Saturday, January 30, 2016

21-ஆம் நூற்றாண்டு வாசிப்பாளனின் பார்வையில் "பொறிகள்" கவிதை கூட்டுத் தொகுப்பு.

பழைய நூல்களை, இதழ்களை வாசிக்கும்போது நாம் அக்காலகட்ட உலகுக்குள் பயணிப்பது, அம் மனிதர்களோடு உரையாடுவது போன்றெல்லாம் உணர்வுகள் எழும். அது ஒரு தனி சுகம். அதை ஒரு வாசிப்பாளனாலும், படைப்பாளியாலும் மட்டுமே உணர்ந்துகொள்ள இயலும்.
30.01.1974 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "பொறிகள்" எனும் கூட்டுக் கவிதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தகைய உணர்வு என்னுள்ளும் எழுந்தது. நூலகம்.ஒர்க் எனும் ஈழத்து படைப்பாளர்களின் நூல்களை பத்திரப்படுத்தும் இணையதளத்தில் மின்னச்சு வடிவில் வாசிக்கக் கிடைத்தது எனக்கு.
சபா.ஜெயராசா, எம்.எச்.எம்.சம்ஸ், திக்குவல்லை.கமால், கல்முனைப் பூபால், முல்லை வீரக்குட்டி, ராதேயன், சண்முகம் சிவலிங்கம், செந்தீரன், அன்பு டீன், சிவம், சௌமினி, பாலமுனை பாருக், ஷெல்லிதாசன், நா.லோகேந்திரலிங்கம், யோனகபுர-ஹம்சா, அன்பு.ஜவகர்சா, நீள்கரை நம்பி, அ.யேசுராசா, ச.வே.பஞ்சாட்சரம், பா.ரத்னசபாபதி ஐயர், ஏ.இக்பால், மு.சடாட்சரன், தா.இராமலிங்கம், மு.பொன்னம்பலம், என்.சண்முகலிங்கன், பேனா.மனோகரன், ஆதவன், வ.ஐ.ச.ஜெயபாலன், எம்.கோவிந்தராஜன், இரா.சுகுணசபேசன், சேரன், டானியல் அன்ரனி, அ.புராந்தகன், சி.குமாரலிங்கம், திருமலை சுந்தா, முருகு, வதிரி சி. ரவீந்திரன், மூதூர் முகைதீன், இரா.நாகராசன், பூநகர் மரியதாஸ், ஜவாத் மரைக்கார், சரவணையூர் சுகந்தன், மற்றும் திக்குவல்லை இனாயாஹ் என நாற்பத்து நான்கு (44) கவிஞர்களின் கவிதைகளோடு 1974 இல் வெளியாகியுள்ளது.
ஈழத்தில் புதுக்கவிதைகளின் தோற்றம் என்பது, தமிழ்நாட்டுக்கு எப்படி ஒரு மகாகவி சுப்பிரமணி பாரதியோ அதுபோல ஈழத்துக்கு மஹாகவி எனும் உரித்திரகுமாரன் அவர்களிடம் இருந்தே தொடங்குகிறது. அறுபதுகளின் துவக்கத்தில் ஈழத்தில் புதுக்கவிதை பல இடையூறுகளுக்கு மத்தியில் மொட்டவிழ்த்துள்ளன.
அறுபதுகளில் இல்லாத அளவுக்கு எழுபதுகளில் புதுக்கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள். இதற்கு "பொறிகள்" தொகுப்பு ஒரு சாட்சி என்றால் அது மிகையாகாது.
வரிகளை மடக்கியும், விடுகதை போட்டும், குறும்பாக எழுதுவதும் புதுக்கவிதையென பலர் நினைப்பதாக "கணையாழி" குறைபட்டுக் கொண்டதாக தொகுப்பாசிரியர் கூறியிருப்பதிலிருந்து சிறப்பான புதுக்கவிஞர்கள் சொற்பமாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. இந்தத் தொகுப்பின் மூலமாக அக்குறையை நிவர்த்தி செய்திட தொகுப்பாசிரியர் முயன்றிருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது. நிற்க.
இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அடையாளப்படுத்துவதை முனைப்பாகக்  கொண்டு எழுதுகிறார்கள். பிற படைப்பாளர்களை அடையாளப்படுத்த மறந்து விடுகிறார்கள். அன்பு.ஜவகர்சா, அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான், முல்லை அமுதன், எஸ்.பொ, அந்தனி ஜீவா, மற்றும் அருணா சுந்தரராசன் போன்றவர்கள் புதிய படைப்பாளர்களையும், சிறந்த படைப்புகளையும் அடையாளப்படுத்துவதில் முழுமூச்சாகக் கொண்டு செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய இளைய தலைமுறை இவர்களிடத்தில் கற்றுக்கொள்ள விடயங்கள் ஏராளம் உள்ளன.
பொறிகள் தொகுப்பில் பலதரப்பட்ட பரிமானங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. முதலாளித்துவம், பிரபுத்துவம், ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் போன்றவற்றைச் சாடி பல கவிதைகள் தெறிக்கின்றன.
".....
நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ
இவைகளெல்லாம் எமது
உலகைவிட்டுப் போகுமட்டும்
ஓயாது எங்கள்
உழைப்பாளர் போராட்டம்!"
                           - முல்லை வீரக்குட்டி.
"எங்கள்
கரங்களிலிருப்பவை
கதிரறுக்கும்
கூர்வாள்தான் - எனினும்
உதிரத்தை உரமாக்கி
உழைப்போரின் உணர்சிகளை
நிதியாக்கிக் கொழுப்போரின்
சிரமறுக்கும்
என்றும் அறி."
                      -ராதேயன்
"கடுங்குளிரைப் போக்க
எங்களிடம்
கந்தைத்துணி கூடஇல்லை;
உள்ளத்தில் பொங்கியெழும்
உணர்ச்சிகளின் அனலால்தான்
குளிர் காய்கின்றோம்."
                           -நா.லோகேந்திரலிங்கம்
என தோட்டத் தொழிலாளர்களின் வழிகளையும் பதிவு செய்ய மறக்கவில்லை பொறிகள்.
சுயநலவாத அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது பொறிகள். இதோ,
"சிங்களமே
ஆளும்மொழி
தேசியமொழி
பிரலாபிக்கிறார்
மந்திரியார்.
ஆனால்
அவரின் புதல்வனோ
ஒக்ஸ்போர்டில்.
                - திக்குவல்லை இனாயாஹ். தமிழை மறந்து ஆங்கில மோகத்தில் திரியும் இன்றைய இளைய தலைமுறைக்கும் இக்கவிதை பொருந்தும்.
"தேடி வந்த
தடுப்பூசியை
தடுத்து....
தசையைத் தேடி
வருமேயன்றி
எலும்பை நாடி
வருமா கிருமிகள்....?
என்று
எலும்புடல் கேட்டதும்
ஊசி
தலை குனிந்தது!
                         - அன்பு ஜவகர்சா
விஞ்ஞானத்தையும், ததுவார்ததையும் கலந்து ஒரு உழைப்பாளியின் உடலோடு நிதர்சனமாக படைத்திருக்கிறார். இன்றும் இந்நிலை தொடர்வது நோக்கத்தக்கது.
"ஆயிரம்
அப்ளிக்கேஷன்கள் போட்டு
அவரிடமும் இவரிடமும்
சிபாரிசுக்காக அலைந்து
இறுதியில்....
கைகளை நம்பிக்
களத்தில் இறங்கியபோது...
வெற்றித் திருமகள்
புன்னகை செய்தாள்.
                             - பேனா.மனோகரன்
இக்கவிதையைப் படிக்கையில் வேலையில்லாப் பட்டதாரிகளே என் நினைவில் எழுகிறார்கள். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என மூதறிஞர்கள் சொன்ன இந்த வார்த்தை உண்மையிலும் உண்மைதான்.
[ஐயா அன்பு.ஜவகர்சா அவர்களோடு முகநூல் வழியே சிலமுறை உரையாடியிருக்கிறேன். ஐயா பேனா.மனோகரன் அவர்களோடு ஒருமுறை நேரிலும் பலமுறை முகநூல் வழியேயும் உரையாடியிருக்கிறேன் என்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.]
அறவழிப் போராட்டம் முடிவுற்று ஆயுதப் போராட்டம் முளைவிட்ட காலம் என்பதால் போர் வலிகள் சுமந்து கவிதைகள் இதில் இல்லை.
தெறித்த பொறிகளின் தணல்கள் அணைந்தாலும் அவை கொடுத்த வலிகளும், தடயங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நூல்: பொறிகள் - கூட்டு கவிதைத் தொகுப்பு
தொகுப்பாசிரியர்: அன்பு.ஜவகர்சா
வெளியீடு: குகன் அச்சகம், தெல்லிப்பளை, ஈழம்.Wednesday, January 20, 2016

ஒரு பழைய கட்டுரையும் இன்றைய உலகத்தின் நிலையும்.....

"வெகு மக்களிடம் ஓட்டு வாங்கித்தான் இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால், அந்த மகா பெரிய ஓட்டுக்களை வாங்குவதற்கு ஆகிற மகா மகா செலவுகளை மறைமுகமாக ஏற்பது இந்த சர்வதேச சதி ஸ்தாபனம்தான்(பன்னாட்டு நிதி நிறுவனம்)."

"ஐரோப்பாவின் புதிய படையெடுப்பு" எனும் தலைப்பில் 1994 பிப்ரவரி "சாரதா" இதழில் "பெரியார் தாசன்" அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று வாசித்தேன். இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதார சுரண்டல் குறித்து 20 வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு தீர்க்கமாக எழுதியுள்ளார்.

விவசாயம், மருத்துவம், கல்வி போன்றவற்றில் நிகழும் சுரண்டல் அரசியலுக்கு வளர்ந்த நாடுகள் தங்களுக்குள் ஜி-7 அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஊட்டத்தைக் கொடுப்பதுபோல கொடுத்து பின்னர் மொத்தமாய் அவர்களது இரத்தத்தையே சுரண்டுவதுதான் இதன் நோக்கம் எனவும், அதற்காக உருவாக்கப்பட்டதே "டங்கல்" எனும் ஒப்பந்தம் என்பதையும் தொலைநோக்குப் பார்வையோடு எழுதியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை இந்தியாவில் முதலில் வேகமாக அமல்படுத்தியது தமிழ்நாடு (தீமைகளை முன்னெடுத்துச் செல்வதில் திராவிடக் கட்சிகளை மிஞ்ச முடியாதுதான்) என்பதையும், இதனால் அன்றைய ஆண்டில் அரசு வேலைக்கு ஆள் எடுப்பது இல்லை என்று செய்தித் தாளின் முதல் பக்கத்தில் அறிக்கை விட்டதையும், போலீஸ் மற்றும் இராணுவத்துக்கு மட்டும்  அதிகமாக ஆள் எடுக்கப்பட்டதையும், இவர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடக்க வழி செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆள்குறைப்பு செய்வதில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு இந்த டங்கல் ஒப்பந்தம் பெரிதும் உதவியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கச் சூழலில் உலகம் சிக்கித் தவிப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். உற்பத்திகளையெல்லாம் சுரண்டிவிட்டதை நம் ஒவ்வொரு விவசாய மண்ணையும் பறிகொடுத்ததில் உணர முடிகிறது. வளர்ந்த நாடுகளோடு வளரும் நாடுகள் செய்கின்ற ஒப்பந்தங்களின் பின்னணியில் இப்படியான அரசியல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் மேலெழுவதை தவிர்க்க இயலாது.

வாய்ப்பு இருப்பவர்கள் வாசித்துப் பாருங்கள்.

(இந்த இதழை மின்னச்சு வடிவில் எனக்கு அனுப்பி உதவிய
கிருத்து. இராமதாசு ஐயா துபாய்(பெரம்பலூர்) அவர்களுக்கு எனது நன்றிகள்.......)

Friday, January 15, 2016

அன்றைய ஒரு பொங்கல் நாளில்.....

அன்றைய ஒரு
பொங்கல் நாளில்தான்
செங்கரும்புகள்
எமக்குக் கசந்தது.
அன்றைய நாளின்
உதயசூரியன் கூட
பிரகாசமாய் எழும்பவில்லை.
எங்கள் சனங்களெல்லாம்
ஆரவாரமாய் எழும்பிவிட்டார்கள்...
யுத்தத்தின் மத்தியிலும் - எமக்கு
இனிப்பாகவே இருந்தது
ஏனெனில் இது
தமிழர் திருநாளல்லவா?
திட்டமிட்டே மறக்கடிக்கப்படுகிறது
தமிழர் திருநாட்கள்
எதிரிகளால் இம்மண்ணில்!
அடுப்பின் புகை
எழும் முன்பாகவே
கரும் புகையொன்று
எழுந்து மண்டியது
பெரும் சத்தத்துடன்.
வீசிச் சென்ற
விமானத்தின் ஓசை
அடங்கிய பின்பும்
ஆதவன் வரவேயில்லை!
அழும் குரல்கள்
மெல்ல உயர்கிறது!
சிதறிப் போன
பொங்கல்ப் பானையருகே
வீழ்ந்துகிடக்கிறாள் பாட்டி....
துண்டாகிய தலையோடு
மண்ணை முத்தமிட்டபடி.
- சுகன்யா ஞானசூரி.
15.01.20016


துளித் துளியாய்....


@
யாருமற்ற கானகத்தில்
பிரசவம்
துளிர்க்கும் விதைகள்!

@
நீர் நிலையெங்கும்
நீராடும் தேவதை
நிலா!

@
தகிக்கும் வெப்பம்
குளிக்க முடியவில்லை
கானல் நீர்!

@
வண்ணமோ கருமை
எண்ணமோ மேன்மை
கரைந்துண்ணும் காக்கை!

@
திட்டமிட்ட வாழ்வு
உணர்த்திச் செல்கிறது
குளிர்கால எறும்பு!

@
சுமையெனக் கருதாது
மகிழ்வோடு
பனியைத் தாங்கும் புற்கள்!

@
இரத்தம் தோய்ந்த நாப்கின்
பக்குவமாய் வீசுகிறாள்
செவிலி!

@
என்ன சொல்லியிருக்கும் நதி?
வெட்கித்து நிற்கின்றன
கரையோர நாணல்!
@
புகழ்ந்தபடி செல்கின்றனவோ நதிகள்?
தலை சாய்ந்தவண்ணம் வெட்கத்தில்
கரையோர நாணல்!
- சுகன்யா ஞானசூரி.

அக்கினிக் குஞ்சு...


அக்கினிக் குஞ்சென
உயிர்தெழ விரும்பேன்.
இப் போரில் -நான்
மரிக்க நேர்ந்தால்
என்
ஆயுதங்களும் பாதணிகளும்
என்னிலும் ஆகச்சிறந்த
ஓர் போர்வீரனிடம்
கை யளிக்கப்படக்கூடும்!

################################

கொதிக்கும்
எண்ணைக் கொப்பரையினின்று
உயிர் பெற்றெழ
பிரயத்தனப்பட மாட்டேன்.....
மரிக்கும் பொழுது
விதைத்த விதைகள்
விருட்சம் பெறும்
நாளைய பொழுதில் - எம்
தேசம் மலரும்.

Wednesday, January 6, 2016

பிரமிள் 19 வது நினைவுநாள்.....

இன்றைய தினம் படிமக் கவி பிரமிள் நினைவு நாள்(சனவரி-06-1997)....
ஈழத்தில் பிறந்து தமிழகத்தில் தன் விமர்சனத்தாலும், படிமக் கவிதைகளாலும் சிறந்து விளங்கியவர். நேர்கொண்ட பேச்சும், எதற்கும் வளைந்து கொடுக்காத மனத் திடமும் பிரமிளுக்கே உரித்தானது. தமிழ்ப் படைப்புலகம் இப்படியான படைப்பாளிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தது துரதிஷ்டமே. ஆனால் இன்றைய இளைய தலைமுறை உண்மைகளைத் தேடிக் கண்டறிந்து கொண்டாடுவது மகிழ்ச்சியான விசயம். அந்தவகையில் பிரமிளை மீட்டுருவாக்கம் கொள்ளவைத்தவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.... அத்தகைய அற்புதமான படைப்பாளிக்கு இன்றைய நாளில் என் நினைவஞ்சலிகளைச் செலுத்துகின்றேன்....
- சுகன்யா ஞானசூரி,
06/01/2016.

Monday, January 4, 2016

Earth and Ashes ஆப்கன் திரைப்படம் - என் அனுபவம்

புதுக்கோட்டை பிலிம் சொசைட்டி அமைப்பினர், கந்தர்வன் அரங்கத்தில் (புதுகை கம்யுனிஷ்ட் அலுவலகத்தில்) நேற்றைய தினம் (03.01.2016) மாலையில் ஒரு திரைப்படத்தை திரையிட்டனர்.

தஷ்தாகிர் (Dastaguir) எனும் பெரியவர், யாஸின் (Yassin) எனும் காது கேளாத சிறுவன், ஷைநாப் (zaynab) எனும் பெண் (தஷ்தாகிரின் மருமகள்) மொசாத் (Mosad) வெளியூர் சுரங்கம் ஒன்றில் வேலை செய்யும் தஷ்தாகிரின் மகன். பாலைவனத்தின் புழுதிகளோடு யுத்தத்தின் பின்னான வலிகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் சுமந்தபடி பயணிக்கிறது 2004 ல் அடிக் ரஹீமி (Atiq Rahimi) இயக்கத்தில் வெளியான எர்த் அண்ட் அஷெஸ் (Earth and Ashes) எனும் ஆப்கன் திரைப்படம்.
எரிக் குய்ச்சர்ட் (Eric Guichard) இன் ஒளிப்பதிவு ஆப்கானிஸ்தானின் இதுவரை பார்க்காத பாலைவன மலைகளையும், புழுதிகளை கிளப்பிச் செல்லுகின்ற பயணங்களையும், ஆள் அரவமற்ற பகுதிகளையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற சில சிதிலமடைந்த வீடுகளையும், கருமை சூழ்ந்த சுரங்கத்தின் அருகில் இறுதியாக பசுமையான சில காட்சிகளையும் எதார்த்தமாக படம் பிடித்திருக்கிறார்.
யுத்தத்திற்கு முன்னால் வரை காது கேட்கும் நிலையில் இருந்த யாசின் பின்பு ஒவ்வொரு இடத்திலும் சப்தங்களை கேட்க முயற்சித்த வண்ணம் இருக்கிறான். குழந்தைகள் எப்போதும் தம் இயல்பிலிருந்து மாறுவதே இல்லை, சிறுமியோடு  பகிர்ந்து உண்பதிலும், ஒரு ஆடுடன் விளையாடுவதிலும் (மிதிவெடியில் சிக்கி இறந்து போகிறது அந்த ஆடு), ராட்டில் சுற்றுவது என குழந்தை குழந்தையாகவே இருக்கிறது என படம் முக்கால்வாசியும் வியாபிக்கிறான்.
தஷ்தாகிரின் நினைவுகளில், குண்டு விழுந்த வீட்டுக்குள் மருமகள் ஷைநாப் நிர்வாணத்தோடு எரிந்து இறப்பது அடிக்கடி வந்து துன்பத்தைத் தருகிறது. ஒவ்வொரு முறையும் அவர் அவளது நிர்வாணத்தை மறைக்க துணியோடு ஓடுகின்றார். சுரங்கத்தில் வேலை செய்யும் மகனிடத்தில் அவன் மனைவியும், சகோதரியும், அம்மாவும் இறந்துவிட்டதையும், மகனுக்கு கேட்கும் திறன் போனதையும் சொல்வதற்காக செல்வதும், இறுதிவரை மகனைப் பாராமல் அவன் பரிசாகக் கொடுத்த அந்த புகையிலைப்பொடி வைக்கும் அழகிய டப்பி ஒன்றை அங்குள்ள அலுவலரிடத்தில் கொடுத்து நாங்கள் உயிரோடு இருப்பதை என் மகன் நம்புவான் என கூறிவிட்டு வேறொருவரின் பொறுப்பில் விட்டுவிட்டு வந்துவிட்ட பேரனைக் காண புறப்படுவதோடு ஒரு வலி நிறைந்த கவிதையென முடிகிறது படம்.

யுத்தங்கள் எப்போதுமே பெண்களையும், குழந்தைகளையுமே பெரிதும் பாதிக்கின்றது என்பதை மீண்டும் இப்படம் உணர்த்திச் செல்கிறது. இரத்தமும் சதையுமாக அந்த மக்களையும் மண்ணையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. எனக்கு ஒவ்வொரு காட்சியிலும் எமது ஈழத்தின் போர்க்களத்தையும், போரின் பின்னான நிகழ்வுகளையும், வலிகளையும், தாக்கதையுமே இப்படம் என்னுள் ஏற்படுத்தியது.
விரசத்தை உண்டுபண்ணும் துக்கடாத் துணிகளோடு நாலு பாட்டும், எதார்த்தத்தை மீறிய நாலு சண்டையும் வைத்து (காக்கா முட்டை போன்ற படங்கள் தவிர்த்து) படம் எடுக்கின்ற தமிழ்ச் சினிமா எப்போது தன்னை மாற்றிக்கொள்ளும்? கதைவளம் கொட்டிக் கிடக்கும் தமிழ்ச் சினிமாவில் பேய்ப் படங்களும், நகைச்சுவை எனும் பெயரில் அபத்தங்களைக் கொண்ட்டாடுவதும், பணம் சம்பாதிக்கும் விதமாக ஒரே நடிகர், நடிககைகளைக் கொண்டாடுவதும்தான் அடையாளமா?
2004 ல் கேன்ஸ் திரை விழாவில் திரையிடப்பட்ட படம்.
2005 ல் சான்சிபர் (zanziber international film festival) திரை விழாவில் கோல்டன் தோவ் (Golden Dhow) விருது பெற்ற திரைப்படம்.

ஐயா இளங்கோ அவர்களும், புதுகை செல்வா அவர்களும் இந்த விழாவினை ஒருங்கிணைத்தனர். கவிஞர்கள் மு.கீதா அம்மா, வைகறை அண்ணன், சிறுகதையாளர் அண்டனூர் சுரா, விமர்சகர்கள் ஸ்டாலின், சுரேஷ் மான்யா, பத்திரிக்கையாளர் புதுகை மதியழகன் போன்றவர்களோடு இன்னும் பெயர் தெரியாத பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் என்னையும் கலந்துகொள்ள வைத்து இந்த திரைப்படம் குறித்து பேசும்படி பணித்த ஐயா இளங்கோ அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் இதுபோன்ற சிறந்த திரைப்படங்களை தமிழ் மொழியில் திரையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன்
சுகன்யா ஞானசூரி.