Tuesday, September 14, 2021

நாடிலியின் தணிக்கைக்குப் பிறகான புதுகை ஆளுமைகளின் சந்திப்பு

 



அகதிகள் முகாமில் தணிக்கை தொடர்பாக இன்று புதுக்கோட்டை சென்றிருந்தேன். ஏற்கனவே இரண்டு முறை அழைக்கப்பட்டபோது பணியிடத்தில் விடுப்பு எடுக்க முடியாத நிலை. ஒருவழியாக மதியத்திற்கு மேல் கடமையை நிறைவேற்றி தற்காலிகமாக தப்பித்திருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களிலும் இத்துயர் தொடரத்தான் செய்யும். ஆனாலும் வாழ்ந்துதானே ஆகவேண்டும். 



கிடைத்த சொற்ப நேரங்களை வீணடிக்காமல் புதுக்கோட்டையின் இரு ஆளுமைகளைச் சந்திக்க முடிந்தது எல்லாத் துயரங்களையும் போக்கி சற்று இளைப்பாறுதலைத் தந்தது. 



1999ல் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது புதுக்கோட்டை ஐடியல் டியூசன் சென்டர் ஏற்பாடு செய்திருந்த கவிதைப் பட்டறையில் கவிதை என்றால் என்ன, எவ்வாறு எழுதலாம் என்று வகுப்பெடுதபோதும், பிறகு 2004ல் இளங்கலை அறிவியல் படிக்கையில் ஆலங்குடியில் ஒரே மேடையில் கவியரங்கம் செய்தபோதும், இன்று பல்வேறு வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றரை மணித்தியாலம் இலக்கியம், சினிமா, அரசியல், கல்விப் புலம் என பல்வேறு விடையங்களை உரையாடியபோதும் அந்த காந்தக் குரல் ஒன்றாகவே இருக்கிறது. கவிஞர் தங்க மூர்த்தி ஐயாவின் அந்தக் குரலுக்கு நான் பரம ரசிகன். இன்று #நாடிலி கவிதைத் தொகுப்பினை வழங்கியபோது மாணவரின் வெற்றியைக் கொண்டாடும் ஆசிரியரின் முகமலர்ச்சியை தரிசித்தேன் என்றே சொல்லவேண்டும். 


கவிஞர் வைகறை அண்ணனால் அறிமுகமாகிய வீதி கலை இலக்கிய நிகழ்வில் புன்னகை பூத்த முகத்துடன் அன்போடு கவனித்த தேவதா தமிழ் (மு.கீதா) அம்மா அதே மாறாத புன்னகையோடு தேநீரும், ரொட்டியும் வழங்கி வீதி கூட்டத்தில் மீண்டும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். வீதி நண்பர்களுக்கான பிரதிகளை அம்மா அவர்களிடம் தந்துவிட்டு வந்தேன். பிறிதொரு நாளில் இன்னும் முக்கியமானவர்களையும் சந்திக்க வேண்டும். காலமும் நேரமும் கூடிவரட்டும். அதுவரை காத்திரு மனமே என என்னை நானே சமாதானம் செய்துகொள்கிறேன். 


- சுகன்யா ஞானசூரி

13/09/2021.

Wednesday, September 8, 2021

ஷம்பாலா - தமிழவன்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் வாசித்திருக்கும் நாவல் தமிழவன் அவர்களின் ஷம்பாலா எனும் அரசியல் நாவல். துவக்கத்தில் தொடுவதற்கு சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவரது ஸ்ரக்சுரலிசம் நூலை வாசிப்தற்காக நான் தோழர்கள் Jamalan Tamil , Mubeen Sadhika , Yukaanthan Yuva போன்றவர்களின் எழுத்துகளின் வாயிலாகவே உள்ளேக முடிந்திருந்தாலும் இன்னும் வாசிப்பினை தொடராமலே உள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக எளிமையாக இருந்தது ஷம்பாலா. 


ஷம்பாலா அதிகாரத்தின் உறைவிடம். வலதுசாரியச் சித்தாந்தத்தின் புதிய கொள்கைகளும், அது தொடர்ச்சியாக பெற்றுவரும் வெற்றிகளும், அதிகாரத்திற்கு எதிரானவர்களை அதிலும் குறிப்பாக படைப்பாளர்களை பழிதீர்ப்பதில் செயல்படும் நுணுக்கங்களையும் (கெளரி லங்கேஷ் படுகொலை, வரவர ராவ் போன்றவர்கள் நினைவில் வந்து செல்வார்கள்) மூன்றாம் ஹிட்லர் எனும் நீலக்கண் அரசியல்வாதியூடாக விறுவிறுப்பான நடையில் சமகால அரசியலை அலசிச் செல்கிறது.


ஷம்பாலா ஹிட்லரின் சிறுபிராயம், வளரிளம் பருவம், காதல் தோல்வி, அரசியல் தாதாவாகுதல், திருமணத்தினை மறைத்தல் என பல்வேறு விடையங்களை நீங்கள் வாசித்தால் மட்டுமே யார் யார் என்பதை கண்டடைய முடியும்.


ஜெர்மானிய ஹிட்லரை தோற்கடித்து, வலதுசாரியச் சிந்தனையை வேரறுத்தவர் ரஷ்யாவின் ஸ்டாலின் அரசு என்பதை அமர்நாத் பாத்திரம் அழுத்தமாக சொல்வது சமகாலத்திலும் எதார்த்தமாக அமைந்துள்ளதா? அல்லது விதிப்பயனா? 


//நாம் சாதாரணமானவர் என்று பிறர் கூறும்படி அப்படியே இருந்தோமென்றால் இப்போது போலவேதான் எப்போதும் இருக்க வேண்டியவர்களாவோம்.// லாமாக்களின் இந்தப் போதனை ஒவ்வொருவரையும் அவரவரின்  இயங்கியலை நிறுவுகிறது. 


முழுமையான ஒரு அரசியல் நாவல். நாம் சாதாரணமானவர் இல்லை. இனி தமிழவனின் அடுத்தடுத்த நூல்களையும் வாசித்துவிடுவேன் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது. 


- சுகன்யா ஞானசூரி

08/09/2021.




 

Monday, September 6, 2021

குடியுரிமை கோரிக்கை தொடர்பான கலந்துரையாடலும் எனது கவனப்பாடும் - சுகன்யா ஞானசூரி

 இந்தியா, தமிழகம் வாழ் அகதிகளுக்கான அரசின் அறிவிப்புகளும், பிரதிபலிப்புகளும் எனும் நேற்றைய நிகழ்வினையொட்டிய என் கவனப்பாடு.


1.

இந்திய குடியுரிமை கோருபவர்கள் முதலில் ஈழப் பெருமைகள் பேசுவதை விடுத்து தம்மை இந்திய இறையாண்மைக்குள் இணக்கமாக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் தோழர் பத்திநாதன். இது இங்கே சரியான பார்வையாக இருக்கிறது (அதாவது தற்சமயம் குடியுரிமை கோருவதன் காலச்சூழல் பொருத்தப்பாட்டில்). இதை நாம் அடுத்த தலைமுறையில் நம் ஆவணங்கள் அத்தனையையும் அழித்துவிடுவதின் வாயிலாக துவக்கலாம். இதுவே இதற்கான சரியான துவக்கமாகவும் இருக்கமுடியும். எம் தலைமுறையிலிருந்து துவங்கும்போது உளவியல்ரீதியாக பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். மேற்குலக நாடுகளில் குடியுரிமை கோருபவர்களுக்கு இதுபோன்ற இக்கட்டான சூழல் இல்லாமை நல்லதாகப் போய்விட்டது. இன்றைய தமிழக ஈழ அகதிகள் முகாம்களில் அடையாள அரசியல்கள், சாதிய மனோபாவ வெளிப்பாடுகள் என புதிய புதிய அடையாளங்களை ஏற்று தங்களைத் தாங்களே தலைமைகளாக கட்டமைத்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் நாம் அடையாள அழிப்பைச் செய்வதில் தவறில்லை. அதேபோல் நாடு திரும்புவோரின் மீள்குடியேற்றச் சிக்கல்களை வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் அதன் மெளனம் ஒரே அர்த்தத்தை தெளிவாகச் சொல்லிவிடுகிறது. இங்கே நாடு திரும்ப ஆசையூட்டுவோரின் பேச்சை நம்பவேண்டாம்.


2.

வடக்கு கிழக்கு நிலைமைகள் என்பவைகள் ஒருவேளை தமிழீழம் என்ற ஒன்று உருவாகியிருந்தால் பேசவேண்டிய ஒன்று. அது 2009  ஆண்டோடு முடிந்து போன ஒன்று. நீங்கள் தனித்தமிழீழக் கோரிக்கை தொடர்பான உரையாடலில் வேண்டுமானால் கோரலாம். தமிழகத்தின் அகதிகள் குடியுரிமை கோரிக்கை என்பது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒன்று. மதரீதியான முன்னெடுப்புகள் கோமாளித்தனமான ஒன்று. மலர்மகள் அம்மாவின் பேச்சுகள் அகதிகள் குடியுரிமை கோரிக்கை தொடர்பானவற்றிற்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. 


3.

இந்திய வம்சாவளித் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என பிரித்து குடியுரிமைக் கோரிக்கை கேட்பான் குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் நிகழ்ந்தாலும் ஒரு அமைப்பாக முதலில் வாய்ப்புள்ளவர்களுக்கான பாதையை அடைவது முக்கியம். அதையொட்டி மற்றவர்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்று பல்வேறு கட்டுரைகளிலும் நேர்ப்பேச்சிலும் கூறியதை தோழர் ந. சரவணனின் உரை இருந்தது. அது சரியான பாதையில் சென்று கொண்டும் இருக்கிறது. வாழ்த்துக்கள். 


4.

சட்டத்த்தரணி இளங்கோ அய்யாவின் ஊகமான பேச்சுக்களால் எவ்வித பலனும் இல்லை. அகதிகளின் குடியுரிமைக் கோரிக்கையில் மறுவாழ்வுத் துறையின் கீழ் செயல்படுகின்ற சட்டத்தரணிகள் ஏன் பங்குபற்றாது கள்ள மெளனம் காக்கிறார்கள் என்பது எனது பலநாள் கேள்வி. 1991 இராசீவ்காந்தி படுகொலை குடியுரிமை கோரிக்கையில் சிறிய தாக்கத்தினை செலுத்துகிறதுதான். இப்போது காங்கிரஸ் இல்லாத பாஜக அரசுதானே உள்ளது. சட்டச் சிக்கல்களை எடுத்துச் சொல்லியிருந்தால் உபயோகமாக இருந்திருக்கும். 


5.

செயற்பாட்டாளர் சுபாஷினி அவர்கள் மறுபடியும் மறுபடியும் நம்மை மறுவாழ்வுத்துறையிடமே கோருவது போன்று பேசுவது அறியாமையினால்  செய்வது போல் உள்ளது. மறுவாழ்வுத்துறையின் NGO செயல்பாடு நாடு திரும்புதல் என்ற ஒற்றைச் செயல்பாட்டில் உள்ள அமைப்பு. அவர்கள் நினைத்திருந்தால் 2009 க்கு பிறகு அதனை முன்னெடுத்திருக்கலாம். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை அவர்கள் செய்கிறார்கள். நாம் அவர்களிடத்தில் மறுபடியும் எம்மை அடமானம் வைக்க முடியாது. 


6.

கஸ்தம்பாடி அனோஜன் அவர்களின் பேச்சு முதிர்ச்சியான ஒன்று. பல்வேறு விடையங்களை சிறப்பாக கூறியிருந்தார். அவரை இன்னும் நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.


ஈழ விடுதலை இயக்கங்களுக்குள் சகோதர சண்டைகள் நிகழ்ந்ததைப்போல் இங்கு இப்போது குடியுரிமை கோரிக்கை தொடர்பில் பல்வேறு குழுக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தாலும் கொள்கை என்பது இந்தியக் குடியுரிமை கோருதல் ஒன்றே பிரதானமாக உள்ளது. அது தமிழீழம் என்ற ஒன்றை இல்லாது ஆக்கியதைப்போல் ஆகிவிடாமல் எல்லோரும் ஓரணியில் நின்று இன்றைய நம்பிக்கை நட்சத்திரமான மு.க. ஸ்ராலின் அவர்களின் தமிழக அரசின் முன்னெடுப்புகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். அதேவேளை சட்டரீதியான செயல்பாடுகளை அரசோடு இணைந்து செய்யவேண்டிய பொறுப்பும் நம் முன்னால் உள்ளது. தமிழக அரசோடு இணைந்துதான் நாம் ஒன்றிய அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடும் உள்ளது. மக்களிடத்தில் அகதிகளின் குடியுரிமை கோருதல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பொறுப்புணர்ந்து செயல்படுவோம் தோழர்களே. 


இவண்

சுகன்யா ஞானசூரி

06/09/2021.