Sunday, April 22, 2018

பாதுகை-டொமினிக் ஜீவா முன்வைக்கும் தொழிலாளர் வாழ்வின் கதைகள்


டொமினிக் ஜீவா அவர்களது "பாதுகை" சிறுகதை யாழ் நகரத்து தொழிலாளர்களை மாத்திரம் அல்லாது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வாழ்வை பறைசாற்றும் கதைகளாகவே இருக்கின்றன. ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைப் போராட்டம். அவர்களின் வறுமை அவர்களின் சுய கெளரவத்தினை, அவர்களின் நேர்மையை ஒரு போதும் அசைக்க முடியாமல் தன் தோல்விகளை வறுமை ஒப்புக்கொண்டு விட்டது. பாதுகை சிறுகதை தொகுப்பினூடாக நாம் 1950-60களின் யாழ் மாகாணத்தின் அதை ஒட்டிய கிராமங்களை அதன் நிலைகளை, வளர்ச்சிகளை கதைகளின் ஊடே ஓவியமாக தீட்டியிருப்பதை மனக்கண்முன் கொண்டுவந்து விடுகிறார். எனக்கு 90களின் போர் சிதைத்த நகரங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அதோடு என் அம்மம்மா சொன்ன கதைகளினூடாக அறிந்த நகரங்களை இப்போது பாதுகையில் காண முடிகிறது.

"பாதுகை" ல் வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி முத்து முகம்மது, "நகரத்தின் நிழல்" லில் வரும் ரிக்ஸா வண்டியோட்டி சின்னட்டி, "தாளக் காவடி" ல் வரும் அரசுப் பேருந்தின் நடத்துனர் (இவர் ஊர் பெயர் பருத்தித்துறை என்பதை சொல்கிறார். ஆனால் அவர் பெயரை சொல்லவில்லை. இது ஏன் என்பது தெரியவில்லை. அது கதாசிரியருக்கு மட்டுமே தெரிந்ததாகவோ, புனைவாகவோ இருக்கலாம்.), "கைவண்டி" ல் வரும் நகரசுத்தித் தொழிலாளி செபமாலை மற்றும் "காகிதக் காடு" கதையில் வரும் நியூ புக் ஹவுஸ் ல் பணிபுரியும் மாலினி போன்றவர்களை இன்றும் நான் வேறு வேறு ரூபத்தில் பார்த்துதான் வருகிறேன். அதிலும் மாலினியின் கதாபாத்திரம் பணியிடத்தில் பெண்களின் பிரச்சினையை பேசுகிறது. நவநாகரீக உடையில் வருபவர்களின் சேட்டைகளும் ஐம்பது ஆண்டுகளாகியும் மாறாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

"குறளி வித்தை" கதையில் பிரசவத்திற்காக மனைவி பூமணியை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வீடு வருகிறார் தம்பிப்பிள்ளை. மனைவி கடுமையாக இருப்பதாக அனுப்பிய செவிலியர்களின் தவறான தந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகும் தம்பிப்பிள்ளை கற்கண்டும், கப்பல் வாழைப்பழமும் வாங்கும் பாக்கியத்தில் அனைத்தையும் மறந்து மனைவியையும் குழந்தையையும் பார்க்க செல்கிறார். கற்கண்டும் கப்பல் வாழைப்பழமும் ஆண் குழந்தை பிறப்பை குறிக்கும் குறியீடு. இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது "சவாரி" கதை. அச்சுவேலி சந்தையில் மாட்டுவண்டி சவாரி செய்யும் சவாரிச் சரவணை எனும் பட்டப்பெயர் பெற்ற சரவண முத்தருக்கு நான்கு ஆண் பிள்ளைகளுக்கு பிறகு ஐந்தாங்கால் பெண் பிள்ளை. முப்பத்தி ஒன்றாம் நாளில் பிள்ளைக்கு கண்டம் இருப்பதாகவும், அப்படி பிள்ளை கண்டத்திலிருந்து தப்பினாலும் அது தகப்பன் உயிரை எடுக்கும் என சித்திவிநாயகம் சாத்திரி சொன்னதை நம்பும் சரவண முத்தருக்கு தெரியாது அது சுருளி சுந்தரம் செய்த தந்திரம் என்பது. மாட்டுச் சவாரியில் வெற்றிபெறுகிறார் சரவண முத்தர். பெண் பிள்ளை வந்த நேரம்தான் இந்த வெற்றியை தந்தது என பெருமைப்படுகிறார்.

"வாய்க்கரிசி" கதை மதம் மாறி காதல் மணம் புரிந்த குடும்பத்தின் வாழ்வைச் சொல்லும் கதை. தேவதாசன் தன் மாமனுக்கு சுடலையில் வாய்க்கரிசி போட முடியாத நிலையை சொல்கிறது. "பாபச்சலுகை" கதை நடேசலிங்கம் எனும் சாதிய திமிரும் அதனால் எழும் விவாதமும் மருத்துவமனையில் திருச்செல்வதுடன் நடைபெறுகிறது. தன் பிள்ளையை கண்ட சாதிகள் படிக்கும் பள்ளியில் சேர்க்காத நடேசலிங்கத்திடம் கூண்டில் பறவையை அடைத்து வைத்திருந்தால் அது பிறகு கூண்டுதான் தன் உலகமென அங்குதான் கிடக்கும், பிறகு ஏன் கண்ட சாதிகளும் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த ஆஸ்பத்திரியில் சேர்கிறீர்கள் என்ற திருச்செல்வத்தின் கேள்வியில் மௌனமாகிறார் நடேசலிங்கம். நடேசலிங்கத்தின் மகளுக்கு பெயர் தெரியாத பெரிய வியாதி. இதுவே பாபச்சலுகை. நீங்கள் சொல்லும் அந்த கண்ட சாதிகள்தான் தங்கள் மொழியை, தங்கள் பாரம்பரியத்தை காவிக்கொண்டு திரிகிறார்கள் என்ற திருச்செல்வத்தின் வார்த்தைகள் சாட்டையாக விளாசுகிறது.

இப்படியாக வாழ்வின் அவலங்களை, மனித வாழ்வின் இருப்பை, கிழிந்து தொங்கும் எல்லாவற்றையும் ஒரு ஊசி, நூல் சில ஆணிகள் கொண்டு புதுப்பித்து தருகிறது பாதுகை.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 27
தலைப்பு: பாதுகை (சிறுகதைகள்)
ஆசிரியர்: டொமினிக் ஜீவா
வெளியீடு: தமிழ் புத்தகாலயம் பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 134

Saturday, April 21, 2018

ஈட்டி- குமார் அம்பாயிரம்

சரியலிசம், மாய எதார்த்தம், பின்னை நவீனத்துவம் போன்ற வடிவங்களில் கதை சொல்லும் புதுமையை தன் சிறுகதைகளின் வாயிலாக நிரூபித்துள்ளார் குமார் அம்பாயிரம் அவர்கள். "ஈட்டி" ஒவ்வொரு விஷயங்களையும் மெல்ல வருடுவதுபோல் சதக்கென குத்திவிடுகிறது. ஈட்டி குறி தவறாது எய்யப்பட்டிருப்பதை மொத்தக் கதைகளையும் வாசித்து முடித்த பிறகு உணரமுடியும். உணர்ந்தேன்.

ஒவ்வொரு கதைக்குள்ளும் பல பாத்திரங்களை உரையாடவிட்டு சோழி உருட்டும் ஒரு மாயவித்தைக்காரனாக வலம் வருகிறார். அஃறிணை எல்லாம் உயர்திணையாகவும், உயர்திணைகள் எல்லாம் அஃறிணையாகவும் கதையெங்கும் ஊடுபாவுகிறது. வரிக்கு வரி கவிதைகளாலே கதை சொல்லுவது போன்ற பிரமை தோன்றுவது தவிர்க்கவியலாத ஒன்று.

ஒவ்வொரு கதையிலும் ஏதோவொரு சமூகத்தின் பிரச்சினைகள் எதிரொலிப்பதை நீங்கள் புரிந்துகொள்ள இயலும். புணர்ச்சியின் இயக்கவியலை இலைமறை காயாக ஒவ்வொரு கதையிலும் நிகழ்த்திகாட்டுகிறார். அதேபோல் மாய உலகிற்கும் எம்மை அழைத்துச் செல்கிறார். விந்தையான மனிதர்களை, அவர்களின் செய்கைகளை பின்னை நவீனத்துவ பாணியில் கதைகளாக்கியுள்ளார்.

ஆவிகளை ஆவி என அழைக்காமல் அவற்றுக்கு ஒரு பொதுவான பெயராக "ன்யாக்" என பெயரிட்டு உரையாடுவதும், காக்கைகளின் புணர்ச்சியை பார்த்ததால் சாபம் பெற்றவன் காக்கைகள் வெறும் காக்கைகளா அல்லது பித்ருக்களா என ஐய்யப்பட்டு கோபத்தில் காக்கைகளை கொத்துக்கொத்தாக கொன்றழிப்பதன் விளைவால் நிகழும் சூழல் மாற்றங்களும், பாதிப்புகளும், காக்கை இல்லாத வெறுமை சூழ்ந்த உலகமும், பிண்டம் வைபோரின் இழப்புகளையும் விவரித்துச் செல்கிறது "க்காக்கா" எனும் கதை. ஈட்டி கதையில் நண்பன் தன் பழைய வாழ்வுக்கு மீள்வதை ஒற்றைச் சொல்லின் வாயிலாக புரிய வைக்கிறார். "மண்யோனி" முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டிய புரிதலை தந்திருக்கிறது. "தேடூ", "வழக்கு எண்235/2020 போன்ற கதைகள் ஒத்த வடிவம் பெறுபவையாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதைக்குள்ளும் கதையாளன் தன் ஆதி முகத்தை, ஆதி வாழ்வை, ஆதி பழக்கவழக்கங்களை தன்னோடு சுமந்தைலைபவனாக காணப்படுகிறான். நாகரீக உலகில் வாழ்ந்தாலும் மனதின் ஆழத்தில் ஆதியின் பிம்பம் படிந்ததின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம். இது நமது ஒவ்வொருவர் மரபணுவிலும் படிந்திருக்கலாம் என்பதை மறுக்கத்தான் முடியுமா? வாசித்துப் பாருங்கள் புதிய அனுபவம் ஒன்றைத் பெறுவீர்கள் என்பதை அந்த தொல்மக்கள் மேல் ஆணையாக சொல்கிறேன்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 26
தலைப்பு: ஈட்டி (சிறுகதைகள்)
ஆசிரியர்: குமார் அம்பாயிரம்
வெளியீடு: உயிர் எழுத்து பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 96
விலை: ₹70

Thursday, April 19, 2018

ஒவ்வா-ஸர்மிளா ஸெய்யித்


தமிழ் இலக்கிய வெளியில் காத்திரமான இஸ்லாமிய படைப்புகள் என்பது அதன் மார்க்கத்தை, மார்க்கம் நிகழ்த்தும் அடக்குமுறைகளை எதிர் கேள்வி கேட்பதன் ஊடாக வெளிப்படுகிறது. அப்படியாக தங்கள் சிறுகதைகளுக்குள்ளும், நாவல்களுக்குள்ளும் தம் மக்களின் பாடுகளை, அடக்குமுறைகளையும் எடுத்தாண்டு ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட படைப்பாளிகள் இப்போதும் எம்மோடு இருக்கவே செய்கிறார்கள். இது தமிழக இலக்கியப் பரப்பில் நிகழ்ந்த மோசமான நிலையாகும். அதிலும் ஒரு பெண் தன் மக்களை, சமூக பழக்கவழக்கங்களை கேள்விக்கு உட்படுத்துதல் என்பது கனவிலும் நிகழ முடியாத ஒன்றாகவே நீங்கள் எண்ணலாம். தன் கவிதைகளின் மூலமாக அப்படியான ஒரு செயலை செய்திருக்கிறார் "ஒவ்வா" கவிதை தொகுப்பினூடே ஸர்மிளா ஸெய்யித் அவர்கள். ஈழத்தின் கிழக்கு மாகாணமான மட்டக்கிளப்பின் ஏறாவூர் அவரது பிறப்பிடம். ஒவ்வா இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. ஒரு களச்செயல்பாட்டாளரும் கூட.

"சீசாவில் அடைபட்ட ஆவியாக
மாற எனக்குச் சம்மதமில்லை"

இக்கவிதையிலிருந்து தான் ஒரு கட்டுக்கடங்காத காட்டாறு, என்னை நீங்கள் உங்களின் கட்டுப்பாடுகளை, சாமானிய பெண்களின் மீது நிகழ்த்தும் அடக்குமுறைகளை கொண்டு என்னை கட்டுப்படுத்த இயலாது. அதில் எனக்கு சம்மதம் இல்லை என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிடுகிறார். கடலும் ஒரு காட்சியும் எனும் தலைப்பின் கீழ் வரும் இக்கவிதையை வாசித்துப் பாருங்களேன்.

"இலைக்கற்று அலையும் பார்வையுடன் விரல் சூப்பும்
குழந்தையை சுமந்து நடக்கிறாள் அவள்
புதையும் கால்களை இழுத்தவாறே
மணலில் புரளும் நீண்ட புர்காவை
ஒரு கையால் தூக்கிப் பிடித்திருக்கிறாள்
அருகே அவள் துணைவன்
வெள்ளை ரீசேர்ட்டில்
மயிர் அடர்ந்த நீண்ட தடித்த கால்கள் தெரிய
அரைக்காற்சட்டையும்
அதன் இரு பாக்கட்டுகளிலும் கைகளை விட்டும்
மிக நிதானமாக நடக்கிறான்
காற்று தடங்கலின்றித் தழுவ
மிக அலாதியாகக் கடலை ரசிக்கிறான்
அலைக்கரங்களுக்குப் பாதங்களைத் தடவத் தருகிறான்
புரண்டுவரும் அலையை உதைத்துக் குதிக்கிறான்
அரண்டு அழும் குழந்தைக்கு
பால்புட்டியைத் திணித்தபடி
வியர்வை வழியும் முகத்துடன்
கரையோர மணல் மேட்டில் குந்தியிருக்கிறாள் அவள்
மங்கிய மாலை இருளில்
அலைகள் புரண்டெழுந்து இரைந்தது நிறுத்தாமலே..."

புர்காவுக்குள் புலம்பும் அப்பெண்ணின் அவலத்தையும், ஆணின் சுதந்திரத்தையும், பெண் மீது சுமத்தப்பட்ட சுமைகளையும் அப்பட்டமாக பேசும் கவிதை. இருண்ட ஒற்றை நிறம் கவிதையும் இதையே வேறு வடிவத்தில் பேசுகிறது.

"அவர்கள் சொல்கிறார்கள்
என்னை ஒழுக்கங் கெட்டவள்
தேவடியாள் என்று
காதல் அடிமையாய் இருக்கலாம்
புணர்ச்சியை பேசுதல் குற்றமென்கிறார்கள்
பிள்ளை பெறலாம்
எந்தத் துவாரம் வழி அதுயென
கூறுதல் குற்றமென்கிறார்கள்
துல்லியமாய்ச் சொல்வதானால்
உச்சபட்சமாக
மரணதண்டனையை எனக்கு."

சமூகத்திலிருந்து மாறுபட்டு தன்னை அடையாளப்படுத்த விரும்பும் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் தண்டனையாக மரணதண்டனை இருப்பதாக சொல்கிறார்.

ஹூரூல் ஈன்கள் கவிதை சொர்க்கத்தில் பெண்ணுடல் ஒரு பிண்டமாகவே பார்க்கப்படுவதை சொல்கிறது.

புராதன ஊர் கவிதையின் இறுதி வரிகள் எந்த தேசத்தினருக்குமாக பொருந்திப் போகிறது. அவர் தனது தாய் நிலத்தின்பால் கொண்ட பற்றை பேசுகிறது இந்த வரிகள்.

"இனி எதுவும் சொல்வதற்கில்லை
என் காலணிகளை அங்கேதான்
விட்டு வந்திருக்கிறேன்
என்றென்றைக்குமாக!"

இப்படியாக பெண்ணின் இருப்பை, சுக துக்கங்கள், இழப்புகள், போராட்டங்களை பற்றியதாக பேசுகிறது. பல கவிதைகளில் வசனத்தன்மை அதிகமாக வருகிறது. இவற்றை சுருக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். புரட்சி பேசும் பெண் யாருக்கும் ஒவ்வாதவளாகவே இருக்கிறாள். அவள் அப்படியே இருக்கட்டும். இந்த சமூகம் அவளிடம் ஒத்து வரும் தூரம் அதிகமில்லை.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 25
தலைப்பு: ஒவ்வா
ஆசிரியர்: ஸர்மிளா ஸெய்யித்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 72
விலை: ₹65

Tuesday, April 17, 2018

பாலஸ்தீனக் கவிதைகள்

பதினைந்து கவிஞர்களின் எழுபத்தியோரு கவிதைகள். மஹ்மூத் தர்வீஸ், பெளசி அல் அஸ்மார், ரஷீட் ஹுஷைன், சலீம் ஜூப்றான், தொளபீக் சையத், அந்தொய்னே ஜபாறா, சமீஹ் அல் காசிம், மூயின் பசைசோ, நிசார் காப்பானி, ஃபத்வா துக்கான், அமீனா கசக், ஹானான் மிக்காயில் அஷ்றாவி, சுலஃபா ஹிஜாவி, லைலா அல்லுஸ், சல்மா கத்றா ஜய்யுசி.

இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சிறு குறிப்பு கொடுத்து பின்னர் அவர்களது கவிதைகள் தரப்பட்டுள்ளது. ஆண் கவிகளுக்கு இணையாக பெண் கவிகளும் போரியல் கவிதைகளை சிறப்பாக யாத்துள்ளனர். போரின் தோல்வி, இழப்பு, சிறைக்காவல், சிதிர்வதைக்கூடம், சிறுவர்கள் மீதான தாக்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் பாராமுகம், தாயகம் மீதான ஏக்கம் என கவிதையின் பாடுபொருள்கள் உள்ளன. ஈழத்தின் படுகொலைகளுக்கு நிகராகவே பாலஸ்தீனத்தில் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதையும் கவிதைகள் ஆவணப்படுத்தி நிற்கின்றன. கவிதை ஒரு பேராயுதமாக திகழ்ந்துள்ளதை காண முடிகிறது. ஏனெனில் கவிஞர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது, சில கவிதைகளை தடை செய்துள்ளது. நிசார் காப்பானியின் பின்னடைவு நூலுக்கு எழுதிய அடிக்குறிப்புகள் கவிதை ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் கடத்தி பதிப்பித்து வினியோகிதிருக்கிறார்கள். மனப்பாடம் செய்துள்ளார்கள்.

ஈழத்துப் பரப்பில் பாலஸ்தீனக் கவிதைகள் பெரும் தாக்கத்தினை உருவாகியுள்ளன. ஏனெனில் இருவரும் அரசின் ஆக்கிரமிப்புக்கு, அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்கள். துவக்குகளைக் காட்டிலும் கவிதை ஆட்சியாளர்களை, அடக்குமுறையாளர்களை கலங்கடிக்கும் பெரும் போராயுதம். ஒவ்வொரு கவிஞர்களது கவிதையிலும் வெடித்து சிதறிய சன்னங்களை சேகரித்து வைத்திருக்கிறேன் உங்கள் பார்வைகளுக்காக. உங்களுக்குள்ளும் அவை சிறு தெறிப்பையாவது உண்டாக்கும்.
1. மஹ்மூத் தர்வீஸ்
"யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் நான் கொள்ளை அடித்தவன் அல்ல..."
"பட்டினி வருத்தும் போதிலோ என்னைக்
கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்."
"நாம் எதையும் இழக்கோம்
நமது சவப்பெட்டிகளைத் தவிர."
"அன்புள்ள நண்பனே
அவன் எப்போது வருவான் என்று கேட்காதே
மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்
என்று மட்டும் கேள்."

2. பெளசி அல் அஸ்மார்
"ஒவ்வொரு மூலையிலும் மரணத்தை எதிர்த்துப் பேசியவன்
ஒரு சகோதரத்துவ வாழ்வைக் கோரி அதற்காக வாழ்ந்தவன்"

3. ரஷீட் ஹுஷைன்
"இலக்கணத்தையும் அதன் விதிகளையும் தீயில் இட்டோம்
போராளிகளாக மாறினோம்."

4. சலீம் ஜூப்றான்
"தொங்கும் இம் மனிதன்
பெர்லினில் பிறந்த ஓர் யூதன் அல்ல
என்போல் ஓர் அராபியன்
உங்கள் சகோதரர்கள் அவனைக் கொன்றனர்
சியோனில் வாழும்
உங்கள் நாசி நண்பர்கள்".

5. தொளபீக் சையத்
"வெற்றியுடனும்
சுதந்திர மனிதனின் வைகரையுடனும்
எனக்கோர் சந்திப்பு நிகழ இருப்பதால்
இறுதி நாள்வரை நான் மறுபிறப்பெடுப்பேன்".

6. அந்தொய்னே ஜபாறா
"கையில் நாம் தங்கிய ஒலிவம் கிளையினை
நிலத்தில் வீச நிர்ப்பந்திக்காதீர்".
"கசக்கிப் பிழியும் அகதி வாழ்க்கை
சுமையாய் எம்மில் சுமத்தப்பட்டது".

7. சமீஹ் அல் காசிம்
"அவனது பெயர் அறியப்படாத மனிதன்
வெள்ளை மாளிகைகள் அவன் எதிரே
கதவுகளை அடித்து மூடின".
"அமினா
ஒரு குற்றவாளி
அவளுக்கு வயது எட்டு".

8. மூயின் பசைசோ
"சித்திரவதை அறையின் கூரை மீது
சொட்டுச் சொட்டாய் விழும்
ஒவ்வொரு மழைத்துளியும் அலறியது
எதிர்த்து நில்".

9. நிசார் காப்பானி
"கோபமுற்ற ஒரு தலைமுறை
நமக்கு வேண்டும்
வானத்தை உழுத்துவிட
வரலாற்றைத் துடைத்தெறிய
கோபமுற்ற ஒரு தலைமுறை
நமக்கு வேண்டும்
தவறுகளை மன்னிக்காத
வளைந்து கொடுக்காத
ஒரு புதிய தலைமுறை நமக்கு வேண்டும்
ராட்சதர்களின் ஒரு தலைமுறை நமக்கு வேண்டும்".

பாலஸ்தீனப் பெண் கவிதைகளை இனிக் காண்போம்.
10. ஃபத்வா துக்கான்
"திருடப்பட்ட
உன் குழந்தைகளின் சிரிப்பிலிருந்து
சிதைவுகளில் இருந்து
இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து
வாழ்வினதும் மரணத்தினதும்
நடுக்கங்களில் இருந்து
புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்
அது எழவே செய்யும்".

11. அமினா கசக்
"இப்போது மெளனமாக
அசைவற்றுக் கிடக்கும் ஊர்க் குருவியைப்போல்
அந்த இரவின் இருண்ட தனிமையில் திரும்பிவர
உனக்கு ஒருபோதும் சுதந்திரம் இருந்ததில்லை".

12. ஹானான் மிக்காயில் அஷ்றாவி
"நிலம் இவ்வளவு பாரமாய் இருக்குமென்று
நான் ஒருபோதும் நினைத்ததில்லை".

13. சுலஃபா ஹிஜாவி
"நாங்கள்
இறுகப்பற்றி அணைத்து நின்றோம்
பாடினோம்; செய்த்தா எங்கள் பூமி
பூமியின் இதயம்
நாம் அதன் கிளைகள்".
"மனிதரும் கற்களும் அரைக்கப்பட்டு
புழுதியாய் மாறினர்
சாத்தியமற்றதின் வெளிச்சத்தில்
என்றைக்குமாக தூவிக் கலந்தனர்".

14. லைலா அல்லுஸ்
"ஓராயிரம் பெருவெளிகளை உருவாக்கி
நஞ்சூட்டிய அம்புகளை அவற்றுள் செருகி
என் நிலம் எங்கும் நட்டு வைத்துள்ளனர்
என் பாட்டனின் வாளை ஒளித்துவைத்துள்ளனர்
அவரின் எச்சங்களை
என் கண் எதிரே விளைகூறி விற்கின்றனர்".

15. சல்மா கத்றா ஜய்யூசி
"இளமைக் கனவுகள் போல
சவப்பெட்டியும் தொலைந்து போகட்டும்
என்றே நான் விரும்புகிறேன்".
அந்தொய்னே ஜபாறா வின் கவிதைகளைப் போலதான் ஈழத்தவர்களாகிய நாமும் ஐக்கிய நாடுகள் சபை முன்னால் முறைப்பாடுகளோடு காத்துக்கொண்டே நிற்கிறோம். ஒருநாள் எமக்கான நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 24
தலைப்பு: பாலஸ்தீனக் கவிதைகள்
ஆசிரியர்: எம்.ஏ.நுஃமான்
வெளியீடு: மூன்றாவது மனிதன் பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 164
விலை: ₹200

பிறப்பு - யு.ஆர். அனந்தமூர்த்தி

ஒழுக்கம் கெட்டவர்களுக்கு பிறப்பவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாகவும், சில நேரங்களில் ஒழுக்க சீலர்களாக பிறப்பதும் இயற்கையின் சித்துவேலைகளில் ஒன்றாகிறது. சமூகத்தில் நாம் பார்த்து வியக்கும் பெரிய மனிதர்களுக்குள்ளே சில நேரங்களில் ஒழுக்கக்கேடான எண்ணங்கள் மறைந்திருத்தலும், நாம் துச்சமாக மதிக்கும் சில மனிதர்களுக்குள்ளே ஒழுக்கமான வாழ்வு மறைந்திருப்பதையும் இன்றைய உலகில் நாம் காண முடிகிறது. இவற்றுக்கெல்லாம் பிறப்பு எனும் ஒற்றைச் சொல் காரணமாகிவிடுகிறது. வாழ்வின் போக்கை சில சமயம் அது பண்படுத்துகிறது, சில சமயம் சீரழிக்கிறது. நூலில் ஆடும் பொம்மைகளைப் போல் பாத்திரங்கள் இந்த நாவல் முழுதும் இயங்குகிறது. அப்பாத்திரங்களின் இயக்கம் தேடல் மிகுந்த வலிகளோடு தொடர்கிறது.

சில பாத்திரங்கள் மீது நமக்கு கரிசனம் எழுகிறது, சில பாத்திரங்கள் மீது கோபம் எழுகிறது. பரிதாபத்திற்குரிய பாத்திரம் ஒன்றும், மெச்சத்தகுந்த ஒரு நாத்திகப் பாத்திரமும் இந்த நாவலில் காணலாம். மெட்ராஸில் இருந்து பெங்களூர் போகும் முதல் வகுப்பு இரயில் பெட்டிக்குள் இருக்கும் நான்கு நபர்களின் அறிமுகத்தோடு துவங்குகிறது நாவல். அதன் மையம் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் நிகழும் பாலியல் உச்சங்களையும், உறவுகளின் நெருடல்களையும், ஏமாற்றங்களையும், அது நிகழ்த்தும் துயரங்களையும் மனிதப் பிறப்பின் சூட்சுமங்களையும், அதன் முடிச்சுகளை அவிழ்க்கும் கண்ணியாகவும் செல்லும் கதை ஒரு பிறப்புக்கு முக்தி கிடைப்பதுடன் உறவுச் சிக்கல்களை பேசும் நாவலாக உச்சம் பெறுகிறது கன்னட எழுத்தாளரான யு.ஆர்.அனந்தமூர்த்தி அவர்களது பவா, தமிழ் மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டானின் பிறப்பு நாவல்.

கிட்டத்தட்ட தமிழில் பெருமாள் முருகன் அவர்களது மாதொரு பாகன் உறவுச் சிக்கலைப் போன்றே இது வேறொரு பரிணாமத்தில் வார்த்தெடுக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான வாசிப்பனுபவம் இந்த நாவல். தினகர்-கங்கு-நாராயணன் எனும் மூவருக்குள்ளான உறவுகள், புணர்ச்சிகள் போலவே சரோஜா-பண்டிதன்-விஸ்வநாத சாஷ்திரி போன்றவர்களின் வாழ்வில் நிகழும் சம்போகங்கள். அங்கே சரோஜாவின் மகனாக தினகர் பிறப்பும், இங்கே கங்குவின் மகனான பிரசாத்தின் பிறப்பு. கங்குவை தாலி கட்டிய பரிதாபத்திற்குரிய பாத்திரம் சந்திரப்பா. அதேபோல் நாத்திக பெண்ணாக வரும் மங்களத்தின் பாத்திரம் பிராமணத் தந்தையை கேள்வி கேட்பதும், வீட்டை விட்டு வெளியேறுதலும் என ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பு. சீத்தம்மா எனும் பாத்திரம் கோபால் எனும் பேரனுக்கு, நாராயணன் எனும் மகனுக்கும் இடையில் சமரசம் செய்வதும், சரோஜா இறப்பிற்கு பிறகு தினகருக்கும் அம்மாவாக வாழ்வதும் நடுநாயகமாக வாழ்கிறது. விஸ்வநாத சாஷ்திரியா பண்டிதனா தினகரின் தந்தை என்பது வாசகர்கள் பார்வைக்கே விடப்பட்டுள்ளது. கொஞ்சம் பிசகினாலும் இக்கதை நீலப்படக் கதையாகிவிடும் பேராபத்தினை உணர்ந்து இலக்கிய செறிவுடன் பிறப்பித்த இக்கதை சிறப்பு.


அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:23
தலைப்பு: பிறப்பு
ஆசிரியர்: யு.ஆர்.அனந்தமூர்த்தி (தமிழில்: நஞ்சுண்டன்)
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 120
விலை: ₹50

Sunday, April 15, 2018

அவலங்களை அழகியலோடு எழுதும் நிகழ்த்துகலைக் கவிஞன் அகரமுதல்வன்


ஒரு நிலமற்று அலையும் நாடோடிக் கவிஞனின் வலிமிகுந்த வரிகளே இந்த தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கிறது. அவனிடத்தில் நாம் அழகியல் கவிதைகளை எதிர்பார்த்தல் என்பது அபத்தம். போர்க்களங்களுக்குள் வாழ்ந்தவர்களிடத்தில் குருதி வீச்சமும், குண்டுகளின் புகை நெடியும், கோரமான சிதைவுகளையும் கவிதை வெளிப்படுத்தும். பழைய நினைவுகளில்தான் போர்நிலத்தின் மக்களின் அழகிய வாழ்வை கவிதை வெளிப்படுத்தும். அகரமுதல்வனின் இந்த தொகுப்பில் அழகியல் இருக்கிறது. அது அவலங்களாய் முடிகிறது. ஒவ்வொரு கவிதையும் வாசித்து முடித்ததும் நம் நெஞ்சைக் குத்திக் கிழிக்கும். சில கவிதைகளுக்குள் நுழைதல் காடினமாகவே இருக்கிறது.

முல்லை நிலத்தில் பாலை நிலத்தை காணும் துர்பாக்கியம் எம் தலைமுறைக்கு நேர்ந்துவிட்டது. அதன் ஒரு ஆவணமாகவே நான் இந்த தொகுப்பைப் பார்க்கிறேன்.

"முண்டங்கள் தானிய வயலாய்
நிறைந்த நிலத்தில்
மிருதுவான இரத்தம் நீராவதை
பிள்ளைக்கு சோறூட்டும் போது காட்டுங்கள்"

நிலா சோறூட்டிய எம் பிள்ளைகளுக்கு எம் நிலத்தின் காட்சி சோறூட்டும் கால நிர்பந்தம் ஒவ்வொரு ஈழ தமிழ்ச்சியின் தலையாய கடமையாக நிற்கிறது.

"ஏறிகணைகளின் வெற்றுக் கோதுகளில்
பூக்கன்று பதியமிடும்
யுத்த பூமியின் பிள்ளைகளுக்கு
குண்டுகள் குறித்து கவலையில்லை"

உண்மைதானே யுதங்களை தங்கள் அங்கமாக கொண்ட எம் குழந்தைகள் எப்படி கவலை கொள்வார்கள் குண்டுகள் குறித்து. அவர்கள் அந்த நிலத்தின் கொடிய காட்சிகளைக் கண்டவர்கள் அல்லவா.

"நாடற்றவனாய் வாழ்கிறேன்
நாடற்றவனாய் எழுதுகிறேன்
நாடற்றவனாய் திமிருக்கிறேன்"

எனும் அகரன்

"துயரத்தின் துயரில் நாடொன்று இருந்தால்
அதையே தயாகமென்று சொல்லக் கடவேன்" என்கிறார்.

மேலும் எமக்கான நாடு நிச்சயம் கிடைக்கும் என்பதை இப்படிக் கூறுகிறார்.

"அஸ்தமனமில்லாத தாய் நிலத்தில்
ஒரு நாளில்
என் அம்மாவின் முத்தம்
நாடுள்ளவனாய் என்னை அறிவிக்கும்"

அந்த நாட்டில் கடல் இரத்தம் கலவாத துப்புரவான கடலாய் இருக்கும் எனும் தன் கனவை கூறுகிறார். அப்படியான கடலும், நிலமும் எம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்ககடவ.

"பேரழிவின் மிச்சமாய்
எல்லா மே மாதமும்
என்னுடல் அகல விரிகிறது"

முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்த ஒவ்வொரு மே மாதமும் எம் நெஞ்சம் விரிவதை தவிர்க்க முடியாது. ஒன்பது ஆண்டுகள் கடந்தோடி விட்டது. யூதர்கள் தங்கள் தங்கள் தேசத்தை சுமந்ததைப் போல், மஹ்மூத் தர்வீஸ் எனும் பாலஸ்தீனக் கவி தன் மொழிகளுக்குள் தேசத்தை சுமந்தலைந்ததைப்போல் இன்னும் எம் நினைவுகளுக்குள்தான் எம் தேசத்தை நாம் பாதுகாத்து வருகிறோம் என்றாவது ஒருநாள் அது மலரும் எனும் நம்பிக்கையோடு. ஆனால் இந்த நூற்றாண்டின் எல்லா நாட்களும் அந்த குரலின் கதறல் கேட்டபடியே இருக்கும்

"கோட்டையின் இருட்டிலிருந்து
யாரோ ஒருத்தி தமிழில்
கதறுகிறாள்
இந்த நூற்றாண்டின் எல்லா நாட்களும்
இப்படித்தான் கேட்கும்".


"இந்த நூற்றாண்டை பிளந்த கோடாரி
முள்ளிவாய்க்காலின் எலும்பு"

முல்லை நிலத்தில் தோன்றிய பாலையின் காட்சிக்கு இக்கவிதைகளே சான்று.

தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களது முன்னுரை இந்த தொகுப்புக்கு மிகவும் வலு சேர்த்திருக்கிறது.

அகரமுதல்வன் அழகியலோடு அவலங்களை எழுதும் எம் தேசத்தின் நிகழ்த்துகலைக் கவிஞன். தொடர்ந்து எழுதுக தடம் மாறாமல்.


அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:22
தலைப்பு: டாங்கிகளில் சரியும் முல்லை நிலா
ஆசிரியர்: அகரமுதல்வன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
மொத்தப் பக்கம்: 112
விலை: ₹80

Friday, April 13, 2018

வாடிவாசல்-சி.சு.செல்லப்பா


ஏறு தழுவுதல் குறித்து நுட்பமான முறையில் வெளிவந்த குறுநாவல் சி.சு.செல்லப்பா அவர்களது வாடிவாசல் குறுநாவல். இது காளைக்கும், காளையை அடக்குபவனுக்குமான நிகழ்வுகளை சுவை குன்றாது விவரித்துள்ளது.

தை எழுச்சி, மெரினா புரட்சி என சல்லிக்கட்டுக்காக நிகழ்ந்த போராட்டங்களை ஜீவ காருண்யம் பேசும் பலர் இந்த வாடிவாசலை வாசித்திருந்தால் கலித்தொகையால் சிறப்புப் பெற்ற ஏறு தழுவுதல் எனும் தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டின் மகத்துவத்தினை, வீரத்தினை உணர்ந்திருப்பர். துரதிஷ்டம் இந்த விளையாட்டு வேறு முகம் எடுக்க சாதிய கொடுங்கரங்கள் காரணமாகின. அதைத்தான் இந்த வாடிவாசல் நுட்பமாக விவரிக்கிறது.

காரி காளை மீது அணைந்த அம்புலி காரி காளையால் குத்துப்பாட்டு இறக்குறான். பல ரகக் காளைகளை அடக்கிய கிழக்குச் சீமையின் பேர்பெற்ற வீரன். மரணப் படுக்கையில் அம்புலி தன் மகன் பிச்சியிடம் கூறிவிட்டு இறந்து விடுகிறான். சிறுவனாக இருந்த பிச்சி வளர்ந்து இளைஞனாகும் காலத்துக்குள் காரி காளையும் பல சல்லிக்கட்டுகளில் பேர்பெற்ற காளையாக சமீன்தாரின் கவுரவத்தை காப்பாற்றி வருகிறது. சமீன்தாருக்கு காரிதான் எல்லாமும். பிச்சியின் மாடு அணைக்கும் லாவகமும், பேர்பெற்ற விளையாட்டு வீரனின் சாதுர்த்தியமும் சமீன்தாருக்குள் பதற்றத்தை உருவாக்குகிறது. எங்கே தன் காளையை அடக்கி தன் கவுரவத்தினை குறைத்து விடுவானோ எனும் பதற்றம் அது. மனுஷனுக்கு மாட்டுக்குமான சண்டை மனுஷனுக்கு மனுசனுக்குமான சண்டைகளாக மாறுவதும் உண்டு. அப்படித்தான் முருகு எனும் மாடுபிடி வீரனுக்கும் பிச்சிக்கும் நிகழ இருந்ததை பாட்டையா எனும் அந்த கிழவர் மடைமாற்றுகிறார். அந்தக் கிழவர்தான் பிச்சிக்கு ஒவ்வொரு காளையைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் விளையாட்டின் நுட்பம் தெரிந்தவர்.

காரி காளைக்கும் பிச்சிக்கும் இடையிலான நிகழ்வுகளை வாடிவாசலில் ஒரு போர்க்களமாக விறுவிறுப்பாக சொல்லியுள்ளார். ஒருவர் அணைந்த மாட்டை இன்னொருவர் அணைவது மறத்தமிழனுக்கு அழகல்ல என்பதையும், ஒரு வீரனை மாட்டிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய தருணத்தில் அணைக்க வேண்டிய தந்திரோபாயத்தையும் மருதன் மூலமாக நிறுவுகிறார். மருதனைப் பார்த்து பாட்டையா கிழவர் உன் தங்கச்சியின் தாலிக்கு சேதாரம் இல்லாம பார்த்துகிட வேண்டியது உன் பொறுப்பு என்று கூறுவதிலிருந்து பிச்சிக்கும் மருதனுக்குமான உறவு முறை புலப்படுகிறது. காரிக் காளையை அடக்கி தொடையில் குத்துப்பட்ட பிச்சியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய மகிழ்வில் பிச்சியும், தனது அத்தனை கவுரவத்திற்கும் பங்கம் உண்டுபண்ணிய காரி காளைமேல் உள்ள கோவத்தில் காளையை சுட்டுக் கொல்லும் சமீன்தாரும் என வாடிவாசல் இன்னொரு பரிணாமத்தை பேசுகிறது.

விளையாட்டு என்பது விளையாட்டாக இல்லாமல் அது சாதிய அதிகாரத்தின் பலிக் களமாக மாறியதே இந்த விளையாட்டின் மீதான வெறுப்புகளை அதிகமாக்கியது. விளையாட்டின் விதிமுறைகள் தெரியாமல் ஒரே காளைமேல் பலர் விழுந்து அடக்குவதும், அதை நேரடி ஒளிபரப்பாகி காசு பார்க்கும் கார்பரேட்டுகளின் கைகளுக்குள் சென்றுவிட்டதையும் தொலைக்காட்சி வழி பார்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். சல்லிக்கட்டு பற்றிய முக்கியமான ஆவணமாக "வாடிவாசல்" உள்ளது என்றால் மிகையல்ல.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:21
தலைப்பு: வாடிவாசல்
ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 88
விலை: ₹90

Tuesday, April 10, 2018

மஞ்சு-எம்.டி.வாசுதேவன் நாயர்


சுற்றுலா நகரங்கள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியது அல்ல. சீசனுக்கு சீசன் நாம் சுற்றுலா செல்லும் நகரங்களில் வாழும் மனிதர்களைப் பற்றி என்றாவது சிந்தித்து பார்திருப்போமா? அம்மனிதர்களின் சுக, துக்கம் பற்றி நினைத்துப் பார்திருப்போமா? இல்லை என்றே பெரும்பான்மையோர் சொல்லக்கூடும். நாம் மனிதத்தை நேசிப்பவர்களாக மாறும் கணத்தில் கேள்விக்கான பதில் கிடைக்கக்கூடும். "மஞ்சு" இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பிவிட்டாள்.

"மஞ்சு" மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்களது நெடுங்கதை அல்லது குறுநாவல் என்றே சொல்லலாம். தமிழ், மலையாளம் என இருமொழிப் புலமை பெற்ற ரீனா ஷாலினி அவர்களது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் மூடுபனி. கேரளத்தின் பேரழகை மலைகளை, சாம்பல் பூத்த வானத்தை, பஞ்சுத் துண்டம் போன்ற பறக்கும் வெண் பனித் திவலைகளை, மழையை, அந்திவானக் கருக்கலை, இரவுக் குளிரை இப்படியாக பலவற்றையும் சுற்றிக்காட்டிவிட்டு பெரும் எதிர்பார்ப்பின் மனங்களின் வலிகளோடு திரும்ப விடுகிறார்.

விமலா டீச்சரும், படகோட்டி புத்துவும் இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திரும்பவும் வராமல் போகமாட்டார்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர். தாயின் பிறழ் உறவால் தடுமாறும் மகள், சுற்றங்களை விட்டுவிட்டு விடுதியில் வாழும் விமலா டீச்சர் சுதீர் மிஸ்ரா எனும் வட இந்தியக் காதலனுக்காக ஒன்பது ஆண்டுகளாக காத்திருக்கிறார். புத்து கதையோ வேறானது. அவன் வெள்ளைக்கார தந்தைக்காக காத்திருக்கிறான். இவர்களைப் போன்று இன்னும் தனிமையில் உரையாடிக்கொண்டு காத்திருக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

லங்ஸ் கேன்சரால் பாதிக்கப் பட்டிருக்கும் சர்தார்ஜி விமலா டீச்சரிடத்தில் இன்னொரு காதிருப்பை உருவாக்கிச் செல்கிறார். மரணத்தின் வாசலை விஸ்தாரமாய் காட்டும் சர்தார்ஜி உயிரோடு இருக்கப் போவதோ நான்கு மாதங்கள்தான். இங்கு சர்தார்ஜி ஒரு குறியீடாகவே எனக்கு தோன்றுகிறது.

மஞ்சுப்பனி நம்மையும் ஏதோவொரு கணத்தில் தழுவிச் சென்றிருக்கக் கூடும். தனிமையின் பேச்சும், காத்திருத்தலின் வலியும் மிகக்கொடியது. சீசனுக்கு வந்த பறவைகள் பறந்து சென்றபிறகு அந்த சூன்யத்தின் வெளியில் பேரமைதி காத்திருக்கிறது. அடுத்த சீசனுக்கு வராமல் போய்விடுவார்களா என்ன?

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:20
தலைப்பு: மஞ்சு
ஆசிரியர்: எம்.டி.வாசுதேவன் நாயர் (தமிழில்: ரீனா ஷாலினி)
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 96
விலை: ₹100

Sunday, April 8, 2018

பெட்ரோ பராமோ-யுவான் ருல்போயுவான் பிரீஷியாடோ எனும் கதாபாத்திரத்தின் வழியே யுவான் ருல்ஃபோ நாவலுக்குள் பயணம் செய்கிறார். நம்மை மெக்ஸிகோ தேசத்தின் இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் அலைக்கழித்து அழைத்துச் செல்கிறார். இது ஒரு புதிய வகைப் பிரயாணமாகவே இருந்தது எனக்கு. ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொண்டு பிரயாணிப்பது பெரும் சவால் நிறைந்தது.

பெட்ரோ பரமோவின் கதை சுருக்கம் இதுதான். தாய்க்கு செய்துகொடுத்த சத்தியத்தை காப்பதற்காக தாயின் இறப்புக்குப் பிறகு தந்தையைத் தேடி தனது சொந்த ஊரான கோமாலாவுக்கு வருகிறார் யுவான் பிரீஷியாடோ. அது இறந்தகாலத்தின் நகரம். அத்தனை துயரங்களையும் அது தேக்கி வைத்திருக்கிறது.

மதத்தின் பெயரால் அரசமைக்கும் அரசு மக்களுக்கு பேரழிவினைத் தந்தே தீரும். அது மக்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்க விரும்பும். கிறித்துவப் பாதிரிகளின் கொடும் நெஞ்சத்தின் இன்னொரு பக்கத்தினை பறைசாற்றுகிறது. அவர்களின் ஆலோசனைகளின்படி ஆயுதமேந்திய படைகள் நாத்திக அரசுக்கெதிராக செயல்பட்டதையும் மக்களை கொன்றழித்ததையும் சொல்லி செல்கிறது. மெக்சிகோவில் 1926-29 களில் நடைபெற்ற கிறிஸ்டெரோக்களின் கலவரத்தில் யுவான் தந்தையை இழக்கிறார். பிறகு ஆறாண்டுகளில் தாயையும் இழக்கிறார். யுவான் இங்கிருந்துதான் தன் தந்தையைத் தேடிப் பயணிக்கிறார்.

எஸ்.பாலச்சந்திரன் அவர்களது மொழிபெயர்ப்பு போற்றுதலுக்குரியது. தடங்கலற்ற சிறப்பான மொழிபெயர்ப்பு.

நீங்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல் என பெரம்பலூர் நூலகத்திலிருந்து எனக்காக எடுத்துவந்து கொடுத்த சிறந்த வாசிப்பாளர் திருமிகு மார்க்கண்டன் முத்துசாமி அய்யா அவர்களுக்கு எனது அன்பும் நன்றிகளும்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:19
தலைப்பு: பெட்ரோ பராமோ
ஆசிரியர்: யுவான் ருல்ஃபோ (தமிழில்: எஸ்.பாலச்சந்திரன்)
வெளியீடு: விடியல் பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 144
விலை: ₹55

தண்ணீரும் கண்ணீரும்-டொமினிக் ஜீவாஈழத்தின் இலக்கியப் பரப்பில் மிகவும் விசித்திரமான எழுத்தாளர் டொமினிக் ஜீவா. தட்டையான எழுத்துகளின்றி மிகவும் எளிமையாகவும், பாமர மக்களும் படித்தறியும் வண்ணம் இலகுவாகவும் கதையாக்கிய சிறுகதையாளர். பதினோரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே தண்ணீரும் கண்ணீரும் தொகுப்பு. தன்னைக் குறித்து பெரிய எழுத்தாளர் எனும் ஜம்பத்தை கட்டியெழுப்பாமல், தொழிலாளர் வர்க்கத்தின் சக தொழிலாளியாகவே வாழ்ந்திருக்கிறார்.

1950-60 களின் ஈழ மக்களின் வாழ்நிலையை ஆவணமாக்கியதில் இத்தொகுப்பிற்கும் சிறு பங்களிப்பு இருப்பதை அவதானிக்கலாம். சாதிய நெருக்குதலும், பெரிய மனிதர்களின் அந்தஸ்தும், கெளரவ பிரச்சினைகளும், ஏழ்மையின் நேர்மையும், நன்றி விசுவாசம், வேட்டைக்குணம், பிறரை நேசிக்கும் மாண்பின் மகத்துவம் என ஒவ்வொரு கதைக்குள்ளும் நாம் காண முடிகிறது.

"தண்ணீரும் கண்ணீரும்", "முற்றவெளி" மற்றும் "காலத்தால் சாகாதது" போன்ற கதைகள் என் மனத்தைப் பிசையும் சிறந்த கதைகள். ஸ்டூடிபேக்கர் காரின் சாரதியும், பிளீமவுத் காரின் சாரதியும் மணியமும், கந்தையாவும் தங்கள் தங்கள் எசமானர்களுக்கு எதிரும் புதிருமாய் இருக்கும் சுந்தரம் பிள்ளை மற்றும் ஆறுமுகம் பிள்ளைகளுக்கு விசுவாசமாய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு முதலாளிகளும் ஒன்றாய் ரோல்ஸ்ராய்க் காரில் போகும்போதுதான் இரண்டு சாரதிகளுக்கும் முதலாளித்துவத்தின் மனநிலை புரிய வருகிறது. அவர்கள் அவர்கள்தான், இவர்கள் இவர்கள்தான் என்பதை "இவர்களும் அவர்களும்" புரிய வைக்கிறது.

"கொச்சிகடையும் கறுவாக்காடும்" மனிதநேயமிக்க மருத்துவரின் பணியையும், "வெண்புறா" இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிபுரியும் விமானப் பணிப்பெண்ணின் தியாகத்தையும் சொல்லும் அற்புதமான கதைகள். செய்தியாளர்கள் இன்றைக்கு இருப்பதைப்போலதான் அன்றைக்கும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் கயிறு திரிக்கும் வேலையை, செய்திகளை எப்படி வேட்டையாடி திரித்து எழுதுகிறார்கள் என்பதை நித்தியலிங்கம் எனும் கதாபாத்திரத்தின் வழியே "செய்தி வேட்டை" சிறுகதையில் சாடியுள்ளார்.

"முற்றவெளி" மற்றும் "கரும்பலகை" சிறுகதைகள் இருவேறு ஊனமுற்ற மனிதர்களின் வாழ்வைச் சொல்கிறது. முற்றவெளியில் வரும் மாடு மேய்க்கும் சின்னக்குட்டியன் கட்டச்சி மாட்டுக்குப் பார்க்கும் பிரசவமும், தனக்கு பிறந்திருக்கும் குழந்தையை மங்கிய வெளிச்சத்தில் தூக்கி வைத்து குழந்தையின் கை, கால் அசைப்பினை தடவிப் பார்க்கையில் கண்கள் குளமாகிவிடுகிறது.

"சிலுவை" தபால் விநியோகம் செய்யும் ஒருவருக்கு எழுத்தாளர் ஒருவர் கடிதம் எழுதுவதன் ஊடாக இருவரின் மனவெளியையும் விவரித்துச் செல்கிறது. சிலுவை சுமப்பதையும் ஒரு தொழிலாகவே எழுதிச் செல்கிறார்.

கொழும்பில் சொகுசாக வாழும் யாழ் குடா நாட்டின் பாரிஸ்டர் பரநிரூப சிங்கம் கொழும்பில் ஏற்படும் இனக் கலவரத்தில் சொகுசு வாழ்வுக்கு ஆசைப்பட்டு லண்டன் செல்கிறார் குடும்பத்தோடு. அவர் சென்ற நேரம் அங்கே கறுப்பின மக்களுக்கு எதிராக வெள்ளையர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதில் அவரும் குடும்பமும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை "தீர்க்கதரிசி" கதையும். ஷோக்கல்லோ கந்தையாவின் கதாபாத்திரம் போதை தலைக்கேறிவிட்டால் உயர்சாதியின் பெருமையை பீத்துவதை சுட்டுகிறது. அவருக்கு போதையில்தான் ஞானம் கிடைப்பதை "ஞானம்" சிறுகதையும் விவரிக்கிறது.

"அக்கினிபகவான் உயர்சாதி இந்துக்களின் தீப்பெட்டிக்குள்ளிருந்துதான் அடிக்கடி தலையைக் காட்டும் ஆசாமியாச்சே", "இரண்டு இரத்தங்களும் ஒரே ரகமாம், ஒத்துப்போகுமாம் என்ன விசித்திரம்? ஜாதிக்கு ஜாதி இரத்தம் மாறுவதில்லை", நானும் மனிதன், நீயும் மனிதன், நீயும் நானும் தொழிலாளிகள்" போன்ற வரிகள் "தண்ணீரும் கண்ணீரும்" சிறுகதையில் தெறிக்கும் வரிகள். விபத்தில் சிக்கும் உயர்சாதி பஸ் கண்டக்டர் சாமிநாதனுக்கு இரத்தம் கொடுக்கும் கை ரிக்ஸா ஓட்டும் குருநகர் பண்டாரம் கதாபாத்திரத்தின் வரிகளே அவை. முன்பொருமுறை புட்டை தின்றுவிட்டு நல்ல தண்ணி குடிக்க கிணற்றில் தண்ணீர் எடுத்த குற்றச்சாட்டில் இதே சாமிநாதன்தான் பண்டாரத்தின் வீட்டை தீக்கிரையாக்கினான். இதுபோலவேதான் "காலத்தால் சாகாததும்" சிறுகதையும். மயில்வாகனம் எனும் பெரிய கமக்காரனின் சாதிய வெறியும் போலீஸ் வேலைக்கு சேர இருக்கும் தலித் இளைஞன் பொன்னுத்துரை மீது தீர்க்கப்படுகிறது. ஒருமுறை பெரிய கமக்காரனின் மகளை கிணற்றுக்குளிருந்து பொன்னுத்துரை காப்பாற்றிய போதும் இந்தியாவிலிருந்து யாழ்குடாநாட்டின் மயிலீட்டியில் வந்திறங்கிய சிங்க மாப்பாணரின் சாதிய வெறி காலத்தால் சாகாமல் இருப்பதை கிணற்றை இறைப்பதிலிருந்து புரியலாம்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:18
தலைப்பு: தண்ணீரும் கண்ணீரும்-சிறுகதைகள்
ஆசிரியர்: டொமினிக் ஜீவா
வெளியீடு: சரசுவதி வெளியீடு
மொத்தப் பக்கம்: 138

Thursday, April 5, 2018

உடைந்த குடை-தாக் ஸூல்ஸ்தாத்

உடைந்த குடை

சாம்பல் நிற வானம் கவிந்திருக்கும் நோர்வே நட்டின் ஆஷ்லோ நகரத்தின் ஜாகொப் ஆல்ஷ் வீதியில் வெண்ணிற சட்டை அணிந்து சுருக்கி மடியும் குடையோடு பார்கபோர்க் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் ஐம்பது வயதைக் கடந்த ஆசிரியர் எலியாஸ் ருக்கலா ஹென்ரிக் இப்ஷனின் "காட்டு வாத்து" ( wild duck) நாடகத்தை நடாத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. இங்கு குடை ஒரு குறியீடாக நிற்கிறது.

நோர்வே நாடு அமைதியான மக்களைக் கொண்ட நாடு என்றுதான் நானும் இதுவரையில் நம்பியிருந்தேன். ஆனால் அவர்களுக்குள்ளும் புறவயத் தாக்கங்களால் அகவயத்துள் எழும் வாழ்வின் போராட்டங்களை மெலிதாக இந்நாவல் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

மார்க்சியத்தின் மீதான ஆய்வுகளில் நாட்டம் கொண்டு தனது ஆய்வுப் பணியை அதில் நிறைவேற்றும் ஜோஹான் கார்னலுசன் ஏவா லிண்டே எனும் பேரழகு பெண்ணை மணம் செய்து காமிலா எனும் பெண் குழந்தையை பெற்றெடுத்து பிற்பாடு விளம்பர மாயங்களால் முதலாளித்துவத்தின் மீது ஈர்க்கப்பட்டு மனைவியையும் குழந்தையையும் நண்பன் எலியாஸ் ருக்கலாவின் பொறுப்பில் விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் நியூயார்க் புறப்பட்டு விடுகிறான்.

பள்ளியில் மாணவர்களின் செயல்பாடுகளால் விரக்தியடையும் எலியாஸ் ருக்கலாவின் ருத்ரதாண்டவம் விரிய மறுக்கும் குடையின் மீது தனது தேக்கிவைத்த அத்தனை கோபத்தினையும் வெளிப்படுத்தும் அந்த நிமிடம், உதவிக்கு வந்த மாணவியின் மீது காட்டும் எரிச்சல் என பள்ளியின் வாசலில் நடக்கும் இந்த கூச்சல் உள்ளேயிருக்கும் சக ஆசிரியர்களுக்கும் கேட்டிருக்குமென நினைப்பதும், குடைக்கம்பிகள் கிழித்து ரத்தம் வடியும் கைகளோடு தெருவில் இறங்கி நடக்கும் எலியாசின் நினைவுகளில்தான் நாவலின் மையம் கவனம் குவிக்கிறது.

ஏவா லிண்டே எனும் அழகு பதுமையின் அகத்தினிலும் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜோஹானால் ஏமாற்றப்பட்டு இன்று எலியாஸ் ருக்கலாவோடு அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும், விரும்பும் எதையும் நிறைவேற்றிக் கொள்ள இயலாத கணவரின் ஊதியம், அதன்பொருட்டு எழும் சச்சரவுகள் என ஒரு சாமானிய பெண்ணாக வலம் வருகிறாள். ஏவா லிண்டேவின் இறுதி முடிவு இதுநாள்வரையில் தேக்கிவைத்தவற்றின் வெளிப்பாடாகவே அமைகிறது.

ஆண்களின் அகவுணர்ச்சி, பெண்களின் அகவுணர்ச்சி என இரண்டும் என்றைக்குமே இணையாத இரயில் தண்டவாளம் போலவே பயணிக்கிறது.

"ஸூல்ஸ்தாத் சரியலிச எழுத்தாளர். இவர் எழுதுவதுதான் தீவிர இலக்கியம்" என முரகாமி கூற்று நாவலை முடித்தபிறகு உணர முடிகிறது. ஜி.குப்புசாமியின் தமிழ் மொழிபெயர்ப்பு வாசிப்புக்கு தடங்கலின்றி கொண்டுசெல்கிறது. தமிழிலும் ஒரு மாபெரும் எழுத்தாளர் இதைப்போல எழுத்தினை தந்திருப்பதாக ஜி.குப்புசாமி தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவரையும் நான் வாசித்தாகவேண்டிய ஆவலை என்னுள் விதைத்துவிட்டார். இப்படித்தான் ஒவ்வொரு புத்தகமும் இன்னொன்றினை தேட வைப்பதாக அமைய வேண்டும். வாய்ப்பிருந்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:17
தலைப்பு: உடைந்த குடை
ஆசிரியர்: தாக் ஸூல்ஸ்தாத் (தமிழில்: ஜி. குப்புசாமி)
வெளியீடு: காலச்சுவடு
மொத்தப் பக்கம்: 128
விலை: ₹140

Tuesday, April 3, 2018

பஞ்சமர்சாதிய அடக்குமுறைகளும் அதற்க்கெதிரான போராட்டங்களும் இந்த நூற்றாண்டுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. காலத்துக்குக் காலம் சாதியத்தின் கொடுந் நாவுகளுக்கு தாகம் எடுக்கும்போதெல்லாம் கீழ்மக்களின் இரத்தங்களைத்தான் ருசித்து வருகின்றன. இதற்கு மொழி, இனம், நாடு என்ற பாகுபாடுகளின்றி எங்கும் தம் கொடுந் நாவினை நீட்டுகின்றன.

பஞ்சமர்-ஈழத்தின் வடபுலமான யாழ் மாகாணத்தில் 60-70களில் நடந்தேறிய சாதிய அடக்குமுறைகளும் அதற்க்கெதிரான மக்கள் கிளர்ச்சிகளையும் மையமாகக் கொண்ட ஒரு வரலாற்று ஆவணமான நாவல். முதல் பாகத்தினை எழுதும்போதே ஆசிரியர் தலைமறைவு வாழ்வினை மேற்கொள்கிறார். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைவாசம் அவரை இரண்டாம் பாகத்தினையும் எழுத வைத்திருக்கிறது. பஞ்சமர் முதல் பாகம் இலங்கையின் சாகித்ய மண்டல பரிசினை பெற்றுள்ளது. விருதுகளின் நோக்கத்தினைப் பற்றியும் ஆசிரியர் கூறுவதும் உண்மையாக இருக்கத் தோன்றுகிறது. எழுத்தாளனை அடக்கி வைப்பதற்கான அரசின் உத்திகளில் ஒன்றாக இருக்கக்கூடும்.

80-90களில் பிறந்தவர்களின் பிறப்புச் சான்றிதழில் சாதி எனும் பகுதியில் தமிழ் என்றே இருக்கும். எனது பிறப்புச் சான்றிதழில் அப்படித்தான் உள்ளது. இதற்கு காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியே. புலிகளின் காலத்தில் சாதியம் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றாலும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 2009 களுக்கு பின்னர் மீண்டும் மேற்குலகில் வாழும் அகதிச் சமூகங்கள் தங்களின் உயர்குடிப் பெருமைகளை மீண்டும் சீர்தூக்கிப் பார்க்க முனைகின்றனர். இது ஒரு தகவலுக்காக. வாருங்கள் நாவலுக்குள் போவோம்.

முதல் பாகம்: சின்ன கமக்காறிச்சி சிறு பருவக் கோளாறில் தங்கள் காணியில் குடிமை பார்த்துவரும் தாழ்த்தப்பட்ட செல்லையாவோடு கலந்து ஒரு ஆண் பிள்ளையை பெற்றுவிடுகிறாள். இதை அவள் தந்தைக்கு தெரியாமல் இருக்கும்பொருட்டு அந்தக் குழந்தையை சின்னாச்சி மற்றும் கிருட்டினனிடம் குடுத்துவிடுகிறாள். அக்குழந்தையை குடத்தனைக்குள் வளர்க்கக் குடுத்துவிடுகிறார்கள். பின்னாளில் அந்தக் குழந்தைதான் புரட்சியின் நாயகன் தோழர் குமார வேலனாக அறியவருகிறார். இதற்கிடையில் மாம்பழத்தி எனும் மகளையும் பெற்றுவிடுகிறாள. கோவில் திருவிழாவில் மாம்பழத்தியின் காதலனை (தாழ்த்தப்பட்டவன்) ஆளை வைத்து கொண்டுவிடுகிறாள் சின்னக் கமக்காறிச்சி. மாம்பழத்தியை லண்டனில் அப்புக்காத்தருக்கு திருமணம் செய்துவிடுகிறார்கள். குமாரவேலன் ஐய்யாண்ணன் போன்றவர்களோடு இந்த பஞ்சமர் மக்களுக்குள் புரட்சியின் விதைகளை விதைக்கிறார்கள். குமாரவேலனின் பிறப்பினை சின்னக் கமக்காறிச்சி அறிந்துகொள்கிறாள். எங்கே தன் மானம் மரியாதை போய்விடுமோ என்றும், தங்களின் உயர்வான சாதிப் பெருமைகளுக்கு பங்கம் வந்துவிடுமோ என்றும் நினைத்தவள் குமாரவேலனைக் கொல்ல முடிவெடுக்கிறாள். மக்கள் மத்தியில் மேடையில் குமாரவேலன் பேசிக்கொண்டிருக்கும் போது வடலிக்கரைகளிலிருந்து வெடிக்கும் துப்பாக்கி வேட்டுக்கள் குமரவேலனை பதம் பார்த்துவிடுகிறது. இதோடு முதல் பாகம் முடிகிறது.

இரண்டாம் பாகம்: தாழ்த்தப்பட்ட அந்த பஞ்சமர் மக்கள் நந்தாவில் கந்தசுவாமி கோவிலுக்குள் ஆலயப்பிரவேசம் செய்யும் ஒரு மக்கள் எழுச்சியை மய்யமாகக் கொண்டே நகர்கிறது. ஐய்யாண்ணன், தோழர் குமாரவேலன் போன்றவர்களின் சாணக்கியத்தனம் ஆண்டைகளுக்கு பெரும் கலக்கத்தினை உருவாக்குகிறது. பஞ்சமர் என்ற வாசகத்தினை பெருங்குளம் பிள்ளையார் கோவில் திருவிழாவில் அச்சுவாகனம் ஏற்றிய பால்குடி சண்முகம்பிள்ளை பின்னாளில் மரணமானபோது பஞ்சமர்கள் யாருமின்றி துடக்கு வேலைகள் செய்ய குடியானவர்கள் வராமல்போக மூன்று நாள்கள் நாறிப்போன பிணமாக கிடந்து சொந்த சாதி மக்களால் மூக்கைப் பொத்திக்கொண்டு அமரர் ஊர்தியில் ஏற்றிச் சென்று அடக்கம் செய்கிறார்கள். இதை புதிய முறையென தங்கள் உயர்சாதி பெருமைகளுள் ஒன்றாக கருதிக்கொள்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து திரும்பும் அப்புகாத்தர் செஞ்சட்டைத் தோழராக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் விதமாக வீட்டுக்கு சிவப்புப் பெயிண்ட் அடிப்பதும், சிவப்புக் காரில் பிரயாணிப்பதும், மாம்பழத்தியோடு சிவப்பு உடையில் திரிவதுமென பஞ்சமர்கள் மத்தியில் அப்புகாத்தர் பற்றி உயர்வான மதிப்பீடுகளை உருவாக்குகிறார். நந்தாவில் கந்தசுவாமி ஆலயப்பிரவேசம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஐய்யாண்ணன், தோழர் குமாரவேலன் போன்றவர்களின் சாணக்கியத்தனமான பேச்சினில் அப்புக்காத்தரின் செஞ்சட்டை சாயம் வெளுக்கிறது. அப்புக்காத்தரின் உயர்சாதித் திமிர் வெளிப்படுகிறது. அவரது ஆசையெல்லாம் பார்லிமெண்டுக்கு செல்வதிலையே குறியாக இருக்கிறது. தேர்த்திருவிழாவின் முதல்நாள் யாரும் எதிர்பாராத விதமாக கும்பல் கும்பலாக சனத்திரள் ஒவ்வொரு ஊரிலிருந்து திட்டமிட்டபடி ஆலயப்பிரவேசம் செய்ய வந்துவிட்டனர். சனக்கூட்டத்தினைப் பார்த்த உயர்குடியினர் கோயிலின் கதவுகளை பூட்டிவிடுகின்றனர். விடிந்தால் நந்தாவில் கந்தசுவாமியின் தேர்ப்பவனி. துப்பாக்கி வேட்டுக்கள் வெடிக்கும் சத்தம் மாயாண்டி, ஐய்யாண்ணன் குமாரவேலன் போன்றவர்கள் சரிந்து விழுகிறார்கள். எதற்கும் அஞ்சாதீர்கள் என்னும் வார்த்தைகள் உயர எழுந்து அடங்கி விடுகிறது.

அன்றைய செய்தித்தாள்கள் ஆலயப்பிரவேசம் குறித்து என்ன தலைப்புச் செய்தி வெளியிட்டது என்பதையும் பின்னிணைப்பாக ஆசிரியர் கொடுத்துள்ளார். வீமன் எனும் நாயின் கதாபாத்திரம் இரண்டு பாகத்திலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.

பஞ்சமர் நாவல் தலித்திய நாவல்களின் முன்னோடி என்றால் மிகையில்லை. ஒவ்வொருவரும் தவறாது வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:16
தலைப்பு: பஞ்சமர் - நாவல் (இரு பாகமும்)
ஆசிரியர்: கே.டேனியல்
வெளியீடு: ஒரு பிரகாஷ் வெளியீடு
மொத்தப் பக்கம்: 432