Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Saturday, September 30, 2023

தமிழ், தமிழடையாளம்


#நன்னூல் இதழில் வெளியாகியுள்ள தமிழவனின் சிறப்புக் கட்டுரையானது தமிழ்த் தேசியத்தைக் கோருபவர்கள் கூனிக்குறுகி நிற்பதா? அல்லது மார்தட்டிப் பெருமை கொள்வதா? என்ற கேள்வியை முன்வைக்கிறது. சமகாலத்தில் பெரியாரின் தேவை என்ன என்ற கேள்விக்கும் சிறப்பான பார்வைகளை பதிலாக வைத்துள்ளார். பெரியாரை கடவுள் மறுப்பாளராக, பிரச்சாரகராக மட்டுமே குறுக்கிப் பார்க்க வைத்திருக்கிறோம். ஒரு தத்துவவாதியாக, தமிழின் தனித்த சிந்தனையாளராக காணத் தவறியதையும், அறிஞர் அண்ணாவின் "சிந்திப்பீர்" என்ற சொல்லின் குறியீட்டு விளக்கம் இன்றைய மேடைப் பேச்சுக்களில் காணாமல் போனதன் அரசியலில் தனிமனித சிந்தனையற்ற கும்பல் மனப்பான்மைகளின் பெருக்கமும் அதன் உளவியல் வெளிப்பாடுகளை ஜெர்மனியின் மார்க்சிய மனிதாபிமானி உளவியல் நிபுணர் வில்ஹெல்ம் ரைக் எழுதிய 'பாசிசத்தின் கும்பல் உளவியல்' எனும் நூல் கொண்டு ஹிட்லரின் இயக்கத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி விபரிக்கிறார். 


பல்கலைக்கழகங்கள் தமிழரின் இருபது நூற்றாண்டு வரலாறை எழுதத் தவறியதையும், அதனை எழுத அவர்களைப் பணிக்காததும் தவறான கருத்து திரிபுவாதங்கள் தோன்றுவதையும், ஜே.என்.யு போன்ற அறிவுசார் தளத்தைக் கண்டு பாசிசம் பயப்படுவது போல் தமிழகத்தில் எந்தப் பல்கலைக்கழகமாவது இருக்கிறதா? குறிப்பாக தமிழ்ப் பல்கலைக்கழகம் இதனைச் செய்யத் தவறியதை அறிவுஜீவிகளின் குடுமிப்பிடி சண்டைகளும், பதவி மோகங்களும் படுத்தும் பாடுகளினூடாகச் சுட்டிக் காட்டுகிறார். 


பெரியாரின் மண்ணில் சாதியம் மெல்ல மறைந்து வரும் வேளையில் சாதியச் சங்கம் தன்னை அரசியல் கட்சியாக்கி சாதியை மீண்டும் வளர்த்து பெரியார் முகத்தில் கரியைப் பூசியதை சுட்டிக்காட்டும் இடத்தில் நாம் வெட்கப்படுவதைத் தவிர வேறில்லை.  அதேபோல் ஈழ அரசியல் தோற்கடிப்புக்குப் பின்னால் உள்ள வெற்றுக் கூச்சலிடும் வாய்சவடால் தலைமைகளும், கோடரிக் காம்புகளும் காரணகர்த்தாக்களாகியதையும் சுட்டிக்காட்டுகிறார்.


காட்சிப் பண்பாட்டின் குழந்தைகளாக தலைவர்களின் சிந்தனையே நம் சிந்தனை, தலைவர்களின் மேடைப்பேச்சே நம் பொன்மொழி என்ற போக்கை பிரெஞ்சு சமூகவியல் நிபுணர் பியர் பூர்தியூ ஆய்வுகள் கொண்டு விளக்குகிறார். குமரி முதல் சென்னை வரை இந்தப் போக்கு ஒவ்வொருவரிடமும் உருவாகியுள்ளதையும், கர்நாடகத்திலும், கேரளத்திலும் இந்தப் போக்கு மட்டுப்பட்டு தனிமனித அறிவுசார் சிந்தனை வளர்ந்திருப்பதையும் ஒப்பிட்டு விளக்குகிறார். காட்சிப் பண்பாடு நம்மை கேளிக்கை மிகுந்த வாழ்வுக்குள் தள்ளியுள்ளது என்றால் மிகையாகாது.


மொத்தத்தில் பத்துப் பக்கம் கொண்ட இக்கட்டுரை "தமிழ் வாழ்க" என ஒலியெழுப்பிக் கொண்டிராது வளரும் தலைமுறை தமிழ், தமிழ்த்தேசியம் என்பவற்றை பேசுவதற்கு முன்பு தமக்கான வரலாற்றை உண்மையுடன் எழுதிய பிறகு கோரலாம் என்பதை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறது. சிறந்த இக்கட்டுரையை தவறாமல் வாசியுங்கள்.


- சுகன்யா ஞானசூரி

30/09/2022


இதழ்: நன்னூல்

விலை: ₹100 (தனி இதழ்)

தொடர்புக்கு: 86104 92679, புலன எண்: 99436 24956. 

Saturday, June 24, 2023

தமிழ்நாட்டில் ஈழ அகதிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும்

 

தமிழ்நாட்டில் ஈழ அகதிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும் 

(ஒரு அகதியின் ஒப்புதல் வாக்குமூலம்) - சுகன்யா ஞானசூரி.

காலம்தான் எவ்வளவு வேகமாகச் சுற்றிக் கொள்கிறது. ஒரு சொடக்குப் போடுவதற்குள் காலம் கடந்து விட்டதைப் போலிருக்கிறது நினைவின் தாழ்வாரத்தில் கடந்த காலம். பொங்குமாக்கடலின் அலை நுரைகளில் உப்புக் கரிப்பை வாழ்வு சுவைத்துக் கொண்டிருக்கிறது. அத்தனை விரைவாக நாம் நாடு திரும்பிவிடுவோம் அதுவரையில் உயிரைத் தக்கவைக்க ஒரு பாதுகாப்பான நிலம் தேடிப் புறப்பட்ட பாதங்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே இங்கு தங்கிவிட்டன இல்லை வேர் விட்டன என்பதே பொருத்தமாகும். "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்" என்ற வார்த்தைகள் நீர் மேல் எழுத்தாய்க் கலைந்து போனது. நிம்மதி தேடிப் புறப்பட்ட இவ்வாழ்க்கை நிர்கதியாகி நிற்கிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த துயர்பட்ட வாழ்வென்றே மூன்றாம் தலைமுறையும் கேள்வி கேட்கத் துவங்கிவிட்ட பின்பும் அனைவரின் கள்ள மெளனங்கள் புரியாத புதிராகவே உள்ளது. இது என் ஒருவரின் குரல் மட்டுமல்ல தமிழகத்தின் இருபத்தெட்டு மாவட்டங்களில் உள்ள நூற்றி ஆறு முகாம்களின் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஒட்டுமொத்தக் குரலாகவே உள்ளது. இங்கு அகதிகள் என்போர் ஒரு தனிப்பட்ட மதம் சார்தோ, பிரதேசம் சார்ந்தோ இல்லை. சைவர்கள், வேதக்காரர்கள், இஸ்லாமியர்கள் எனவும், மலையகத்தோர், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் சார்ந்தோர் என கலந்துபட்ட விழிம்புநிலைச் சமூகமாகவே அகதிகள் என்னும் அடையாளத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். 

முகாம் எனும் முள்வேலி: 

இதுவொரு திறந்தவெளிச் சிறைச்சாலை என்பதே பொருத்தமானது. ஒவ்வொரு முகாமும் மாவட்ட எல்லைகளுக்கு அப்பால் பொட்டல் வெளிகளிலும், வறண்ட பகுதிகளிலும், சுடுகாட்டு நிலங்களிலுமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் அருகில் உள்ள உள்ளூர் மக்கள் அச்சப்படும் படியான தோற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் நாளடைவில் தேவைகளின் பொருட்டு சந்திக்கவும், பொருட்களை விற்கவும் வாங்கவுமாக முகாம்களுக்குள் சாதாரண மக்களைத் தவிர வட்டிக்கு கடன் கொடுப்போரும், வியாபாரிகளும் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். முகாம் கழிவறை என்பது ஆரம்பத்தில் கருவேலங் காடுகள், தைலமரக் காடுகள், முந்திரி மரக் காடுகள் மற்றும் சுற்றியுள்ள பற்றைகள் போன்றவையே இருந்தன. பிற்பாடு ஐந்து வீட்டுக்கு ஒரு கழிவறை என சில தொண்டு நிறுவனங்களின் கருணையால் உருவாக்கப்பட்டன. இப்போதும் அதுவே தொடர்கிறது. ஒரு முகாம் சிறியது எனில் குறைந்தபட்சம் நூற்றைம்பது குடும்பங்களும், பெரியது எனில் அறுநூறு குடும்பங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கோழிப்பண்ணைகளிலும், பழைய குடோன்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டமைப்பு குதிரை லாயங்களைப் போன்று பத்து முதல் இருபது வீடுகள் சேர்ந்தாற்போல் லைன் (line) தொடர்ச்சியான வீடமைப்பைக் கொண்டது. அடுத்தவர் வீட்டு விம்மல் ஒலி துல்லியமாகக் கேட்கும்படியாக இருந்தது. தார் சீற்று என்று சொல்லப்படுகின்ற கறுப்பு அட்டையால் அமைக்கப்பட்டிருந்த ஆரம்பகால வீடுகள் தறப்பால்களால் சுற்றப்பட்டு இருந்தன. பின்னர் ஒற்றை செங்கல் வைத்து கட்டப்பட்டு ஆஸ்பெஸ்டாஸ் சீற்றுக்கு தரம் உயர்த்தப்பட்டிருந்தது. தற்பொழுது தமிழக அரசு அரசு ஊழியர்களின் தொகுப்பு வீடுகளைப்போல் சிறந்த வீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அடிபம்புகள் இருந்தநிலை மாறி நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து சீராக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் குடிநீருக்காக பல தோட்டக் கிணறுகளைத் தேடிச் சென்று கிணற்றின் சொந்தக்காரர்களின் மோசமான திட்டுக்களில் கூனிக்குறுகி நின்ற நாட்கள் நினைவை விட்டு நீங்காமலே உள்ளது. 

கல்வி

அகதிகளாகி வந்த ஆரம்ப நாட்களில் கல்வி என்பது எட்டாக் தனியாகவே பார்க்கப்பட்டது. பின்னர் ஆரம்பக் கல்வியை முகாம்களுக்கு அருகிலிருந்த பள்ளிகளில் பயில அனுமதி வழங்கப்பட்டது. பிறகு உயர்கல்வி பயில அனுமதிக்கப்பட்டது. முன்னால் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கி பட்டப்படிப்புகள் வரையிலும் பயில அனுமதி வழங்கியிருந்தார். இந்த ஒதுக்கீடுகள் சில தொண்டு நிறுவனங்களின் தவறான போக்கால் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலிதா அவர்களால் குறைக்கப்பட்டது. பின்னர் அது முற்றாக நிறுத்தப்பட்டது. கலை அறிவியல் துறைசார் பட்டப்படிப்புகள் தவிர பிற துறைகளுக்கு எம்மவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர். மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து கல்வி மத்திய அரசின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் நீட் நுழைவுத்தேர்வு எனும் அரக்கன் முகாம் மாணவர்களின் மருத்துவக் கனவுகளை தகர்த்து விட்டது. இதுவரையில் முகாமிலிருந்து மருத்துவம் பயின்றவர்கள் முகாம்களுக்குள் எவ்வித செயல்பாடுகளையும் முன்னெடுக்காத சூழலில் இதுகுறித்து கவலைப்படுவதில் பிரியோசனம் இல்லை என நாம் கடந்து போக நினைத்தாலும் தொடர்ச்சியாக நடுவண் அரசு செயல்படுத்தி வரும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்பது இன்னும் பல்வேறு உளவியல் சிக்கல்களுக்கு எம் மாணவர்களை இட்டுச் செல்லும் என்பதே நிதர்சனம். மருத்துவம், வேளாண்மை, சட்டம் மற்றும் கடல்சார் படிப்பு, போன்றவை எம் மாணவர்களுக்கு கிடைக்காமல் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது பொறியியல், கலை அறிவியல் மற்றும் டிப்ளமோ கல்விகளும் நுழைவுத்தேர்வு எனும் அரக்கத்தனமான செயலால் கல்வியற்ற சமூகத்தை நோக்கி நகர்த்தும் துர்ப்பாக்கிய சூழல் நெருக்கி நிற்கிறது. 

வேலைவாய்ப்பு

பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்பது இங்கு பெரிய உத்தியோகங்கள் என ஒன்றும் இல்லை. முகாம்களில் அடைபட்டிருந்த மக்கள் அரசு வழங்கிய பணக்கொடையிலும், ரேசன் பொருட்களிலுமே தங்களின் கால்வயிற்றை நிரப்பி வந்தனர். சில முகாம்களில் கட்டுப்பாடுகள் வரையறைக்கு உட்பட்டு நிர்மாணிக்கப்பட்ட சூழலில் வெளியே காலையில் வேலைக்குச் சென்று மாலைக்குள் முகாம்களுக்குள் திரும்பும்படியான இருவேளை கையெழுத்திடும் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இது ஒரு சிறிய விடுதையுணர்வை எமக்கு வழங்கியது என்பதே நிதர்சனம். முகாம்களை ஒட்டியுள்ள கடைகளில் சொற்ப சம்பளத்தில் எடுபுடி வேலை, கட்டுமானப்பணிகளில் கொத்தனார், சித்தாள் பணிகள், கல்லுடைத்தல், வர்ணம் பூசுதல் வேலைகள் எமக்கு இப்போதும் செய்யக்கூடியதாக உள்ள அனுமதிக்கப்பட்ட வேலைகளாக இருக்கின்றன. சில படித்த இளையோர்கள் தங்களின் அகதி அடையாளங்களை மறைத்து படிப்பிற்கு ஏற்ற மேல் வேலைகளுக்கு செல்லத் துவங்கினர். இப்போதும் அப்படியே தொடர்கிறது. படித்தும் பெரிய வேலைகளுக்கு செல்ல முடியாது என்ற எண்ணம் படிக்கின்ற வயதிலேயே வேலைக்குச் செல்லத் தூண்டுகிறது. அப்படியான சூழலே இங்கு இருக்கையில் கல்விக்கு செலவு செய்ய மனம் விரும்புவதில்லை என்பது எதார்த்தம்தான். அகதி என்ற சொல் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரும் சுமையாகவும், சவாலாகவும் இருக்கிறது என்பதே உண்மை.

சமூகச் சூழலும் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும்

"வீடு எப்படியோ அப்படியே நாடும்" என்பார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அகதிகள் முகாம்கள் அமைந்திருக்கின்ற இடங்களில் சுற்றியுள்ள சாதிய, மதப் பண்பாட்டுக் கூறுகள் சமீபகாலமாக முகாம்களுக்குள்ளும் தலைகாட்டத் துவங்கியுள்ளது. பெரும்பான்மையான ஆதிக்கம் கொண்ட சாதியை தங்களின் சாதிய அடையாளமாக வரித்துக் கொள்ளும் போக்கு ஆரோக்கியமற்ற இளைய சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. 

அரசின் மதுபானக் கடைகள் முகாம்களுக்கு அருகில் இருப்பதால் மதுப்பழக்கம் அகதிகள் முகாமுக்குள்ளும் ஒரு கலாச்சாரமாக பரவியுள்ளதைக் காண முடிகிறது. எல்லாக் கொண்டாட்டங்களிலும் மதுபானம் தவிர்க்க முடியாத ஒன்றாக பல குடும்பளின் சீரழிவுக்கும் இன்றைய இளைஞர்களால் ஏற்பட்டிருக்கிறது. மதுபோதையால் விபத்துக்கள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. 

உலக தாராளமயமாக்கலும் நுகர்வுக் கலாச்சாரமும் அகதிச் சமூகத்திற்குள்ளும் ஊடுருவி சமூகச் சிக்கல்களை தோற்றுவித்து வருகிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் கண்காணிக்கும் க்யூப் பிரிவு புலனாய்வு அமைப்புகள் இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இம்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோர், எழுத்தாளர்கள், படைப்பார்கள், அறிவுஜீவிகள் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகள் ஒரு தீவிரவாதச் செயல்பாடாக உறுத்துவதால் உடனே விசாரணை எனும் பெயரில் முடக்குவதே முழுநேர நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர் என்பதே நிதர்சனம். 

இங்கு ஒவ்வொரு சமூகமும் சீர்பெற்ற ஆரோக்கியமான சமூகமாக வேண்டும் எனில் பேரறிஞர் சொன்னதுபோல் தங்களின் வீடுகளில் இருந்துதான் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசின் சட்டங்களும் கட்டுப்பாடுகளும்

முகாம்களில் காவல் நிலையம் ஒரு காவல் அதிகாரி மற்றும் புலனாய்வு அதிகாரி என்ற மட்டத்தில் செயல்படும். தாசில்தார் மாதாந்திர தணிக்கையின் போது வருவார். வெளியே செல்லும்போதும் உள்ளே வரும்போதும் காவல் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த நடைமுறை தற்சமயம் தளர்த்தப்பட்டு எவ்வித ஜனநாயக தேர்தல் விதிமுறையின்றி அதிகாரிகளின் சைகைகளுக்கு கட்டுப்படுகின்ற விசுவாசமான ஒருவரை முகாம் தலைவராக அதிகாரிகளே கைகாட்டும் முகாம் தலைவரிடம் சொல்லி விட்டுச் சென்று வரலாம். இவைகள் எழுதப்படாத சட்டங்களாகவே இன்றும் தொடர்கிறது. 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அகதிகளுக்கு ஏற்றதாக இல்லை. குறிப்பாக தமிழ் அகதிகளுக்கு. 1955 அரசியல் அமைப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்ட போதும் தமிழ் அகதிகளுக்கான வாசல் அடைக்கப்பட்டே இருக்கிறது. 2019 ல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மார் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது. ஆனால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக உள்ள தமிழ் அகதிகளுக்கு அதில் எந்தவொரு வரியும் குறிப்பிடாது தவிர்த்திருக்கிறது. திருத்தப்பட்ட 1955 சட்டம் 21 ன் பிரிவு 1987 க்குப் பிறகு ஆவணங்கள் இன்றி வந்தவருக்கு குடியுரிமை மறுக்கிறது. தமிழ் அகதியானவர் இந்தியப் பிரஜையை திருமணம் செய்தாலும், அவர்களுக்கு பிறக்கும் இந்தியக் குழந்தைக்கும் இந்தியப் பிரஜாவுரிமையை மறுக்கிறது. ஆக எந்த வகையிலும் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்காமல் தவிர்க்கின்றனர். இந்திய அரசைப் பொறுத்தமட்டில் தமிழ் அகதிகள் சட்டவிரோதக் குடியேறிகள் என்றே வரையறுக்கிறார்கள். 

முடிவாக

ஐக்கிய நாடுகள் சாசனத்தில் அகதிகளாக வருபவர்கள் அவர்களது விருப்பத்திற்கு எதிராக அவர்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படாமல், அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, மத உரிமை போன்றவைகள் வழங்கப்பட வேண்டும் எனவும், 

அதேவேளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்ததற்காக அவர்களை தண்டிக்கக் கூடாது என்றும், அவர்கள் நாட்டிற்குள் சுதந்திரமாக வாழ விடவேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளுக்கான சாசனத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதைக் காரணமாக்கி தமிழ் அகதிகளை சட்டவிரோதக் குடியேறிகளாகவே இந்திய அரசு அணுகி வருகிறது. 

அகதிகளை தண்டிக்கப் பயன்படுகின்ற சட்டம் ஏன் வாழ்வதற்கு பயன்படாமல் போகிறது என்கிற புதிர் மட்டும் இன்னும் விளங்காத கேள்வியாகவே உள்ளது.

- சுகன்யா ஞானசூரி

19.02.2023.

(கனடாவில் இருந்து வெளிவரும் உள்ளம் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை சனவரி-மார்ச் 2023 இதழ்)




Saturday, October 2, 2021

என்சிபிஎச் உங்கள் நூலகம்- நாடிலி-அண்டனூர் சுரா

 



நூல் விமர்சனம் – நாடிலி 

நூலாசிரியர் – சுகன்யா ஞானசூரி

கடற்காகம் பதிப்பகம்,மதுரை


கடல் மீதும் துண்டு நிலம் தேடும் நாடிலியின் பாதக்குறிப்பு

- அண்டனூர் சுரா

அலைகளின் மீதலைதலும், கடலலையில் இளைப்பாற ஒரு துண்டு நிலம் தேடுதலும் காணி நிலமேனும் சொந்தம் கொண்டவருக்குப் புத்துயிர் அனுபவம் தருவதாக இருக்கலாம். உள்ளம் கெலிக்கும் குதூகலமாகலாம். அவர்களுக்குக் கடல் என்பது நீலத்தாய். அலைகள் நுரைப்பு, பூரித்த பொங்கோதம். இதுவே நிலமற்ற, மண்ணற்ற, நாடற்றவர்களுக்கு? அல்லது நிலத்தையும் மண்ணையும் நாட்டையும் தொலைத்தவர்களுக்கு? கடல் என்பதும், அலை என்பதும் சாபம்! இந்த நீலக்கடலுக்கு ஏன்தான் இவ்வளவு பரந்துவிரிந்த நிலம்? இந்தக் கடல் கொஞ்சம் தன்னை உள்வாங்கிக்கொண்டால், இரண்டு கால்களில் ஒன்றையேனும் ஊன்றிக் கொள்ளலாம் தானே!. ஒரே கடல்தான். ஒரே அலைதான்! ஒருவருக்கு வர்ணனைக்கான மூலப்பொருளாக இருக்கிறது. மற்றொருவருக்கு வாழ்வதற்கான ஆதாரம் தேடும் இடமாக இருக்கிறது! 


அலைகளின் மீதலைதல், கவிஞர் சுகன்யா ஞானசூரிக்கு கற்பனை அல்ல, புலம்பெயர் அனுபவம். அதுவே அவரது முதல் கவிதைத் தொகுப்பும் கூட. நாட்டைத் தொலைத்துவிட்டு, அலைஅலையாக அலைகளில் வாழ்விடம் தேடிய அகதிகளின் துர்வாழ்வை கவிதையாக்கம் கொண்ட நூல் அது. கவனம் பெற்றது. வாசித்தவர்களின் கண்களில் கண்ணீர் கோர்த்தது. இவரது அடுத்த படைப்பு நாடடைந்த, தொலைத்த நாட்டைக் கண்டடைந்த கதம்பக் கொத்தாக இருக்குமென்றே, நானும், என்னைப் போல நீங்களுமாய் காத்திருந்தோம். அடுத்தத் தொகுப்பைத் தந்திருக்கிறார். மதுரை கடற்காகம் பதிப்பகம் வழியே, ‘நாடிலி’. இத்தொகுப்பிற்கு ஏதிலி என்றோ அகதி என்றோ தலைப்பு தந்திருந்தால் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்கும். ‘ஏதிலி’யைப் போன்று, ‘அகதி’யைப்போன்று, ‘நாடிலி’ அதற்கு நிகரான சொல் அல்ல. 


அகதி, ஏதிலி இவ்விரு சொற்கள் தமிழக மக்களுக்குப் பரிச்சயமானவை. நாடிலி, பயன்பாட்டளவில் புதியது.  ஏதுமற்றவர்கள் ஏதிலி. எல்லா நாட்டிலும் ஏதிலிகள் உண்டு. இவர்கள் வாழும் நாட்டிலேயே நாதியற்றவர்களாக ஆக்கப்படுகிறவர்கள். நாடோடியாக வாழ்ந்து, பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ள உரிமை பெற்றவர்கள். பழங்குடிகளின் வாழ்வு இப்படியாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது. மலை மேல் குடியிருக்கும் மலைவாசிகள், பெருஞ்சுரண்டலால், மண், நிலம், பூர்வீகத்தை இழந்துவிடுகிறார்கள். அதேநேரம், இவர்கள், எங்கையும் வாழ்ந்துகொள்ளலாம், என்கிற உரிமை கொண்டவர்களாகிவிடுகிறார்கள். 


அகதி, தான் வாழ்ந்த நிலத்தை விடுத்து, பிற காரணங்களால்  இடம் அல்லது புலம் பெயர்பவர்கள். இடம் பெயர்வும் புலம் பெயர்வும் ஒன்றல்ல. கிளிநொச்சியை விடுத்து, யாழ்ப்பாணத்தில் குடியேறுவது இடம் பெயர்வு. ஈழத்தை விடுத்து கனடாவை நோக்கி நகர்வது புலம் பெயர்வு. புலம் என்பதற்கு துறை, துறைமுகம், நிலம், அறிவு, துருவம், இடம் என இன்னும் பல பொருளுண்டு. இங்குப் புலம் என்பது நிலம். சொந்த நாட்டினரால், சொந்த மக்கள் அகதியாக்கப்படும் சூழல், போர்ப்பெருங்கலைகளில் ஒன்றாகி வருகிறது. 


அகதிகள், ஒரு கட்டத்தில் சொந்த புலம் அல்லது இடத்திற்குத் திரும்புகையில், விடுத்துச் சென்ற இடம் திரும்பவும் கிடைக்கையில், அவர்கள் ‘வீடடைதல்’ ஆகிறார்கள். நாடிலி, கவிதைத் தொகுப்பில், ஒரு கவிதையில் ஒரு பறவை அப்படியாக வீடடைகிறது. அதே விட்டுச் சென்ற இடம், கொடுங்கர ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, அவர்களின் வாழ்ந்ததற்கான அடையாளம் அழித்தொழிக்கப்படுகையில், நிலத்தை இழந்தவர்கள், நாடிலி ஆகிறார்கள்.  


நாடிலி என்பவர் நாடற்றவர்கள் அல்ல. நாட்டை இழந்தவர். நாட்டைப் பறிகொடுத்தவர்கள். ஞானசூரியின் இக்கவிதைத்தொகுப்பு, நாடிழந்த, நாட்டை இழந்ததன் மூலம் மண், மரம், செடி, கொடி, இணை உயிர்கள், காற்று, சுதந்திரம், வாழ்க்கை, தொழில், சொந்தம், உறவு, நிம்மதி, அமைதி,..என பலவற்றையும் இழந்தவர்களின் ஒவ்வொரு நொடி வாழ்தலையும் திணையாகக் கொண்டு பாடுகிறது.  அகத்திணையில் வறட்சி, வெப்பம் பிரிவு, துக்கம் என இடர்களைக் கொண்டது பாலை திணை. அதேபோன்று நாடிலி, நாடிழந்தவர்களின் துயர், துன்பம், துக்கங்களைத் திணையாக பாடுகிறது. 


ஒரு கவிதையில் குயிலின் ஓசையொன்று பெரும் கட்டடங்கள் முளைத்த மாநகரில் கேட்கிறது. குயில் வனத்தைத் தேடும் குயிலுக்கு, அது அமர்ந்து பாட எப்படியோ ஒரு மரம் கிடைத்துவிடுகிறது. வனம் தொலைத்த குயிலுக்கு, அந்த ஒரு மரம் சிறுவனமாக கிடைத்துவிட்ட மகிழ்ச்சி அதற்கு. தன் மரத்தை இழந்து, குடைந்தடைய மரமற்று, ஒரு சில்வண்டு தனக்கான இடத்திற்காக வெப்பம் பொதிந்த பொழுதில் தன் புலத்தைத் தேடி உரக்க ரீங்கரிக்கிறது. குயிலின் கூவுதலும், சில்லுவண்டின் ரீங்காரமும் ஒன்றல்ல. ஞானசூரியின் கவிதைகள் சில்லுவண்டின் ரீங்காரத்திற்கு ஒத்தவை. தொலைத்த புலத்தை, தொலைவிற்குக் காரணமான, காது கொடுத்துக் கேட்க மறுப்பவர்களின் காதுகளைக் குடையும் குரல். 

நாடிலி, இந்நூலை கவிஞர், "நாடற்று அலையும் அத்தனை ஏதிலிகளுக்கும் " சமர்ப்பணம் செய்துள்ளார். நாடிலி, என்கிற சொல்லைக் கண்டதும், எனக்கு வகிபாகம் சொல்லுடனான ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், பேசும் பொருளாக மாறியிருக்கையில், ஒரு பத்திரிகைக்கு எழுதிய ஒரு கட்டுரையில், வகிபாகம் என்றொரு சொல்லைப் பயன்படுத்தியிருந்தேன். கட்டுரையைப் பிரசுரப்பதற்கு முன்பாக, அப்பத்திரிகையின் ஆசிரியர் வகிபாகம் சொல் குறித்து, விளக்கம் கேட்டார். விளக்கத்தை உள்வாங்கிய அவர், இது ஈழச் சொல் அல்லவா, இதை ஏன் தமிழ்நாட்டில் புகுத்துகிறீர்கள், என்றார். ஈழச்சொல் தமிழ்ச்சொல்தானே, என்றேன். 

வகிபாகம், என்கிற சொல் இங்கே வேரிட்டிடக் கூடாது, என்பதும் ஈழ நாடிலிகள் இங்கே நிரந்தரமாக குடியேறிவிடக்கூடாது, என்பதும் இருவேற்றுமை அல்ல. இந்த உரையாடல் நடந்த ஒரு மாதத்தில், தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், கொள்கை முடிவு வெளியானது. இந்தத் திருத்தத்தில் மியான்மர், பூடான், வங்கதேசத்து, பாகிஸ்தான் இந்துக்களை இந்திய குடிமகன்களாக ஏற்க முன்வந்த அரசு, ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இருந்த போதிலும், இந்தியாவின் அடையாளமாக இதிகாசிக்கப்படும் இராமாயணத்தின் கதை அங்கு நடந்தேறியிருந்த போதிலும், அவர்களை ஒரு பொருட்டாக நினைக்கவோ, உள்வாங்கும் முடிவைப் பரிசீலிக்கவோ இல்லை. இப்படியான தருணத்தில்தான், நாடிலி என்கிற இக்கவிதைத் தொகுப்பும், நாடிலி ஒருவரால் எழுதப்படும் பாடுபொருளும் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. 


"அலைக்கழிக்கும் பறவை" என்றொரு கவிதையில், அந்தகார இருளுக்கப்பால் பெருவெளியெங்கும் தேடியலையும் பறவை ஒரு வேளை உங்கள் பார்வைக்குப் புலப்பட்டால் அப்பறவை குறித்து சிறுகுறிப்பு வரைக, என்கிறார் கவிஞர். அதற்கான குறும்பதில், " காணாமல் ஆக்கப்பட்டவை" என்கிற கவிதையில் கிடைக்கப் பெறுகிறது. ஓயாமல் ஒலித்த படியிருக்கும் பூச்சிகளின் ரீங்காரம், பெருங்காட்டைத் தொலைத்த பறவைகளுக்கும் சேர்த்து குரல் எழுப்புகிறது. ஓயாமல் ஒலிக்கும் நாடிலி பூச்சி, கவிஞர் சுகன்யா ஞானசூரி. 

நாடற்றவர்களின் வாழ்வில் வேறு என்னவெல்லாம் கனவாக இருக்கின்றன, என்பதைக் கவிதைகளால் இடறிவிடும் சொற்கதிர்கள் புலப்படுத்துகின்றன. தாயகம், பறவை, தாய்நிலம், அடையாளம், முகாம், வீடடைதல், வாழ்வு, வைகறை, நாளை,ஆசை, வானம்,ஆதிக்குத் திரும்புதல்,முகம், அரசியல்,நவதிசை,மழை,ஊர், நதி பார்த்தல், சொற்கள்,பெருவெளி,மொழி,. இவைப் பாடுபொருளாகவும், அதன் மீதான கனவும் கனம் பொதிந்த வாழ்வும் கவிதைகளாக களம் கொள்கின்றன. 

ஒரு நாடிலியிடம், இப்படியான நிலைக்குத் தள்ளிய அதிகாரம், கேள்வி எழுப்புகிறது. உனது அடையாளம் என்ன? என்று.  “ மிச்ச மீதியாயிருக்கும் / உயிரைக் காக்கப் போராடும் / அடிமையான அகதி நாங்கள்/ வேறென்ன அடையாளம் சொல்ல?, என்கிறது ஒரு கவிதை. அதிகாரமே இல்லாத அகதிக்குத்தான்/ எத்தனை வண்ண வண்ண /அடையாள அட்டைகள் என்கிறது மற்றொரு கவிதை. அகதிகளின் வண்ணமயமான அடையாள அட்டையில் பொதிந்து கிடக்கும் நிறமற்ற இருண்ட வாழ்வைக் கண்களுக்கும் வெளியே கண்ணீராக வடிக்கிறது. 


போதி மரத்தின் நிழல் வரலாற்றுக் கதையாடலில் ஞானம், நிலம், அமைதி கொடுக்கும் உருவமாக இருக்கிறது. ஆனால் அதன் நிஜமோ, நிழல் எது இருள் எது எனப் பிரித்தறிய முடியாத இருண்மையைக் கொண்டிருக்கிறது. அந்த நிழல் அச்சமூட்டுவதாகவும், கொலை ஆயுதம் நீட்டுவதுமாக இருக்கிறது. அந்த நிழலிருந்து விலகு என்கிறார் கவிஞர். இல்லையேல் நிழலை வெட்டி வீழ்த்து என்கிறார். நிஜத்தை வீழ்த்தாமல், நிழலை வெட்டி வீழ்த்துவது அத்தனை எளிதா, என்ன? 

அச்சமோ அழுகையோ / ஏதோவொன்று / ஒரு முறையாவது / புத்தனின் கண்கள் திறந்துமூடுவதைப் பார்த்துவிடும் / அவா எனக்கு, என்கிறார் கவிஞர். அவருக்கு மட்டுமா?

வாழ்வதற்கு நாடற்ற நாடிலிக்கு சாவுவதற்கேனும் ஒரு நாடு வேண்டும், எனக் கேட்பது, என்னே கொடியது. நாடே இல்லையாயினும் அவனுக்கு உரிமையான ஒரு மரத்தின் கிளையேனும் வேணும், எனப் பாடுவது, எத்தனை வலியது. எல்லையற்ற வெளியில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் / மகள் இப்போது என் தாய்நாடு பற்றி வினவுகிறாள் / நான் பிரபஞ்சத்தின் மேலிருந்து ஒற்றைச் சுருக்கில் தொங்குகிறேன். என எழுதுகிறார் கவிஞர்.  தான் பெற்ற மகள், என் தாய்நாடு எனக் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல இயலா ஒரு தந்தையால் வேறென்ன செய்ய இயலும்?. பிரபஞ்சத்தில் தொங்கம் ஒற்றைச் சுருக்கு கயிறை விடவும், மகளின் நாடு பற்றியக் கேள்வி பதைக்க வைக்கிறது.


தான் பேசும் மொழியில், சா தீயை, மதத்தைத் தேடும் குரூரம் நவநாகரிக பழக்கமாகி வந்துள்ளது. நாடிலி என்பதே ஒரு சாதியாகவும் மதமாகவும் ஆகிவரும் இவரிடம் அதை ஏன் தேடுவானேன்? கவிஞனின் ஒரு நாள் கழிவு, எத்தகையது எனத் தேடினேன். `ஒரு நாளின் 24 மணி நேரம் என்பது / அகதிகளான எங்களுக்குப் / பெரும் அவஸ்தை’ என்கிறார். மருத்துவ ஆய்வகத்தில் நுண்ணோக்கியில் அலைவுறும் நுண்ணுயிரிகளின் வெளியில் / அவருக்கான உயிர்க்காட்டைத்/ தேடும் கவிஞர், அந்த ஆய்வகம் இருந்த இடத்தில் அத்தனை இரைச்சலுக்குமிடையில் கூவும் ஒற்றை குயிலின் கூவுதலில் தொலைத்த வனத்தைத் தேடும் பறவையோடு அவருக்கான வனத்தையும் தேடுகிறார். பச்சை மட்டுமே வாழ்ந்த இடத்தில், இப்போது சிவப்பு மஞ்சள் பச்சை. 

அலைக்கழிக்கும் பறவை, உருமாறுகிறது வெண்ணிலவு, நட்சத்திரங்களினூடே, கொடிய நிழல், ஆதிக்குத் திரும்புதல், புலம் பெயராது இருந்திருக்கலாம், வெறுங்கழுத்தி, பெருந்தொற்றில், இருள் விலகா மௌனம் தலைப்புகளில் நாடிலியின் இருபத்து நான்கு மணி நேரங்கள் அலையாடுகிறது. ஒரு கவிதை, குளத்தின் வட்டச்சுழல் அதிர்வையும் மனஅதிர்வையும் ஒப்பிட்டு சுழலாற்றுகிறது. 

சிறு கல் / விழுந்த குளத்தின் / அதிர்வென விரியும் / வட்டச்சுழலில் / நினைவதிர்வொன்று / சுழன்றபடி இருக்கிறது / ஒரு பாடல் / நுழைந்த மனதில்.


ஒரு கவிதையில், ஏன் என்னை அகதியாக்கினீங்கள்? எனக் கேட்கிறார். அவரது தந்தையிடம் அவர் கேட்கும் கேள்வியாக அது இருந்தாலும், அக்கேள்வி இந்த உலகத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்வியாகவும் இருக்கிறது. அப்படியாகக் கேட்ட கவிஞர்தான், தன் என்னுரையை இவ்வாறு முடிக்கிறார், “ அகதிகள் இல்லா உலகம் உருவாக வேண்டுகிறேன் ” சபிக்கப்பட்டவர்களால் நிரம்பிக் கிடக்கும் இந்த உலகில், இந்த வேண்டலை அவர் யாரிடம் கேட்டிருக்கக் கூடும்? காது உடையவர்களிடமா? இல்லை, மென்மெல்லிய இதயம் உள்ளவர்களிடம்!  

கடல் மீதும் துண்டு நிலம் தேடும் நாடிலியின் பாதங்கள், தனக்கான புலத்தைச் சென்றடைய வேண்டும், என்பது என் வாழ்த்துகை அல்ல, வேண்டல்!! 

- அண்டனூர் சுரா

1546 C,மகாத்மா நகர்

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்- 613301

அலைபேசி - 9585657108


இவ்வளவு விரிவாக நாடிலியை முன்வைத்த தோழர் அண்டனூர் சுரா அவர்களுக்கு என் அன்பும் நன்றிகளும் என்றென்றும். ப்ரியங்கள் தோழர்.




Saturday, July 31, 2021

நாடிலி தொகுப்பு குறித்து சுப்ரா. வே. சுப்ரமணியம் பார்வை

 







“ நாடிலி “ – கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் – சுகன்யா ஞானசூரி . [ 97903 50714 ]

வெளியீடு – கடற்காகம் வெளியீடு .

விலை – ரூ 110 . [ முதல் பதிப்பு ஜூன் 2021 ]

மா . ஞானசூரி எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் 1984 ல் பிறந்து , 1996 ல் தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர் . தற்சமயம் திருச்சியில் வசித்து வருகிறார் . அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது .

தொகுப்பின் தலைப்பே போதும் உள்ளிருக்கும் கவிதைகள் வாசிப்பவர்களிடம் உருவாக்கப்போகும் வலிகளை உணர்த்துவதற்கு .

வருமானம் தேடி புலம் பெயர்தல் வேறு ; வாழ்விடம் இழந்து , வாழ்வாதாரம் இழந்து வலியோடு புலம் பெயர்தல் வேறு . வந்த இடத்திலும் தனியொரு அடையாளம் இன்றி அகதி என்ற ஒற்றை அடையாளத்தோடு வாழ்தல் தரும் வலி மிகப் பெரிது . அந்த வலி குறித்து பல புதினங்களும் , சிறுகதைகளும் வந்து கொண்டேயிருந்தாலும் கவிதை என்ற வடிவத்தில் அவை வாசிப்பவர்களிடமும் அந்த வலியை எளிதாகக் கடத்தி விடுகின்றன . இந்த தொகுப்பு முழுவதும் அத்தகைய வலி தரும் வரிகள்தான் . பழைய நினைவுகள் தரும் வலிகளையும் , வந்த இடத்தில் அனுபவிக்கும் வலிகளையும் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார் கவிஞர் . கவித்துவமான வரிகளையும் மீறி வாசித்து முடிக்கையில் நம்மிடம் எஞ்சி நிற்பவை வலி …. வலி…. வலி …. தவிர வேறொன்றுமில்லை .

அரசின் பதிவேட்டில் / அங்க அடையாளங்களோடு

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மிச்சம் மீதியாயிருக்கும்

உயிரைக் காக்கப் போராடும் / “ அடிமையான அகதி நாங்கள் “

வேறென்ன அடையாளம் சொல்ல ? 

அகதிகள் முகாம்களில் நிகழும் கொடுமைகளை பட்டியலிட்டு முடிக்கிறார் ஒரு கவிதையை - 

உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரிவதைப் போல

யாழினிகள் தெரிவதில்லை . 

முகாம்களில் வாழ்விடம் என்பது ஒருவகையான வெற்றிடமே எனக் காட்டும் வரிகள் -

பத்துக்கு பத்து என்பதொரு கணித சூத்திரம்

இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்

கல்லறையின் அளவை . 

அகதி வாழ்வு என்பது எவ்வளவு கொடுமையான மனநிலையைத் தருகிறது இந்த வரிகளில் -

மஞ்சள் கனியொன்றின் / பற்குறியில்

உறைந்து கிடக்கும் / குருதியென வீச்சமடிக்கிறது

இந்த வாழ்வு . 

பழைய நினைவுகளில் மூழ்கியெழுந்து வெளியேறி தற்போதைய வாழ்வு நிலையை எளிமையான வரிகளில் கடத்திச் செல்கின்றது கவிதை ஒன்று - 

சீவல் தொழிலற்று

சீவியம் போன மூத்த குடியானவன் பிள்ளை

பனை நிழலும் அற்றுப்போனான் . 

கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளை சற்றே மாற்றிப் போட்டுள்ள வரிகளின் வீரியம் எவ்வளவு வெப்பத்தைக் கொணர்கிறது -

சமுத்திரத்தின் பெருவெளியில்

படகுகளோடு மூழ்கிய குழந்தைகளையொதுக்கும்

கரையில் நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்

யாதும் ஊருமில்லை / யாவரும் உறவுமில்லை . 

அகதிகளின் வாழ்வில் எதுவுமே நிரந்தரமல்ல எனினும் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை தனக்குள்ளாகவே உருவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி ?

அன்றன்றைக்குப் பெய்யும் / மழையை

அன்றன்றே ரசித்துவிடு / பிறிதொரு நாளில்

அது அதுவாகவும் நாம் நாமாகவும்

இருப்போமா தெரியாது .  

 


வாழ்வு தேடி வந்த இடத்திலும் வாடிக்கையான கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன – ஆனால் எவ்வளவு மனப்புழுக்கம் !

கந்து வட்டியில்தான் இந்த வருடமும்

எமக்கான தீபாவளி / அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது .  

தங்களது வலிகளை பிறரிடம் பகிர்கையில் எத்தனை சோகத்தை மனதில் தேக்கி வைத்திருந்தால் இந்த வரிகள் உருவாகும் –

இடப்பெயர்வின் வலிகளை

அகதியானவர்களிடத்து கேட்டுப் பாருங்கள்

கண்ணீரில் மிதக்கும் வாழ்வில்

நீந்த முடியாது அலைவுறுவீர்கள் . 

இந்த வரிகளை வாசிக்கையில் நமக்குள் ஏற்படும் குற்ற உணர்வை அவ்வளவு எளிதில் உதறிச் செல்ல முடியாது - 

போரை எவரும் விரும்பி ஏற்பதில்லை

ஆனால் அதுதரும் / விளைவுகள் குறித்து அச்சப்படுகிறேன்

போர் திணித்த இடப்பெயர்வில்

எப்படி நீங்கள் என்னை / அகதியென விளிக்கிறீர்கள் ?  

மழை குறித்துதான் எத்தனை கவிதைகளை வாசித்து விட்டோம் . ஆனால் அந்த மழை ஒரு நாடிலியின் பார்வையில் வேறு ஒரு உணர்வுகளை உருவாக்கி விடுவதை உணர்த்தும் வரிகள் -

யார் / கவிழ்த்துவிட்டது / அந்த மதுப்புட்டியை ?

இப்படிப் / பொங்கி வழிந்தோடுகிறதே

நிலமெங்கும் வெள்ளமென அகதிகளின் கண்ணீராய் . 

எவ்வளவுதான் வேதனைகள் சூழ்ந்திருந்தாலும் இயற்கையை இரசிக்காமல் இருக்க முடியவில்லைதான் . ஆனால் அந்த இயற்கையும் ஒரு சுய பச்சாதாபத்தைத்தானே உருவாக்கி விடுகிறது -

தாயகமிழந்த என்னை / நீங்கள்

அகதி என்றழைப்பதைபோல்

சாயமிழந்த வண்ணத்துப்பூச்சிகளை

என்ன பெயரால் அழைக்கிறீர்கள் ?  

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்று காலக் காட்சிகள் ஒரு நாடிலியின் பார்வையில் தொற்று குறித்த பயத்தைவிட தனது எதிர்காலம் குறித்த அச்சத்தை மட்டுமே உருவாக்கி விடுகின்றன என்பதை உணர்த்தும் ஓர் ஒப்புமை -

ஊடகத்தில் நிரம்பி வழியும் / பெருந்தொற்றில்

சாலைகள் மரணித்துக் கிடக்கின்றன

நிச்சயமற்ற எதிர்காலத்தின் / சூனியத்துழலும் ஏதிலிபோல்

அச்சம் ஒவ்வொரு இல்லத்திலும் அடைந்திருக்கிறது . 

புலம் பெயர்ந்த வலியை மிகுதியாகப் பேசினாலும் , உலகின் பொதுவான பிரச்சினைகளையும் பாடுபொருளாகக் கொண்டு சில கவிதைகளைத் தருகிறார் – சற்றே பகடி கலந்து தன் வலி மறக்கும் முயற்சியாக .

மேலைத்தேய கார்ட்டூன்கள்

அறிவையும் அன்பையும் போதிக்கும்வேளையில்

அடைக்கல தேசத்தின் கார்ட்டூன்கள் நஞ்சூட்டுகின்றன . 

சிறு சிறு வார்த்தைகள்தான் ; ஆனால் எத்தனை அர்த்தம் பொதிந்தவை –

கடல்மீதும் / சிறுதுண்டு நிலம்

தேடும் / அகதியின் பாதம் . 

ஒரு சில வரிகள் படைப்பாளியின் குரல் வழியே அனைத்து நாடிலிகளின் மனக் குமுறல்களையும் வலி பொதிந்து தருகின்றன -

அடைக்கலமான தேசத்தில் / நடைப்பிணங்களாய்த் திரிகின்றோம் / நினைவில் / ஊரைச் சுமந்தபடி . 

*************************************

தினந்தினம் இப்படி இறப்பதைக் காட்டிலும்

போர் நிலத்தில் / ஒரு கணம்

இறந்தே போயிருக்கலாம் / புலம் பெயராது . 

வாசிக்கும் யாரையும் உலுக்காமல் விடாது இந்த வரிகள் -

துயர்மறந்து விடியலை நோக்கும் / என் கனவுகளை

அகதியென்னும் ஒற்றைச் சொல்லில் / சிதைத்துவிடுகிறீர்கள் . 

தொகுப்பை வாசித்து முடித்ததும் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வு குறித்த வலி மிகுந்த உணர்வுகளை நம்மிடம் கடத்தி விடுவதன் மூலம் படைப்பாளி அவரது முயற்சிக்கான முழு பயனையும் அடைந்து வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் ; நாடிலிகளின் வலி குறித்த வலிமையான வரிகளைத் தாங்கிய தொகுப்பு .   

- சுப்ரா .