல்ல வேண்டும். இதைத்தான் நான் வாசித்த பெரியாரும், அம்பேத்கரும், மார்கஸும் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். நீங்கள் எப்படி இவற்றிலிருந்து தவறினீர்கள்?

2009 ன் பேரழிவுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் சிறுபான்மையாக இருக்கும் நாம் தமிழ், தமிழர் எனும் உணர்வோடு, தொப்புள்கொடி எனும் உறவோடு உங்களோடு பெரும்பான்மையாக உணர்ந்தோம். ஆனால் உங்களிலிருந்து இப்படியான வன்மத்தோடும், ஒவ்வாமையோடும் வருபவர்களைக் கண்டு நாங்கள் அச்சப்படுகிறோம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதெல்லாம் வெறும் சொல்லல்ல என்பதை நம்பும் அதேநேரம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

- சுகன்யா ஞானசூரி
18/04/2019

Saturday, April 13, 2019

நன்றேது? தீதேது?


நன்றேது? தீதேது?

கிட்டத்தட்ட பத்து ஆளுமைகளுடனான உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். தரமான தாள், சிறப்பான வடிவமைப்பு மற்றும் பொக்கேற் நாவல் அளவிலான கையடக்க உருவாக்கம் என சிறப்பாக இருந்தாலும், ஒற்றுப் பிழைகளும், பத்தாவது உரையாடல் ஒன்பதாவது உரையாடலின் தொடர்ச்சியா அல்லது தனி உரையாடலா எனும் குழப்பமான அச்சமைப்பும் சரி செய்யப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பதிப்பகத்தின் கவனக்குறைவையும் அவதானிக்க முடிகின்றது.
உரையாடல்கள் பற்றி நான் சொல்வதைக் காட்டிலும் ஆளுமைகளின் என் மனதைத் தொட்ட பொன்னெழுத்துக்களை தந்திருக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.

என் கவிதைகளின் அரசியல் பேசும்போது அவர்களுடைய கவிதைகளின் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்.
- கடங்கநேரியான்.

வணிகத்தன்மையான நூல்களை விற்றுத்தான் இலக்கியத்தரமான நூல்களையே பதிப்பிக்க முடிகிறது. பதிப்பகத்தின் பெயரை தக்க வைப்பதற்கு இலக்கியமும், இலக்கியத்தை தக்கவைக்க வணிகமும் தேவைப்படுகிறது.
- தோழமை பூபதி.

இந்திய இலங்கை இலக்கியச் சந்தையில் புலி எதிர்ப்புதான் இப்போது நல்ல வரவேற்பு. அதுதான் செளகரியமானதும் பாதுகாப்பானதும் கவனத்தை ஈர்க்கக்கூடியதுமாய் மாறிவிட்டது.
- தீபச்செல்வன்.

தமிழகத்தில் ஈழ விடுதலை தொடர்பாக பேசியவர்கள், பேசிக்கொண்டிருப்பவர்கள், பேசப்போகிறவர்கள் எல்லோருக்கும் பின்னால் ஒரு குழுமனப்பான்மையும் சூழ்ச்சியும் இருக்கிறது.
- யுகபாரதி.

குடும்ப அமைப்பிற்குள்ளும், பொது வெளியிலும் தாங்கள் நினைப்பவற்றையெல்லாம் செய்ய முடியாதவர்களாகவே பெரும்பாலான பெண்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
- தமிழ்நதி.

தமிழினத்தின் பீடையான சாதி, வர்க்க, பாலின ஆதிக்கத்தன்மைகள் களையப்பட்ட, அனைத்து தமிழ் மக்களும் சமத்துவம் என்கிற ஒரே விசையில் உரிமைகளும் பண்பாடுகளும் மீட்டெடுக்கப்பட்டு தமிழர் நிலம், அவர்களின் வளம் என்பதோடு முற்போக்கு மிக்க தேசியமாக தமிழ்த்தேசியம் இருக்க வேண்டும்.
- திருமுருகன் காந்தி.

முகாம்களில் உள்ளவர்களின் குரல் சுடுகாட்டின் அமைதியாக்கப்பட்டிருக்கிறது.
- பத்திநாதன்.

சிவப்பணுக்களும் வெள்ளையணுக்களும் நம் உடலின் உள்ளே போராடும் வரைதான் வாழ்க்கை. அது போராட்டத்தை நிறுத்தும்போதுதான் நமக்கு மரணம் சம்பவிக்கும்.
- தேன்மொழி தாஸ்.

தங்கள் மதத்தில் நிர்வாணத்தை மார்க்கமாகக் கொண்டவர்கள், ஒரு இனத்தை நிர்வாணமாக்கிப் புசித்ததும், கொண்டாடியதும் நாகரீக உலகம் இதைப் பார்த்திருந்ததும் மனிதகுலப் பண்பாட்டுக்கே அவமானமாகும்.
சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களின் அரசியலுக்குள் உலக அதிகார நாடுகளின் அரசியல் தலையீடு செய்தால் அது ஒரு மனிதப் பேரழிவையே பரிசளிக்கும் நயவஞ்சகமானது என்பதற்கான எடுத்துக் காட்டாக முள்ளிவாய்க்கால் அழிவு நிகழ்ந்து விட்டது.
- குணா கவியழகன்.

விடுதலையே அரசியலைத்தான் குறிக்கிறது. பக்திப் பூர்வமாக அணுகினால் பிரபாகரன் வருவார் என்பதை மட்டுமே நம்பிக்கொண்டு போராட்டம் ஒருகட்டத்தோடு முடங்கி விடும். அரசியல் பூர்வமாக அணுகினால் பிரபாகரன் வந்தாலும் வராவிட்டாலும் ஏன் வருவதாக சொல்லிக்கொண்டே இருந்தாலும் போராட்டம் அடுத்த கட்ட தேவையினை நோக்கி நகரும்.
- மகா.தமிழ் பிரபாகரன் (விகடன் மாணவ நிருபர்).

Saturday, April 6, 2019

உயிர் எழுத்தும் நானும்...

உயிர் எழுத்தும் நானும்

நீண்ட நாட்களாக உயிர் எழுத்து இதழில் எனது ஒரு கவிதையாவாது வந்துவிட வேண்டும் எனும் அவா இருந்து வந்தது. கடந்தாண்டு உயிர் எழுத்து நிறுத்தப்படுகிறது என முகநூல் பதிவுகள் வழி அறிந்து மனவருத்தம் கொண்டிருந்த சமயத்தில் உயிர் எழுத்து மீண்டும் வெளிவரும் எனும் அறிவிப்பு அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. 2013ல் உயிர் எழுத்து இதழை அறிமுகம் செய்து வாசிக்கத் தந்தவர் ஐயா மார்க்கண்டன் முத்துச்சாமி Markandan Muthusamy அவர்கள்.


கடந்தாண்டு உயிர் எழுத்து மறுபிறப்பு எடுத்து இரண்டாவது மாதத்தில் 16/07/2018 அன்று எனது ஏழு கவிதைகளை அனுப்பி வைத்திருந்தேன். நம்பிக்கை இல்லாமல்தான். அந்த ஆண்டுக்கான சந்தாவினை கட்டிவிட்டு, சில புத்தகங்களையும் வாங்கி வரலாம் என நானும், ஐயா மார்க்கண்டன், அண்ணன் மணிகண்டன் திருநாவுக்கரசு Manikandan Thirunavukkarasu ஆகியோருடன் 22/07/2019 அன்று முதல் முறையாக உயிர் எழுத்து அலுவலகம் செல்கிறேன். அப்போதுதான் நான் உயிர் எழுத்து ஆசிரியர் சுதீர் செந்தில் Sudheer Sendhil அவர்களை பார்க்கிறேன். குடோனைத் திறந்துவிட்டு உங்களுக்கு பிடித்த புத்தகங்களை எடுத்துக்கொள்ள சொன்னார்.


அப்போது நடந்த உரையாடல் என்றும் என்னால் மறக்கவே முடியாது. எனது கவிதைகள் குறித்து ஆகஸ்ட் மாதம் இதழில் வெளியாகும் இருக்கும் இதழில் ஒரு பையன் சிறப்பாக கவிதை எழுதியிருக்காரு. அதில் கடைசி கவிதை சின்னதா இருந்தாலும் ஆழமாக இருக்கிறது என மார்க்கண்டன் ஐயாவிடம் அச்சுக்கு போயிருக்கும் இதழின் புரூப்பை தந்து வாசித்துப் பார்க்கத் தந்திருந்தார். இந்தக் கவிதைகளை எழுதிய பையன் இவர்தான் என என்னை அறிமுகம் செய்து வைத்தார். கனவு போலவே இருக்கிறது இன்னும்.


அந்த மகிழ்ச்சியை நொறுக்கும் விதமாக ஏப்ரல் 2019 இதழ் தலையங்கம். மீண்டும் உயிர் எழுத்து தன் இயக்கத்தினை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதழ் நடாத்தும் துயரம் என்ன என்பதை தமிழக முகாம்களில் வாழும் ஈழ அகதி மாணவர்களுக்கான "வேர் விடும் நம்பிக்கை" இதழை இற்றைவரை கொண்டுவர இயலாமல் இருப்பதினூடாக நான் அறிந்து கொள்கிறேன்.


உயிர் எழுத்து பலருக்கான முகவரி தந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதில் என்னையும் அடையாளப்படுத்தியிருக்கும் உயிர் எழுத்து இனி வராது என்னும் அறிவித்தல் அகதியான துயரத்தில் மீண்டும் ஒரு துயரத்தை தருகிறது.

வேதனைகளோடு
- சுகன்யா ஞானசூரி.