Showing posts with label நூல் குறித்த பார்வை. Show all posts
Showing posts with label நூல் குறித்த பார்வை. Show all posts

Tuesday, July 15, 2025


 கடைசி இலை – பிறமொழிக் கதைகள்

- சுகன்யா ஞானசூரி 


மொழி பெயர்ப்பு என்பது மூலப் படைப்புக்கும் நாம் வாசிக்கும் மொழிக்கும் இடையிலான ஒரு அன்யோன்யத்தை உருவாக்குவது. கதையின் மாந்தர்களோடு இணைந்தே நாமும் பயணிப்பது. குறிப்பாக மூலப் படைப்புக்கு களங்கம் இல்லாமல் ஆதார ஸ்ருதியாக இருப்பது. 

பன்முக மேடை ஒருங்கிணைத்த க. சி. சிவகுமார் சிறுகதைப் போட்டியில் பங்குபற்றியிருந்தேன். பரிசும் பெற்றிருந்தேன். அதற்காக அனுப்பப்பட்ட பரிசுப் பொதியில் பல விலைமதிப்பில்லாத புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். அவற்றிலிருந்து மணிப்புரி கதைகளை வாசித்தபோது இந்தியாவின் ஒரு பகுதியினை அறிய முடிந்தது. இதேபோல் “கடைசி இலை” தொகுப்பை வாசித்து முடித்ததும் கன்னடத்துக்கும், கொங்கனிக்கும், பீகாருக்கும், குஜராத்துக்கும், வங்கத்துக்கும் ஏன் அமெரிக்காவின் மான்ஹட்டனுக்கும், க்ரீசுக்கும் போய்வந்தது போலிருந்தது. மூல மொழியில் அனைத்தையும் வாசிக்க முடியாத குறைகளை, மொழிபெயர்ப்பு இலகுவாக்கி இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். எழுத்தாளர் மாதா இதனை சாத்தியமாக்கி உள்ளார். 


தொகுப்பில் முதலாவதும் கடைசியானதும் கதைகளான ஓ. ஹென்றியின் “தேவன் தந்த பரிசு” “கடைசி இலை” சிறுகதைகள் அன்பின் வெளிப்பாட்டை, மனிதர்கள் சக மனிதர்கள் மீது கொண்டுள்ள கருணையினை, ஒருவருக்கொருவர் கொண்டுள்ள மகத்தான காதலை, விட்டுக்கொடுப்பினை, தன்னம்பிக்கையினை குறைவான பக்கங்களில் நிறைவாக செய்துள்ளன. 


கன்னடத்தில் இருந்து யூ. ஆர். அனந்தமூர்த்தியின் “எதிர்பாராத சந்திப்பு” வேறு வேறு ஆண் பெண் இருவரும் எடுக்க இருக்கும் முடிவு எதிர்பாராத சந்திப்பில் மனம் மாறி அவரவர் வாழ்வுக்குத் திரும்புதல். லோகித் நாயக்கரின் “பாம்புக் குட்டியும் கொடூரத் தந்தையும்” மான் ஹட்டனில் வாழ்ந்தாலும் சாதிப் பாகுபாடு படுத்தும் பாடும், பெயரை மாற்ற எடுக்கும் முடிவால் இந்தியர்களின் சாதிய மனம் மாறிவிடுமா என்ற கேள்விகளை எழுப்புகிறது. குவெம்புவின் “கொத்தடிமை” கதை சுப்பன் எனும் பத்து வயது சிறுவனின் அதாவது கவுடர் எனும் பண்ணையின் கொத்தடிமையின் மரணம் என கன்னடத்தில் கதைகள் நல்ல தரத்துடன் எழுதப்படுகிறது என்பதற்கு சாட்சியாக உள்ளன. 


கொங்கனி மொழியிலிருந்து தாமோதர் மௌச்சாவின் “பார்க்கர்” இரண்டு சிறுமிகளூடாக இந்தியாவின் மிக முக்கியமான மாட்டுக் கறி அரசியலை இலைமறை காயாக அற்புதமாக சொல்லியுள்ளார். அதேபோல் சமீபத்தில் நிகழ்ந்த பெருந்தொற்றுக் காலத்தின் புலப்பெயர்வு அதனால் நிகழ்ந்த மரணங்கள், மக்கள் மனங்களின் இடைவெளிகளை, அடையாளம் தெரியாமலே இறந்தவர்களை புதைக்ககூட வழியற்று புலம் பெயர்ந்த மக்களின் வலிகளை பேசுகிறது “அது யாருடைய பிரேதம்?” சிறுகதை. பெருந் தொற்றுக் காலத்தை பேசும் மற்றுமொரு சிறுகதையாக உருது எழுத்தாளர் குல்சாரின் “ஆன்லைன்” கதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடைவுக் காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களையும், அறிவியல் வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்ட செயலிகளின் பயன்களையும், அது தற்காலத்தில் நிகழ்த்தி வரும் மாறுதல்களையும் சரியாக அவதானித்து எழுதியுள்ளார். குறிப்பாக ஆன்லைனில் நிகழும் திருமணங்கள், குடும்பம் நடாத்துதல் என பல்வேறு விடையங்களைப் பேசுகிறது. தமிழில் இப்படியான அடைவுக்காலக் கதைகள் வந்துள்ளனவா என்று தேடுகிறேன்.


மணிப்பூரி மொழியின் இம்போச்சா எழுதிய “தண்ணீர்” ஒரு அரசியலைப் பேசினால், ஓம் பிரகாஷ் எழுதிய “கொத்தடிமை ஜனநாயகம்” எனும் இந்திக் கதை மற்றோர் அரசியலைப் பேசுகிறது. ஹிமான்சி செலாட் எழுதிய குஜராத் கதையான “ஏழாவது மாதம்” மதக் கலவரத்தைப் பேசுகிறது. கொத்தடிமை ஜனநாயகம் பஞ்சாயத்து தேர்தலின் சாதியக் கொடூரத்தைப் பேசுகிறது. ஏழாவது மாதம் மதத்தைக் காரணம் காட்டி கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை எடுத்துக் கொல்லும் கொடூரத்தைப் பேசுகிறது. உண்மைச் சம்பவங்களை அடியொற்றிய கதைகளாக இவை இருக்கின்றன. 


கங்கா விமல் பிரசாத் எழுதிய இந்திக் கதையான “பயணிகள்” இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல் ஒவ்வொரு தேசத்தவரும் மற்றொரு தேசத்தை நினைத்துப் பெருமைப்படுவதும், நேரில் செல்லும்போது நாம் அவ்வளவு மோசமாக இல்லை என சமாதானம் ஆகுவதும் போலானது. கிரேக்க நாட்டுக்கு சுற்றுப்பயணம் போகும் இந்தியக் குடும்பம் கிரேக்கத்தில் சந்திக்கும் வயதானவருடன் நிகழும் உரையாடல்களில் கிரேக்கத்தின் கலாசார சீர்கேடுகளும், பண்பாட்டுச் சிதைவுகளும் அப்பெரியவர் வாயிலாக இவர்களுக்கு கடத்தப்படுகிறது. இந்தியா குறித்து அவர் பெருமையாக கூறுகிறார். ஆனால் இந்தியக் குடும்பம் இந்தியாவின் சமகாலம் குறித்தும், மோசமான அரசியல் நிலைப்பாடு குறித்தும் அப்பெரியவருக்கு உண்மையைக் கூற முடியாமல் வெப்பியாரப்பட்டுத் திரும்புகின்றனர். 

   

      பினோத் கோஷலின் வங்கச் சிறுகதையான “குறுஞ்செய்தி” யார் என்றே தெரியாமல் உரையாடுகின்றன. இறுதியில் மகள் உரையாடியது தந்தையுடன் என்பது திருப்பமாகிறது. கைபேசிகளின் வளர்ச்சி ஒருபக்கம் குடும்ப உறவுகளைத் தொலைத்திருக்கிறது. அருகருகே இருந்தும் தனித்திருக்கச் செய்கிறது. பிறந்தநாள் பரிசாக தந்தை மகளிடம் ஒரு பரிசு கேட்கிறார். வெள்ளைத் தாளில் உன் தாய் மொழியில் ஒரு கடிதம் எழுதிக் கொடு என்கிறார். கடிதங்கள் எந்த அளவுக்கு மக்களை உணர்வுடன் வைத்திருந்தன என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரியாத ஒன்று. கடந்த காலத்தினரிடம் கேட்டால் விடிய விடியக் கதைகளாகச் சொல்வார்கள். 

இந்தத் தொகுப்பைப் போல் அரசியல் பேசும் கதைகள் சமகாலத்தில் தமிழில் எழுதப்பட்டுள்ளனவா என்ற கேள்வி (என்னளவில்) எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நல்லதொரு சிறப்பான மொழிபெயர்ப்பு வேலையினை பன்முக மேடை செய்திருக்கிறது. 

ஓ ஹென்றி சொல்வதைப் போல் கலையின் மதிப்பு அழகில் இல்லை. அதன் பயனில் உள்ளது என்கிறார். அரசியலை அழகியலுடன் முன்வைக்க முடியும் என்பதற்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே சாட்சி.   


வெளியீடு: பன்முக மேடை 

விலை: ரூபாய் 250/-


Sunday, April 6, 2025

சிறுபிராயத்து நினைவின் துளிர்ப்பு

 சிறுபிராயத்து நினைவின் துளிர்ப்பு

**************************************



ஈழத்தில் எனது சிறு பிராயத்தில் அதாவது ஏழு வயதாக இருக்கும் போது ஈழநாடு, ஈழநாதம், உதயன் மற்றும் வீரகேசரி போன்ற பத்திரிகைகளை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அபோதுதான் எனது அப்பாவின் அப்பா கதிரன் மாணிக்கம் அவர்கள் (அவர் ஒரு பெரியாரிஸ்ட்) இராமாயணம் புத்தகத்தை அவருக்காக வாசிக்க வேண்டியிருந்தார். ஏனெனில் அப்போது அவர் வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாமலும், பார்வைக் குறைபாடுடனும் இருந்தார். அப்பப்பாவுக்காக வாசிக்கப் பழகிய பிறகுதான் எனக்கு நிறைய காமிக்ஸ் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள் வாங்கி வாசிக்கும் ஆவல் எழுந்தது. அச்சுவேலியில் இயங்கி வந்த வாடகை நூலகம் ஒன்றில் (சரியாக நினைவில் இல்லை யார் நடாத்தியது என்று) ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என வீட்டில் வாங்கிச் சென்று புத்தகங்களை வாங்கி வருவதும், வாசித்து முடித்ததும் திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு நூல்கள் வாங்கி வருவதும் என வாசிப்பு எனக்கு உணவை விடவும் மேலானதாக இருந்தது. வாசிப்புதான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. 


ஏன் இங்கே இதனைச் சொல்கிறேன் என்றால் இன்று (06.04.2025) காலையில் கமநிதாவின் “கசங்கிய மரம்” தொகுப்பினை வாசித்து முடித்ததும் எனது பால்ய காலங்கள் நினைவுக்கு வந்துவிட்டன. 


மார்ச் மாதம் இறுதியில் (30.03.2025) திருச்சி மாநகரில் தீ இனிது இலக்கிய இயக்கம் ஒருங்கிணைத்த நான்கு புத்தகங்களுக்கான அறிமுக நிகழ்வில் கும்பகோணம் நகரில் இருந்து வருகை தந்து சிறப்பித்த சொல்வெளி அமைப்பின் தோழர் பாரதி மோகன் அவர்கள் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் எனது மகளின் கரங்களில் தந்து சென்றார். 


நான் ஒன்பதாவது படிக்கையில் வெண்ணிலா பற்றிய கவிதையே எழுதினேன். கமநிதாவும் வெண்ணிலவு பற்றிய கவிதையிலேயே துவங்கியுள்ளார். இது இன்னும் கூடுதல் ஈர்ப்பினை எனக்குள் ஏற்படுத்தியது. ஆறாம் வகுப்பில். எவ்வளவு திறமை, எவ்வளவு அவதானிப்பு, எவ்வளவு புத்திக் கூர்மை. ஒவ்வொரு கவிதையிலும் தனித்துவம் மிளிர்கிறது.



தந்தை ஒரு கவிஞர் என்பதால் இது சாத்தியமாகியது என்றெல்லாம் சொல்லிக் கடந்துவிட முடியாது. அதுவொரு தவறான புரிதலை உருவாக்கும். குழந்தையின் இந்த ஆர்வத்தினை நாமே முளையில் கிள்ளி எறிவதற்கு இணையானது. 


நாற்பது கவிதைகள் கொண்ட இத்தொகுப்பில் அழகழகாய் படங்களையும் தேர்வு செய்துள்ளார். முதல் கவிதையிலேயே பெரிய வினாவுடன்தான் நம்மை உள்ளேகச் செய்கிறார். அதேபோல் குழந்தைமைக்கே உரித்தான குறும்புத்தனம் கொண்ட கவிதையையும் தந்துள்ளார் பக்கம் 39, 53 கவிதைகள் இதற்கு சாட்சி. காகிதப் பூவினைக் கொண்டு தேனியை ஏமாற்றுவதாக நினைத்தாலும் தேனீ அமராமல் பறந்து விடுவதனை பார்த்து அழவோ, கோவமோ கொள்ளாமல் குதூகலிக்கிறார். இது கண்ணாமூச்சி விளையாட்டு போன்று அமைகிறது. 


பக்கம் 43, 59, 67, 71 கவிதைகள் நல்ல எள்ளல் தொனியில் அமைந்துள்ள கவிதைகள். எள்ளல் தொனி இயல்பாக கவிதையில் அமரும்போது நம்மை சிந்திக்கச் செய்கிறது. இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்...


கடற்கரையில் 

சுடச்சுட சுண்டல் கட்டித்தந்த 

செய்தித்தாளில் 

ஆறிப்போன செய்திகள்” சமூக ஊடகங்கள் இப்படித்தான் ஆறிப்போன செய்திகளை பரபரப்பாக்கி தந்து கொண்டிருக்கின்றன. 


பக்: 23, 29 கவிதைகள் சமூகத்தின் மீதும், சுற்றுச் சூழல் மீதும் கவிஞருக்கு உள்ள அவதானிப்பைச் சுட்டுகின்றன. 33 ஆம் பக்கத்தில் உள்ள கவிதை காகிதத்துக்கும் தூரிகைக்கும் இடையிலான போரில் அழகிய ஓவியம் பிறந்துள்ளதாக பிரகடனம் செய்கிறார். 


வால் முளைத்த பட்டம் 

காற்றின் 

திசைவழிப் பறவை” 


இந்தக் கவிதை நல்ல கவித்துவத்திற்கான சிறந்த உதாரணம். மேலும் 

காகிதத்தில் செய்த 

ரோஜாவில் வீசியது 

பச்சை வாசம்” என்ற கவிதை என் மனமெங்கும் கமநிதாவின் கவித்துவ வாசத்தை நிறைத்திருக்கிறது. பெரியவர்களை விடவும் குழந்தைகளிடம் படைப்பின் கூர்மை தனித்துவமாக மிளிர்கிறது. 


வெற்றுக் காகிதமாய் 

குழந்தைகள் 

கிழித்து அவரவர்களுக்கான 

பொம்மைகளை செய்துகொள்கிறார்கள் 

பெற்றோர்கள்” என கமநிதா பெற்றோர்களைச் சாடுகிறார். உண்மைதான் குழந்தைகளை குழந்தைகளாக பெற்றோர்கள் வளர விடுவதேயில்லை. கமநிதா போன்ற குழந்தைகளே இன்றைக்கு சமூகத்துக்கு அவசியம் வேண்டும். 


இதுபோல் இன்னும் சிறந்த கவிதைகளைப் படைக்க, வாழ்வில் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன் அன்பு மகளே.


வாழ்த்துகளுடன் 

சுகன்யா ஞானசூரி.

06.04.2025.        


நூல்: கசங்கிய மரம் 

ஆசிரியர்: கமநிநிதா 

பதிப்பகம்: பரிதி பதிப்பகம் 

விலை: ரூ 120 

வெளியீடு: டிசம்பர் 2024.

தொடர்புக்கு: 72006 93200

Tuesday, October 22, 2024

ஆங்கரை பைரவியின் என்னிடம் கொஞ்சம் காஞ்சுருட்டான் இருக்கிறது



ஆங்கரை பைரவியின் என்னிடம் கொஞ்சம் காஞ்சுருட்டான் இருக்கிறது தொகுப்பின் மீதான வாசிப்பினை முன்வைத்து. - சுகன்யா ஞானசூரி 

"நதிக்கரை நாகரிகங்களில் 
சிறந்த இனவழி வந்தவர்களில் 
கடல்வழி கடந்தபோது 
அகதி என்றழைக்கப்பட்டவர்களில் 
நானும் ஒருவன்" 

என்ற எனது நாடிலி கவிதையிலிருந்து தொடங்குவதே இக்கவிதைத் தொகுப்புக்கு நான் செய்யும் மரியாதை ஆகும். ஏனெனில் கடலோடு வாழ்ந்த எங்களுக்கு நதியின் சலசலப்பை செவிமடுப்பதில் ஒரு அலாதி இன்பம். வாழ்வெனும் நாணயத்தின் இரு பக்கங்களைப்போல் எப்போதும் ஓயாமல் இரைந்து கொண்டிருக்கும் நதியும் கடலும் ஏதோவொன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் இந்தத் தொகுப்பினுள் என் கைபிடித்து அழைத்து வந்தது ஒரு கவிதை. 

"நதிக்கரைகளில் நடந்த எங்களின் வாழ்க்கை 
இருண்டு கிடக்கிறது...
நடக்க முடியாத நதிக்கரைகள்"(பக்: 44) 
அவைகள் முடமாகிப் போனதிற்கு நம் ஆலை முதலாளிகளின் நாணயமற்ற இச்செயலை நாசுக்காக பதிவிடுகிறார் இப்படியாக 
"அரசு வரைபடம் சொல்கிறது 
நதி 
ஆலைக் கழிவுகளின் 
சாக்கடையென." பக்: 43)



ஆங்கரை: திருச்சி - இலால்குடி சாலையில் அமைந்துள்ள அழகிய கிராமம். காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தின் கரையில் அமைந்துள்ள கிராமம். வாழை சாகுபடி எப்போதும் இருக்கும். முதன்முதலாய் வாழை திரைப்படம் பார்த்ததும் விகடன் தடம் நேர்காணலில் இரண்டு வாழைத் நார்களை சும்மாட்டில் சுமந்து நின்ற தோழர் பைரவியே எனக்கு நினைவிற்கு வந்தார். சிவனைந்தன் எனக்கு பைரவியாகவே தெரிந்தார். தன் உழைப்பில் உண்மையாக இருக்க வேண்டும் என்ற உறுதிமிக்க நல்ல மனிதர். சொம்படித்திருந்தால் திருச்சியின் முக்கிய பெரும்புள்ளியாக இந்நேரம் வலம் வந்திருக்க வேண்டியவர். ஆனால் அதை அவர் புறங்கையால் தள்ளிவிட்டு இதுதான் நான், இதுதான் என் வழி என அமைதியாக வாழ்ந்து வரும் அகிம்சாவாதி. கோபம் வருகையில் சொற்கள் சாட்டைகளாக வீசிக்கொ(ல்)ள்ளும். 

இனிக் கவிதைகளுக்குள் செல்வோம்....

"இப்போது 
களத்தில் இருக்கிறேன் 
போட்டிக்கு வருகிறவர்கள் 
வரலாம் (பக்: 9) 
இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டார், உடைந்து போய் ஓரமாக மூலையில் குந்திவிட்டார் என்ற எதிரிகளின் ஏளனப் பேச்சுக்களுக்கு அறைகூவல் விடுக்கும் முகமாக இருக்கிறது. 

"உண்மையை மட்டுமே 
உள்வாங்கும் 
ஒலிவாங்கி என்றிருந்தால் 
கழிப்பறையில் மட்டும்தான் 
ஒலித்துக் கொண்டிருக்கும் 
உன் குரல்"  (பக்: 38)

என அரசியல்வாதியின் கபடப் பேச்சுக்களை எள்ளி நகையாடுகிறார். அரசியல்வாதிகளுக்கு உள்ள பல முகங்களுக்கு இத்தொகுப்பில் நிறையக் கவிதைகள் இருக்கின்றன. அதேபோல் இலக்கியவாதியின் கையூட்டு பற்றிய எள்ளலாக "ஒன்லி கூகுள் பேதான்' என்ற கவிதையைக் குறிப்பிடலாம். போகிற போக்கில் இசைஞானிக்கும் ஒரு கொட்டு வைத்து விடுகிறார் இப்படியாக 
"ஆர்மோனியம் தந்த 
அத்தனை இசைகளையும் 
ஒரு ஜால்ரா 
விழுங்கிக் கொண்டது' (பக்: 38)

இரும்புப் பெண்மணிக்கும் இரண்டு கவிதைகளை இத்தொகுப்பில் மானசீகமாக பதிவு செய்துள்ளார். 

"அவன் மந்திரச் சொற்களில் மயங்கி 
தம்பிகளும் படகில் ஏறிக் கொள்கிறார்கள்...
...
கடலில் தத்தளிக்கும் 
என் பெயரைக் கேட்டீர்கள் 
சொல்ல மறந்து விட்டேன் 
என் பெயர் விஜயலட்சுமி" (பக்: 99) 
என்ற கவிதை யாருக்கானது என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. 

ரெங்கசாமியும், ராமசாமியும் :

ராமசாமி விழிப்பில் இருப்பதால்தான் ரெங்கசாமி ஆனந்த சயனத்தில் பாதுகாப்புடன் உறங்குகிறார் இல்லையா. அப்படியான மதநல்லிணக்கம் கொண்ட காவிரிக்கரை இது. சொர்க்கவாசல் திறப்பு குறித்த தந்தை தனையன் உரையாடல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. "யோவ் ராமசாமி" ஒரு புதிய திறப்பினை கூறும் கவிதை. 

"பிட்டுக்கு 
மண் சுமக்க வந்தாய் 
பிள்ளைக்கறி 
கேட்டு வந்தாய் 
 பீ அள்ள வரமாட்டாயா"? (பக்: 54) 

"மலக்குழியில் விழுந்த 
என் தாத்தன் 
கதறியபோது மட்டும் 
எந்த வீட்டில் வெண்ணையை 
நக்கிக் கொண்டிருந்தாய்? (பக்: 48) 

என மாமன் மச்சான் கடவுள்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு எப்போதும் அமைதியே பதிலாக இருக்கிறது. மலக்குழி மரணங்களுக்கு நிவாரணத்தைத் தவிர அரசாங்கத்திடமே தீர்வு எட்டாமல் தொடர்கிறது இன்றைய அறிவியல் வளர்ச்சி பெற்ற நவீன காலத்திலும். ஏனென்று கேட்க நாதியற்ற விளிம்பு நிலைச் சமூகம்தானே பலியாடுகளாகின்றனர். 

மதவாதிகளுக்கு, இனவாதிகளுக்கு, துரோகிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, உறவுமுறை பாராட்டி ஏமாற்றுவோருக்கு என நிறையவே காஞ்சுருட்டான்களை கவிதைகளுக்குள் கண்ணிவெடியாய் வைத்திருக்கிறார். அக்கம் பக்கம் (பக்: 95) கவிதையில் ரொமான்ஸ் இருக்கிறது. இயற்கை மீதான கனிவும், அக்கறையும் நிறைந்து இருக்கிறது. 

"மிஸ் யூ" (பக்: 85) கவிதை காதல் கோட்டை காலத்துக்கு முன்பானதாக இருப்பினும் இப்போதைய காலத்தில் இது இளைய தலைமுறைகளின் போக்கினை கூர்ந்து அவதானிக்க வேண்டிய அவசியத்தை,  மகளின் நாசுக்கான உரையாடல் வழி கவிதை ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. "ஒன்லி கூகுள் பேதான்'" கவிதை சமகாலத்துக்கான டிஜிட்டல் சமூகத்தின் போக்கினை படம்பிடிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நகைச்சுவை உணர்வு அதிகமாக இக்கவிதைகளில் நிறைந்து இருக்கிறது. 

இத்தொகுப்பில் "ஒவ்வாமை" (பக்: 13) கவிதை மட்டும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளால் புனைவுத்தனமாக துருத்திக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இதில் இந்தி என்பதற்குப் பதிலீடாக சாதி என்பதை வைத்து யாத்திருந்தால் ஒரு அருமையான கவிதைக்கான படிமமாக அமைந்திருக்கும் என்பது எனது வாசிப்பின் புரிதல். சில எழுத்துப் பிழைகள் அல்லது தட்டச்சுப் பிழைகளாகக் கூட இருக்கலாம். இவற்றை கொஞ்சம் ஊன்றிக் கவனித்திருக்கலாம். மேலும் கவிதைகளின் வடிவமைப்பில் கூடுதல் கவனமும் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் அடுத்த பதிப்பில் சரி செய்வீர்கள் என நம்புகிறேன். 

இறுதியாக: 

பிச்சை எடுப்பேன் 
உங்களிடம் அல்ல 
உங்கள் முன்பும் அல்ல 
பிறழ்வு நிலையில் 
கதறி அழுவேன் 
உங்களிடம் அல்ல 
உங்கள் முன்பும் அல்ல 
ஆனால் ...
வாழ்ந்து காட்டுவேன் 
உங்களிடமும் உங்கள் முன்பும். (பக்:100) 

ஒரு படைப்பாளனுக்குரிய அத்தனை சுயமரியாதையும், கர்வமும் இக்கவிதைக்குள் அடங்கியுள்ளன. இதுதான் பைரவி. பைரவிதான் இக்கவிதை. படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் காஞ்சுருட்டானின் (செந்தட்டி, காஞ்சுண்டி) நமைச்சல் ஏதோவொரு இடத்தில் இருந்தே தீரும். அப்படி இல்லை என்பவர்கள் முதல் கல்லை எறியும் பாக்கியசாலி ஆவீர்கள். 

நூல்: என்னிடம் கொஞ்சம் காஞ்சுருட்டான் இருக்கிறது 
ஆசிரியர்: ஆங்கரை பைரவி 
பதிப்பகம்: செவ்வி வெளியீடு 
விலை: ₹ 150
தொடர்புக்கு: 9976350636

Tuesday, July 9, 2024

சீராளனுக்கு வழங்கப்பட்ட சீர்மிகு விருதும் சீராளனின் சீரான செவ்வியும்

 



சீராளனுக்கு வழங்கப்பட்ட சீர்மிகு விருதும் சீராளனின் 

சீரான செவ்வியும்

– சுகன்யா ஞானசூரி.


இரா. விஜயன் அவர்களால் எடுக்கப்பட்ட நேத்தாஜி முதல் பொதிகைச் சித்தர் வரை எனும் செவ்வி பல்வேறு திறப்புகளையும், புதிய தேடுதல்களையும் மேற்கொள்ளச் செய்யும் அற்புதமான நூல். சீர் வாசகர் வட்டம் வழங்கிய சீர் விருது நிகழ்வில் அனைவருக்கும் இலவசமாக வழங்கபப்பட்ட சிறு பிரதி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு இணையாக நாற்பத்தெட்டு பக்கங்களில் அளவான கேள்விகளால் நிறைவானதும், தெளிவானதுமான பதில்களால் அமைந்திருப்பது சிறப்பு. அன்றைய நாளில் இரவுப் பணி என்பதால் நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. ஆனாலும் தோழர் அரசெழிலன் அவர்கள் இந்நூலினை எனக்கு அனுப்பித் தந்தார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

இந்நூலினை இன்று (09.07.2024) வாசித்து முடித்தபோது அரைநூற்றாண்டுக்கு முன்னால் நானும் பயணித்து திரும்பியதைப் போலிருந்தது எனலாம். (ஏற்கனவே பேராசிரியர் வீ.அரசு அவர்கள் எழுதிய தோழர் பொதிய வெற்பனின் அரை நூற்றாண்டுப் பயணம் எனும் குறுநூலும் உண்டு. இது உலகத் தமிழ் பண்பாட்டு மையம் விருது அமைப்புக்கு வீ.அரசு அவர்கள் எழுதிய கடிதம் என்பதும் அறிய முடிகிறது பக்கம்: 48). பல தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், தொடர் செயல்பாடுகள், வெளியீடுகள், தோழமைகள், முரண்பாடுகள், போராட்டங்கள் என பல்வேறு விடையங்களை நதியின் போக்கில் சொல்லிச் செல்லும் பொதி அய்யாவின் நினைவாற்றல் மலைப்பாக இருக்கிறது.

முனைவன் இதழ் ஆரம்பித்து சிலிக்குயில் வரையில் அவரது செயல்பாடுகள் இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் எனலாம். ஈழத்து படைப்புகளை அறிமுகம் செய்ததில் சிலிக்குயிலின் செயல்பாடு அளப்பரியது. ஜெயமோகன் உடனான கடிதப் போக்குவரத்து பக்:25, ரவிக்குமார் உடனான முரண்பாடு பக்:24, அ.மார்க்ஸின் இஸ்லாமியச் சார்பு, பொதியின் சித்தர் நிலைப்பாடு என பல்வேறு அம்சங்களுடன், புதுமைப் பித்தனைக் கண்டடைந்ததும், பிரேமிளை கண்டடைந்ததும், அருட்பா மருட்பா யுத்தத்தின் பின்னணியும், இலக்கிய ரசனையும், விமர்சனமும், விண்ணப்பித்துப் பெறும் விருதுகளுக்கு கண்டனம் செய்து சுயமரியாதை அரசு இந்த நிலையை மாற்ற வேண்டும் என குரல் கொடுத்ததும், கலைஞரின் எதிர்பார்ப்பும், ஆனைமுத்து அய்யாவின் பதிலும், தமிழ்தேசியம், பொதுவுடைமை, தலித்தியம், திராவிடம் என பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளும், அவற்றின் முரண்பாடுகளும் என பல்வேறு விடையங்களை தெளிவான பார்வையில் முன்வைக்கிறார். தமுஎகச அமைப்பிலிருந்து வெளியேறியபோது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியது. தொகை நூல்களின் பெரும்பணி அளவிட முடியாத ஒன்று.     

கடந்த காலத்தை வாசிப்பதும், சமகாலத்தை வாசித்து எழுதுவதும் எதிர்காலத்தில் பேரும் புகழோடும் இருப்பதற்கு மட்டுமல்ல. இப்புவி இன்னும் எத்தனை காலங்களுக்கு இருக்கும்மட்டும் நம் மொழி, பண்பாடு, வாழ்வியல் என்பன மீட்டுருவாக்கம் செய்ய ஏதுவாக அமையும். அந்த மொழி சீரும் சிறப்புமாக அமையும் என்பதன் பொருட்டுமே என்பது என் எண்ணம். இப்படியான ஒரு விடையத்தையே பொதி அய்யா எவ்வித சமரசமும் இன்றி செயல்படுத்தி வந்துள்ளார். இவரைப் போன்றவர்கள் இப்போது சொற்பமே.

படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் கல்விப்புலம் எவ்வாறு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. கல்விப் புலங்களில் இருப்பவர்கள் செய்ய வேண்டியவற்றை தனி ஒருவனாக பொதி அய்யா செய்திருக்கிறார். இந்நூலில் கல்விப்புலத்தில் சூது, வாதோடு செயல்பட்டவர்களை சுட்டிக் காட்டவும் தயங்கவில்லிலை.

தோழர் பொதிய வெற்பனின் அரை நூற்றாண்டுப் பயணம் நூல் குறித்து நான் முன்னர் சொல்லியது போலவே “எந்த ஒன்றிற்குள்ளும் அடைக்க முடியாத பேராளுமை” என்பது போலவே. சீராளனுக்கு வழங்கப்பட்ட சீர்மிகு விருதும் சீராளனின் சீரான செவ்வியும் என்பதும் இந்நூலுக்கு பொருத்தமாகிறது. நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

 

வெளியீடு: சீர் கலை இலக்கிய விழா 2024 சிறப்பு வெளியீடு

விலை: ரூபாய் 30 

Friday, May 12, 2023

சாத்தான்களின் அந்தப்புரம்

 சாத்தான்களின் அந்தப்புரம் 



நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதைப் பிரதியினை வாசித்துக் கொண்டிருந்தேன். சற்று ஓய்வறைக்குச் சென்று திரும்புகையில் மனைவி வாசித்துக் கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட சில கவிதைகளை அவரை வாசிக்கச் சொன்னேன். தன்னியல்பாக வரி பிரித்து வாசித்ததைக் கேட்டதும் எனக்கு வியப்பாகவே இருந்தது. அன்பாக முத்தங்களை வழங்கிவிட்டு தொகுப்பை மேலும் வாசித்து முடித்தேன். கிட்டத்தட்ட அத்தொகுப்பு வெளிவந்து பத்தாண்டு ஆகப்போகிறது. ஒரு தொகுப்பு ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் வாசிப்பவருக்கு புதிய அனுபவங்களையும், அதிர்வுகளையும் வழங்கும் எனில் அது சிறந்த படைப்பாகிறது. அத்தகைய படைப்பில் இத்தொகுப்பும் ஒன்று என்றால் மிகையாகாது.


\\உங்கள் நிர்வாணத்தை 

ஒன்றுமில்லாமல் செய்யத் துணிந்த நாட்களில்தான் 

நீங்கள் எங்களை ஒன்றுமில்லாதபடிக்கு 

தள்ளிவைத்து தெய்வமாக்கினீர்கள்//


தாய்வழிச் சமூகத்தை புறந்தள்ளி ஆண்வழிச் சமூகமாக ஆதிக்கம் பெற்ற மேட்டிமைத் தனத்தை, பெண் உழைப்பின் மீதான சுரண்டலை பகடி செய்யும் சிறந்த கவிதை. 


பெண் ஒடுக்குமுறை, பெண் உடல்மீதான அத்துமீறல் என சமூகத்தின் அழுத்தப்படுகள் ஒருபுறம் எனில் வீட்டில் கணவனால், உறவுகளால் ஏற்படும் அழுத்தப்பாடுகள் மறுபுறம் என நைந்துகிடக்கும் மனம் கவிதையாகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது. 


இலகுவான சொற்களும், நல்ல முதிர்ச்சியான சொற்பிரயோகமும் இத்தொகுப்பை சிறப்புறச் செய்கிறது. இவர் பொதுவுடைமை சிந்தாந்தத்தில் ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார் என்பதையும் அறியமுடிவதால் சமூகம் குறித்த அதிலும் சமூகத்தில் பெண்களின் இடம் குறித்த கவனப்படுத்தலை கவிதைகளின் வாயிலாக நம்மோடு உரையாடுகிறார்.

அப்படித்தான் நான் பார்க்கிறேன். 


ஆண் × பெண் ஆண் × ஆண் பெண் × பெண் பெண் × ஆண் என இருமை கொண்ட பழைய வாசிப்பை விலக்கி தனிமனிதர் × பொதுமனிதர் எனும் பார்வையில் வாசிக்கையில் புதிய பார்வைகள் புலப்படுகிறது. திறக்கப்படும் உடல் மற்றும் அண்டங்களின் சக்கரவர்த்தி என்ற கவிதைகள் இதற்குச் சிறந்த சான்றாக அமைகின்றன. திணிப்பு எனும் கவிதை நுகர்வுக் கலாச்சாரத்தை திணிக்கும் விளம்பரங்களை தோலுரிக்கிறது. 


மேலோட்டமாக வாசிப்பவர் கண்களுக்கு இத்தொகுப்பு கணவன் மனைவியின் அல்லது ஒரு ஆண் பெண் ஊடல் மற்றும் கூடல் என்பதாகமட்டுமே தெரியுமெனில் அது அவர்களின் வாசிப்பின் போதாமையாக மட்டுமே கொள்ளப்படும். உடலரசியலின் நுண்ணரசியல் சதிராட்டங்களை சாவதானமாக கவிதையாக்கித் தந்துள்ளார் தோழர் தேவி எனும் நறுமுகை தேவி அவர்கள். 


இது ஒரு புது எழுத்து வெளியீடு.


- சுகன்யா ஞானசூரி

12.05.2023.



Tuesday, March 28, 2023

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்.

- சுகன்யா ஞானசூரி



கடல் யாரோ ஒருவரின் துயரத்தை உள்வாங்கி கரையில் மோதித் தெறிக்கிறது என்ற த. அகிலனின் சிறுகதையில் உள்ள வரிகள் அவ்வளவு எளிதாகக் கடந்துவிடும் ஒன்றல்ல. 

நீர் தன் இருப்பிடத்திற்கேற்ப்ப தன் வடிவத்தைக் காட்டுவதைப் போலவே இங்கு மரணம் தன் அரூப வாசத்தை நுகரச் செய்கிறது. யுத்த வாதைகளில் இனியும் சப்பிப் போட எதுவும் இல்லாதபடிக்கு புதிய புதிய விமானங்களின் குண்டுவீச்சுகள், வித விதமான எறிகணைகள் என பலதரப்பட்ட முதலாளிய வர்க்கங்களின் ஆடம்பரப் பசிக்கு எளிய உணவாகிப் போனதென்னவோ சனங்கள், விலங்குகள், புல் பூண்டு தாவரங்கள் என சகலமும் மரணத்தின் வாசனையை நுகர முடியாமல் எனது பன்னிரண்டாவது வயதில் வெளியேறினேன் என்பதை விடவும் வெளியேற்றப்பட்டேன் என்பதே பொருத்தமாகும். 

1995 வரையில் வன்னி நிலம் எத்தகையது என்பதை நான் அறியவில்லை. அந்த ஆண்டின் பாரிய இடப்பெயர்வான யாழ் வெளியேற்றம் (1990 களில் முதல் யாழ் வெளியேற்றம் எம் சகோதரர்களுக்கு நடந்த பிறகான சில ஆண்டுகளில்) பூநகரிக்கும் ஆனையிறவுக்கும் நடுவே கிளாலி நீரேரி வழியாக வன்னி நிலத்தில் கால்பதிக்க வைத்தது. பெரு வனங்களும் பெரு வெளிகளுமாக அச்சம் தருவதாக இருந்தாலும் புதிய அனுபவமாக இருந்தது அப்போது. அது சிறுவர்களுக்கே உரிய மனம். கிளிநொச்சி, மாங்குளம், கனகராயன்குளம், கொல்லர் புளியங்குளம், மல்லாவி, வலைப்பாடு இப்படியாக 1996 செப்டம்பர் வரையிலான காலகட்டத்துக்குள் எத்தனை இடப்பெயர்வு. மலேரியா, நெருப்புக் காய்ச்சல், பாம்புகளோடு உறக்கம், காட்டுப் பன்றிகள் தொல்லை இப்படி நிறைய நிறையவே புதிய அனுபவங்களை வன்னி மண் தந்திருந்ததை த. அகிலனின் "மரணத்தின் வாசனை" சிறுகதைகள் தொகுப்பு மீண்டுமொரு நினைவுப் பயணத்திற்குள் என்னை அழைத்துச் சென்றன என்றால் மிகையாகாது. 

எம்.ரி 90 வண்டிகள் இப்போது (யப்பான் கோண்டா தயாரிப்பு) ஹீரோ கோண்டா ஆகிடுச்சு என்ற வரிகளை வாசிக்கையில் மலேரியா காய்ச்சல் கண்ட அப்பாவை கொல்லர் புளியங்குளம் முகாமிலிருந்து மாங்குளம் சந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு அப்பாவின் எம்.ரி 90 மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற நினைவுகளை மீட்டிச் சென்றது. 

போர் தின்ற சனங்களிடம் சொல்வதற்கு நிறைய நிறைய கதைகள் இருக்கிறது. இவைகளை ஒருபோதும் இலக்கியமாக யாரும் ஏற்பது இல்லை. இட்டுக்கட்டிய புனைவுகளையே போரிலக்கியம் என்று கூவிக் கூவி விற்கும் விற்பன்னர்களையே இன்றைய நவீன உலகம் அலங்கரித்து வருகிறது. 

அகிலனின் கதைகளுக்குள் இந்திய இராணுவத்தின் அடாவடியால் பாம்பு கடித்து மருத்துவமனை கொண்டு செல்ல முடியாமல் இறக்கும் அப்பா, ஊரைப் பிரிந்து இடம்பெயர்ந்து திரும்பி வருகையில் சிதறுண்ட கற்குவியலாய் இருக்கும் கோயிலை காணச் சகியாத அம்மம்மாவின் இறப்பு, காதல் நிறைவேறாத சித்தியின் இறப்பு, ஒருதலைக் காதலியான காயத்திரியின் இறப்பு, பள்ளி நண்பனின் இறப்பு, தெரியாத போராளி  ஒருவரின் மரணம் இப்படி பல்வேறு மரணங்களை தன் கதைகளுக்குள் உயிரோட்டமாக்கித் தந்துள்ளார். அத்தனை இறப்புகளுக்கும் போரும், போர்க்கருவிகளும், ஆக்கிரமிப்பாளர்களும், இடப்பெயர்வுகளும் காரண காரியங்களாகி நிற்பதை யாரும் நம்புவதேயில்லை. விதியின் மீது பழி போட்டு கடந்துவிடுவது எளிதாகி விடுகிறது. எளிய மனிதர்களால் அதைத்தவிர வேறென்ன செய்துவிட முடியும்? 

சில கதைகள் தேவைக்கு அதிகமாக நீண்டு செல்வதும், ஒரே லயத்தில் சொல்லல் முறை இருப்பது சுணக்கத்தை ஏற்படுத்தினாலும் அத்தனை கதைகளும் சிறு திருப்பங்களோடு மையக் கருவை சரியாக வந்தடைகின்றன. இதுவே எழுத்தின் வெற்றியுமாகும். 

அலைகளின் மீதலைதல் எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பில் "கடல் மீது/ கால் நனைப்பதாய்/ மறந்தும் மிதித்து விடாதீர்கள்/கரைதேடி அலைகளின் மீதலைகிறது /அவர்களின் ஆன்மாக்கள் என எழுதியிருப்பேன். அது என் கண்முன்னால் மூழ்கடிக்கப்பட்ட படகில் இறந்துபோனவர்களுக்காக எழுதியவை. இப்போதும் அந்த நாட்களை நினைத்தால் நெஞ்சம் பதறவே செய்கிறது. கரையென நம்பி மணல் திட்டுக்களில் இறக்கிவிட்ட படகோட்டிகளும், மணல்திட்டில் மூழ்கி இறந்து போனவர்களும் தப்பிப் பிழைத்தவர்களும் என ஒரு பெருங் கூட்டமாகவே 1996களில் தனுஷ்கோடி கரைகளில் கால் பதித்தோம். தாயையும் சகோதரிகளையும் காப்பாற்றிவிடும் எத்தனத்தில் கானல் நீர் முகத்துவாரத்தில் மூழ்கிச் சாவெய்துபவனின் கரம்பற்ற இயலாமல்போன குறுகுறுப்பை "கரைகளுக்கு" என்ற சிறுகதை புலப்பெயர்வின் விடியலை வைகறைக்குள் புதைத்துச் செல்லும் கதை. 

மொத்தம் 12 சிறுகதைகள். ஒவ்வொன்றும் விதவிதமான மரணத்தின் வாசனையை சாம்பிராணிப் புகையாட்டம் திணறச் செய்கிறது. அதன் வாதைகளிலிருந்து தப்பித்தால் நீங்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். 


நூல்: மரணத்தின் வாசனை

ஆசிரியர்: த. அகிலன் 

வெளியீடு: வடலி 

விலை: ₹160.

Monday, March 20, 2023

கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்


 

"அந்தரம்" கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்.

- சுகன்யா ஞானசூரி.


அம்மா என்கிற அதிகாரத்திடம் அழுது பால் குடித்தபடியால் வேடிக்கை பார்ப்பதற்கான சத்து இன்னும் இந்த உடம்பில் இருக்கிறது.


ஒரு சாமான்ய மனித வாழ்வின் அலைக்கழிப்பு என்பது அவனது/ளது சொந்த தேசத்தில் நடப்பதாக இருப்பின் ஏதோவொரு வகையில் தீர்வை எட்டிவிடும் அல்லது குறைந்தபட்சம் சமரசத்திற்குள்ளாவது கொண்டுவரப்படும். இவை இரண்டுக்குள்ளும் அடக்க முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடு சொந்த தேசத்தில் இல்லாமல் அந்நிய நிலமொன்றில் அந்தரித்து நிற்கும் தமிழ் அகதிகளின் வாழ்வே அந்தரம். 


என்னால் உரைநடையில் சொல்ல முடியாமலே இருந்த என் அந்தரத்தை கவிதை எனும் வடிவம் கொண்டு வெளிக்கொண்டு வந்தேன். இது ஒரு வகையான அதிகாரத்தின் அடக்குமுறைக்கு கீழ்படியும் செயல் என்பதைக் காட்டிலும் தப்பித்தல் என்றே சொல்லவேண்டும். எது எப்படி இருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக தயக்கமின்றி கால் நூற்றாண்டு தமிழர்களின் அகதி வாழ்வை ஒரு தன்வரலாற்றுப் புதினமாக்கி வழங்கியுள்ளார் தோழர் தொ. பத்திநாதன். 


இத்தனை ஆண்டுகால அகதி வாழ்வில் என்ன வகையான சொத்துக்களை சேர்க்க முடிந்தது? ஆடம்பரம் சுகபோக வாழ்க்கை? ஒருவேளை உணவைத்தானும் கடன்காரர் ஆக்கினை இன்றி உண்ண முடிந்ததா? படித்த படிப்பிற்கேற்ற வேலை? வேலைக்கேற்ற ஊதியம்? ஒருமுறையாவது அதிகாரிகளிடம் இழந்துபோகாத தன்மானம்? எந்த ஒன்றிற்கும் அகதியால் பதில் சொல்லிவிட முடியாதபடிக்கு இந்த வாழ்க்கை தொலைக்கப்பட்டு விட்டது என்பதை விடவும் தமிழ் அகதிகள் தமிழ் அதிகாரிகளின் சப்பாத்துக்களின் கீழ் நசுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே முரண் நகையானது. 



பெண்மையை, பெண் சுதந்திரத்தைப் பேசாத எந்தவொரு படைப்பும் அத்துணை கலைத்தன்மை கொண்டதாக அமைந்துவிடாது. சாந்தி எனும் மையப் பாத்திரத்தின் நகர்வினூடாக பல்வேறுபட்ட முகாம் பெண்களையும் முகாம்களை ஒட்டியுள்ள ஊர்ப் பெண்களையும் அவர்களின் பார்வையில் முகாம் எனும் திறந்தவெளிச் சிறைச்சாலையின் பன்முகப் பார்வைகளை அவதானமாக கையாண்டுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்ற வார்த்தையைப் போலத்தான் இருபக்கமும் கூர்மையுள்ள கத்தியின் மீது நடப்பதைப் போன்ற பதற்றமே அந்தரத்தினை வாசித்து முடிக்கும்வரை. 


இருபக்க உறவுகளுக்குள்ளும் பார்வைக் கோணல்கள் இருக்கிறது. அது சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்பட்டும் இருக்கிறது. இப்போதும் வெளிப்பட்டவண்ணம் இருப்பதையும் மறுக்க முடியாது. ராஜீவ்காந்தி கொலைக்கு முன் ராஜீவ்காந்தி கொலைக்குப் பின் என தமிழகத்தில் ஈழ அகதிகள் வரையறுத்துப் பார்க்கப்படுவதும் கண்கூடு. இன்றைக்கு எவரும் இல்லை ஆனால் அவலங்களைச் சுமப்பது என்னவோ சாமான்ய அகதிகள்தான். நரம்பில்லாத நாவுக்குத்தான் எத்தனை தடித்த சொற்களை வீசி எறிகிறது எளிதில். அது மனதில் ஆறாது அந்தரித்து நிற்கிறது மனம் நொந்தபடி. 


சாதி சமயம் இரண்டும் மனிதர்களை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும். அதுபோல் வஸ்துகளின் பழக்கவழக்கங்களும், கொலைக் குற்றங்களும்,  முகாம் தலைவர் எனும் போதையும் அதிகாரிகளிடம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கும் கேவலமான செயலையும் செய்யத் தயங்காது என்பதை கந்தசாமி, முருகானந்தம் மாந்தர்கள் வழி எடுத்தியம்பிள்ளார். அதேபோல் கல்வியின் பெயரால் தொண்டு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் செய்த செய்கின்ற மோசடிகளும் கொஞ்சநஞ்சமல்ல. அகதிகளின் பெயரால் அவர்கள் பரலோகத்தில் நித்தியமடைவார்களாக ஆமென். 


அந்தரம் புதினத்தில் கதைசொல்லியாக பத்திநாதனே பயணிக்கிறார். தான் பார்த்த காட்சிகளை, தான் வாழ்ந்த வாழ்வை அவர் சொல்லிச் செல்வதைப் போலவே அமைத்துள்ளார். இங்கே ஜிகினா வேலைகளுக்கு இடமின்றி உள்ளதை உள்ளபடியே சொல்லியிருப்பதால் சக அகதியாக அவருக்கு என் ராயல் சல்யூட். மற்றபடி பெயர் மாற்றங்களும், கட்டிட மாற்றங்களும் நிகழ்ந்துவிடுவதால் மட்டும் எதுவும் உடனடியாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புலனாய்வு முற்றாக நீக்கப்பட்டு சுதந்திரமான வாழ்க்கை வழங்கப்பட்டால் மட்டுமே அந்தரித்து நிற்கும் மனங்களில் ஆறுதல் ஏற்படும். 


அவர் மன்னாரில் நின்றுகொண்டு கடந்துவந்த இந்த வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். நான் உள்ளுக்குள் இருந்துகொண்டே வாசித்து நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்.


"அந்தரம்" தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளின் கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் ஒரு காட்சிப் படம். 


ஆசிரியர்: தொ. பத்திநாதன் 

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

விலை: ₹250.

Friday, October 15, 2021

நாடிலி - தோழர் பொதியவெற்பன் ஐயா பார்வையில்



புலம்பெயர் ஏதிலி நினைவில்

'உடனலைந்து எரியும் ஒருபிடி நிலம்':2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


2.'கடல்மீதும் சிறுதுண்டு நிலந்தேடும் ஏதிலிபாதம்' -

ஞானசூரியின் 'நாடிலி' மீதான என் வாசிப்பின் பிரதி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


"உலகத்தின் வீதிகளில் ஒரு முகவரி தேடி

அலைகிறது என்னினம்...." -

கிழவன் வைகறை வாணன்  


"இங்குவந்த எனக்கு/

புலம்பெயர்ந்த புள்ளிவிபரம் பொருந்தாது/

ஊன்றிய காலை எடுத்து இன்னொரு/

இடத்தில் வைத்தால்/

முந்திய இடமும் பிந்திய இடமும்/

பூமிதான் எனக்கு/

எனவே எனக்கு நாடில்லை/

நாமம் இதுவென்று ஒன்றில்லை."


இப்படியாகப் புலம்பெயர் வாழ்விலும் பிறந்த மண்ணையும் புகலிட மண்ணையும் தமக்கான பூமிதான்என வீற்றிருக்கும் பிரமிளாலும் கூட,


"பார்த்த இடமெல்லாம்/ கண்குளிரும்/ பொன்மணல்

என் பாதம் பதித்து/ நடக்கும்/ இடத்தில் மட்டும்/

நிழல் தேடி/ என்னோடு அலைந்து/ எரிகிறது/

ஒருபிடி  நிலம்"

புகலிட நிகழ்தகவிலும்    புலம்பெயர்ந்துடனேயே

அலைந்து எரியும் ஒருபிடி நிலத்தை உதறிடவா முடியும்?


இதனால்தான், சச்சிதானந்தனின் ' நினைவில் காடுள்ள மிருகம் போல் எரியும் தம் நிலத்தை நினைவுகளில் தூக்கிச் சுமந்தலைகிறோம் என்னும் ஞானசூரி அதுதரும் வாதையிலிருந்து தப்பித்துக்கொள்ளப் படைப்பிலக்கியத்தின் வழியே சற்று ஆசுவாசம் கொள்கின்றோம் என்கின்றார்.


புகலிட வாழ்வூடே முந்தைய இடமும் பிந்தைய இடமும்

பூமிதான் தமக்கென்றாலும் 'உடன் அலைந்தே தான்

தீரும் ஒருபிடி நிலம்'. அந்த அல்லாட்டமே 'நாடிலி'.


*


"யாதும் ஊர்தான் யாவரும் கேளிர்தான்/

வேறு வழியில்லை/ ஊரற்றவனுக்கு உலகே வீடு/

என்பதெல்லாம் ஊரற்றுப்போன துயரம்/

மறக்கவே" - கலியமூர்த்தி

 மாறாக மறக்க அல்லாமல் அதனை மறுக்கவே 

செய்கின்றன ஏதிலியர் கவிக்குரல்கள்:


"சமுத்திரத்தின் பெருவெளியில்/ படகுகளோடு  மூழ்கிய குழந்தைகளை ஒதுக்கும் /கரையில்/நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்/ யாதும் ஊருமில்லை/யாவரும் உறவுமில்லை" 


"வெளித்திசை என்பது/ முகாம்வாசிகளின் ஒன்பதாவது

திசை."


"போர் திணித்த இடப்பெயர்வில்/ எப்படி நீங்கள்/என்னை/ அகதியென விளிக்கின்றீர்கள்?"

"முகாம்வாசிகளின் உள்ளத்தில்/ தீயின் கங்கு எப்போதும்/

கனன்றுகொண்டே இருக்கிறது/ அகதியென/ நீங்கள்

விளிக்கும் போதெல்லாம்/ நீராவி என்ஜினைப் போல்

எரிந்தடங்கும்" - ஞானசூரி


"அடையாளங்களற்ற நான்/ அதை நினைப்பதிலோ

நடுக்கம் எழுகிறது/ தலையைப் பிடித்தாட்டும் கைகள்

ஆயிரம்/ நாடுமில்லை/ இது என் பெயருமில்லை/

அடையாளங்களற்ற நான் அகதியும் இல்லையாம்" -

தர்மினி ('இருள் மிதக்கும் பொய்கை)


*


'கடல்வழி வந்த அகதி நதிபார்த்தல் ' சிவரமணியின்

வண்ணத்துப்பூச்சி பார்த்தலை நினைவூட்டுகின்றது.

இரண்டுமே நம்மனோர் முருகியலைப் போலாது அதில்

லயிக்கொணா வாழ்மானத்தின் சித்திரிப்புகளே:


மாலைவெய்யில்/ இரவு ஒளிகள்/ நதிநீரின் சலசலப்பு/

குறுமணலின் பளபளப்பு எல்லாம் அழகென்று நீங்கள்

வர்ணிக்கின்றீர்கள்/ இதுகாறும் நான் பார்க்கவில்லை

என்பதை விட/ இரசிக்க விடப்படவில்லை" எனத் தொடரும் கவிதை நதிக்கரை நாகரிகங்களில் சிறந்த இனவழி வந்தும் அகதியெனப்பட்ட தானடைபட்டாக வேண்டிய பட்டிக்குள் மாலைக்குள் சென்றடைந்தாகணுமே என அத்தருணப் பதைபதைப்பை முன்னிறுத்துகிறார்.


செவ்வலரி பூத்தவானமும் செங்குருதி தேங்கியதம்

நிலத்தையே பிரதிபலிப்பது  ஆகிப்போகையில்

அந்த அழகை எல்லாம் அவர்களால் எவ்வாறு ரசிக்க ஏலும்?


"இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு/ துப்பாக்கி

நீட்டப்படும் போது/ ஒரு மெல்லிய பூநுனியில்/

உக்காரக்கூடிய/ வண்ணத்துப்பூச்சியின் கனவு / எனக்குச் சம்பந்தமற்ற / ஒரு சம்பவிப்பு மட்டுமே."- சிவரமணி ('செல்வி சிவரமணி கவிதைகள்')

Thiru Arasu 

*


 

"ஒட்டஒட்ட வெட்டப்பட்ட/ அவர்களுடைய புன்னகை

போன்றே/ என்னுடைய புன்னகையும் இருந்தது/

என்னைப் போன்றே மொழி தெரியாத/ இரவல் முகங்கள்இரண்டை அகதிகள் தேசத்தில் / அவர்களும் அணிந்திருந்தனர்" - தில்லை Thillai Jeganathan 


"ஒட்டஒட்ட வெட்டப்பட்ட அவர்களுடைய புன்னகைபோன்றே/ என்னுடையபுன்னகையும் இருந்தது - என்ற வரிகளில் உறைந்திருக்கும் இறுக்கம் நாட்டை இழந்து துயரைச் சுமக்கும் பெண்களின் அடையாளம்.


'ஒரு தேசத்துக்காகக் கடலைத் தந்த/ எனது கண்களைப் போன்று/ அவர்கள் கண்களும் பூமிக்கே தாழ்ந்திருந்தது என்ற வரிகளுங் கூட, அத்துயரின் பிரமாண்டமான வடிவத்தை ஒரு சில வார்த்தைகளால் சொல்லிச் செல்வது." - குட்டிரேவதி ('ஆண்குறிமையப் புனைவைச்சிதைத்த பிரதிகள்') Kutti Revathi 


இவ்வாறே ஞானசூரியும்  'புன்னகைக்கும் ஒவ்வோர் முகத்திலும்/ வலியின் ரேகை பாதாளம் பாய்கிறது' என்னும் போது  வெவ்வேறு அகதிதேசப் புன்னகைகளும் ஒருசேர அதளபாதாளம் பாய்வன ஆகிவிடுகின்றன.


*


"உன் பாட்டனின் மூஞ்சியில்/ செத்த மாட்டீரலைச் சுட்டுத் தின்றுவிட்டு/ என் பாட்டன்விட்ட/ குணமும் மணமும் நிறைந்த குசுவிலிருந்து/ எடுத்துக் கொண்டிருக்கிறேன்/என் அசலான கவிதைக்கான/ கச்சாப் பொருட்களை." - ம.மதிவண்ணன் Mani Mathivannan 


"தத்துவார்த்தப் பின்புலத்திலிருந்து சாதியத்தின்

வேர்களைக் கோபத்தோடு அசைத்துப் பார்ப்பவை

ம.மதிவண்ணன் கவிதைகள்."


"இதற்கான கவிதைமொழியைக் கவனியுங்கள். அருள்

பாலித்தல்,உபதேசம்,அபயம், ஆக்கினை,ஸ்மிருதி

முதலிய பிராமணைத்துவச் சொற்கள் ஒரு பக்கம்;

இதற்கு முரணாக வெளிப்படுகின்ற சொற்கள் எவை?

குணமும் மணமும் என்ற வழமையான தொடரோடு 'குசு'என்ற சொல் செய்கிற வேலை என்ன? இத்தகைய கவிதை எழுதுவதற்குரிய மொழிச்சாதனத்தை மனத்திலாக்கிக் கொள்ளவேண்டும்." - தி.சு.நடராசன்

('கவிதை என்னும் மொழி')


ஞானசூரி தனக்கான மொழியை எங்கெங்கிருந்து

எல்லாம் எடுத்துக்கொள்கின்றார்:


"பிரபஞ்சத்தின்/ ஒவ்வொரு துகள்களுக்குள்ளும்/ என்

கவிதைக்கான சொற்களை / ஒளித்து வைத்து/

வேடிக்கை காட்டுகிறது மொழி."


"களமாடிக் காலிழந்து /ஒண்டிக் குடித்தனமாய்/

ஒடுங்கிப்போன/ ஒற்றைக்கால் அண்ணனின்/ மேனியில் விளாசிய/ பலநூறு கசையடித் தழும்புகளில்/ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்/ என் மொழியை"


*


ஆதிவாணியரும் (மாற்றுப் பாலினத்தார்) ஏதிலியரும்

அன்பின் அரவணைப்புக்கு ஏங்கிக்கிடப்போரே.


"நடு இரவில்/ திடுக்கிட்டெழும் குழந்தையைப்போல்/

அலறியெழுபவனுக்கு ஆதுரமான/ ஒரு சொல்

தேவையாயிருக்கிறது


" விழவில் தப்பிய செங்கட் சேய்/ கொளுவிய கூறினும்

ஒழுகாது அலமர/ஒருதாய்த் தேடி உவந்து/ பெருமடி

புதைக்கும் பெற்றித்தே தோழீ! - பெருஞ்சித்திரனார்

('நூறாசிரியம்' - நினைவிலிருந்து)


திருவிழாக் கூட்டத்தில் தாயைப் பிரிந்தே தப்பிய குழந்தை யார் தேற்றுதலுக்கும் அமைதியடையாது அதற்கப்பால் அன்னையைக்கண்டதும் ஓடோடி வந்தவள் மடியில் முகம்புதைக்கும் தன்மையே போல..


"எத்தனை / வசந்த காலம் வந்தென்ன/ ஒரு போதும்

துளிர்ப்பதேயில்லை/ பட்டமரம்"


"ஒரு /பச்சிலையின் துளிர்ப்பைப் போல்/ நம்பிக்கை

அளிக்கும் /ஒற்றைச் சொல்லைக் / கேட்கும் நாளே/

அகதிகளின் வசந்தகாலம்


*


அடைக்கலமாகிய தேசத்தின் தேர்தலுக்கு அவர்கள்

பகடைகள் ஆக்கப்படுவதையும்: மக்களின் சிறு வாழ்வையுங் களவாடும், ஆண்டுமுழுதும் பறக்கும் தேசமன்னர் மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கையில் மட்டும் தேசத்தில் இருப்பதாகச் சொல்லப்படுவதையும் சுட்டாமல் விட்டாரில்லை.  நம்மனச்சான்றை உலுக்கி முகத்தில் அறையும் நிகழாய் நம்மில் குற்ற உணர்வைப் பற்றவைக்கின்றது 'நாடிலி' அதனதன் பேசுபொருளை நம்முள் தொற்றவைத்துக் கடத்தவல்ல கவித்துவமும் வாய்க்கப் பெற்றுள்ளதே ஞானசூரியின் கவிதைமொழி.


 இன்னமுங் கூட தம்மைத் தாமே செதுக்கிச் செதுக்கிச் சிற்பிக்கவும் அவர்களாலும் இயலும். நாளாந்தமும் பதைபதைப்பான பாதுகாப்பின்மையில் உழல்தரும்  அத்தகு ஏதிலிவாழ்வில் ஆதுரமான அரவணைப்பை நாமும் அவர்கட்க்கு வழங்க முற்படுகையில் பத்திநாதன்களும் ஞானசூரிகளும் விஸ்வரூபித்தே விகசிப்பார்தாமே? (பத்திநாதன்களும் Pathi Nathan 

இங்கில்லாவிடிலும் எம்மூடேதானே அவர்கள் இருப்பும்!)


*


இவ்வாசிப்பின் பிரதியில் இறுதி முத்தாய்ப்பாக

ஒரு தொகுப்பாக்கக் கவிதை:


நமோ நமோ ததாகதா!

~~~~~~~~~~~~~~~~~

 

"போதி மரத்தின் நிழல்/ இருள்மண்டிக் கிடக்கிறது/ஒன்று/அவ்விடம் விட்டு விலகு/ இல்லையேல்/ நிழலை/வெட்டி வீழ்த்து.

அச்சமோ/ அழுகையோ /ஏதோவொன்று/ஒரு முறையாவது/ புத்தனின் கண்கள் திறந்து மூடுவதைப் / பார்த்துவிடும்/ அவாயெனக்கு"


"குறுநுண் பெரும்புயல் அசைத்திருந்தது/ வேம்பின்

கிளையில் முளைத்திருந்த காக்கைக் கூட்டினை.../

அடுத்தடுத்துக் கிளையுரசி குருதித் தோய்வோடு/

இறையாண்மை நதியில் வீழ்ந்திருந்த/ குஞ்சிற்குப்

புலியின் கண்கள்.


இறந்து காய்ந்திருந்த/ தவளையைத் தின்ற வாயோடு

பாய்ந்து நீந்திக்/ கவ்விப் பிடித்திழுத்துச் செல்கின்ற/

நாய்க்கு/ அச்சு அசலாய்ப் புத்தனின் கண்கள்"


"லட்சம் உடல்களில் ஓற்றை மரணம்/

ஆம் ஒற்றை உடலின் ஒரு லட்சம் மரணம்/

நமோ புத்தா"


"நரமாம்ச இரைவேட்டைச் சிங்களப் புத்தனுக்கு 

எதிரான  வியூகத்தில் சைவப்புலிகள்

காவி ஆக்டோபஸோடு கைகோத்த முரண்நகை!

நமோநமோ ததாகதா"

(சுகன்யா ஞானசூரி *  த.விஜய்ராஜ்  * ரமேஷ் பிரேதன்  *பொதிகைச்சித்தர் *)


Suganya Gnanasoory.  Vijayaraj Cholan. Ramesh Predan


#EXILE.


 

Saturday, October 2, 2021

என்சிபிஎச் உங்கள் நூலகம்- நாடிலி-அண்டனூர் சுரா

 



நூல் விமர்சனம் – நாடிலி 

நூலாசிரியர் – சுகன்யா ஞானசூரி

கடற்காகம் பதிப்பகம்,மதுரை


கடல் மீதும் துண்டு நிலம் தேடும் நாடிலியின் பாதக்குறிப்பு

- அண்டனூர் சுரா

அலைகளின் மீதலைதலும், கடலலையில் இளைப்பாற ஒரு துண்டு நிலம் தேடுதலும் காணி நிலமேனும் சொந்தம் கொண்டவருக்குப் புத்துயிர் அனுபவம் தருவதாக இருக்கலாம். உள்ளம் கெலிக்கும் குதூகலமாகலாம். அவர்களுக்குக் கடல் என்பது நீலத்தாய். அலைகள் நுரைப்பு, பூரித்த பொங்கோதம். இதுவே நிலமற்ற, மண்ணற்ற, நாடற்றவர்களுக்கு? அல்லது நிலத்தையும் மண்ணையும் நாட்டையும் தொலைத்தவர்களுக்கு? கடல் என்பதும், அலை என்பதும் சாபம்! இந்த நீலக்கடலுக்கு ஏன்தான் இவ்வளவு பரந்துவிரிந்த நிலம்? இந்தக் கடல் கொஞ்சம் தன்னை உள்வாங்கிக்கொண்டால், இரண்டு கால்களில் ஒன்றையேனும் ஊன்றிக் கொள்ளலாம் தானே!. ஒரே கடல்தான். ஒரே அலைதான்! ஒருவருக்கு வர்ணனைக்கான மூலப்பொருளாக இருக்கிறது. மற்றொருவருக்கு வாழ்வதற்கான ஆதாரம் தேடும் இடமாக இருக்கிறது! 


அலைகளின் மீதலைதல், கவிஞர் சுகன்யா ஞானசூரிக்கு கற்பனை அல்ல, புலம்பெயர் அனுபவம். அதுவே அவரது முதல் கவிதைத் தொகுப்பும் கூட. நாட்டைத் தொலைத்துவிட்டு, அலைஅலையாக அலைகளில் வாழ்விடம் தேடிய அகதிகளின் துர்வாழ்வை கவிதையாக்கம் கொண்ட நூல் அது. கவனம் பெற்றது. வாசித்தவர்களின் கண்களில் கண்ணீர் கோர்த்தது. இவரது அடுத்த படைப்பு நாடடைந்த, தொலைத்த நாட்டைக் கண்டடைந்த கதம்பக் கொத்தாக இருக்குமென்றே, நானும், என்னைப் போல நீங்களுமாய் காத்திருந்தோம். அடுத்தத் தொகுப்பைத் தந்திருக்கிறார். மதுரை கடற்காகம் பதிப்பகம் வழியே, ‘நாடிலி’. இத்தொகுப்பிற்கு ஏதிலி என்றோ அகதி என்றோ தலைப்பு தந்திருந்தால் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்கும். ‘ஏதிலி’யைப் போன்று, ‘அகதி’யைப்போன்று, ‘நாடிலி’ அதற்கு நிகரான சொல் அல்ல. 


அகதி, ஏதிலி இவ்விரு சொற்கள் தமிழக மக்களுக்குப் பரிச்சயமானவை. நாடிலி, பயன்பாட்டளவில் புதியது.  ஏதுமற்றவர்கள் ஏதிலி. எல்லா நாட்டிலும் ஏதிலிகள் உண்டு. இவர்கள் வாழும் நாட்டிலேயே நாதியற்றவர்களாக ஆக்கப்படுகிறவர்கள். நாடோடியாக வாழ்ந்து, பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ள உரிமை பெற்றவர்கள். பழங்குடிகளின் வாழ்வு இப்படியாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது. மலை மேல் குடியிருக்கும் மலைவாசிகள், பெருஞ்சுரண்டலால், மண், நிலம், பூர்வீகத்தை இழந்துவிடுகிறார்கள். அதேநேரம், இவர்கள், எங்கையும் வாழ்ந்துகொள்ளலாம், என்கிற உரிமை கொண்டவர்களாகிவிடுகிறார்கள். 


அகதி, தான் வாழ்ந்த நிலத்தை விடுத்து, பிற காரணங்களால்  இடம் அல்லது புலம் பெயர்பவர்கள். இடம் பெயர்வும் புலம் பெயர்வும் ஒன்றல்ல. கிளிநொச்சியை விடுத்து, யாழ்ப்பாணத்தில் குடியேறுவது இடம் பெயர்வு. ஈழத்தை விடுத்து கனடாவை நோக்கி நகர்வது புலம் பெயர்வு. புலம் என்பதற்கு துறை, துறைமுகம், நிலம், அறிவு, துருவம், இடம் என இன்னும் பல பொருளுண்டு. இங்குப் புலம் என்பது நிலம். சொந்த நாட்டினரால், சொந்த மக்கள் அகதியாக்கப்படும் சூழல், போர்ப்பெருங்கலைகளில் ஒன்றாகி வருகிறது. 


அகதிகள், ஒரு கட்டத்தில் சொந்த புலம் அல்லது இடத்திற்குத் திரும்புகையில், விடுத்துச் சென்ற இடம் திரும்பவும் கிடைக்கையில், அவர்கள் ‘வீடடைதல்’ ஆகிறார்கள். நாடிலி, கவிதைத் தொகுப்பில், ஒரு கவிதையில் ஒரு பறவை அப்படியாக வீடடைகிறது. அதே விட்டுச் சென்ற இடம், கொடுங்கர ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, அவர்களின் வாழ்ந்ததற்கான அடையாளம் அழித்தொழிக்கப்படுகையில், நிலத்தை இழந்தவர்கள், நாடிலி ஆகிறார்கள்.  


நாடிலி என்பவர் நாடற்றவர்கள் அல்ல. நாட்டை இழந்தவர். நாட்டைப் பறிகொடுத்தவர்கள். ஞானசூரியின் இக்கவிதைத்தொகுப்பு, நாடிழந்த, நாட்டை இழந்ததன் மூலம் மண், மரம், செடி, கொடி, இணை உயிர்கள், காற்று, சுதந்திரம், வாழ்க்கை, தொழில், சொந்தம், உறவு, நிம்மதி, அமைதி,..என பலவற்றையும் இழந்தவர்களின் ஒவ்வொரு நொடி வாழ்தலையும் திணையாகக் கொண்டு பாடுகிறது.  அகத்திணையில் வறட்சி, வெப்பம் பிரிவு, துக்கம் என இடர்களைக் கொண்டது பாலை திணை. அதேபோன்று நாடிலி, நாடிழந்தவர்களின் துயர், துன்பம், துக்கங்களைத் திணையாக பாடுகிறது. 


ஒரு கவிதையில் குயிலின் ஓசையொன்று பெரும் கட்டடங்கள் முளைத்த மாநகரில் கேட்கிறது. குயில் வனத்தைத் தேடும் குயிலுக்கு, அது அமர்ந்து பாட எப்படியோ ஒரு மரம் கிடைத்துவிடுகிறது. வனம் தொலைத்த குயிலுக்கு, அந்த ஒரு மரம் சிறுவனமாக கிடைத்துவிட்ட மகிழ்ச்சி அதற்கு. தன் மரத்தை இழந்து, குடைந்தடைய மரமற்று, ஒரு சில்வண்டு தனக்கான இடத்திற்காக வெப்பம் பொதிந்த பொழுதில் தன் புலத்தைத் தேடி உரக்க ரீங்கரிக்கிறது. குயிலின் கூவுதலும், சில்லுவண்டின் ரீங்காரமும் ஒன்றல்ல. ஞானசூரியின் கவிதைகள் சில்லுவண்டின் ரீங்காரத்திற்கு ஒத்தவை. தொலைத்த புலத்தை, தொலைவிற்குக் காரணமான, காது கொடுத்துக் கேட்க மறுப்பவர்களின் காதுகளைக் குடையும் குரல். 

நாடிலி, இந்நூலை கவிஞர், "நாடற்று அலையும் அத்தனை ஏதிலிகளுக்கும் " சமர்ப்பணம் செய்துள்ளார். நாடிலி, என்கிற சொல்லைக் கண்டதும், எனக்கு வகிபாகம் சொல்லுடனான ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், பேசும் பொருளாக மாறியிருக்கையில், ஒரு பத்திரிகைக்கு எழுதிய ஒரு கட்டுரையில், வகிபாகம் என்றொரு சொல்லைப் பயன்படுத்தியிருந்தேன். கட்டுரையைப் பிரசுரப்பதற்கு முன்பாக, அப்பத்திரிகையின் ஆசிரியர் வகிபாகம் சொல் குறித்து, விளக்கம் கேட்டார். விளக்கத்தை உள்வாங்கிய அவர், இது ஈழச் சொல் அல்லவா, இதை ஏன் தமிழ்நாட்டில் புகுத்துகிறீர்கள், என்றார். ஈழச்சொல் தமிழ்ச்சொல்தானே, என்றேன். 

வகிபாகம், என்கிற சொல் இங்கே வேரிட்டிடக் கூடாது, என்பதும் ஈழ நாடிலிகள் இங்கே நிரந்தரமாக குடியேறிவிடக்கூடாது, என்பதும் இருவேற்றுமை அல்ல. இந்த உரையாடல் நடந்த ஒரு மாதத்தில், தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், கொள்கை முடிவு வெளியானது. இந்தத் திருத்தத்தில் மியான்மர், பூடான், வங்கதேசத்து, பாகிஸ்தான் இந்துக்களை இந்திய குடிமகன்களாக ஏற்க முன்வந்த அரசு, ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இருந்த போதிலும், இந்தியாவின் அடையாளமாக இதிகாசிக்கப்படும் இராமாயணத்தின் கதை அங்கு நடந்தேறியிருந்த போதிலும், அவர்களை ஒரு பொருட்டாக நினைக்கவோ, உள்வாங்கும் முடிவைப் பரிசீலிக்கவோ இல்லை. இப்படியான தருணத்தில்தான், நாடிலி என்கிற இக்கவிதைத் தொகுப்பும், நாடிலி ஒருவரால் எழுதப்படும் பாடுபொருளும் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. 


"அலைக்கழிக்கும் பறவை" என்றொரு கவிதையில், அந்தகார இருளுக்கப்பால் பெருவெளியெங்கும் தேடியலையும் பறவை ஒரு வேளை உங்கள் பார்வைக்குப் புலப்பட்டால் அப்பறவை குறித்து சிறுகுறிப்பு வரைக, என்கிறார் கவிஞர். அதற்கான குறும்பதில், " காணாமல் ஆக்கப்பட்டவை" என்கிற கவிதையில் கிடைக்கப் பெறுகிறது. ஓயாமல் ஒலித்த படியிருக்கும் பூச்சிகளின் ரீங்காரம், பெருங்காட்டைத் தொலைத்த பறவைகளுக்கும் சேர்த்து குரல் எழுப்புகிறது. ஓயாமல் ஒலிக்கும் நாடிலி பூச்சி, கவிஞர் சுகன்யா ஞானசூரி. 

நாடற்றவர்களின் வாழ்வில் வேறு என்னவெல்லாம் கனவாக இருக்கின்றன, என்பதைக் கவிதைகளால் இடறிவிடும் சொற்கதிர்கள் புலப்படுத்துகின்றன. தாயகம், பறவை, தாய்நிலம், அடையாளம், முகாம், வீடடைதல், வாழ்வு, வைகறை, நாளை,ஆசை, வானம்,ஆதிக்குத் திரும்புதல்,முகம், அரசியல்,நவதிசை,மழை,ஊர், நதி பார்த்தல், சொற்கள்,பெருவெளி,மொழி,. இவைப் பாடுபொருளாகவும், அதன் மீதான கனவும் கனம் பொதிந்த வாழ்வும் கவிதைகளாக களம் கொள்கின்றன. 

ஒரு நாடிலியிடம், இப்படியான நிலைக்குத் தள்ளிய அதிகாரம், கேள்வி எழுப்புகிறது. உனது அடையாளம் என்ன? என்று.  “ மிச்ச மீதியாயிருக்கும் / உயிரைக் காக்கப் போராடும் / அடிமையான அகதி நாங்கள்/ வேறென்ன அடையாளம் சொல்ல?, என்கிறது ஒரு கவிதை. அதிகாரமே இல்லாத அகதிக்குத்தான்/ எத்தனை வண்ண வண்ண /அடையாள அட்டைகள் என்கிறது மற்றொரு கவிதை. அகதிகளின் வண்ணமயமான அடையாள அட்டையில் பொதிந்து கிடக்கும் நிறமற்ற இருண்ட வாழ்வைக் கண்களுக்கும் வெளியே கண்ணீராக வடிக்கிறது. 


போதி மரத்தின் நிழல் வரலாற்றுக் கதையாடலில் ஞானம், நிலம், அமைதி கொடுக்கும் உருவமாக இருக்கிறது. ஆனால் அதன் நிஜமோ, நிழல் எது இருள் எது எனப் பிரித்தறிய முடியாத இருண்மையைக் கொண்டிருக்கிறது. அந்த நிழல் அச்சமூட்டுவதாகவும், கொலை ஆயுதம் நீட்டுவதுமாக இருக்கிறது. அந்த நிழலிருந்து விலகு என்கிறார் கவிஞர். இல்லையேல் நிழலை வெட்டி வீழ்த்து என்கிறார். நிஜத்தை வீழ்த்தாமல், நிழலை வெட்டி வீழ்த்துவது அத்தனை எளிதா, என்ன? 

அச்சமோ அழுகையோ / ஏதோவொன்று / ஒரு முறையாவது / புத்தனின் கண்கள் திறந்துமூடுவதைப் பார்த்துவிடும் / அவா எனக்கு, என்கிறார் கவிஞர். அவருக்கு மட்டுமா?

வாழ்வதற்கு நாடற்ற நாடிலிக்கு சாவுவதற்கேனும் ஒரு நாடு வேண்டும், எனக் கேட்பது, என்னே கொடியது. நாடே இல்லையாயினும் அவனுக்கு உரிமையான ஒரு மரத்தின் கிளையேனும் வேணும், எனப் பாடுவது, எத்தனை வலியது. எல்லையற்ற வெளியில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் / மகள் இப்போது என் தாய்நாடு பற்றி வினவுகிறாள் / நான் பிரபஞ்சத்தின் மேலிருந்து ஒற்றைச் சுருக்கில் தொங்குகிறேன். என எழுதுகிறார் கவிஞர்.  தான் பெற்ற மகள், என் தாய்நாடு எனக் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல இயலா ஒரு தந்தையால் வேறென்ன செய்ய இயலும்?. பிரபஞ்சத்தில் தொங்கம் ஒற்றைச் சுருக்கு கயிறை விடவும், மகளின் நாடு பற்றியக் கேள்வி பதைக்க வைக்கிறது.


தான் பேசும் மொழியில், சா தீயை, மதத்தைத் தேடும் குரூரம் நவநாகரிக பழக்கமாகி வந்துள்ளது. நாடிலி என்பதே ஒரு சாதியாகவும் மதமாகவும் ஆகிவரும் இவரிடம் அதை ஏன் தேடுவானேன்? கவிஞனின் ஒரு நாள் கழிவு, எத்தகையது எனத் தேடினேன். `ஒரு நாளின் 24 மணி நேரம் என்பது / அகதிகளான எங்களுக்குப் / பெரும் அவஸ்தை’ என்கிறார். மருத்துவ ஆய்வகத்தில் நுண்ணோக்கியில் அலைவுறும் நுண்ணுயிரிகளின் வெளியில் / அவருக்கான உயிர்க்காட்டைத்/ தேடும் கவிஞர், அந்த ஆய்வகம் இருந்த இடத்தில் அத்தனை இரைச்சலுக்குமிடையில் கூவும் ஒற்றை குயிலின் கூவுதலில் தொலைத்த வனத்தைத் தேடும் பறவையோடு அவருக்கான வனத்தையும் தேடுகிறார். பச்சை மட்டுமே வாழ்ந்த இடத்தில், இப்போது சிவப்பு மஞ்சள் பச்சை. 

அலைக்கழிக்கும் பறவை, உருமாறுகிறது வெண்ணிலவு, நட்சத்திரங்களினூடே, கொடிய நிழல், ஆதிக்குத் திரும்புதல், புலம் பெயராது இருந்திருக்கலாம், வெறுங்கழுத்தி, பெருந்தொற்றில், இருள் விலகா மௌனம் தலைப்புகளில் நாடிலியின் இருபத்து நான்கு மணி நேரங்கள் அலையாடுகிறது. ஒரு கவிதை, குளத்தின் வட்டச்சுழல் அதிர்வையும் மனஅதிர்வையும் ஒப்பிட்டு சுழலாற்றுகிறது. 

சிறு கல் / விழுந்த குளத்தின் / அதிர்வென விரியும் / வட்டச்சுழலில் / நினைவதிர்வொன்று / சுழன்றபடி இருக்கிறது / ஒரு பாடல் / நுழைந்த மனதில்.


ஒரு கவிதையில், ஏன் என்னை அகதியாக்கினீங்கள்? எனக் கேட்கிறார். அவரது தந்தையிடம் அவர் கேட்கும் கேள்வியாக அது இருந்தாலும், அக்கேள்வி இந்த உலகத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்வியாகவும் இருக்கிறது. அப்படியாகக் கேட்ட கவிஞர்தான், தன் என்னுரையை இவ்வாறு முடிக்கிறார், “ அகதிகள் இல்லா உலகம் உருவாக வேண்டுகிறேன் ” சபிக்கப்பட்டவர்களால் நிரம்பிக் கிடக்கும் இந்த உலகில், இந்த வேண்டலை அவர் யாரிடம் கேட்டிருக்கக் கூடும்? காது உடையவர்களிடமா? இல்லை, மென்மெல்லிய இதயம் உள்ளவர்களிடம்!  

கடல் மீதும் துண்டு நிலம் தேடும் நாடிலியின் பாதங்கள், தனக்கான புலத்தைச் சென்றடைய வேண்டும், என்பது என் வாழ்த்துகை அல்ல, வேண்டல்!! 

- அண்டனூர் சுரா

1546 C,மகாத்மா நகர்

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்- 613301

அலைபேசி - 9585657108


இவ்வளவு விரிவாக நாடிலியை முன்வைத்த தோழர் அண்டனூர் சுரா அவர்களுக்கு என் அன்பும் நன்றிகளும் என்றென்றும். ப்ரியங்கள் தோழர்.




Wednesday, September 8, 2021

ஷம்பாலா - தமிழவன்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் வாசித்திருக்கும் நாவல் தமிழவன் அவர்களின் ஷம்பாலா எனும் அரசியல் நாவல். துவக்கத்தில் தொடுவதற்கு சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவரது ஸ்ரக்சுரலிசம் நூலை வாசிப்தற்காக நான் தோழர்கள் Jamalan Tamil , Mubeen Sadhika , Yukaanthan Yuva போன்றவர்களின் எழுத்துகளின் வாயிலாகவே உள்ளேக முடிந்திருந்தாலும் இன்னும் வாசிப்பினை தொடராமலே உள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக எளிமையாக இருந்தது ஷம்பாலா. 


ஷம்பாலா அதிகாரத்தின் உறைவிடம். வலதுசாரியச் சித்தாந்தத்தின் புதிய கொள்கைகளும், அது தொடர்ச்சியாக பெற்றுவரும் வெற்றிகளும், அதிகாரத்திற்கு எதிரானவர்களை அதிலும் குறிப்பாக படைப்பாளர்களை பழிதீர்ப்பதில் செயல்படும் நுணுக்கங்களையும் (கெளரி லங்கேஷ் படுகொலை, வரவர ராவ் போன்றவர்கள் நினைவில் வந்து செல்வார்கள்) மூன்றாம் ஹிட்லர் எனும் நீலக்கண் அரசியல்வாதியூடாக விறுவிறுப்பான நடையில் சமகால அரசியலை அலசிச் செல்கிறது.


ஷம்பாலா ஹிட்லரின் சிறுபிராயம், வளரிளம் பருவம், காதல் தோல்வி, அரசியல் தாதாவாகுதல், திருமணத்தினை மறைத்தல் என பல்வேறு விடையங்களை நீங்கள் வாசித்தால் மட்டுமே யார் யார் என்பதை கண்டடைய முடியும்.


ஜெர்மானிய ஹிட்லரை தோற்கடித்து, வலதுசாரியச் சிந்தனையை வேரறுத்தவர் ரஷ்யாவின் ஸ்டாலின் அரசு என்பதை அமர்நாத் பாத்திரம் அழுத்தமாக சொல்வது சமகாலத்திலும் எதார்த்தமாக அமைந்துள்ளதா? அல்லது விதிப்பயனா? 


//நாம் சாதாரணமானவர் என்று பிறர் கூறும்படி அப்படியே இருந்தோமென்றால் இப்போது போலவேதான் எப்போதும் இருக்க வேண்டியவர்களாவோம்.// லாமாக்களின் இந்தப் போதனை ஒவ்வொருவரையும் அவரவரின்  இயங்கியலை நிறுவுகிறது. 


முழுமையான ஒரு அரசியல் நாவல். நாம் சாதாரணமானவர் இல்லை. இனி தமிழவனின் அடுத்தடுத்த நூல்களையும் வாசித்துவிடுவேன் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது. 


- சுகன்யா ஞானசூரி

08/09/2021.




 

Friday, August 6, 2021

நாடிலி - எழுத்தாளர் வாசு முருகவேல் பார்வையில்



நாடிலி - சுகன்யா ஞானசூரி
-

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்
என் பாதம் பதித்து 
நடக்கும் 
இடத்தில் மட்டும் 
நிழல் தேடி
என்னோடு அலைந்து 
எரிகிகிறது
ஒருபிடி நிலம்

கவிஞர் பிரமிளின் இந்தக் கவிதையைத்தான் என்னுடைய "புத்திரன்" நாவலின் தொடக்கத்தில் பதிவு செய்திருந்தேன். கவிஞர் சுகன்யா ஞானசூரி தன்னுடைய "நாடிலி" கவிதைத் தொகுப்பின் முன்னுரையை அதே பிரமிளின் கவிதையுடன்தான் தொடங்குகிறார். நாங்கள் அகதிகளாக அலையும் காலம் முடிவற்று நீண்டு கொண்டே செல்கிறது ஒரு பிடி நிலம் தேடி. அகதிகள் என்ற வார்த்தையிலும் பல அரசியல் இருக்கிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் "அகதிகள்" என்ற அடையாளத்துடனும் ஒரு அணி பங்கேற்கிறது. அதில் ஏன் ஈழத்தமிழர்கள் இல்லை என்று தமிழக நண்பர் ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பி இருந்தார். உலகெங்கும் ஈழத்தமிழர் பரந்து வாழ்வதால் எல்லோரும் அகதிகள் என்ற அளவில் அவருடைய புரிதல் இருக்கிறது. தாய் நிலத்தை பிரிந்த வலி என்பது அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால், ஈழத்தவர் ஒவ்வொருவரின் நிலையும் ஒன்றல்லவே. பெரும்பாலான ஈழத்தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று விட்டார்கள். அகதியாக வந்து இறங்கியது முதல் இந்த நிமிடம் வரை அகதியாகவே வாழ்கிறவர்கள் என்றால் இந்திய நிலத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் மட்டும் தான். அதிலும் முகாமுக்கு உள்ளும் - வெளியிலும் கூட அன்றாட சிக்கல்கள் மாறுபடுகின்றன. பாரிசிலும், லண்டனிலும், ரொரன்டோவிலும் இருந்து எழுத்துவது போலல்ல ஒருவன் தமிழகத்தில் அகதியாக இருந்து எழுதுவதும் / குரல் கொடுப்பதும். அகதி நீ அரசியல் பேசாதீர். அம்மணமாக அடித்து துரத்த வேண்டும். இப்படி எத்தனை வசவுகள். கம்யூனிஸ்ட் பெரியாரிஸ்ட் என்று எத்தனை இஷங்கள் கழுத்தை நெரிக்கின்றன. ஈழத்தமிழன் தலை விதி அப்படி !.

இன்னும் இருக்கிறது . இன்னும் நிறையவே இருக்கிறது. அகதியாக இறக்கும்  வரையிலும் எழுதமுடியாதவை நிறைய இருக்கிறது.
-

அகதிகள் வீடடைதல்

புழுதிகள் அடங்கி வெப்பம் தணியும்
கோடையின் இரவுகளைத்தான்
வரவேற்று மகிழ்கிறோம்
தார் சீற்றின் கீழே
அடுப்பின் வெக்கைக்குள்
வெதும்பிய குரல்கள் பேசிக்கொண்டிருக்கின்றன
இதோ
மரத்தினடியில்தான் கோடையின் பகல்கள்
சீட்டாட்டமாகவும்
விரல் சுண்டும் கேரம் போர்டாகவும்
ஊர் பேச்சோடு நகர்ந்தபடி இருக்கிறது சூரியன்
இதற்காகவே நாங்கள் மரங்களை வளர்த்தோம் 
உங்களுக்கு 
அவர்களோடு உறவென்ன இருக்கப்போகிறது தெரியாது
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெட்டாஷ் சீற்றுக்கு மாறியிருக்கிறது
பத்துக்குப் பத்து என்பதொரு கணித சூத்திரம்
இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
கல்லறையின் அளவை
அந்திக்கருக்கலில் விடைபெற்றுச் செல்லும்
சூரியனைப் போல் மெல்ல விடைபெறுகிறோம்
மரங்களை விட்டு
வீடுகளுக்குள் வெளிச்சம் பரவுகிறது
மண்ணெண்ணெய்க் குப்பி விளக்கிலிருந்து
குண்டு பல்புக்கு மாறிவிட்டோம்
புழுக்கத்தின் நாற்றம் மிகக் கொடியது
இரவுகளை
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்
கோடையில் பெய்யும் 
பனியின் வெம்மையில்
குளிர் மெல்லப் பரவுகிறது
போர்த்தி உறங்குவதற்குள் விடியல் துவங்கிவிடுகிறது
மீண்டும் மரங்களோடு உறவாடுதலும்
அகதிகள் வீடடைவதும் தொடர்கதையாகிறது
மறந்துவிட்டேன்
நாளை வந்து கையெப்பம் இட்டுச் செல்லும்படி ஆணை

-

வாழ்த்துகள் Suganya Gnanasoory  🖤

 

Saturday, July 31, 2021

நாடிலி தொகுப்பு குறித்து சுப்ரா. வே. சுப்ரமணியம் பார்வை

 







“ நாடிலி “ – கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் – சுகன்யா ஞானசூரி . [ 97903 50714 ]

வெளியீடு – கடற்காகம் வெளியீடு .

விலை – ரூ 110 . [ முதல் பதிப்பு ஜூன் 2021 ]

மா . ஞானசூரி எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் 1984 ல் பிறந்து , 1996 ல் தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர் . தற்சமயம் திருச்சியில் வசித்து வருகிறார் . அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது .

தொகுப்பின் தலைப்பே போதும் உள்ளிருக்கும் கவிதைகள் வாசிப்பவர்களிடம் உருவாக்கப்போகும் வலிகளை உணர்த்துவதற்கு .

வருமானம் தேடி புலம் பெயர்தல் வேறு ; வாழ்விடம் இழந்து , வாழ்வாதாரம் இழந்து வலியோடு புலம் பெயர்தல் வேறு . வந்த இடத்திலும் தனியொரு அடையாளம் இன்றி அகதி என்ற ஒற்றை அடையாளத்தோடு வாழ்தல் தரும் வலி மிகப் பெரிது . அந்த வலி குறித்து பல புதினங்களும் , சிறுகதைகளும் வந்து கொண்டேயிருந்தாலும் கவிதை என்ற வடிவத்தில் அவை வாசிப்பவர்களிடமும் அந்த வலியை எளிதாகக் கடத்தி விடுகின்றன . இந்த தொகுப்பு முழுவதும் அத்தகைய வலி தரும் வரிகள்தான் . பழைய நினைவுகள் தரும் வலிகளையும் , வந்த இடத்தில் அனுபவிக்கும் வலிகளையும் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார் கவிஞர் . கவித்துவமான வரிகளையும் மீறி வாசித்து முடிக்கையில் நம்மிடம் எஞ்சி நிற்பவை வலி …. வலி…. வலி …. தவிர வேறொன்றுமில்லை .

அரசின் பதிவேட்டில் / அங்க அடையாளங்களோடு

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மிச்சம் மீதியாயிருக்கும்

உயிரைக் காக்கப் போராடும் / “ அடிமையான அகதி நாங்கள் “

வேறென்ன அடையாளம் சொல்ல ? 

அகதிகள் முகாம்களில் நிகழும் கொடுமைகளை பட்டியலிட்டு முடிக்கிறார் ஒரு கவிதையை - 

உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரிவதைப் போல

யாழினிகள் தெரிவதில்லை . 

முகாம்களில் வாழ்விடம் என்பது ஒருவகையான வெற்றிடமே எனக் காட்டும் வரிகள் -

பத்துக்கு பத்து என்பதொரு கணித சூத்திரம்

இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்

கல்லறையின் அளவை . 

அகதி வாழ்வு என்பது எவ்வளவு கொடுமையான மனநிலையைத் தருகிறது இந்த வரிகளில் -

மஞ்சள் கனியொன்றின் / பற்குறியில்

உறைந்து கிடக்கும் / குருதியென வீச்சமடிக்கிறது

இந்த வாழ்வு . 

பழைய நினைவுகளில் மூழ்கியெழுந்து வெளியேறி தற்போதைய வாழ்வு நிலையை எளிமையான வரிகளில் கடத்திச் செல்கின்றது கவிதை ஒன்று - 

சீவல் தொழிலற்று

சீவியம் போன மூத்த குடியானவன் பிள்ளை

பனை நிழலும் அற்றுப்போனான் . 

கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளை சற்றே மாற்றிப் போட்டுள்ள வரிகளின் வீரியம் எவ்வளவு வெப்பத்தைக் கொணர்கிறது -

சமுத்திரத்தின் பெருவெளியில்

படகுகளோடு மூழ்கிய குழந்தைகளையொதுக்கும்

கரையில் நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்

யாதும் ஊருமில்லை / யாவரும் உறவுமில்லை . 

அகதிகளின் வாழ்வில் எதுவுமே நிரந்தரமல்ல எனினும் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை தனக்குள்ளாகவே உருவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி ?

அன்றன்றைக்குப் பெய்யும் / மழையை

அன்றன்றே ரசித்துவிடு / பிறிதொரு நாளில்

அது அதுவாகவும் நாம் நாமாகவும்

இருப்போமா தெரியாது .  

 


வாழ்வு தேடி வந்த இடத்திலும் வாடிக்கையான கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன – ஆனால் எவ்வளவு மனப்புழுக்கம் !

கந்து வட்டியில்தான் இந்த வருடமும்

எமக்கான தீபாவளி / அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது .  

தங்களது வலிகளை பிறரிடம் பகிர்கையில் எத்தனை சோகத்தை மனதில் தேக்கி வைத்திருந்தால் இந்த வரிகள் உருவாகும் –

இடப்பெயர்வின் வலிகளை

அகதியானவர்களிடத்து கேட்டுப் பாருங்கள்

கண்ணீரில் மிதக்கும் வாழ்வில்

நீந்த முடியாது அலைவுறுவீர்கள் . 

இந்த வரிகளை வாசிக்கையில் நமக்குள் ஏற்படும் குற்ற உணர்வை அவ்வளவு எளிதில் உதறிச் செல்ல முடியாது - 

போரை எவரும் விரும்பி ஏற்பதில்லை

ஆனால் அதுதரும் / விளைவுகள் குறித்து அச்சப்படுகிறேன்

போர் திணித்த இடப்பெயர்வில்

எப்படி நீங்கள் என்னை / அகதியென விளிக்கிறீர்கள் ?  

மழை குறித்துதான் எத்தனை கவிதைகளை வாசித்து விட்டோம் . ஆனால் அந்த மழை ஒரு நாடிலியின் பார்வையில் வேறு ஒரு உணர்வுகளை உருவாக்கி விடுவதை உணர்த்தும் வரிகள் -

யார் / கவிழ்த்துவிட்டது / அந்த மதுப்புட்டியை ?

இப்படிப் / பொங்கி வழிந்தோடுகிறதே

நிலமெங்கும் வெள்ளமென அகதிகளின் கண்ணீராய் . 

எவ்வளவுதான் வேதனைகள் சூழ்ந்திருந்தாலும் இயற்கையை இரசிக்காமல் இருக்க முடியவில்லைதான் . ஆனால் அந்த இயற்கையும் ஒரு சுய பச்சாதாபத்தைத்தானே உருவாக்கி விடுகிறது -

தாயகமிழந்த என்னை / நீங்கள்

அகதி என்றழைப்பதைபோல்

சாயமிழந்த வண்ணத்துப்பூச்சிகளை

என்ன பெயரால் அழைக்கிறீர்கள் ?  

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்று காலக் காட்சிகள் ஒரு நாடிலியின் பார்வையில் தொற்று குறித்த பயத்தைவிட தனது எதிர்காலம் குறித்த அச்சத்தை மட்டுமே உருவாக்கி விடுகின்றன என்பதை உணர்த்தும் ஓர் ஒப்புமை -

ஊடகத்தில் நிரம்பி வழியும் / பெருந்தொற்றில்

சாலைகள் மரணித்துக் கிடக்கின்றன

நிச்சயமற்ற எதிர்காலத்தின் / சூனியத்துழலும் ஏதிலிபோல்

அச்சம் ஒவ்வொரு இல்லத்திலும் அடைந்திருக்கிறது . 

புலம் பெயர்ந்த வலியை மிகுதியாகப் பேசினாலும் , உலகின் பொதுவான பிரச்சினைகளையும் பாடுபொருளாகக் கொண்டு சில கவிதைகளைத் தருகிறார் – சற்றே பகடி கலந்து தன் வலி மறக்கும் முயற்சியாக .

மேலைத்தேய கார்ட்டூன்கள்

அறிவையும் அன்பையும் போதிக்கும்வேளையில்

அடைக்கல தேசத்தின் கார்ட்டூன்கள் நஞ்சூட்டுகின்றன . 

சிறு சிறு வார்த்தைகள்தான் ; ஆனால் எத்தனை அர்த்தம் பொதிந்தவை –

கடல்மீதும் / சிறுதுண்டு நிலம்

தேடும் / அகதியின் பாதம் . 

ஒரு சில வரிகள் படைப்பாளியின் குரல் வழியே அனைத்து நாடிலிகளின் மனக் குமுறல்களையும் வலி பொதிந்து தருகின்றன -

அடைக்கலமான தேசத்தில் / நடைப்பிணங்களாய்த் திரிகின்றோம் / நினைவில் / ஊரைச் சுமந்தபடி . 

*************************************

தினந்தினம் இப்படி இறப்பதைக் காட்டிலும்

போர் நிலத்தில் / ஒரு கணம்

இறந்தே போயிருக்கலாம் / புலம் பெயராது . 

வாசிக்கும் யாரையும் உலுக்காமல் விடாது இந்த வரிகள் -

துயர்மறந்து விடியலை நோக்கும் / என் கனவுகளை

அகதியென்னும் ஒற்றைச் சொல்லில் / சிதைத்துவிடுகிறீர்கள் . 

தொகுப்பை வாசித்து முடித்ததும் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வு குறித்த வலி மிகுந்த உணர்வுகளை நம்மிடம் கடத்தி விடுவதன் மூலம் படைப்பாளி அவரது முயற்சிக்கான முழு பயனையும் அடைந்து வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் ; நாடிலிகளின் வலி குறித்த வலிமையான வரிகளைத் தாங்கிய தொகுப்பு .   

- சுப்ரா .