Thursday, December 29, 2016

பாடும் பறவையைப்போல்....

சூரியன் எழாத காலை வேளை
மழை நனைத்த மண் சாலை
பூக்களைத் தூவும் மலர்களின் சோலை
ஒரு குவளை சூடான தேநீர்...
இலைகளில் தங்கிவிட்டிருக்கும்
பேரருவியொன்றின் எச்சங்களை
உலுப்பியுலுப்பி நீராடும்
பனங்காய்ச் சில்லு வண்டியோட்டும்
அச்சிறுவனுக்குள் சிக்குண்டு
சிந்தைக்குள் பின்னோக்கிச் செல்கின்றேன்!
விசங்களைச் சுமந்தபடிக்கு அலையும் காற்றும்
தலையொடிந்த நெடும்பனைகளும்
குருதி வீச்சமும் கூப்பாட்டுச் சத்தமும்
சிந்தை கலங்கி நிகழ்காலம் சேர்த்தது.
மலர் தூவும் வாசனையோடு
மழை நனைத்த மண்மீது
நடந்து அழைந்து தேசம் முழுமையும்
திரிய வேண்டும் பாடும் பறவையைப்போல்
சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி!

[பரணி காலாண்டிதழில் (அக்டோபர் - டிசம்பர் 2016) வெளியாகியுள்ள எனது கவிதை]


வரவிருக்கும் புத்தாண்டிலாவது பாடும் இப்பறவைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் எனும் நம்பிக்கையோடு வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை கூறி மகிழ்கிறேன்.

Sunday, December 18, 2016

பயிற்சிப் பட்டறையின் புகைப்படத் தொகுப்புகள்

பயிற்ச்சிப் பட்டறை புகைப்படங்கள்
கணினித் தமிழ்ச் சங்கத்தினரால் புதுக்கோட்டை மெளண்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின் புகைப்படத் தொகுப்புகள்


வலைச்சித்தர் திருமிகு திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களோடு


புதுக்கோட்டையின் இலக்கிய ஆளுமைகளோடு(இடமிருந்து வலமாக கவிஞர் முத்து நிலவன் ஐயா, தோழர் மகா.சுந்தர் ஐயா, கவிஞர் தங்கம் மூர்த்தி ஐயா, தோழர் கவிமதி சோலச்சி மற்றும் திருச்சியைச் சேர்ந்த கவிஞர் ஜெயராமன் ஐயா ஆகியோரோடு)



விக்கிபீடியா பயிற்றுநர் திருமிகு பிரின்ஸ்.என்.ஆர்.எஸ் தோழர் அவர்களோடு



வலைப்பதிவின் முன்னோடிகள் திருமிகு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா மற்றும் தேவகோட்டை கில்லர்ஜி ஐயா ஆகியோருடன்



கவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி ஐயா அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகையில்


கணினித் தமிழ்ச் சங்கத்தின் பயிற்சிக்கான கையேட்டினை கவிஞர் தங்கம் மூர்த்தி ஐயாவிடமிருந்து பெற்றுக்கொள்பவர் திருமிகு கவிஞர் கீதா அம்மா அவர்கள்.

Saturday, December 17, 2016

வருக... பயன் பெறுக... வலைப் பதிவுகள் குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை

வணக்கம் வலைப்பூ உறவுகளே...

சென்றாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்களுக்கான சந்திப்பே வலைப்பூவில் என்னையும் இணைத்துக் கொண்டது. உலகமெங்கிலும் இருந்து திரளான வலைப் பதிவர்கள் பங்குபற்றி விழாவினை வெற்றிபெறச் செய்தனர்.

இப்போதுதான் புத்தகத் திருவிழாவினை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளனர். அதற்குள் மீண்டுமொரு நிகழ்வினை திட்டமிட்டு சிறப்பாகச் செயல்படுத்தி வாருகின்றனர்.

 புதுக்கோட்டையில் வலைப்பதிவுகள் தொடர்பாக பயிற்சி பட்டறை ஒன்றினை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (18/12/2016) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளது.

விழா அழைப்பிதளினை இதில் இணைத்துள்ளேன். மேலதிக விபரங்களுக்கும், விளக்கங்களுக்கும் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவார்களின் வலையில் காண வேண்டுகிறேன்.

சரியான முன்தயாரிப்புடன் விழாவிற்கான ஏற்பாட்டினை செய்து வரும் விழா அமைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....

Wednesday, July 6, 2016

மரநிறப் பட்டாம்பூச்சிகள்.

பேருந்தில் என் அருகில் நெடுநேரமாய் நெளிந்து கொண்டிருந்தார் ஒருவர். என் கையில் இருப்பது குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர் கண்களில்...


மனிதனுக்குள் மட்டும்தான் பல குணங்கள் உறைகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைமையானவை. அதிலிருந்து நான்கு வேறுபட்ட மனித குணத்தை "நிழலாட்டம்" உணர்த்துகிறது. "பெருத்த மார்புகளையுடைய ஆணின் கதை" வேறுபட்ட வகைமையானது, இதுவரை யாரும் தொடாதது. ஆற்றாமைகளின் வெளிப்பாடு.  மகளையொத்த வயது சிறுமியைப் புணரும் மனிதன் கன்னியாகுமரி கடலுக்குள் சங்கமமாகிப் போவதும், பாறைகளில் பட்டுத் தெறிக்கும் அலைகளில் சிதறிய நீர்த் துளிகள் நம்மை அசைக்கிறது. "சிலுவை..." புதிய வாசிப்பனுபவம்.

"இணைய மும்மூர்த்திகள்" ஆதர்சங்களின் இடம் குறித்தான நிலைகளை எடுத்தியம்புகிறது. இப்படியும் கதை சொல்லலாம் என்பதை இதனூடு தெரிந்துகொள்ள முடிகிறது.

மரநிற பட்டாம்பூச்சிகளில்தான் எத்தனையெத்தனை வகைமையான பட்டாம் பூச்சிகள். வண்ணங்களைச் சூட்டிக்கொண்டு சிறகசைத்து பறக்கும் அழகாய். இங்கு வண்ணங்களைத் தொலைத்துவிட்டு என்பதைக் காட்டிலும் மறைத்து வைத்துவிட்டு இருண்மையான தனி உலகினிற்குள் தங்கள் சிறகுகளை அசைக்கின்றன. குருதி வாடை வீசத் துவங்கும் அந்த நொடியில் அத்தனை காமமும் அடங்கிப் போகிறது.

காமமும், மரணமும் மனிதர்களை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துகிறது. ஆதிமனிதர்போல் நிர்வாணமாய் இந்த உலகம் இருந்துவிட்டால் காமமும், மரணங்களும் இங்கு அதனதன் போக்கில் இருந்திருக்குமோ என்ற நினைவெழுவது தவிர்க்க இயலாதது. 
இறுதியாக என்னருகில் பயணித்தவர் கேட்டே விட்டார் நீங்கள் வாசிப்பது 
என்னவென்று. 

கார்த்திகைப் பாண்டியனின் மரநிறப் பட்டாம் பூச்சிகள் சிறுகதைத் தொகுப்பு எனக் கூறி அவர் கையில் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவர் நல்லா வடிவமைப்புச் செய்துள்ளார்கள் என்றார். கதைகளும் நல்லா இருக்கிறது என்றார் மறுநாள் நூலை தந்துவிட்டு. வாழ்த்துக்கள் தோழர் கா.பா.
தோழமையுடன்
சுகன்யா ஞானசூரி

Saturday, June 25, 2016

நஞ்சுண்டகாடு-குணா கவியழகன்



பெரும் சுமையொன்றை முடிக்கும் போது சுமக்கச் செய்கிறது நஞ்சுண்ட காட்டுக்குள் துயிலும் ஏணைப்பிறை. மனம் கிடந்து உளைகிறது. எத்தனையெத்தனை சுகுமார்களையும் அவன் குடும்பத்து துயரத்தையும் இந்த பூமி சுமந்திட இயலும்? பொறுப்பற்ற குடும்பத்தாரின் சூழலும், தொடர் மரணங்களுமென எத்தனையெத்தனை சோதனைகளை தாங்கி நிற்கும் அக்கா. 1990 களில் எங்கள் குடும்பத்தில் ஒரேயாண்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களின் நிகழ்வுகளை கிளறிவிடுகிறது காட்டின் இருண்ட பக்கங்களென.

இது சுகுமாரின்ர வீட்டின் நிகழ்வல்ல. அத்தேசத்தின் ஒட்டுமொத்த சனத்தின் வாழ்வுக்குமான பொது விதியென இட்டுச் சென்றது போரின் மறுபக்கம். இழப்புகள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை. இழப்புகள் எண்ணிக்கை அதிகமாகும்போது அது தோல்விக்கே வழிவகுக்கும். எவ்வளவு தீர்க்கமாய்ச் சொல்லியுள்ளான் சுகுமார். இன்று தேசமற்று நிற்கும் எம்மினம் புரிந்துகொண்டிருக்கும்.

படித்து முடிக்கும் நொடிகளில் சுகுமாரின் அக்கா ஒவ்வொருவர் உள்ளத்துக்குள்ளயும் விலக்கமுடியாமல் ஒட்டிக்கொள்வாள். ஒரு மிடறு சோறு தண்ணீர் நெஞ்சுக்குள் சிக்கிச் சுழன்டு அடைத்துக் கொள்கிறது. போரின் பெயரால் நிகழ்த்தப்பட்ட விதி. தொடர் மரணங்களால் நிலைகுலைந்த சுகுமாரின் அக்கா நம் அருகில் இருப்பதை மறந்து நாம் திரிகின்றோம். ஒரு  போராளியின் வாழ்வும் அப்போராளியின் குடும்பச் சூழலும் என நஞ்சுண்ட காட்டின் இருள் தொடர்கிறது....

Friday, May 20, 2016

அப்பால் ஒரு நிலம்



"போர்" எமக்கு வாழ்வின் பெரு வலியாக இருப்பினும் அது எமக்கு பல பாடாங்களைக் கற்றுத் தந்துள்ளது. பங்களா வீடும், தோட்டம் துறவுகளோடும் வாழ்ந்த மக்கள் விலங்குகள் வாழும் காடுகளில் தார்ப்பாய்க் கொட்டில்களுக்குள் வாழ்வைத் தகவமைத்துக் கொண்டனர். இது எம் மக்களை பல வகையிலும் இந்த நூற்றாண்டின் மகத்தான மனித வாழ்வை கட்டமைக்கச் செய்துள்ளது. பல்வேறுபட்ட தேசங்களின் போரிலிருந்து ஈழத்தின் போரை வெறுப்பது தவறு. இது ஒரு இனத்தின், ஒரு மக்கட்கூட்டத்தின், நாகரிகத்தை, கலை, கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கத் துடிக்கின்ற ஒரு மனித இனத்தின் வாழ்வைக் காப்பாற்ற, இருப்பைத் தக்கவைக்க முனையும் ஒரு மரபுவழி இனக்குழுவின் இறுதி ஆயுதம்.

"ஈழம்" தமிழ் இனம் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த, வருகின்ற தாய் நிலம். ஆணிவேர் ஆழப்பாய்ந்த அந்நிலத்திலிருந்து அறுத்தெறிய முனைவது எவ்வளவு கயமை நிறைந்தது? கொடியவர்கள் அதைத்தான் செய்தார்கள். "இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடத்தைப் பிடிப்பார்கள்" எனும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஆதிக்குடிகளை அழித்தொழித்துவிட்டு இன்று வந்தேறிகள் வாழ்கிறார்கள். இருப்பினும் இலக்கியத்தினூடே அது தன்னை மீளக் கட்டமைத்து வாருகிறது. அழித்தொழிக்கப்பட்ட இனம் இலக்கியத்தினூடே தன்னை மீளக் கட்டமைத்துக் கொள்வது அவசியத் தேவையும்கூட.

"தமிழ் இலக்கியம்" இன்று மூன்று வகையாக தன்னை கட்டமைத்துள்ளது. முதலாவது தமிழகத்திலிருந்து எழும் இலக்கியம். இரண்டாவது ஈழத்திலிருந்து எழும் இலக்கியம். மூன்றாவது புலம்பெயர் தேசங்களிலிருந்து எழுகின்ற மூன்றாம் இலக்கியம். மூன்றாம் இலக்கியம் பெரும்பாலும் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களாலேயே இயற்றப்படுகின்றது. இவ்வகை இலக்கியம் புனைவுகளுக்கு அப்பாற்பட்ட எதார்த்தமான, வாழ்வியலின் உண்மைகளை திரிபற்று உரைப்பவை. இத்தகைய மூன்றாம் இலக்கியப் பரப்பிலிருந்து வெளிவந்திருக்கிற குணா கவியழகன் அவர்களது "அப்பால் ஒரு நிலம்" நாவல் புறவாழ்வின் எதார்த்தத்தை செப்புகின்ற அற்புதமான போரின் வாழ்விலக்கியம்.

"அப்பால் ஒரு நிலம்" உலக வரைபடத்தில் தமிழகத்தின் கீழ் ஒரு கண்ணீர்த் துளிபோன்ற நில அமைப்பைக் கொண்டது. ஈழத்தின் வரைபட அமைப்பைப் போலவே மக்கள் வாழ்வும் கண்ணீர் சூழ அமையும் என்பதை யூகித்திருக்க முடியாதுதான். ஆனால் விதி அப்படித்தான் அமைத்து வைத்தது. வடக்குக், கிழக்குப் பிரதேசங்களின் வளங்களை சிதைத்தழித்த கொடியவர்களையும், அவற்றையெல்லாம் முறியடித்து வளப்படுத்தி ஆட்சி புரிந்த புலிகள் அமைப்பையும் நாம் மறந்துவிட முடியாது. மறுத்துவிடவும் முடியாது. 1994 இறுதி தொடக்கம் 1996 மத்திய கால இடைவெளியில் யாழ் குடாநாட்டில் பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து பின்பு 1996 செப்டம்பரில் தமிழகத்திற்குள் புலம்பெயர்ந்த இடைவெளிக்குள் அனுபவித்த வேதனைகள் ஏராளம். இக்கால வேதனைகளை மீள வாசிக்கையில்தான் எத்தனை விடயங்களை அசைபோட வைக்கிறது.  இந்தக் கால இடைவெளியில் இயக்கம் சிறுசிறு வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் மொத்தத்தில் யாழ்குடா நாட்டை இராணுவத்திடம் இழந்து பாரிய பின்னடைவைச் சந்தித்தது. போரின் பின்னடைவில் தளபதி தண்டிக்கப்படுவதும், மீளக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை மீட்டுருவாக்கம் செய்வதும். அஅதற்காக எடுக்கப்படுகின்ற சிரத்தைகளும். அதில் ஏற்படும் உயிர்பலிகளும், அவற்றைப் பொருட்படுத்தாது விடுதலை எனும் இலக்கை நோக்கி பயணப்படுவதும் மணியின் பாஷையில் சொல்லப் போனால் ஊசியடிப்பது போல் உள்ளது. எவ்வித போலிகளுமற்று. புலிகளின் அமைப்பில் மிகவும் திறமையும், சாகசமும் மிகுந்த, எதிரிக் குகைக்குள் நுழைந்து உளவறியும் வேவுப் புலிகளின் வாழ்வை இவ்வளவு நுட்பமாக எவராலும் சொல்லிவிட முடியாது.

அடுத்து என்ன நடக்கும், நாளை உயிரோடு இருப்போமா? எதுவும் நிச்சயமாய்த் தெரியாமல் கூடியிருக்கும் சக போராளிகளோடு பன்பலடிப்பதும், பகிர்ந்துண்பதும் என இவ்வளவு எளிமையானவர்களை, இளகிய மனம் படைத்தவர்களை சிங்களமும், உலக வல்லாதிக்கமும் இணைந்து எப்படி அழித்தொழித்தது இவர்களைக் கொடியவர்களென. மாபெரும் தவறை தமிழினத்திற்கு உலக வல்லாதிக்கம் இழைத்திருப்பதை மறந்துவிட முடியாது.

றோமியோ கதாபாத்திரம் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணாவையே நினைவுகூர்கிறது.

துரோகத்தின் விளைவால் முள்ளிவாய்க்காலில் எமது போர் முடிக்கப்பட்டாலும் அது தந்த இரணங்களை மறக்கவியலாது. அப்பால் ஒரு நிலம் எமது அடுத்த தலைமுறைக்கு ஒரு ஆவணம். போலிகளைக் கொண்டு உண்மைகளை மூடிமறைக்க எத்தனிப்போருக்கு மத்தியில் கொரில்லா யுத்தமுறையிலிருந்து மரபுவழி யுத்த முறைக்கு கட்டமைத்து சிறப்புற நிர்வாகம் செய்த உத்தமர்களை இன்னும் ஆவணமாக்க வேண்டும். ஈழ இலக்கிய வெளியில் ஒரு மைல்கல்லாகவே பார்க்கிறேன். இது எமது அடுத்த தலைமுறையினருக்கு போரின் வடிவத்தை மாற்ற, இழந்துபோன அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்யவல்லது. இவற்றோடு நின்றுவிடாமல் எம்மினத்தின் அடையாளத்தை, இன்ப துன்பங்களை, வாழ்வியல்ப் போர்களை ஆவணப்படுத்த வேண்டுமாக.
- சுகன்யா ஞானசூரி.
19/05/2016

Friday, March 11, 2016

ஒரு மழை வந்து போகவேண்டும்- பா.செல்வகுமார்

                        சில கவிதைகளை வாசிக்கும்போது குழந்தைப் பருவத்தின் நினைவுகளைக் கூட்டிவரும், பால்யத்தின் நினைவுகளில் பரவசம் கொள்ளும், காதல் நினைவுகளை கிழர்த்திவரும், ஊரின் நினைவுகளோடு உறவாடும். அந்த மண்ணின் மனத்தினை, மொழியினை பறைசாற்றும். இங்கு தோழர் "பா.செல்வகுமார்" அவர்களின் "ஒரு மழை வந்து போகவேண்டும்" கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்ததும் அத்தனை நினைவுகளோடும் சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அந்த கொடுமைகளின் வலிகளையும் அழைத்து வந்தது. வேறென்னத்தை நான் சொல்லிவிட?

                      கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல்தான் கவிஞரின் சிறு கவிதைகள் கவனம் கொள்கின்றன. சிறுகதை வடிவிலான கவிதையிலும் பொருள் இருக்கிறது. ஓட்டோகிராப் சினிமா பாணியிலான சில கவிதைகள் ஞாபகங்களை உண்டுபண்ணுவதையும் தவிர்க்கவியலவில்லை. இத்தோடு நின்றுவிடாமல் கவிதையின் அடுத்த கட்டத்தை அவர் கைக்கொள்ள வேண்டும். கவிதைகளை நான் குறிப்பிடுவதைக் காட்டிலும் வாங்கி வாசித்துப் பாருங்கள்.

                       மீண்டும் "ஒரு மழை வந்து போகவேண்டும்" சாதியத்தை துடைத்தழித்துப் போக. வாழ்த்துக்கள் தோழரே.
- சுகன்யா ஞானசூரி,

அடையாளம்....

நீங்கள்
வெற்றியும் பெறலாம்
தோல்வியும் தழுவலாம்
ஓட்டுக்கள் பிரிந்தால்
நட்ட நடுவிலும் நிற்கலாம்
பேரம் நிகழ்த்தியபடி.

இம்முறையும்
உங்கள் தேர்தலுக்கு
நாங்கள்
பகடைகளாவதை அறிவோம்.

சாதிய மரணத்துக்காகவும்
மதவெறி மரணத்துக்காகவும்
எதிர் முழக்கமிடும்
எழுத்தர்களும், உழுத்தர்களும்
எமக்காக வரப்போவதில்லை
இன்னும் பல
ரவீந்திரன்கள் மரணித்தாலும்!

இயற்கையாகவும்
செயற்கையாகவும்
நிகழும் உபத்திரவங்களை
எங்கே சொல்ல?
எப்படிச் சொல்ல?

பெருங் குரலெடுத்துக்
கத்தத் திராணியற்று
விசும்பலோடு நகர்த்துகிறோம்
தகரக் கொட்டிலுக்குள்.

அரசின் பதிவேட்டிலும்
இறப்புச் சான்றிதழிலும்
அங்க அடையாளங்களோடு
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...
மிச்சம் மீதியாயிருக்கும் உயிரை
காப்பாற்றப் போராடும்
அடிமையான அகதி நாங்கள்
வேறென்ன அடையாளம் சொல்ல?

- சுகன்யா ஞானசூரி,

Wednesday, March 9, 2016

மணலும் மணல் சரிந்த இடமும் - சுப்ரா


அரசாங்க அதிகாரிகளின் துணையின்றி, அரசியல் ஆதிக்கத்தின் அரவணைப்பின்றி, மக்களின் பொறுப்பற்ற, பேராசை மனங்களின்றி எந்தவொரு தவறும் இயற்கைமீது நிகழ்த்தப்படுவதில்லை. ஆற்றங்கரையோரமாய் வளர்ச்சி பெற்ற மனித நாகரிகம் இன்று ஆற்றின் வளங்களை கொள்ளையடிக்கக் கற்றுக் கொண்டது எந்த வகை நாகரிகத்திடமிருந்து என்பது கேள்வியாகவே உள்ளது.
நம்மைப் பாதுகாக்கும் இயற்கையின் வளங்களை கொள்ளையடிக்கும் செயல், பெற்றவளின் பிறப்புறுப்பை சிதைக்கும் வக்கிரம் பிடித்த பிள்ளையின் செயலுக்கு ஒப்பானதாகவே நான் பார்க்கிறேன்.
கடந்தாண்டு கொட்டித் தீர்த்த பெருமழையில் பல ஆண்டுகளாய் நீர் பாயாத பாலாற்றில் கரை புரண்டோடும் வெள்ளத்தைப் பார்க்க கூடிய கூட்டத்தைப் பார்த்தால் வெறுப்பாகவும், அவமானமாகவும் இருந்தது. அவ்வளவு மணலையும் கொள்ளையடிக்கும்போது எங்கே போனார்கள்? மொத்த நீரும் வீணாய் கடலில் கலந்தது. ஆறு மலடாய்ப் போனது.
இதே நிலைதான் இப்போது பல ஆறுகளுக்கு நிகழந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணியில் நிகழும் மணல் திருட்டையும், அந்த முதலாளிகளின் பேராசையையும், வேவு பார்க்கும் தொழிலாளியின் மன நிலைகளையும், அந்த மண்ணின் மணத்தோடு இம்மாத "புதுப்புனல்" சிற்றிதழில் "மணலும் மணல் சரிந்த இடமும்" எனும் சிறுகதை ஒன்றைப் படைத்திருக்கிறார் கவிஞரும், பரணி இலக்கியக் காலாண்டிதழின் ஆசிரியர்களில் ஒருவருமான சுப்ரா ஐயா அவர்கள்.
ம.ம.ச.இடமும் சரியான தண்டனையை முடிவாய் வழங்கியிருக்கிறது. இயற்கை நமக்களித்த கொடைகளை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாய் கையளிக்கத் தவறியமைக்கு நிச்சயம் அதற்கான தண்டனைகளை ஒட்டுமொத்த சமூகத்துக்குமாக இயற்கை வழங்கும். அப்போதும் நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்போம் உயிரோடு இருந்தால். 

Wednesday, March 2, 2016

நட்சத்திரங்களினூடே...

இரவுப் பாடலை மரித்துவிட்டு
கருநீலப் போர்வைக்குள்
உறங்கும் ஆழ்கடலில்
நடு இரவின் நட்சத்திரங்களை
அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான்.

மெளன மொழியில் அவைகள்
அவனிடத்தில் எதையோ சொல்வதுபோல்
மின்னிக் கொண்டிருக்கின்றன.

ஊமைப் பெண்ணென நிலவும்
அமைதியாய் அழுதபடி
நசுக்கும் பூத முகில்களுக்கிடையில்
எட்டியெட்டிப் பார்க்கிறது.

காற்றின் சலனமற்றுத்
தளும்பும் தோணியொத்த
ஊசலாடும் வாழ்வில்-அவன்
மனமும், மக்கள் வாழ்வும்.

காதுகளை கையால்
பொத்துவதும் எடுப்பதுமாய்
சத்தங்களை ஆய்வு செய்தபடி இருக்கிறான்
ஒரு விசரனைப்போல்.

மூலை முடுக்கெல்லாம்
அழுது குழறிய
முள்ளி வாய்க்காலின்
மரண ஓலங்கள்-அவன்
காதுகளை செவிடாக்கி யிருக்கக்கூடும்....

நள்ளிரவு தாண்டியும்
அவன்
நட்சத்திரங்களை எண்ணுகிறான்
ஊமை நிலவோடு சேர்ந்து...

விடியலுக்குள்
எண்ணிவிடும் முனைப்போடு இருக்கும் 
அவனுக்கு தெரியாமல் இல்லை
வகை தொகை தெரியாமல்
அழிக்கப்பட்ட எம் உறவுகளை
நட்சத்திரங்களினூடே 
எண்ணிவிட முடியாதென்பது.

- சுகன்யா ஞானசூரி.

எம் வாழ்வின் மிச்சமாய்...


அந்த
ஒற்றை மரத்தின்
உச்சக் கொப்பில்தான்
காதல் மொழி கதைத்தபடி
களித்திருந்தன
அத்தேசத்தின் பறவைகள்.
நடுநிசி கடந்து
இரண்டாம் சாமமொன்றில்
வேட்டைக் கூட்டமொன்று
ஊருக்குள் புகுந்திருப்பது தெரிகிறது
மிகச் சமீபமாய்க் கேட்கிறது
சுடுகுழலின் சத்தங்கள்.
காலைக் கதிரவன்
பின்காலைக்குள் செல்லும் வேளை
ஓய்ந்திருந்தது சுடுகுழல் சத்தம்.
கனத்த மௌனத்தின்
பெரு வெளியில்
பதுங்குகுழி தாண்டியும்
பரவிக் கிடந்தன!
முறிந்த மரக் கொப்புகளோடு
பறக்க மறுத்து
சிதறிக் கிடந்த
ஒவ்வோர் இறகினின்றும்
வழிந்தபடி இருக்கிறது
பெருந்துயரம் சுமந்த
வாழ்வின் நிகழ்வொன்று!

- சுகன்யா ஞானசூரி.

Saturday, January 30, 2016

21-ஆம் நூற்றாண்டு வாசிப்பாளனின் பார்வையில் "பொறிகள்" கவிதை கூட்டுத் தொகுப்பு.

பழைய நூல்களை, இதழ்களை வாசிக்கும்போது நாம் அக்காலகட்ட உலகுக்குள் பயணிப்பது, அம் மனிதர்களோடு உரையாடுவது போன்றெல்லாம் உணர்வுகள் எழும். அது ஒரு தனி சுகம். அதை ஒரு வாசிப்பாளனாலும், படைப்பாளியாலும் மட்டுமே உணர்ந்துகொள்ள இயலும்.
30.01.1974 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "பொறிகள்" எனும் கூட்டுக் கவிதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தகைய உணர்வு என்னுள்ளும் எழுந்தது. நூலகம்.ஒர்க் எனும் ஈழத்து படைப்பாளர்களின் நூல்களை பத்திரப்படுத்தும் இணையதளத்தில் மின்னச்சு வடிவில் வாசிக்கக் கிடைத்தது எனக்கு.
சபா.ஜெயராசா, எம்.எச்.எம்.சம்ஸ், திக்குவல்லை.கமால், கல்முனைப் பூபால், முல்லை வீரக்குட்டி, ராதேயன், சண்முகம் சிவலிங்கம், செந்தீரன், அன்பு டீன், சிவம், சௌமினி, பாலமுனை பாருக், ஷெல்லிதாசன், நா.லோகேந்திரலிங்கம், யோனகபுர-ஹம்சா, அன்பு.ஜவகர்சா, நீள்கரை நம்பி, அ.யேசுராசா, ச.வே.பஞ்சாட்சரம், பா.ரத்னசபாபதி ஐயர், ஏ.இக்பால், மு.சடாட்சரன், தா.இராமலிங்கம், மு.பொன்னம்பலம், என்.சண்முகலிங்கன், பேனா.மனோகரன், ஆதவன், வ.ஐ.ச.ஜெயபாலன், எம்.கோவிந்தராஜன், இரா.சுகுணசபேசன், சேரன், டானியல் அன்ரனி, அ.புராந்தகன், சி.குமாரலிங்கம், திருமலை சுந்தா, முருகு, வதிரி சி. ரவீந்திரன், மூதூர் முகைதீன், இரா.நாகராசன், பூநகர் மரியதாஸ், ஜவாத் மரைக்கார், சரவணையூர் சுகந்தன், மற்றும் திக்குவல்லை இனாயாஹ் என நாற்பத்து நான்கு (44) கவிஞர்களின் கவிதைகளோடு 1974 இல் வெளியாகியுள்ளது.
ஈழத்தில் புதுக்கவிதைகளின் தோற்றம் என்பது, தமிழ்நாட்டுக்கு எப்படி ஒரு மகாகவி சுப்பிரமணி பாரதியோ அதுபோல ஈழத்துக்கு மஹாகவி எனும் உரித்திரகுமாரன் அவர்களிடம் இருந்தே தொடங்குகிறது. அறுபதுகளின் துவக்கத்தில் ஈழத்தில் புதுக்கவிதை பல இடையூறுகளுக்கு மத்தியில் மொட்டவிழ்த்துள்ளன.
அறுபதுகளில் இல்லாத அளவுக்கு எழுபதுகளில் புதுக்கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள். இதற்கு "பொறிகள்" தொகுப்பு ஒரு சாட்சி என்றால் அது மிகையாகாது.
வரிகளை மடக்கியும், விடுகதை போட்டும், குறும்பாக எழுதுவதும் புதுக்கவிதையென பலர் நினைப்பதாக "கணையாழி" குறைபட்டுக் கொண்டதாக தொகுப்பாசிரியர் கூறியிருப்பதிலிருந்து சிறப்பான புதுக்கவிஞர்கள் சொற்பமாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. இந்தத் தொகுப்பின் மூலமாக அக்குறையை நிவர்த்தி செய்திட தொகுப்பாசிரியர் முயன்றிருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது. நிற்க.
இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அடையாளப்படுத்துவதை முனைப்பாகக்  கொண்டு எழுதுகிறார்கள். பிற படைப்பாளர்களை அடையாளப்படுத்த மறந்து விடுகிறார்கள். அன்பு.ஜவகர்சா, அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான், முல்லை அமுதன், எஸ்.பொ, அந்தனி ஜீவா, மற்றும் அருணா சுந்தரராசன் போன்றவர்கள் புதிய படைப்பாளர்களையும், சிறந்த படைப்புகளையும் அடையாளப்படுத்துவதில் முழுமூச்சாகக் கொண்டு செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய இளைய தலைமுறை இவர்களிடத்தில் கற்றுக்கொள்ள விடயங்கள் ஏராளம் உள்ளன.
பொறிகள் தொகுப்பில் பலதரப்பட்ட பரிமானங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. முதலாளித்துவம், பிரபுத்துவம், ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் போன்றவற்றைச் சாடி பல கவிதைகள் தெறிக்கின்றன.
".....
நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ
இவைகளெல்லாம் எமது
உலகைவிட்டுப் போகுமட்டும்
ஓயாது எங்கள்
உழைப்பாளர் போராட்டம்!"
                           - முல்லை வீரக்குட்டி.
"எங்கள்
கரங்களிலிருப்பவை
கதிரறுக்கும்
கூர்வாள்தான் - எனினும்
உதிரத்தை உரமாக்கி
உழைப்போரின் உணர்சிகளை
நிதியாக்கிக் கொழுப்போரின்
சிரமறுக்கும்
என்றும் அறி."
                      -ராதேயன்
"கடுங்குளிரைப் போக்க
எங்களிடம்
கந்தைத்துணி கூடஇல்லை;
உள்ளத்தில் பொங்கியெழும்
உணர்ச்சிகளின் அனலால்தான்
குளிர் காய்கின்றோம்."
                           -நா.லோகேந்திரலிங்கம்
என தோட்டத் தொழிலாளர்களின் வழிகளையும் பதிவு செய்ய மறக்கவில்லை பொறிகள்.
சுயநலவாத அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது பொறிகள். இதோ,
"சிங்களமே
ஆளும்மொழி
தேசியமொழி
பிரலாபிக்கிறார்
மந்திரியார்.
ஆனால்
அவரின் புதல்வனோ
ஒக்ஸ்போர்டில்.
                - திக்குவல்லை இனாயாஹ். தமிழை மறந்து ஆங்கில மோகத்தில் திரியும் இன்றைய இளைய தலைமுறைக்கும் இக்கவிதை பொருந்தும்.
"தேடி வந்த
தடுப்பூசியை
தடுத்து....
தசையைத் தேடி
வருமேயன்றி
எலும்பை நாடி
வருமா கிருமிகள்....?
என்று
எலும்புடல் கேட்டதும்
ஊசி
தலை குனிந்தது!
                         - அன்பு ஜவகர்சா
விஞ்ஞானத்தையும், ததுவார்ததையும் கலந்து ஒரு உழைப்பாளியின் உடலோடு நிதர்சனமாக படைத்திருக்கிறார். இன்றும் இந்நிலை தொடர்வது நோக்கத்தக்கது.
"ஆயிரம்
அப்ளிக்கேஷன்கள் போட்டு
அவரிடமும் இவரிடமும்
சிபாரிசுக்காக அலைந்து
இறுதியில்....
கைகளை நம்பிக்
களத்தில் இறங்கியபோது...
வெற்றித் திருமகள்
புன்னகை செய்தாள்.
                             - பேனா.மனோகரன்
இக்கவிதையைப் படிக்கையில் வேலையில்லாப் பட்டதாரிகளே என் நினைவில் எழுகிறார்கள். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என மூதறிஞர்கள் சொன்ன இந்த வார்த்தை உண்மையிலும் உண்மைதான்.
[ஐயா அன்பு.ஜவகர்சா அவர்களோடு முகநூல் வழியே சிலமுறை உரையாடியிருக்கிறேன். ஐயா பேனா.மனோகரன் அவர்களோடு ஒருமுறை நேரிலும் பலமுறை முகநூல் வழியேயும் உரையாடியிருக்கிறேன் என்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.]
அறவழிப் போராட்டம் முடிவுற்று ஆயுதப் போராட்டம் முளைவிட்ட காலம் என்பதால் போர் வலிகள் சுமந்து கவிதைகள் இதில் இல்லை.
தெறித்த பொறிகளின் தணல்கள் அணைந்தாலும் அவை கொடுத்த வலிகளும், தடயங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நூல்: பொறிகள் - கூட்டு கவிதைத் தொகுப்பு
தொகுப்பாசிரியர்: அன்பு.ஜவகர்சா
வெளியீடு: குகன் அச்சகம், தெல்லிப்பளை, ஈழம்.



Wednesday, January 20, 2016

ஒரு பழைய கட்டுரையும் இன்றைய உலகத்தின் நிலையும்.....

"வெகு மக்களிடம் ஓட்டு வாங்கித்தான் இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால், அந்த மகா பெரிய ஓட்டுக்களை வாங்குவதற்கு ஆகிற மகா மகா செலவுகளை மறைமுகமாக ஏற்பது இந்த சர்வதேச சதி ஸ்தாபனம்தான்(பன்னாட்டு நிதி நிறுவனம்)."

"ஐரோப்பாவின் புதிய படையெடுப்பு" எனும் தலைப்பில் 1994 பிப்ரவரி "சாரதா" இதழில் "பெரியார் தாசன்" அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று வாசித்தேன். இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதார சுரண்டல் குறித்து 20 வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு தீர்க்கமாக எழுதியுள்ளார்.

விவசாயம், மருத்துவம், கல்வி போன்றவற்றில் நிகழும் சுரண்டல் அரசியலுக்கு வளர்ந்த நாடுகள் தங்களுக்குள் ஜி-7 அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஊட்டத்தைக் கொடுப்பதுபோல கொடுத்து பின்னர் மொத்தமாய் அவர்களது இரத்தத்தையே சுரண்டுவதுதான் இதன் நோக்கம் எனவும், அதற்காக உருவாக்கப்பட்டதே "டங்கல்" எனும் ஒப்பந்தம் என்பதையும் தொலைநோக்குப் பார்வையோடு எழுதியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை இந்தியாவில் முதலில் வேகமாக அமல்படுத்தியது தமிழ்நாடு (தீமைகளை முன்னெடுத்துச் செல்வதில் திராவிடக் கட்சிகளை மிஞ்ச முடியாதுதான்) என்பதையும், இதனால் அன்றைய ஆண்டில் அரசு வேலைக்கு ஆள் எடுப்பது இல்லை என்று செய்தித் தாளின் முதல் பக்கத்தில் அறிக்கை விட்டதையும், போலீஸ் மற்றும் இராணுவத்துக்கு மட்டும்  அதிகமாக ஆள் எடுக்கப்பட்டதையும், இவர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடக்க வழி செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆள்குறைப்பு செய்வதில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு இந்த டங்கல் ஒப்பந்தம் பெரிதும் உதவியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கச் சூழலில் உலகம் சிக்கித் தவிப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். உற்பத்திகளையெல்லாம் சுரண்டிவிட்டதை நம் ஒவ்வொரு விவசாய மண்ணையும் பறிகொடுத்ததில் உணர முடிகிறது. வளர்ந்த நாடுகளோடு வளரும் நாடுகள் செய்கின்ற ஒப்பந்தங்களின் பின்னணியில் இப்படியான அரசியல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் மேலெழுவதை தவிர்க்க இயலாது.

வாய்ப்பு இருப்பவர்கள் வாசித்துப் பாருங்கள்.

(இந்த இதழை மின்னச்சு வடிவில் எனக்கு அனுப்பி உதவிய
கிருத்து. இராமதாசு ஐயா துபாய்(பெரம்பலூர்) அவர்களுக்கு எனது நன்றிகள்.......)

Friday, January 15, 2016

அன்றைய ஒரு பொங்கல் நாளில்.....

அன்றைய ஒரு
பொங்கல் நாளில்தான்
செங்கரும்புகள்
எமக்குக் கசந்தது.
அன்றைய நாளின்
உதயசூரியன் கூட
பிரகாசமாய் எழும்பவில்லை.
எங்கள் சனங்களெல்லாம்
ஆரவாரமாய் எழும்பிவிட்டார்கள்...
யுத்தத்தின் மத்தியிலும் - எமக்கு
இனிப்பாகவே இருந்தது
ஏனெனில் இது
தமிழர் திருநாளல்லவா?
திட்டமிட்டே மறக்கடிக்கப்படுகிறது
தமிழர் திருநாட்கள்
எதிரிகளால் இம்மண்ணில்!
அடுப்பின் புகை
எழும் முன்பாகவே
கரும் புகையொன்று
எழுந்து மண்டியது
பெரும் சத்தத்துடன்.
வீசிச் சென்ற
விமானத்தின் ஓசை
அடங்கிய பின்பும்
ஆதவன் வரவேயில்லை!
அழும் குரல்கள்
மெல்ல உயர்கிறது!
சிதறிப் போன
பொங்கல்ப் பானையருகே
வீழ்ந்துகிடக்கிறாள் பாட்டி....
துண்டாகிய தலையோடு
மண்ணை முத்தமிட்டபடி.
- சுகன்யா ஞானசூரி.
15.01.20016


துளித் துளியாய்....


@
யாருமற்ற கானகத்தில்
பிரசவம்
துளிர்க்கும் விதைகள்!

@
நீர் நிலையெங்கும்
நீராடும் தேவதை
நிலா!

@
தகிக்கும் வெப்பம்
குளிக்க முடியவில்லை
கானல் நீர்!

@
வண்ணமோ கருமை
எண்ணமோ மேன்மை
கரைந்துண்ணும் காக்கை!

@
திட்டமிட்ட வாழ்வு
உணர்த்திச் செல்கிறது
குளிர்கால எறும்பு!

@
சுமையெனக் கருதாது
மகிழ்வோடு
பனியைத் தாங்கும் புற்கள்!

@
இரத்தம் தோய்ந்த நாப்கின்
பக்குவமாய் வீசுகிறாள்
செவிலி!

@
என்ன சொல்லியிருக்கும் நதி?
வெட்கித்து நிற்கின்றன
கரையோர நாணல்!
@
புகழ்ந்தபடி செல்கின்றனவோ நதிகள்?
தலை சாய்ந்தவண்ணம் வெட்கத்தில்
கரையோர நாணல்!
- சுகன்யா ஞானசூரி.

அக்கினிக் குஞ்சு...


அக்கினிக் குஞ்சென
உயிர்தெழ விரும்பேன்.
இப் போரில் -நான்
மரிக்க நேர்ந்தால்
என்
ஆயுதங்களும் பாதணிகளும்
என்னிலும் ஆகச்சிறந்த
ஓர் போர்வீரனிடம்
கை யளிக்கப்படக்கூடும்!

################################

கொதிக்கும்
எண்ணைக் கொப்பரையினின்று
உயிர் பெற்றெழ
பிரயத்தனப்பட மாட்டேன்.....
மரிக்கும் பொழுது
விதைத்த விதைகள்
விருட்சம் பெறும்
நாளைய பொழுதில் - எம்
தேசம் மலரும்.

Wednesday, January 6, 2016

பிரமிள் 19 வது நினைவுநாள்.....

இன்றைய தினம் படிமக் கவி பிரமிள் நினைவு நாள்(சனவரி-06-1997)....
ஈழத்தில் பிறந்து தமிழகத்தில் தன் விமர்சனத்தாலும், படிமக் கவிதைகளாலும் சிறந்து விளங்கியவர். நேர்கொண்ட பேச்சும், எதற்கும் வளைந்து கொடுக்காத மனத் திடமும் பிரமிளுக்கே உரித்தானது. தமிழ்ப் படைப்புலகம் இப்படியான படைப்பாளிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தது துரதிஷ்டமே. ஆனால் இன்றைய இளைய தலைமுறை உண்மைகளைத் தேடிக் கண்டறிந்து கொண்டாடுவது மகிழ்ச்சியான விசயம். அந்தவகையில் பிரமிளை மீட்டுருவாக்கம் கொள்ளவைத்தவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.... அத்தகைய அற்புதமான படைப்பாளிக்கு இன்றைய நாளில் என் நினைவஞ்சலிகளைச் செலுத்துகின்றேன்....
- சுகன்யா ஞானசூரி,
06/01/2016.

Monday, January 4, 2016

Earth and Ashes ஆப்கன் திரைப்படம் - என் அனுபவம்

புதுக்கோட்டை பிலிம் சொசைட்டி அமைப்பினர், கந்தர்வன் அரங்கத்தில் (புதுகை கம்யுனிஷ்ட் அலுவலகத்தில்) நேற்றைய தினம் (03.01.2016) மாலையில் ஒரு திரைப்படத்தை திரையிட்டனர்.

தஷ்தாகிர் (Dastaguir) எனும் பெரியவர், யாஸின் (Yassin) எனும் காது கேளாத சிறுவன், ஷைநாப் (zaynab) எனும் பெண் (தஷ்தாகிரின் மருமகள்) மொசாத் (Mosad) வெளியூர் சுரங்கம் ஒன்றில் வேலை செய்யும் தஷ்தாகிரின் மகன். பாலைவனத்தின் புழுதிகளோடு யுத்தத்தின் பின்னான வலிகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் சுமந்தபடி பயணிக்கிறது 2004 ல் அடிக் ரஹீமி (Atiq Rahimi) இயக்கத்தில் வெளியான எர்த் அண்ட் அஷெஸ் (Earth and Ashes) எனும் ஆப்கன் திரைப்படம்.
எரிக் குய்ச்சர்ட் (Eric Guichard) இன் ஒளிப்பதிவு ஆப்கானிஸ்தானின் இதுவரை பார்க்காத பாலைவன மலைகளையும், புழுதிகளை கிளப்பிச் செல்லுகின்ற பயணங்களையும், ஆள் அரவமற்ற பகுதிகளையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற சில சிதிலமடைந்த வீடுகளையும், கருமை சூழ்ந்த சுரங்கத்தின் அருகில் இறுதியாக பசுமையான சில காட்சிகளையும் எதார்த்தமாக படம் பிடித்திருக்கிறார்.
யுத்தத்திற்கு முன்னால் வரை காது கேட்கும் நிலையில் இருந்த யாசின் பின்பு ஒவ்வொரு இடத்திலும் சப்தங்களை கேட்க முயற்சித்த வண்ணம் இருக்கிறான். குழந்தைகள் எப்போதும் தம் இயல்பிலிருந்து மாறுவதே இல்லை, சிறுமியோடு  பகிர்ந்து உண்பதிலும், ஒரு ஆடுடன் விளையாடுவதிலும் (மிதிவெடியில் சிக்கி இறந்து போகிறது அந்த ஆடு), ராட்டில் சுற்றுவது என குழந்தை குழந்தையாகவே இருக்கிறது என படம் முக்கால்வாசியும் வியாபிக்கிறான்.
தஷ்தாகிரின் நினைவுகளில், குண்டு விழுந்த வீட்டுக்குள் மருமகள் ஷைநாப் நிர்வாணத்தோடு எரிந்து இறப்பது அடிக்கடி வந்து துன்பத்தைத் தருகிறது. ஒவ்வொரு முறையும் அவர் அவளது நிர்வாணத்தை மறைக்க துணியோடு ஓடுகின்றார். சுரங்கத்தில் வேலை செய்யும் மகனிடத்தில் அவன் மனைவியும், சகோதரியும், அம்மாவும் இறந்துவிட்டதையும், மகனுக்கு கேட்கும் திறன் போனதையும் சொல்வதற்காக செல்வதும், இறுதிவரை மகனைப் பாராமல் அவன் பரிசாகக் கொடுத்த அந்த புகையிலைப்பொடி வைக்கும் அழகிய டப்பி ஒன்றை அங்குள்ள அலுவலரிடத்தில் கொடுத்து நாங்கள் உயிரோடு இருப்பதை என் மகன் நம்புவான் என கூறிவிட்டு வேறொருவரின் பொறுப்பில் விட்டுவிட்டு வந்துவிட்ட பேரனைக் காண புறப்படுவதோடு ஒரு வலி நிறைந்த கவிதையென முடிகிறது படம்.

யுத்தங்கள் எப்போதுமே பெண்களையும், குழந்தைகளையுமே பெரிதும் பாதிக்கின்றது என்பதை மீண்டும் இப்படம் உணர்த்திச் செல்கிறது. இரத்தமும் சதையுமாக அந்த மக்களையும் மண்ணையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. எனக்கு ஒவ்வொரு காட்சியிலும் எமது ஈழத்தின் போர்க்களத்தையும், போரின் பின்னான நிகழ்வுகளையும், வலிகளையும், தாக்கதையுமே இப்படம் என்னுள் ஏற்படுத்தியது.
விரசத்தை உண்டுபண்ணும் துக்கடாத் துணிகளோடு நாலு பாட்டும், எதார்த்தத்தை மீறிய நாலு சண்டையும் வைத்து (காக்கா முட்டை போன்ற படங்கள் தவிர்த்து) படம் எடுக்கின்ற தமிழ்ச் சினிமா எப்போது தன்னை மாற்றிக்கொள்ளும்? கதைவளம் கொட்டிக் கிடக்கும் தமிழ்ச் சினிமாவில் பேய்ப் படங்களும், நகைச்சுவை எனும் பெயரில் அபத்தங்களைக் கொண்ட்டாடுவதும், பணம் சம்பாதிக்கும் விதமாக ஒரே நடிகர், நடிககைகளைக் கொண்டாடுவதும்தான் அடையாளமா?
2004 ல் கேன்ஸ் திரை விழாவில் திரையிடப்பட்ட படம்.
2005 ல் சான்சிபர் (zanziber international film festival) திரை விழாவில் கோல்டன் தோவ் (Golden Dhow) விருது பெற்ற திரைப்படம்.

ஐயா இளங்கோ அவர்களும், புதுகை செல்வா அவர்களும் இந்த விழாவினை ஒருங்கிணைத்தனர். கவிஞர்கள் மு.கீதா அம்மா, வைகறை அண்ணன், சிறுகதையாளர் அண்டனூர் சுரா, விமர்சகர்கள் ஸ்டாலின், சுரேஷ் மான்யா, பத்திரிக்கையாளர் புதுகை மதியழகன் போன்றவர்களோடு இன்னும் பெயர் தெரியாத பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் என்னையும் கலந்துகொள்ள வைத்து இந்த திரைப்படம் குறித்து பேசும்படி பணித்த ஐயா இளங்கோ அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் இதுபோன்ற சிறந்த திரைப்படங்களை தமிழ் மொழியில் திரையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன்
சுகன்யா ஞானசூரி.