Sunday, October 25, 2015

லிமரைக்கூ கவிதைகள் நிரல்-1


1.
மங்கை ஒருத்தி வந்தாள்
மைவிழியில் கிள்ளை மொழியில் காதல்
தீபம் ஏற்றிச் சென்றாள்!
2.
மங்கையே மணாளனின் பாக்கியம்
சொல்லிவிட்டுச் சென்றவருக்கு இதுவரை அமையாததால்
அவருக்கு இதுவெறும் வாக்கியம்!
3.
அள்ள அள்ள குறையவில்லை
அமுதமாய் அட்சயப் பாத்திரத்தில்
காதல் தவிர வேறில்லை!
4.
லாரியில் ஆற்று மணல்
ஈரம் பொய்த்த பூமியில்
வெய்யிலோ கொளுத்தும் தணல்!
5.
விவசாயி வயிற்றில் சுருக்கம்
அண்டை மாநில தண்ணீர்ப் பிணக்கால்
காத்திருக்கும் நிலங்களுக்கு வருத்தம்!
6.
வெடித்தது நிலத்தில் கோடு
தண்ணீரற்று காய்ந்த பயிரை
மேய்கிறது ஆடு, மாடு!
7.
மறுக்கப்பட்டது திருமண அர்ச்சனை
சொன்னபடி செய்யவில்லையாம் அந்த
பூ மகளுக்கான தட்சனை!
8.
நொந்ததாய்த் தெரியவில்லை புத்தன்
புன்னகைத்தபடி இரசிக்கிறான் நிழலில் அமர்ந்து
இரத்தச் சகதியில் தமிழன்!
9.
எரிந்தது சாமி தேரில்
சாதிச் சண்டையில் சிக்குண்டு
அடித்துக் கொண்ட ஊரில்!
10.
காசநோய் வருமாம் காற்றில்
பொறுப்பாய் இருந்து தடுத்திட கண்ட
இடத்தில் துப்பாதீர் எச்சில்!
11.
முளைத்தது செல்போன் கோபுரம்
உடைந்தது மெல்லிதய சிட்டுக்
குருவிகளின் வாழ்க்கைச் சக்கரம்!
12.
ஆற்றில் அள்ளப்பட்ட மணல்
வெளிக் கொணர்ந்தது; புணர்ந்து புதைத்த
ஏழைப் பெண்ணின் உடல்!
13.
நடக்கிறது முதலீட்டாளர் மாநாடு
பசி பட்டினி கருகிய நிலமென
உழவன் கையில் திருவோடு!
14.
கடலுக்குப் போன மீனவர்
கரை ஒதுங்கினர் படகோடு பிணமாக
தொடர் நிகல்வாக்குகிறார் சிங்களவர்!
15.
கல்லுக்குள் ஈரம்
பறவையிட்ட எச்சத்தால் கட்டிடத்தில்
முளைத்தது தாவரம்!
16.
தேரோடு எரிந்தது சேரி
சாதிக்குப் பயந்து தானும்
எரிந்தாள் ஆத்தா கருமாரி!
17.
காய்ந்த குளத்தோரம்
செழிப்பாய் வளர்ந்து நிற்கிறது
கருவை மரம்!
18.
பனை ஓலையில் வீடுகள்
கூட்டாய் வாழச் சொல்கிறது
தூக்கணாங் குருவிக் கூடுகள்!
19.
முளைத்தன விதிமீறிய கட்டிடங்கள்
சுமை தாங்காது சரிந்த மலையில்
புதையுண்டு கிடக்கின்றன சடலங்கள்!
20.
நிகழ்கின்றன தொடர்கதையாய் படுகொலைகள்
மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு
கண்துடைப்பாய் நீளும் விசாரணைகள்!
21.
புதனுக்குக் காணிக்கையா ஈழம்?
மீண்டெழும் இனம் தமிழினம் மறந்து
கெக்கலிக்கிறது கூட்டாய்ச் சிங்களம்!
22.
அளவோடு உண்பீர் விருந்தை
மறப்பின் அனுதினம் அவதிகள் பெற்று
அன்றாடம் கைக்கொள்வீர் மருந்தை!
23.
நுளம்புக் கடியோ தொல்லை
மலேரியா, டெங்கு நீளும் வியாதிகள்
போதிய விழிப்புணர்வு இல்லை!

- சுகன்யா ஞானசூரி,

No comments:

Post a Comment