Showing posts with label பயண அனுபவம். Show all posts
Showing posts with label பயண அனுபவம். Show all posts

Monday, March 20, 2023

கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்


 

"அந்தரம்" கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்.

- சுகன்யா ஞானசூரி.


அம்மா என்கிற அதிகாரத்திடம் அழுது பால் குடித்தபடியால் வேடிக்கை பார்ப்பதற்கான சத்து இன்னும் இந்த உடம்பில் இருக்கிறது.


ஒரு சாமான்ய மனித வாழ்வின் அலைக்கழிப்பு என்பது அவனது/ளது சொந்த தேசத்தில் நடப்பதாக இருப்பின் ஏதோவொரு வகையில் தீர்வை எட்டிவிடும் அல்லது குறைந்தபட்சம் சமரசத்திற்குள்ளாவது கொண்டுவரப்படும். இவை இரண்டுக்குள்ளும் அடக்க முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடு சொந்த தேசத்தில் இல்லாமல் அந்நிய நிலமொன்றில் அந்தரித்து நிற்கும் தமிழ் அகதிகளின் வாழ்வே அந்தரம். 


என்னால் உரைநடையில் சொல்ல முடியாமலே இருந்த என் அந்தரத்தை கவிதை எனும் வடிவம் கொண்டு வெளிக்கொண்டு வந்தேன். இது ஒரு வகையான அதிகாரத்தின் அடக்குமுறைக்கு கீழ்படியும் செயல் என்பதைக் காட்டிலும் தப்பித்தல் என்றே சொல்லவேண்டும். எது எப்படி இருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக தயக்கமின்றி கால் நூற்றாண்டு தமிழர்களின் அகதி வாழ்வை ஒரு தன்வரலாற்றுப் புதினமாக்கி வழங்கியுள்ளார் தோழர் தொ. பத்திநாதன். 


இத்தனை ஆண்டுகால அகதி வாழ்வில் என்ன வகையான சொத்துக்களை சேர்க்க முடிந்தது? ஆடம்பரம் சுகபோக வாழ்க்கை? ஒருவேளை உணவைத்தானும் கடன்காரர் ஆக்கினை இன்றி உண்ண முடிந்ததா? படித்த படிப்பிற்கேற்ற வேலை? வேலைக்கேற்ற ஊதியம்? ஒருமுறையாவது அதிகாரிகளிடம் இழந்துபோகாத தன்மானம்? எந்த ஒன்றிற்கும் அகதியால் பதில் சொல்லிவிட முடியாதபடிக்கு இந்த வாழ்க்கை தொலைக்கப்பட்டு விட்டது என்பதை விடவும் தமிழ் அகதிகள் தமிழ் அதிகாரிகளின் சப்பாத்துக்களின் கீழ் நசுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே முரண் நகையானது. 



பெண்மையை, பெண் சுதந்திரத்தைப் பேசாத எந்தவொரு படைப்பும் அத்துணை கலைத்தன்மை கொண்டதாக அமைந்துவிடாது. சாந்தி எனும் மையப் பாத்திரத்தின் நகர்வினூடாக பல்வேறுபட்ட முகாம் பெண்களையும் முகாம்களை ஒட்டியுள்ள ஊர்ப் பெண்களையும் அவர்களின் பார்வையில் முகாம் எனும் திறந்தவெளிச் சிறைச்சாலையின் பன்முகப் பார்வைகளை அவதானமாக கையாண்டுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்ற வார்த்தையைப் போலத்தான் இருபக்கமும் கூர்மையுள்ள கத்தியின் மீது நடப்பதைப் போன்ற பதற்றமே அந்தரத்தினை வாசித்து முடிக்கும்வரை. 


இருபக்க உறவுகளுக்குள்ளும் பார்வைக் கோணல்கள் இருக்கிறது. அது சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்பட்டும் இருக்கிறது. இப்போதும் வெளிப்பட்டவண்ணம் இருப்பதையும் மறுக்க முடியாது. ராஜீவ்காந்தி கொலைக்கு முன் ராஜீவ்காந்தி கொலைக்குப் பின் என தமிழகத்தில் ஈழ அகதிகள் வரையறுத்துப் பார்க்கப்படுவதும் கண்கூடு. இன்றைக்கு எவரும் இல்லை ஆனால் அவலங்களைச் சுமப்பது என்னவோ சாமான்ய அகதிகள்தான். நரம்பில்லாத நாவுக்குத்தான் எத்தனை தடித்த சொற்களை வீசி எறிகிறது எளிதில். அது மனதில் ஆறாது அந்தரித்து நிற்கிறது மனம் நொந்தபடி. 


சாதி சமயம் இரண்டும் மனிதர்களை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும். அதுபோல் வஸ்துகளின் பழக்கவழக்கங்களும், கொலைக் குற்றங்களும்,  முகாம் தலைவர் எனும் போதையும் அதிகாரிகளிடம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கும் கேவலமான செயலையும் செய்யத் தயங்காது என்பதை கந்தசாமி, முருகானந்தம் மாந்தர்கள் வழி எடுத்தியம்பிள்ளார். அதேபோல் கல்வியின் பெயரால் தொண்டு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் செய்த செய்கின்ற மோசடிகளும் கொஞ்சநஞ்சமல்ல. அகதிகளின் பெயரால் அவர்கள் பரலோகத்தில் நித்தியமடைவார்களாக ஆமென். 


அந்தரம் புதினத்தில் கதைசொல்லியாக பத்திநாதனே பயணிக்கிறார். தான் பார்த்த காட்சிகளை, தான் வாழ்ந்த வாழ்வை அவர் சொல்லிச் செல்வதைப் போலவே அமைத்துள்ளார். இங்கே ஜிகினா வேலைகளுக்கு இடமின்றி உள்ளதை உள்ளபடியே சொல்லியிருப்பதால் சக அகதியாக அவருக்கு என் ராயல் சல்யூட். மற்றபடி பெயர் மாற்றங்களும், கட்டிட மாற்றங்களும் நிகழ்ந்துவிடுவதால் மட்டும் எதுவும் உடனடியாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புலனாய்வு முற்றாக நீக்கப்பட்டு சுதந்திரமான வாழ்க்கை வழங்கப்பட்டால் மட்டுமே அந்தரித்து நிற்கும் மனங்களில் ஆறுதல் ஏற்படும். 


அவர் மன்னாரில் நின்றுகொண்டு கடந்துவந்த இந்த வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். நான் உள்ளுக்குள் இருந்துகொண்டே வாசித்து நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்.


"அந்தரம்" தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளின் கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் ஒரு காட்சிப் படம். 


ஆசிரியர்: தொ. பத்திநாதன் 

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

விலை: ₹250.

Tuesday, April 28, 2020

முன் '96' பின் (நினைவோடைக் குறிப்புகள்)

முன் '96' பின் 
(நினைவோடைக் குறிப்புகள்)



பகுதி-1

"96" எனும் திரைப்படம் பலருக்கும் ஒரு நினைவினை ஆழ்மனதிலிருந்து கிளறிவிட்டு பல ரைட்டப்புகளை எழுத வைத்திருக்கிறது. சிலரது ரைட்டப் சிரிப்பாக இருந்தது. சிலரது ஒருதலை ராகமாக இருந்தது. 96 ஐ முன்வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரைட்டப் முகநூல், டிவிட்டர் என எழுதியதை வாசித்தபோது எனக்கும் சிந்தையில் ஒரு பொறி தட்டியது. 96 படம் அல்ல அதாவது 1996 எனது வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திருப்புமுனையாக அமைந்த ஆண்டு. ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு புலம்பெயர்ந்த ஆண்டு. அதனால்தான் நான் இந்த 96ஐ 96 க்கு முன் பின் என இரண்டாக பிரித்து எனது நினைவுக் குறிப்புகளை எழுதினால் என்ன என்று தோன்றியது. 

நினைவுக் குறிப்புகள் எழுதுவதற்கு நீ நிறைய அனுபவங்களை பெற்றுவிட்ட வயோதிபனா என என் உள்மனம் என்னை நக்கலாக வினவினாலும் கொரோனாவின் கொடுங்காலத்தில் நாளை என்பது நிச்சயமற்று இருப்பதால் கிடைத்த அனுபவங்களை குறிப்புகளாக தொகுத்து எனது வலையில் ஏற்றி வைக்க முடிவு செய்தேன். 2015 ல் இருந்து வலைப்பதிவில் எழுதத் துவங்கிய நான் இதுவரை 89 பதிவுகளை மட்டுமே பதிவேற்றியிருக்கிறேன். இனிமேல் நானும் புதுமையாக எழுத வேண்டும் எனும் முயற்சியில் இருந்தபோதுதான் இப்படி ஒன்றை நான் எழுதினால் என்ன என்ற கேள்வி முன்வந்து நின்றது. அந்தக் கேள்வியின் செயல்வடிவே இந்த நினைவோடைக் குறிப்புகள். 

நினைவோடைக் குறிப்புகள் எழுதும்போது சில வேண்டாத விடையங்களையும் சொல்லிவிட்டால் அதனால் ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் என்ன செய்வது என தயங்கி நின்றபோது வள்ளுவனாரின் 

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு'

எனும் இந்தக் குறளே என்னை எழுதத் துணிய வைத்தது. 

தமிழீழத்தின் வன்னிப் பெரும் நிலத்தின் வலைப்பாடு எனும் கடற்கரையிலிருந்து பின்னேரம் ஆறு மணியளவில் புற்பட்டு தமிழ்நாட்டின் தனுஷ்கோடி கடற்கரைக்கு காலையில் எட்டு மணியளவில் (கிட்டத்தட்ட 14 மணித்தியாலங்கள் நாம் இந்துமா சமுத்திரத்தில் பிரயாணித்திருந்தோம். ஏன் இவ்வளவு மணித்தியாலம் ஆனது என்பதை பின்னால் விரிவாக சொல்கிறேன்.) புலம்பெயர்ந்த 96 ல் எனக்கு வயது 12. நாளை தமிழீழம் மலரும் சுதந்திர தேசத்திற்கு நாம் விரைவில் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையோடு வந்து இங்கேயே கால் நூற்றாண்டைத் தொட்டுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. 

கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல் ஒன்றில் 'கவிதைக்குப் பொய் அழகு' என்ற போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒரு கவிஞன் இறந்தகாலத்தை நிகழ்காலத்தில் காட்சிப்படுத்தவும், எதிர்காலத்தை நிகழ்காலத்தில் முன்னறிவிப்புச் செய்யும் அதி உன்னதமான படைப்பு மனம் வாய்க்கப் பெற்றவர்கள். அவர்கள் எப்படி பொய் அழகு எனலாம் என என் மனம் குமுறிக் கிடந்த அந்நாளில் எம் உணர்ச்சிப் பாவலன் காசி ஆனந்தன் அவர்களின் 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டில் அடிமை விலங்கு தெறிக்கும்' என்ற கவிதை வரிகள் எம் தேச விடுதலையின் முன் அனுமானத்தை கட்டியம் கூறுவதாக இருப்பதாக நண்பர்களோடு சிலாகிப்பேன். அதேபோல் சுப்ரமணிய பாரதியின் 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' என்ற கவிதைகளையும் அன்றைய நாளில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தபோது எனது முதல் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையில் தமிழர் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என புதிய ஏட்டினில் பாடல் சமைப்போம் என எழுதினேன். உணர்ச்சியின் வேகத்தில் எழுதப்படுகின்ற பாடல்கள் பொய்த்துப் போனதை 2009 களுக்குப் பிறகு உணர்ந்துகொண்டேன். நம்பிக்கை தகர்ந்துபோன நாட்கள் அவை. உப்புக் கடல் நீரேரிக்குள் மொத்தக் கனவினையும் புதைத்த மே நாளது. இப்போதுகூட சங்கப் புலவன் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளை உச்சரிக்க தகுதியற்றவர்களாக அகதி முகாமுக்குள் அடைபட்டு இருக்கிறோம். கவிதைக்குப் பொய் பேரழகுதான். வாழ்வோ பெருந் துயரம்.

(தொடரும்)

Monday, August 13, 2018

மூன்று தலைமுறையின் இரயில் பயணம்



தஞ்சை பெரிய கோவில் தரிசனம், சிவகங்கை பூங்காவில் பொழுதுபோக்கு, என மூன்று தலைமுறையின் இரயில் பயணம் கனவை நனவாக்கியிருக்கிறது. அறுபதை நெருங்கும் தாய் தந்தை, முப்பது நடக்கும் உடன்பிறப்பு, மூன்றில் அடிவைக்கும் மகள் என மூன்று தலைமுறையின் கனவுப் பயணமாக அமைந்தது நேற்றைய (12.08.2018) திருச்சி முதல் தஞ்சை வரையான இரயில் பயணம். பெற்றோரின் இதுநாள் வரையான ஆசைகளில் ஒன்றான இரயில் பயணத்தை நேற்றைய தினம் குடும்பமாய் பயணித்து நிறைவேற்றியதில் பெருமகிழ்வு ஒன்று கிடைத்திருக்கிறது. பேத்தியின் விளையாட்டுகளை கண்டு மகிழும் தாத்தா, பாட்டி, அவர்களின் கனவுகளை நிறைவேற்றிய மகிழ்வில் பிள்ளைகள் (மருமகள்கள் உட்பட) என பொன்னான தினமாகவே அமைந்தது. பெற்றோரின் தேவைகளை பூர்த்தி செய்வது பிள்ளைகளின் கடமை என்பதை இந்த பயணம் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கூட்டுக் குடும்ப அமைப்பியல்  சிதைந்து கிடக்கும் இந்த தருணத்தில் இப்படியொரு பயணத்தை நாம் செய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. முதியோர் இல்லங்களை இல்லாமல் ஆக்க வேண்டும் எனில்  ஒவ்வொரு பிள்ளைகளும் தம் பெற்றோரை (இதில் ஆண் பெண் பிள்ளை பாரபட்சமின்றி) தம்மோடு வைத்து பாதுகாக்க வேண்டும் எனும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். இதற்காக அரசாங்கமா விழிப்புணர்வு தரவேண்டும்? நாம் ஒவ்வொருவரும் நம் வீடுகளிலிருந்து ஆரம்பிப்போம். அவர்கள் கனவுகளை நனவாக்கிக் காட்டுவோம். அடுத்த முறை விமானத்தில் பயணிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். காலமும், பணியும் அந்தக் கனவினையும் நனவாக்கும் என நம்புகிறேன். வாழ்ந்துதான் பார்ப்போமே...வானம் என்ன வானம் தொட்டு விடலாம்.... 

Tuesday, March 28, 2017

தமிழகம் வாழ் ஈழ ஏதிலிய படைப்பாளிகளுக்கான பயிலரங்கு.


தமிழகம் வாழ் ஈழ ஏதிலிய படைப்பாளிகளுக்கான பயிலரங்கு.

இடம்: வேலூர்
நாள்: 26/03/2017

மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் பத்துக்குப் பத்து அளவு கொண்ட வீடுகளிலும் சீலை மறைப்புகளுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்ற ஈழத்து ஏதிலியர்கள் மத்தியில் பல திறமையாளர்கள் இருந்தும் இலக்கியப் பொதுவெளியில் அவர்களுக்கான இடம் இதுநாள்வரை வெற்றிடமாகவே இருந்து வருகிறது. இந்த வெற்றிடத்தை போக்கும் விதமாக 26.03.2017 அன்று வேலூர் மாநகரத்தில் 5 மாவட்ட முகாம்களில் இருந்து வாசிப்பு மற்றும் எழுத்தின்மீது ஆர்வம்கொண்ட 30 பேரை ஒருங்கிணைத்து பயிலரங்கு ஒன்றினை நடாத்தி புத்தொளி பாய்ச்சியிருக்கிறார்கள்.

இதில் முதல் கட்டமாக சிறுகதை மற்றும் கவிதைகளை எவ்வாறு உருவாக்குவது, உருவாக்கிய படைப்புகளை எவ்வாறு பொதுவெளியில் முன்வைப்பது போன்றவை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

எழுத்தாளர் திரு.ஜி.முருகன் அவர்கள் சிறுகதை உருவாக்கம் பற்றி மிக அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அவரது சிறுகதைகளில் சிறு உயிரினங்களும் முக்கிய அங்கம் வசிக்கின்றன. ஒரு கதையை எழுதி முடித்ததும் அது சரியான வடிவத்துக்கு வரும்வரை திரும்பத் திரும்ப வாசித்து சரிசெய்ய வேண்டும் என்றார்.நீங்கள் சொல்ல வரும் விஷத்துக்குள் அதீதமான புனைவுகளை உள்நுழைக்க வேண்டிய அவசியம் தேவையில்லை என்பதோடு நேர்மையோடு ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

எழுத்தாளரும் கவிஞருமான திரு அகரமுதல்வன் அவர்கள் கவிதை உருவாக்கம் மற்றும் அது தொடர்பான உரையாடலை முன்வைத்து பேசுகையில் இத்தனை ஆண்டுகால முகாம் வாழ்வில் ஒரு படைப்பாளியைக்கூட உருவாக்க இயலாமல் போனது நமது இனத்துக்கு கிடைத்த சாபக்கேடு என்றார். யூத மக்களை கொன்றழித்த அவலத்தை, அதுதொடர்பான வரலாற்றை பதுங்குகுழிக்குள் இருந்துகொண்டு எழுதியது 14 வயதே ஆன ஒரு சிறுமி. நமக்கும் இத்தகைய பொறுப்பு இருப்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அகதிதானே தவிர அடிமைகள் இல்லை.ஒவ்வொருவரும் இலக்கியத்தினூடாக நமது வரலாற்றை உருவாக்க வேண்டும் என்றார்.

எழுத்தாளர் திரு பத்தினாதன் அவர்கள் காலச்சுவடு பத்திரிக்கையில் பணியாற்றுகின்ற முகாம் படைப்பாளி. 1990 முதல் 1999 வரையில் மதுரை உச்சப்பட்டி முகாமில் வசித்தவர். அகதிகள் தொடர்பான இரு நூல்களை எழுதியுள்ளார். இன்றைக்கு பொதுவெளியில் அகதிகள் தொடர்பான விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். அகதிச் சமூகத்தில் நிகழும் அவலங்களை நாம் இலக்கியங்களினூடாக பிறரிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

இலக்கிய வெளியில் தமிழகம் வாழ் ஈழ ஏதிலிகளின் நிலை குறித்து முகாம் படைப்பாளர்கள், கவிஞர்கள் சு.சிவா, சுகன்யா ஞானசூரி, நடராஜா சரவணன், சரோகராஜ் மற்றும் செந்தூரன் போன்றவர்கள் முகாம்களில் படைப்பாளர்கள் இல்லை என்பதை மறுத்தார்கள். இருக்கிறார்கள், அவர்களை அடையாளப்படுத்த தவறிவிட்டார்கள். அவர்களின் படைப்புகளை அங்கீகரிப்பதற்கான தளம் அப்போது கிடைக்கவில்லை, முகாம்களில் இருந்துகொண்டே சு.சிவா, சுகன்யா ஞானசூரி போன்றவர்கள் கவிதைத் தொகுப்புகளை வெளியீடு செய்திருக்கிறார்கள், சிற்றிதழ் (வேர் விடும் நம்பிக்கை) நடத்தியிருக்கிறார்கள், இப்படி திறமையானவர்கள் ஒவ்வொரு முகாமில் கண்டடைய முடியாமல் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறை படைப்பாளிகளை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இப்பொழுது  எம்மிடத்தில் இருக்கிறது. அதற்க்கு புதிதாக எழுத வருபவர்கள் செய்ய வேண்டியது படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இலக்கியங்கள் குறித்த வாசிப்புகளையும் முன்னெடுக்க வேண்டும். பெண்கள் எழுதுவதற்கு முன்வரவேண்டும், முகாம்களில் உள்ள நூலகங்கள் பராமரிக்கப்பட வேண்டும், ஒன்றுகூடி விவாதிப்பதை விரிவுபடுத்த வேண்டும், அரசியல் இலக்கியங்களையும் தேடி வாசிக்க வேண்டும், நமது பண்பாடுகள் தொன்மங்கள் குறித்து அறிந்து எழுத வேண்டும் என்ற ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு செய்திருந்த JRS திருச்சபையின் பணியாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் இந்த நிகழ்வோடு இது முடியாமல் தொடர வேண்டும் என வாழ்த்தி நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் ரூபாய் 500 க்கும் அதிக மதிப்பிலான நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. புலம்பெயர் இலக்கியத்தில் தமிழகம் வாழ் ஈழ ஏதிலியர் இலக்கியமும் முக்கிய அங்கம் வகிக்கும் என்னும் நம்பிக்கை துளிர்திருக்கிறது.

நிகழ்வு தொகுப்பு
சுகன்யா ஞானசூரி
28/03/2017

Sunday, January 15, 2017

மேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...

பத்தாண்டுகளாக முயற்சி செய்து ஏதோ சில காரணங்களால் செல்ல முடியாமலே போனது. இந்த வருடமும் செல்வதற்கான முயற்சிகளை எடுத்தபோது குழந்தையின் உடல்நலம் தடுத்தது. இரண்டு தினத்தின் பின்பாக இன்றுதான் நிறைவேறியது 40வது புத்தகச் சந்தைக்கு செல்வதற்கு. இந்நிகழ்வுக்கு செல்ல பக்க பலமாக இருந்து என்னோடு கூட வந்தவர் முனைவர் Manikandan Thirunavukkarasu அவர்கள்.
எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் அவர்களோடு.(மேலே)

எழுத்தாளர்கள் லக்ஷ்மி சரவணக்குமார் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தோழர் கா.பா அவர்கள் தனது நூல்களுக்கு எனக்கு சிறப்புக் கழிவு செய்து தந்தது மறக்க முடியாத தருணம்.
எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் அவர்களோடு(மேலே)

அகரமுதல்வன், பெருமாள் முருகன் மற்றும் சரவணன் சந்திரன் போன்றவர்களை சந்திக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.

ஒரே நாளில் பாதிக்குப் பாதி அரங்கங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

வாங்க வேண்டுமென பட்டியலிட்டு எடுத்துச் சென்றவற்றில் சிலவற்றை வாங்க இயலாமல் போனதும், எதிர்பாராத சில நூல்களை வாங்கியதுமென 18 நூல்களை வாங்கியது கண்டு கொஞ்சம் பிரமிப்பாக உள்ளது.
முனைவர். மணிகண்டன்.தி மற்றும் எச்.டி.எப்.சி வங்கியின் துணை மேலாளரும் நண்பருமான பிரபு (நடுவில் நிற்பவர்) ஆகியோரோடு.

வாசிப்பாளர் அத்தனைபேரும் பெரிய தனவந்தர்கள் இல்லை என்பதை நினைவில் கொண்டு பதிப்பக நண்பர்கள் நூல்களுக்கான விலையினை நிர்ணயம் செய்ய வேண்டுகிறேன். ஏனெனில் உள்ளூர்வாசிகளைக் காட்டிலும் வெளியூர்வாசிகளே செலவு செய்து வருகிறார்கள் என்பதை இங்கு கண்கூடாய்க் கண்டேன்.

மேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...

- சுகன்யா ஞானசூரி
15/01/2017