Sunday, April 8, 2018

தண்ணீரும் கண்ணீரும்-டொமினிக் ஜீவா



ஈழத்தின் இலக்கியப் பரப்பில் மிகவும் விசித்திரமான எழுத்தாளர் டொமினிக் ஜீவா. தட்டையான எழுத்துகளின்றி மிகவும் எளிமையாகவும், பாமர மக்களும் படித்தறியும் வண்ணம் இலகுவாகவும் கதையாக்கிய சிறுகதையாளர். பதினோரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே தண்ணீரும் கண்ணீரும் தொகுப்பு. தன்னைக் குறித்து பெரிய எழுத்தாளர் எனும் ஜம்பத்தை கட்டியெழுப்பாமல், தொழிலாளர் வர்க்கத்தின் சக தொழிலாளியாகவே வாழ்ந்திருக்கிறார்.

1950-60 களின் ஈழ மக்களின் வாழ்நிலையை ஆவணமாக்கியதில் இத்தொகுப்பிற்கும் சிறு பங்களிப்பு இருப்பதை அவதானிக்கலாம். சாதிய நெருக்குதலும், பெரிய மனிதர்களின் அந்தஸ்தும், கெளரவ பிரச்சினைகளும், ஏழ்மையின் நேர்மையும், நன்றி விசுவாசம், வேட்டைக்குணம், பிறரை நேசிக்கும் மாண்பின் மகத்துவம் என ஒவ்வொரு கதைக்குள்ளும் நாம் காண முடிகிறது.

"தண்ணீரும் கண்ணீரும்", "முற்றவெளி" மற்றும் "காலத்தால் சாகாதது" போன்ற கதைகள் என் மனத்தைப் பிசையும் சிறந்த கதைகள். ஸ்டூடிபேக்கர் காரின் சாரதியும், பிளீமவுத் காரின் சாரதியும் மணியமும், கந்தையாவும் தங்கள் தங்கள் எசமானர்களுக்கு எதிரும் புதிருமாய் இருக்கும் சுந்தரம் பிள்ளை மற்றும் ஆறுமுகம் பிள்ளைகளுக்கு விசுவாசமாய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு முதலாளிகளும் ஒன்றாய் ரோல்ஸ்ராய்க் காரில் போகும்போதுதான் இரண்டு சாரதிகளுக்கும் முதலாளித்துவத்தின் மனநிலை புரிய வருகிறது. அவர்கள் அவர்கள்தான், இவர்கள் இவர்கள்தான் என்பதை "இவர்களும் அவர்களும்" புரிய வைக்கிறது.

"கொச்சிகடையும் கறுவாக்காடும்" மனிதநேயமிக்க மருத்துவரின் பணியையும், "வெண்புறா" இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிபுரியும் விமானப் பணிப்பெண்ணின் தியாகத்தையும் சொல்லும் அற்புதமான கதைகள். செய்தியாளர்கள் இன்றைக்கு இருப்பதைப்போலதான் அன்றைக்கும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் கயிறு திரிக்கும் வேலையை, செய்திகளை எப்படி வேட்டையாடி திரித்து எழுதுகிறார்கள் என்பதை நித்தியலிங்கம் எனும் கதாபாத்திரத்தின் வழியே "செய்தி வேட்டை" சிறுகதையில் சாடியுள்ளார்.

"முற்றவெளி" மற்றும் "கரும்பலகை" சிறுகதைகள் இருவேறு ஊனமுற்ற மனிதர்களின் வாழ்வைச் சொல்கிறது. முற்றவெளியில் வரும் மாடு மேய்க்கும் சின்னக்குட்டியன் கட்டச்சி மாட்டுக்குப் பார்க்கும் பிரசவமும், தனக்கு பிறந்திருக்கும் குழந்தையை மங்கிய வெளிச்சத்தில் தூக்கி வைத்து குழந்தையின் கை, கால் அசைப்பினை தடவிப் பார்க்கையில் கண்கள் குளமாகிவிடுகிறது.

"சிலுவை" தபால் விநியோகம் செய்யும் ஒருவருக்கு எழுத்தாளர் ஒருவர் கடிதம் எழுதுவதன் ஊடாக இருவரின் மனவெளியையும் விவரித்துச் செல்கிறது. சிலுவை சுமப்பதையும் ஒரு தொழிலாகவே எழுதிச் செல்கிறார்.

கொழும்பில் சொகுசாக வாழும் யாழ் குடா நாட்டின் பாரிஸ்டர் பரநிரூப சிங்கம் கொழும்பில் ஏற்படும் இனக் கலவரத்தில் சொகுசு வாழ்வுக்கு ஆசைப்பட்டு லண்டன் செல்கிறார் குடும்பத்தோடு. அவர் சென்ற நேரம் அங்கே கறுப்பின மக்களுக்கு எதிராக வெள்ளையர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதில் அவரும் குடும்பமும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை "தீர்க்கதரிசி" கதையும். ஷோக்கல்லோ கந்தையாவின் கதாபாத்திரம் போதை தலைக்கேறிவிட்டால் உயர்சாதியின் பெருமையை பீத்துவதை சுட்டுகிறது. அவருக்கு போதையில்தான் ஞானம் கிடைப்பதை "ஞானம்" சிறுகதையும் விவரிக்கிறது.

"அக்கினிபகவான் உயர்சாதி இந்துக்களின் தீப்பெட்டிக்குள்ளிருந்துதான் அடிக்கடி தலையைக் காட்டும் ஆசாமியாச்சே", "இரண்டு இரத்தங்களும் ஒரே ரகமாம், ஒத்துப்போகுமாம் என்ன விசித்திரம்? ஜாதிக்கு ஜாதி இரத்தம் மாறுவதில்லை", நானும் மனிதன், நீயும் மனிதன், நீயும் நானும் தொழிலாளிகள்" போன்ற வரிகள் "தண்ணீரும் கண்ணீரும்" சிறுகதையில் தெறிக்கும் வரிகள். விபத்தில் சிக்கும் உயர்சாதி பஸ் கண்டக்டர் சாமிநாதனுக்கு இரத்தம் கொடுக்கும் கை ரிக்ஸா ஓட்டும் குருநகர் பண்டாரம் கதாபாத்திரத்தின் வரிகளே அவை. முன்பொருமுறை புட்டை தின்றுவிட்டு நல்ல தண்ணி குடிக்க கிணற்றில் தண்ணீர் எடுத்த குற்றச்சாட்டில் இதே சாமிநாதன்தான் பண்டாரத்தின் வீட்டை தீக்கிரையாக்கினான். இதுபோலவேதான் "காலத்தால் சாகாததும்" சிறுகதையும். மயில்வாகனம் எனும் பெரிய கமக்காரனின் சாதிய வெறியும் போலீஸ் வேலைக்கு சேர இருக்கும் தலித் இளைஞன் பொன்னுத்துரை மீது தீர்க்கப்படுகிறது. ஒருமுறை பெரிய கமக்காரனின் மகளை கிணற்றுக்குளிருந்து பொன்னுத்துரை காப்பாற்றிய போதும் இந்தியாவிலிருந்து யாழ்குடாநாட்டின் மயிலீட்டியில் வந்திறங்கிய சிங்க மாப்பாணரின் சாதிய வெறி காலத்தால் சாகாமல் இருப்பதை கிணற்றை இறைப்பதிலிருந்து புரியலாம்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:18
தலைப்பு: தண்ணீரும் கண்ணீரும்-சிறுகதைகள்
ஆசிரியர்: டொமினிக் ஜீவா
வெளியீடு: சரசுவதி வெளியீடு
மொத்தப் பக்கம்: 138

No comments:

Post a Comment