ஒரு மழையும் இரு கொலையும்!
***************************************
***************************************
நேரம் சரியாக எட்டு மணி. வழக்கமாக நான் இறங்கும் உறையூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் பொழுது பெருமழை கொட்டத் துவங்கிவிட்டது. ஆறு மணிக்கெல்லாம் பணி முடித்து புறப்படும் நான் ஏழு மணிக்கெல்லாம் வீடடைந்து விடுவேன்.
இன்று சற்று தாமதம். காரணம், புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் உலகம் தழுவிய வலைப்பதிவர் திருவிழாவுக்கான போட்டிக்கு படைப்புகள் அனுப்ப இறுதி நாள். அதனால் கவிதையை எடுத்துக் கொண்டு கணினி நிலையம் சென்று அனுப்பிவிட்டு வெளியே வரும்போது புகைப்படம் எடுக்கும் வேலையை வானம் செய்யத் துவங்கி விட்டது.
வேக வேகமாக நடந்து சத்திரம் பேருந்து நிலையத்தில் ஒன்பதாம் நம்பர் பேருந்தைப் பிடித்து நகர்ந்து நகர்ந்து வந்து நிறுத்தத்தில் இறங்குவதற்குள் மழை பெலத்துப் பெய்யத் துவங்கியது.
மழையிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அங்கே ஏற்கனவே சிலர் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர். நானும் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக ஒதுங்கி விட்டேன்.
சற்று நேரத்துக்கெல்லாம் சாக்கடைகள் வெளிக்கிளம்பி நகர்வலம் புறப்படத் தயாராகி விட்டது. ம்...ம்....பாதாள சாக்கடைகள் எல்லாம் அதள பாதாளத்தில் இருக்கின்றன போலும்....
மழையின் பெருஞ்சாரலில் ஓரமாய் நின்ற நான் பாதி நனைந்துவிட்டேன். கொட்டும் மழையில் நனைந்து செல்ல ஆசைதான்... ம்... என்ன செய்ய இந்த கைப்பேசியை மழையிலிருந்து காப்பாற்றியாக வேண்டுமே. சட்டைப் பைக்குள் வைத்து கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டி அணைத்து பிடித்தபடி நிற்கிறேன்.
அதற்குள் அழைப்பும் வரிசையாக வந்தவண்ணம் இருந்தது. எடுத்துப் பேசிவிட முடியவில்லை என்பதை விட கைகளை நகர்த்த முடியவில்லை என்பதே நிலைமை. அருகருகே லெக்கின்ஸ் தேவதைகளும், சுடிதார் தேவதைகளுமாக சூழ்ந்து நிற்கிறார்கள். எக்குத்தப்பாக கை எங்காவது பட்டு தருமடி வாங்கி அசிங்கப்படுவதற்குப் பதில் மிதமாக ஒலிக்கும் இளையராஜாவின் இசையைக் கேட்ட வண்ணம் இருக்கலாம் எனத் தோன்றியது.
ஒரு லெக்கின்ஸ் தேவதை மட்டும் தன் "ஐ பாடை" எடுத்து காதுக் கருவியைப் பொருத்தி மெல்ல தலையை அசைக்கத் துவங்கினாள். பாப் பாடல் கேடிருப்பாள் போலும்.... ம்... இயற்கை தரும் மெல்லிசை அவளுக்கு பிடிக்கவில்லை போலும்.... ம்ம்... இயற்கையை அழித்துவிட்டு செயற்கைக்குள்தானே நாம் செத்து மடிகிறோம்....
கிறீச்... கிறீச்சென... பிரேக் சரிவர பிடிக்காத அரசுப் பேருந்துகள் பெரும் சத்தம் எழுப்பிய வண்ணம் நிறுத்தத்தில் சிலரை அள்ளிக் கொண்டு செல்வதும் சிலரைத் தள்ளிவிட்டு செல்வதுமாக இருந்தது.
இதற்கிடையில் தன் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டதால் அதன் மொட்டை மாடிக்கு... நான் நிற்கும் தரை தளத்துக்கு சமீபமாக வந்து நின்றது வெள்ளத்தில் நனைந்த எலி ஒன்று...பிறகு அங்கும் இங்குமென அலைந்து தனக்கான இடத்தை கண்டு ஒதுங்கியது.
தொடர்ந்து எங்கிருந்தோ இரண்டு கரப்பான் பூச்சிகள் கூட்டத்துக்குள் புகுந்துவிட்டது. கணவனுக்கு பயப்பிடாத பெண்கள் கரப்பான் பூச்சிக்கு என்னாமா பயப்புடுறாங்க....பாரதியின் புதுமைப் பெண்கள் இன்னும் உருவாகவில்லை போலும்.
எதிரே இருந்த அரசு மதுபானக் கடையிலிருந்து வெளிவந்த இரண்டு குடிமகன்களில் ஒருவர் தடுமாறி வெள்ளத்தில் வீழவும் கொஞ்சம் கரிசனப் பார்வையும், கொஞ்சம் சிரிப்பலையுமாக கூட்டம்....
இன்னொருவர் அவரைத் தூக்கி விட்டு நிருத்ததிற்குள் வந்து சிகரெட்டை பற்ற வைத்துவிட்டார்... அள்ளிச் சென்ற பேருந்தில் சில தேவதைகள் சென்றுவிட்டார்கள் கரப்பான் பூச்சியின் தொல்லை தாழாமலும், சிகரெட்டு நெடி புடிக்காமலும். போதையில் இருக்கும் அவனிடம் தகராறு செய்ய யாரும் தயாராகவும் இல்லை.
நானும் மணிக்கட்டைத் திருப்பி நேரம் பார்த்தேன்.. சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒன்றாய் ஒன்பதைத் தொட்டு விட்டன. அவ்வளவு காதல் அவைகளுக்குள்....
மழையும் சற்று தன் இயக்கத்தை குறைத்துக் கொண்டே வந்தது. அதற்குள் அவன் இரு கொலைகளை சர்வ சாதாரணமாக நிகழ்த்தி விட்டான்.... குடி போதையில் இருந்ததால் அவனுக்கு அதன் வலி தெரிய வாய்ப்பில்லை....அனைவரும் கலைந்து சென்றனர்... காலில் மிதிபட்டுக் கிடக்கும் சிகரெட்டின் கட்டைக்குள் இருக்கும் மீதி புகையிலைத் தூள்களைப் போல் குடல்கள் வெளியே பிதுங்கி துடி துடித்து உயிர் நீர்த்தன அதக்களம் செய்த இரு கரப்பான் பூச்சிகளும்.
- சுகன்யா ஞானசூரி,
03/10/2015.
03/10/2015.
No comments:
Post a Comment