Saturday, October 24, 2015

கவிதைகள்-2


1.
விற்கப்பட்டுக் கொண்டும்
வாங்கப்பட்டுக் கொண்டுமாக....
வடிவங்களை மாற்றுகிற
அமீபாவாக
அவளுக்கான சந்தைகள்
வலம் வருகின்றன!
முதிர் கன்னியென
ஒற்றைச் சொல்லால்
அவளை எளிதாக
சொல்லிவிட்டு கடக்கலாம்!
எந்தச் சந்தையும் - இதுவரை
அவளுக்கான விலையை
அறுதியிட்டுக் கூறமுடியவில்லை
ஏனெனில் அவள்
விலைமதிப்பற்றவள்!
--------------------------------------------------------------------------
2.
அரசு வேலைகளுக்காக
பதிவு செய்துவிட்டு
பகட்டாய் இருப்பவர்களல்ல
நாங்கள்!
கிடைக்கும் வேலைகளை
செவ்வனே செய்திடும்
தீரர்கள் நாங்கள்!
அதனால்தான் என்னவோ
இன்றுவரை
துரத்தி யடிக்கப்படுகிறோம்
நாடற்றவர்களாக!
--------------------------------------------------------------------------
3.
நான் அவைகளை
விட்டுவிட்டு
வந்திருக்கக் கூடாது....
சிறுவயது முதல்
அவைகள்
எமது விளையாட்டுகளில்
ஒன்றாக இருந்ததை
எவ்வாறு நான்
மறந்து விடக்கூடும்?
தரையில் உரசி
தொடையில் வைத்தால்
சுருக்கென சுடும்!
முதல் முறையெனில்
அழுகை வரும்
கோபம் வரும்
பழகிவிட்டால் எல்லாம்
மறந்து போகும்!
என்
தேசம் செல்ல
நான்
காத்திருப்பது போல்....
என்
மகளோடு விளையாட
அந்த
சூடாங்கொட்டைகளும்
காத்திருக்கக்கூடும்!
--------------------------------------------------------------------------
4.
ஒவ்வொரு முறையும்
இவர்கள்
பகடைக் காய்களாய்
உருட்டப் படுகிறார்கள்.....
அப்படியென்ன
பாவம்
செய்துவிட்டார்கள்?
ஓட்டரசியலின்
வெற்றி தோல்விகளை
தீர்மானிக்கும்
துருப்புச் சீட்டுகளாய்
தூக்கிப் போடப்படுகிறார்கள்
தலித்துகளும் - ஈழத்
தமிழர்களும்!
- சுகன்யா ஞானசூரி.

1 comment:

  1. கவிதைகள் மிக அருமை...விளை என்பது விலை என்பதே சரிபா

    ReplyDelete