Saturday, May 5, 2018

கீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்

 
 கீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்:

1. மீன்காரத்தெரு
2. மீன்குகைவாசிகள்
3. கருத்த லெப்பை
4. வடக்கேமுறி அலிமா
5. குட்டிச்சுவர் கலைஞன்
 
ஆகிய நான் வாசித்த ஐந்து படைப்புகளை முன்வைத்து பெண்ணியம் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் எனது அவதானத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
 
சாதியும் மதமும் சாமானிய மக்களுக்கானதில்லை. அது பெரிய மனிதர்களெனும் போர்வைக்குள் உளன்றுகொண்டிருப்பவர்களுக்கு வடிகாலாக, திமிர்த்தனத்தின் வெளிப்பாடாக, மற்றவர்களை அடக்கி ஆழ்வதற்கு, அவர்களுக்கு சேவகம் புரிவதற்கு கருவியாக தேவைப்படுகிறது. 

இந்து, கிறித்துவ மதங்களுக்கு இணையாக இஸ்லாமிய மதத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் புரையோடிப் போயிருக்கின்றன. மீன்காரத் தெருவின் மனிதர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பங்களாத்தெருவாசிகள் உயர்குடிகளாகவும் வருகிறார்கள். இது மீன்குகைவாசிகளிலும் காணக் கிடைக்கிறது. கருத்த லெப்பை, வடக்கேமுறி அலிமா போன்றவற்றிலும் இந்த ஏற்றத்தாழ்வுகள் காணக்கிடைக்கின்றன. குட்டிச்சுவர் கலைஞன் இவற்றிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு அது இலக்கியத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, லாபிகளை, நக்கலும், நய்யாண்டியுமாக சொல்கிறது. இதில் இலக்கிய அரசியல் நிறையவே காணக்கிடைக்கிறது. அரசியலை எள்ளலோடு இன்னும் தூக்கலாக தந்திருக்கிறார். 

பெண்ணியம்: 
எந்த ஒரு நிகழ்வானாலும் பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள்மீது நிகழ்த்துகின்ற வன்முறைகள், பாலியல் சீண்டல்கள், குடும்பச்சுமைகள் என பெண்களுக்கு நிகழ்த்தப்படும் நெருக்கடிகள் சாதிய, மத வேறுபாடின்றி ஓர்மமாகவே அமைகின்றன. மீன்காரத்தெரு மற்றும் மீன்குகைவாசிகள் படைப்புகளில் வருகின்ற நாயகி ஆமினா பரிதாபத்திற்குரிய பாத்திரமாக தோன்றினாலும் இறுதியில் பக்குவப்பட்டவளாக ஆகிவிடுகையில் பெரு மதிப்பு உருவாகிறது. அதுபோலவே ஆமினாவின் அண்ணியாக வரும் ரஜியா கூட்டுக்குடும்பத்தின் பொறுப்புமிக்க மருமகள். வள்ளிபீவி ஒரு மாறுபட்ட கதாபாத்திரம். கருத்த லெப்பை ருக்கையா மனம் பிறழ்ந்தவனுக்கு மனைவியாகி படும் அவலங்களும், முடமோ குருடோ எதுவானாலும் கணவனைப் பிரியாத மனைவியாக நெஞ்சை நெகிழ்த்துகிறார். வடக்கேமுறி அலிமா வாசிக்கும் நெஞ்சத்தை துயரத்தில் ஆழ்த்திவிடுகிறார். புனைகதையாக எழுதிய கதை தன் அண்ணன் மகளாக பிறக்கும் அலிமாக்கு கதையின் அத்தனை பாடுகளும் பொருந்திப்போவதைக் கண்டு ஹபிபுல்லாவின் மனைவி கணவன் எழுதும் இன்னொரு கதை தன் வயிற்றில் வளரும் குழந்தையின் வாழ்வினையும் தீர்மானிக்குமோ எனும் அச்சம் தாய்மையின் வெளிப்பாடு. சில எழுத்தாளர்கள் இப்படித்தான் சிலர் வாழ்வை முன்னமே கணித்து எழுதிவிடும் சோதிடக்காரர்களைப் போன்றவர்களாகிவிடுகிறார்கள். குட்டிச்சுவர் கலைஞனில் வரும் தாட்சாயணி சந்தேகக் கணவனின் கொடுமைகளை அமைதியாக கழுத்தில் சுருக்கிட்டு முடித்துக்கொள்கிறாள். அந்த அனுபூதி இல்லத்தில் அவள் ஆவியாகக்கூட வரத்தயங்குவாள். அவள் வீட்டின் துளசிச் செடியும், செம்பருத்தம் பூக்களும் வாடிப்போவதன்றி வேறென்ன நிகழ்ந்துவிடப்போகிறது. 

இந்தப் பெண்களுக்கெல்லாம் நேரெதிர் பாத்திரமாக வருகிறார்கள் ரமிஜாவும், அன்பம்மாவும், மும்தாஜும். ரமிஜா பங்களாத் தெருவில் இருக்கும் பெரிய வீடுகளுக்கு மீன்காரத் தெருவின் பெண்களை வேலைக்கு அழைத்துச் செல்வதும், எசமானர்களுக்கு பெண்களை தருவிக்கும் தரகுப் பெண்ணாக வருகிறாள். அன்பம்மாள் எசமானர்களால் சீரழிக்கப்பட்ட பெண்களின் கருவைக் கலைக்கும் தாதியாக வருகிறாள். அன்பம்மாள் ஓர் கிறித்துவப் பெண்மணி என்பதும் அறியமுடிகிறது. மும்தாஜ் நைனாவை பிடிக்காமல் உடல் வேட்கையில் வேறு ஒரு சிறு பையனை நிக்காஹ் செய்வதும், நைனாவை வெறுப்பேற்றும்படியாகவும் வருகின்ற ஒரு திமிர் பிடித்த பெண். 

அரசியல்: 
மீன்காரத்தெரு மற்றும் மீன்குகைவாசிகளில் வரும் காசிம் அன்றைய திராவிடக் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு செல்லும் ஒரு இளந்தாரி. அண்ணாவின் புகைப்படம் ஒரு குறியீடு. காசிமின் மேடைப்பேச்சுகள் அவனது அரசியல் கனவினை எடுத்துச் சொல்கிறது. பொருளாதாரமே அரசியலின் மட்டங்களை நிர்ணயிக்கிறது. ஓதம் வியாதியோடும் குலாம் கடையின் டீ மாஸ்டராக பணிபுரிந்துகொண்டு கட்சியின் மேடைகளில் பேசி கணீர் காசிம் எனப் பெயர்பெற்றாலும் ஒரு வார்டு கவுன்சிலர் பதவியைக் கூட பணமே தீர்மானிக்கிறது. மீன்காரத்தெருவாசிகளுக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமல் போவதை காசிமின் ஏக்கங்கள் வாயிலாக அறியமுடிகிறது. 

ஈழப்பிரச்சினைகள் ஒவ்வொரு நாவலிலும் அங்கங்கே எதிரொலிக்கிறது. அதிலும் குட்டிச்சுவர் கலைஞனில் பிரமாதமாகப் பதிவு செய்கிறார். உண்ணாவிரதப் பந்தலில் திமுக தலைவர் திருமிகு கலைஞர் அவர்கள் சொன்ன "மழை விட்டும் தூறல் விடவில்லை" எனும் அந்த வாக்கியம் எழுத்தாளர் அரளி பூவுடனான நேர்காணலில் வெளிப்படுத்துகிறார். இந்த நேர்காணலில் ஈழதேசியத் தலைவர் திருமிகு பிரபாகரன் அவர்களது மரணத்தையும், இருப்பையும் குறித்தும் குட்டிச்சுவர்க் கலைஞனின் மரணம் மற்றும் இருப்பினூடாக விவரித்துச் செல்கிறார். இன்றைக்கு ஈழத்து இலக்கிய வெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கும், இஸ்லாமியத் தமிழர்களுக்குமிடையில் நடந்துவரும் கருத்து மோதல்கள் ஆரோக்கியமான சூழலாக இல்லை. அதேபோல் இறுதி யுத்தம் முடிந்து ஒரு தசாப்தத்தினை தொடும் இவ்வேளையில் தமிழர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. உலகநாடுகளும் வேடிக்கைதான் பார்க்கின்றன. "கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என மய்யத்தின் ஸ்தாபகர் சொல்வதுபோல் பிரபாகரன் இருந்திருந்தால் நல்லாயிருக்கும் என்றே சொல்ல துவங்கியுள்ளனர் ஒட்டுமொத்த தமிழர்களும்."

இங்குள்ள இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் ஆதியை வசதியாக மறந்துவிட்டு நேரடியாக அரேபியாவில் இருந்து வந்தவர்கள் என்ற மமதையில் திரிவதையும் முத்துகனி பாய் பாத்திரத்தினூடாக பதிவு செய்கிறார். தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியன் என்றால் தீவிரவாதி என பொதுப்புத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது இந்துத்துவவாதிகளின் திட்டமிட்ட செயல். இதுபோலவே இஸ்லாமிய இளைஞர்களிடத்தில் துவேசத்தினை விதைப்பதாகவும் சாடியுள்ளார். முத்துகனி பாய் சொல்வதுபோல் "மதத்தை பக்குவமாக சொல்லித்தர வேண்டும் வெறியூட்டக்கூடாது." இது அனைத்து மதத்தினருக்கும் பொருத்தமானதே. 

ஒவ்வொரு நாவலிலும் எழுத்தாளரின் எழுத்து மெருக்கேறி வருவதை நாம் வாசிக்கும்போது உணர்ந்துகொள்ள இயலும். அதிலும் குட்டிச்சுவர் கலைஞனில் அவரது எழுத்துகள் நர்த்தனமாடியிருக்கின்றன. "எலுத்தாளர் பொம்மை" இருக்குங்களா என சிறுவன் கேட்குமிடம் சிரிப்பின் சரவெடி. நாவலில் இப்படியொரு நகைச்சுவையை வாசிப்பது புதியதொரு முறையாகவே தெரிகிறது. தொடரட்டும் இப்படியான புதிய முயற்சிகள். தமிழ் இலக்கிய வெளியில் இது புதிய பாய்ச்சல்.
 
அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல் எண்: 28,29,30,31&32