Sunday, October 25, 2015

ஹைக்கூக்கள்


#அடர்வன இருள்
கொஞ்சம் வெளிச்சம்
மின்மினிகள்!

#சாதிகள் பார்க்காது
வேலிகள் தாண்டும்
காற்றும் காதலும்!

#பறக்கத் தவிக்கிறது
காற்றில் அசையும் உதிர்ந்த
இறகு!

#அடுக்ககக் கட்டிடத்தின் எழுச்சி
அழுது சரிகிறது
மலைகள்!

#அரிதாரம் பூசிய அழகி
அழகாய்ப் பறக்கிறாள்
வண்ணத்துப் பூச்சி!

#பால்வடியும் முகம்
பயமற்று இரவு உலா
முழுநிலவு!

#அளவுக்கதிக போதை
தாறுமாறாய் சுற்றுகிறது
ரீங்கார வண்டு!

#மலர்களை நாடும்
மது விரும்பிகள்
தேனீக்கள்!

#யார் உதைத்துத் தள்ளியது
ஆக்ரோசமாய் விழுகிறது
அருவி!

#மேகக் குடம் உடைந்தது
மலைவழியே வடிகிறது
அருவி!

#என் முகத்தில்மட்டும் தூறல்
செல்லக் குழந்தை துப்பிய
எச்சில்!

#ஒற்றைக்கால் கொக்கின் காத்திருப்பும்
உறுமீன் வரவும் உயிர்ப்போடு
சித்திரத்தில்!

#கரைமீது அதீத காதல்
கரைபுரண்டு ஓடுகிறது காட்டாற்று
வெள்ளம்!

@
சோம்பல் முறித்து
எழுகிறான் கீழ்வானில்
ஆதவச் சிறுவன்!

@
பஷ்பமானது பனித்துளி
காலை வேளை
பகலவன் பார்வை!

@
இரவு கூடல்
அதிகாலைப் புல்மேல்
பனி!

@
பயணக் களைப்பு
கடலில் ஓய்வு
நதி!

@
எண்ணற்ற மரங்களை அழித்து
எண்ணிட்ட மர நடுகை
நெடுஞ்சாலை!

@
ஆபாசமற்ற
குளியல் காட்சி மழையில்
வண்ணத்துப் பூச்சி!
@
ஆகாயத்தில் பறக்கும் அட்டையென
ஆற்றுப் பாலத்தில்
இரயில்!

@
உடைந்து கிடந்தது
முகில்களுக்கிடையில்
நிலவு!

@
தேகம் சிலிர்த்தது
தீண்டியது
தென்றல்!

- சுகன்யா ஞானசூரி,

No comments:

Post a Comment