தினசரி செய்தித் தாள்களை விரித்தாலே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை, குழந்தைகள் கடத்தல், பெண் கற்பழித்துக் கொலை, குடும்பத் தகராறால் கணவன் மனைவி தற்கொலை, பக்கத்து வீட்டு பெரியவரால் சிறுமி பாலியல் பலாத்காரம், முதியோர் இல்லங்கள் அதிகரிப்பு மற்றும் கொள்ளையென அன்றாட வேலைபோல் நடந்தவண்ணம் இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? யாரும் சிந்திப்பதற்கு நேரம் இன்றி (நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டு) பணம் எனும் ஒற்றைப் புள்ளியை நோக்கி அங்கலாய்த்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் இதுபோன்ற நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் நிகழ்ந்தன. ஆனால் இன்று அப்படியா? இந்த செய்திகள் வராத செய்தித் தாள்களின் விற்பனை படுத்துவிடும் என்பதே உண்மை. ஊடகங்களும் தம் பங்குக்கு குடும்பத்தின் மாண்பை வளர்க்காமல் நடு வீட்டில் சிதைக்கும் வேலைகளையே செய்து கொண்டிருக்கிறது. குடும்பத்தின் ஸ்திரத்தை நிலை நிறுத்த வேண்டிய கனவான்களோ மதுபானக் கடைகளில் மயங்கிக் கிடக்கிறார்கள்.
கூட்டுக் குடும்பம் எனும் கூடு சிதைவுற்றதின் விளைவு...... மேற்சொன்ன காரணங்கள் உருவாக்கம்.....
வரலாறு நெடுகிலும் கூட்டுக் குடும்ப அமைப்பையே கொண்டு வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் தனிக் குடும்ப அமைப்பு வெள்ளையர் ஆதிக்கத்துக்குப் பின்னாலான நவீன காலத்தில், அதிலும் குறிப்பாக நகர்மயமான சமூகத்தில்தான் ஏற்பட்டது எனச் சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்,(பொ. வேல்சாமி, காலச்சுவடு). தமிழ்ச் சமூகம் மட்டுமே பல்லாயிரம் ஆண்டுகளாக கூட்டுக் குடும்பத்தை கட்டிக் காத்து வருகிறது. மேலை நாட்டு நாகரிக மோகத்தில் நாம் நம்மைத் தொலைத்து விட்டதின் விளைவு கூட்டு வாழ்வு அழிவின் விளிம்பில். வெளிநாடுகளில் 80 விழுக்காடுகளுக்கும் அதிகமாக கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்து விட்டதாகவும், தனிக்குடும்பத்தில் கவனிப்பாரற்று இருக்கும் சிறார்கள் பயங்கரவாத செயல்களுக்கு தம்மை இட்டுச் செல்வதாகவும் ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தருகின்றன.
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென" நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்? உணவுச் சங்கிலியில் எதாவது ஒன்றில் பழுது ஏற்பட்டாலும் சூழலியல் மாற்றம் ஏற்படும் என்பதைப் படித்தவர்கள் கூட்டுக் குடும்பச் சங்கிலியை உடைத்துவிட்டுச் செல்வது சரியல்ல. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என தமிழ் சமூகம் உறவுகளால் பிணைக்கப்பட்டது. அதனால்தான் "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்", மாமன் உடையான் மலைக்கு அஞ்சான்" போன்ற பல பொன்மொழிகளை வழங்கிச் சென்றார்கள் நம் முன்னோர்கள்.
குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை அலசி ஆராய்ந்து சொல்லிப் புரியவைத்து விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். சிறு சண்டைக்குக் கூட கூட்டுக் குடும்ப வாழ்வை விட்டு விலகுவது அபத்தம். சிறு சிறு சங்கடம் இருந்தாலும் கூட்டுக் குடும்பத்தை காப்பாற்றி வந்த என் பாட்டியின் மரணத்துக்குப் பின்பு எல்லாம் தலைகீழானது. பாட்டியின் மரணம் கூட்டுக் குடும்ப வாழ்வை வலியுறுத்தியது.
கூட்டுக் குடும்பச் சிதைவுகளால் பெரியவர்களிடமிருந்து சிறுவர்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல போதனைகளும், நெறிமுறைகளும் கிடைப்பதில்லை. அதனால்தான் இன்றைய தலைமுறை பாட்டி மடியில் படுத்து கதை கேட்டேன் என்றோ நிலாச் சோறு உண்டேன் என்றோ சொல்லமுடிவதில்லை. அடுத்து கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் தனிக் குடித்தனத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறுசிறு உரசல்களுக்கு சரியான ஆலோசனைகளும், ஆதரவும் கிடைக்காமல் விவாகரத்து செய்வதும், மனது உடைந்து தற்கொலை செய்வதும் அதிகம் நிகழ்கிறது. "கிராமப் புறங்களில் விவாகரத்து குறைவாய் இருப்பதற்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையும், மனம் விட்டுப் பேசுவதற்கு அவர்களுக்கு வாய்க்கிற சந்தர்ப்பங்களுமே காரணமாகி விடுகின்றன,(சேவியர், தமிழோசை-களஞ்சியம்). உண்மைதானே?
நகர, நரக வாழ்வில் கவனிக்க முடியாத பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது அதிகரித்து வருகிறது. மேலை நாட்டவர்கள் இப்போது நமக்கு நேர் எதிராக மாறி வருகிறார்கள்.
"காசோலையோடு
கால்வாசியாவது
அன்பையும் சேர்த்தனுப்பு
மகனே!
ஏக்கத்தோடு அன்னை
முதியோர் இல்லத்தில்!"
- ஈழக்கவிதாசன்.
கருவில் சுமந்ததற்கு தண்டனையா? கடைசிக் காலங்களில் இன்பமாய் வாழ வேண்டியவர்கள் இப்படி துயருற்று இறப்பதுதான் சரியா? இதற்குத்தான் தவமிருந்து பெற்றார்களா? தனிமரம் ஒருபோதும் தோப்பாகாது என்பதை இன்றைய தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும்.
நம் தமிழ்ச் சமூகம் உயிர்ப்புற கூட்டுக் குடும்ப வாழ்வை நாம் கட்டியமைத்துக் கொண்டாட வேண்டும். வாரத்திலோ, மாத்தில் ஒரு நாளோ அல்லது பண்டிகை நாட்களிலோ நாம் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தி உணர்வுகளை பகிர்ந்து கொண்டாலே போதும் இன்றைக்கு நாம் உருவாக்கி வைத்திருக்கும் நவீன உலகில்.
மே மாதம் 15ம் நாளை உலகமே சர்வதேச குடும்ப தினமாக கொண்டாடுகிறது. கூட்டுக் குடும்பமாய் நாம் இருந்தவரையில் இதுபோன்ற தினங்கள் இல்லையே. பிறகெப்படி? குடும்ப தினம் கொண்டாடும் நாம் கூட்டுக் குடும்பத்தைக் கொண்டாடுவது எப்போது?
(நம் குடும்பம் அக்டோபர் 2015 இதழில் வெளியான எனது கட்டுரை)
No comments:
Post a Comment