Thursday, January 7, 2021

திருச்சியில் இலக்கியச் செயல்பாடுகளின் தொய்வு ஏன்?

 

இன்று திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஒரு சுவரொட்டி. இலக்கிய தாகம் எனும் இதழ் அறிமுகம் செய்யும் நிகழ்வினை ஒரு அறக்கட்டளை ஒருங்கிணைக்கிறது. திரைப்பட இயக்குநர் சிறப்பு விருந்தினர். நிகழ்வு நேற்றா, இன்றா அல்லது நாளையா என சுவரொட்டியின் நான்கு மூலையைத் தாண்டியும் தேடினேன். நிகழ்விடம், நேரம், நாள் ஏன் ஒரு தொடர்பு எண்கூட இல்லை. ஆனால் கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆன்மீக அன்பர்கள் அனைவரும் வருக என ஒரு கேப்சன். யாருக்காக இப்படியான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்கள்?

திருச்சியில் இலக்கியக் கூட்டம் என்பதே அத்தி பூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இப்போது நிகழ்கின்றன. அதுவும் வெளியூர் (உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கு மதிப்பில்லை) படைப்பாளர்களாலே சாத்தியமாகிறது. சில வருடங்களுக்கு முன்னால் தமிழ் இலக்கியக் கழகம், கிராமியன், நோயல் இருதயராஜ், சுதீர் செந்தில் என இலக்கியங்களை சோறு போட்டு வாழ வைத்தவர்கள் என நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டு வியப்படைந்தேன். அப்படி சிறப்புற்று விளங்கிய திருச்சி இலக்கிய நிகழ்வுகள் ஏன் இப்படி ஆயின?

கடந்த பத்தாண்டுகளாக திருச்சியில் வசித்து வருகிறேன். ஜோ.டி.குரூஸ், சு.வெங்கடேசன், சமயவேல், பெருந்தேவி, அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி, இனியன் என சில நண்பர்கள் உரையாற்றிய சில நிகழ்வுகளில் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. அதுவும் Markandan Muthusamy ஐயா மற்றும் Manikandan Thirunavukkarasu அண்ணன் போன்றவர்கள் தகவல் அறிந்து அழைத்தாலோ அல்லது உரையாற்ற வருகின்ற நம் நண்பர்கள் தகவல் தந்தாலோ மட்டுமே சாத்தியமாகும். 2019 ல் எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள் கூட திருச்சியில் ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்க வேண்டும் என முகநூலில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அது எந்த நிலையில் இருக்கிறது என தெரியவில்லை. புதுக்கோட்டை வீதி, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், கோவை வசந்தவாசல் போன்றவற்றின் தொய்வற்ற செயல்பாடுகளைப்போல் எல்லா ஊர்களிலும் இலக்கியம் பரவவேண்டும்.

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பாகவே திருச்சி சார் இலக்கிய அறிவிப்புகள் செல்கின்றன. கவிஞர் Yavanika Sriram தோழரை பிரதம ஆசிரியராகக் கொண்டு இதழ் ஒன்றை கொண்டுவர வேண்டும் என மார்கண்டன் ஐயாவும் மணிகண்டன் அண்ணனும் நானுமாக கடந்தாண்டு முடிவு செய்திருந்தோம். பெருந்தொற்றின் அடைப்பினால் சுணங்கிவிட்டது. அது இப்போது அவசிய தேவையாகவே இருக்கிறது என நினைக்கிறேன். கூடவே மாதாந்திர இலக்கிய நிகழ்வொன்றும் நடாத்த வேண்டும். வெற்றிநடை போடும் தமிழகத்தில், ஐயா எடப்பாடி ஆட்சியில் காவிரிகூட திருச்சியில் தொய்வின்றி பாய்கிறாள். தமிழ் இலக்கியம் பாயும் சேதி இன்பத் தேனாய் நம் செவிகளில் பாய வேண்டாமா தோழர்களே?

- சுகன்யா ஞானசூரி
07/01/2021.

Friday, January 1, 2021

கலை மெய்மை அரசியல்


 கிழக்கு லண்டனில் பிறந்த நாடக மேதை. பிரித்தானிய அரசையும், ஐக்கிய அமெரிக்கா அரசையும் விமர்சிக்கும் நெஞ்சுரமிக்க எழுத்தாளர். மானுடத்தின் மீதான பற்றுதலும், வல்லரசுகளின் ஏகாதிபத்தியத்தினால் சிதைக்கப்படும் மக்களின்பால் குரல் கொடுக்கும் கவிஞனுமாக நோபல் பரிசு பெற்றவரும ஹெரால்ட் பின்ட்டரின் கலை மெய்மை அரசியல் எனும் சிறு நூல் தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் மொழியாக்கத்தில் வாசிக்கக் கிடைத்தது. என்.சி.பி.எச் சிறுநூல் வரிசை வெளியீடு. 


அரசியல் செயல்பாடுகளில் கலையின் பங்களிப்பு எத்தகையது? அதன் வகிபாகம் என்ன? ஒரு கலைச் செயல்பாட்டாளன் அரசியல் களச்செயல்பாட்டுக்குள் பங்காற்றுதல் என விரிந்து குர்து, நிகரகுவா, ஈராக் என பல பலிக்களங்களை எடுத்துக்காட்டுகளாக விவரித்து பின்ட்டர் ஆற்றுகின்ற உரையில் எப்படியெல்லாம் பொய்களை மெய்களாக்கி வல்லரசுகள் தங்களின் ஆக்டோபஸ் கரங்களை (இராணுவ கேந்திரங்களை) விரிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஒருவேளை அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்திருந்தால் ஈழத்தில் நிகழ்ந்த யுத்தப் படுகொலைகளையும் சுட்டியிருப்பார். 


மரணம் எனும் அவரது கவிதை கைவிடப்பட்ட ஒரு சடலத்தின் மீதான ஒரு விசாரணையைக் கோருவது போன்ற விவரணைகள் ஒரு புலன்விசாரணை. உண்மையிலேயே தமிழில் இப்படியான எழுத்தாளன், கவிஞன், செயல்பாட்டாளன் இருந்தால் தவறான முத்திரை குத்துதல், காயடிப்ச் செய்தல் என நிகழ்ந்துவிடும் அபாயம் உள்ளது. அதை இங்கே தேர்வு செய்யவும் விரும்புவதில்லை. 

* எழுத்தாளனுடைய வாழ்க்கை என்பது அதி பலவீனமானது. அநேகமாக அம்மணமான நடவடிக்கை. அதற்காக நாம் அழுது கொண்டிருக்கத் தேவையில்லை.

* நாம் காண்பதெல்லாம் என்றும் முடிவுறாத பிரதிபலிப்புகள்தான். 

ஆம் பின்ட்டரிஸ் எனும் கோட்பாட்டை புதிதாக உருவாக்கியவரின் இந்த வார்த்தைகள் எத்தகைய நிதர்சனமானவை. 

- சுகன்யா ஞானசூரி

01/01/2021.

குணா கவியழகனின் கர்ப்பநிலங்கள் சொல்வதென்ன?


 

http://puthiyaparimaanam.in/?p=1733 இணைய இதழில் வெளியாகியுள்ள நாவல்கள் குறித்த மதிப்புரை உங்கள் வாசிப்புக்கு வசதியாக கீழே.


தமிழ் இலக்கியத்தில் போர் இலக்கியத்திற்கு ஈராயிரம் ஆண்டு பாரம்பரியம் இருக்கிறது. புறநானூற்றுக்குப் பிறகு போரினை மையம் கொண்ட படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் விரல்சுட்டும் அளவில்கூட இல்லை. சமகாலத்தில் ஈழப்போர் அதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதாகவே தெரிகிறது. குணா கவியழகன் இந்த போர் இலக்கியங்களில் தவிர்க்கவே முடியாதவராக தனது ஐந்து நாவல்களினூடாக சாட்சியமாக்கியிருக்கிறார். நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம், கர்ப்ப நிலம்-1&2 என தொடர்ச்சியாக வாசித்தவர்கள் இதை விளங்கிக்கொள்வர். இவைகள் ஒரு நிலமிழந்த சமூகத்தின் ஆவணமாகின்றன. இது மிகையல்ல. இவ்விரு நாவல்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிகக் கனமான செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அஃறிணை, உயர்திணை என்ற பாகுபாடுகள் அற்று அவையவை தமது பாத்திர வெளிப்பாடுகளை செவ்வனே செய்கின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக விவரித்து எழுத விருப்பம்தான். நீளமாகிவிடும் அபாயம் கருதி முக்கியமான சில பேசுபொருளை மட்டும் சுருக்கமாக இங்கே சுட்டியிருக்கிறேன். இது எனது வாசிப்பிலும், நான் வாழ்ந்த வாழ்க்கையிலும் கண்டவைகளும் மட்டுமே. இதுவே முழுமையானதும் அல்ல.


பிரிட்டனின் நாடகமேதை ஹெரால்ட் பின்ட்டரின் நாடகங்களில் "அறை" ஒரு முக்கியமான உயிரியாக இடம்பெறுவதைப் போலவே "நிலம்" என்ற ஒன்றே குணா கவியழகனின் அனைத்து நாவலிலும் களமாக, பிரதான உயிரியாக, பாத்திரமாகிறது. ஈழம் எனும் ஒரு குட்டி தேசத்தின் நிலங்களின் வெவ்வேறு குணாம்சங்களை அவரது ஒவ்வொரு நாவலிலும் காணமுடியும். அது இரத்தத்தாலும், கண்ணீராலும், வியர்வையாலும் சூழ்ந்த நிலம். இதிகாசம் துவங்கி முடிந்து போன முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை இந்த நிலம் போரினையே பல நூற்றாண்டுகள் காவித்திரிந்த நிலம். இத்தகையதொரு நிலத்தில் வேரூன்றி நின்ற சமூகம் வேரறுத்து புலம்பெயர்ந்து வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவுகளுக்குள் தம்மை பிணைத்துக்கொண்ட வாழ்வியலை வெற்றி, தோல்வி, குரோதம், ஏக்கம் என பல்வேறு உணர்வுகளை மீளவும் நினைத்துப் பார்க்கும்படியாக அமைந்திருக்கின்றன கர்ப்பநிலங்கள்.


1995 அக்கோடபர் 30 ல் யாழ்ப்பாணத்தை விட்டு மக்கள் கிளாலி நீரேரி வழியாக வன்னி எனும் பெரிய வனாந்தரமான பெரும் நிலப்பரப்பிற்குள் செல்வது வரையான காலகட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்களை கர்ப்பநிலம் -1 வனமேகு காதை சொல்கிறது. யாழ் குடாநாட்டிலிருந்து மக்கள் கைதடிப் பாலம் வழியாக வெளியேறிய துயர்மிகு கதைகள் அவை. அதுவரையிலும் நினைத்துப் பார்த்திராத பாரிய புலப்பெயர்வு அது. கர்ப்பநிலம் -2 போருழல் காதை அந்த பெரும்நிலத்தில் நிகழ்ந்த போர்களையும், பெருங்காட்டுக்குள் நோய்களாலும், பட்டினிகளாலும் அல்லலுற்ற சமூகத்தின் அவலங்களை சொல்கிறது. இது இரண்டாயிரம் ஆண்டளவு வரையான காலகட்டத்தை பேசுகின்றது. அதன்பிறகு நடந்தவைகளை இந்த உலகமே பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இரண்டு நிலங்களிலிருந்தும் பிய்த்தெறியப்பட்டு மூன்றாம் நிலத்தில் இருந்துகொண்டு எழுதும் நான் அத்தனைக்கும் சாட்சியமாகி நிற்பதை உணர்கிறேன்.


இது தமிழ் - சிங்களம் என இரு இனங்களின் அரசியல் பிளவுபாடுகளுக்கு அப்பால் இரு இனமும் தனித்தனி இனமல்ல இரண்டும் ஒன்றேயான திராவிட இனம் என வலியுறுத்துவதாகவே நான் பார்க்கிறேன். அதுதான் விஞ்ஞான உண்மையும்கூட.  ரத்னநாயக்கா-நாகமணி என இரு தரப்பிலும் சாமான்ய வாழ்வில் புயலடிப்பதுபோல் கலவரங்களும், போரும், அரசியல் காய்நகர்த்தலும், மக்களின் அவலமான வாழ்க்கையென சொல்லப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்குள் மணிநாகன் எனும் தொன்ம கதாபாத்திரம் வழியே நாவலை தொய்வின்றி கடத்தியிருப்பது சிறப்பு. மூப்பனாக மாதவன் ஐயாவைக் கண்டடையும் இடங்களும், மாதவன்-மயிலு காதல் என காட்டின் இன்னொரு குறுங்காவியம்.




கொலராவால் அன்ரனின் தாயார் இறப்பதும், அன்ரன் கொலராவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் நாகமணியின் மகளும் அன்ரனின் மனைவியுமான தேவி இவர்களோடு படும் துன்பம் என நோய்களால் போர்நிலம் மறுபுறம் மடிந்துகொண்டிருந்தது. இன்றைக்கு தீநுண்மியால் (கொரோனா) உலகமே முடமாகியிருக்கிறது. கட்டற்று மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. இதில் போர் ஏற்பட்டு, மருந்துத் தட்டுப்பாடும், உணவுத்தட்டுப்பாடும் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது இல்லையா? அப்படித்தான் நிகழ்ந்தது. இல்லை நிகழ்த்தப்பட்டது. கொலரா எனும் நோயாலும், குலைப்பன் என்று அழைக்கப்படும் மலேரியா நோயாலும் பெருங்காட்டுக்குள் மக்கள் பாதிக்கப்பட்டு செத்து வீழ்ந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சுகாதாரப் பிரிவினரால் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட விதம் என்றென்றும் நினைவுகூரத்தக்கது. கொல்லர் புளியங்குளம் காட்டுக்குள் ஒருவர் மாற்றி ஒருவர் என குலைப்பன் நோயால் நாங்கள் பட்ட பாடுகள் சொல்லி மாளாது. அதோடு மாலை வேளையானால் மொய்க்கும் சக்கரபாணி வண்டுகளின் தொந்தரவோ கொடியது. புலிகளிலிருந்து மக்களையும், மக்களிலிருந்து புலிகளையும் பிரிப்பதற்காக உளவியல்ரீதியாக ஆட்சியாளர்கள் செயல்பட்ட விதம், போரின் தந்ரோபாயங்கள் என  மிகக்கொடிய நாட்கள் அவை. நோய்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகின.


 இரண்டு சிவில் சமூகங்களுக்கும் போர் என்பது பல்வேறு இழப்புகளையே வழங்கினாலும் அரசியல் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களை அண்டிப் பிழைக்கும் சுரண்டல்வாதிகளுக்கு போர் பெரும் லாபம் ஈட்டிக் கொடுக்கும் தொழிலாகியிருந்திருக்கிறது. இதை அவர்கள் ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளார்கள். ரத்னநாயக்காவின் இரண்டு மகன்களில் தமிழர்கள் மீது செய்யும் போரை வெறுத்து ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் இடதுசாரியச் செயல்பாடுகளோடு உள்ள மலிங்காவிற்கும், மரம் அறுத்து ஆரியரத்னா எனும் அரசியல்வாதியோடு சேர்ந்து செய்யும் சுரண்டல்வாதியாகும் மலிங்காவின் சகோதரன்  விஜயதாசா போன்றோருக்கு இடையிலான வேறுபாடுகள் சிங்களச் சிவில் சமூகத்தின் இரண்டு வேறுபட்ட வாழ்வை வெளிப்படுத்துகின்றன. இன்றைக்கு இது தமிழ் சிங்களம் எனும் பாகுபாடின்றி வெளிப்படுகின்றது என்பதை சமீபகால அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. 


ஈழ மக்கள் மத்தியில் இடதுசாரிய அமைப்புகள் மீதான நம்பிக்கையின்மை என்பது இடையில் நிகழ்ந்த ஒன்றுதான். சிங்கள இடதுசாரிய அமைப்பான ஜேவிபியின் தமிழர்களுக்கு எதிரான துவேச செயல்களும், இடதுசாரிய கொள்கைகளோடு தமிழீழ கோசத்தை முன்வைத்து இயங்கிய புலிகள் அல்லாத சகோதர இயக்கங்களின் நம்பிக்கைத்தன்மையற்ற செயல்பாடுகளுமே காரணமாகின. விடுதலைப் புலிகள் இடதுசாரிய சிந்தனையற்றவர்கள் என நினைப்பவர்களைவிட அதிமுட்டாள்கள் எவரும் இருக்க முடியாது. மொட்டைமோகன் எனும் கதாபாத்திரம் இவற்றை மெய்ப்பிப்பதை காணலாம். அவர் விடுதலைப் புலிகள் மீது வெறுப்புக்கொண்ட சகோதர இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் தன் அமைப்பினரின் செயல்களை புலிகள் அமைப்போடு ஒப்பிட்டு தன் அமைப்பினரின் செயல்பாடுகளின் மீது கொள்ளும் அதிருப்தியான இடங்கள் இவற்றை மெய்ப்பிக்கின்றன. இடதுசாரிய சிந்தனை என்பது ஈழத்தில் முழுதாக கைவிடப்படவில்லை. 


குழந்தைகளின் மனம் கூட்டமாக வாழ்வதைக் கண்டு குதூகலிக்கின்றது. அதுதான் குழந்தை மனதின் இயல்பு. போரினால் இடம்பெயர்ந்து வந்த சிறுவர்கள் ஒன்றாகி விளையாடுவதும், குட்டிச் சமையல்கள் செய்வதும் என அவர்களின் உலகம் ஒரு சுதந்திரமான உலகம் என்பதை நாகமணியின் பேரன் கதிர் ஊடாக நாம் காணலாம். கூட்டாஞ்சோறு ஆக்கும் சிறுவர்கள் மத்தியில் கதிரின் அக்காவை மற்றவர்களோடு சேரவிடாது பெரிய பிள்ளையாயிட்ட என தடுத்து வைக்கிறார் கதிரின் தாயார். தன்னோடு விளையாட வராத தமக்கையின் மீது வெறுப்பு உருவாகுவதும். தன்னோடு விளையாடும் பக்கத்து வீட்டு தயாளினி அக்கா மீது பாசம் அதிகரிப்பதும் என குழந்தைகளின் மனம் ஊற்றி வைக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப நீர் தன் வடிவத்தை அமைக்கும் என்ற விதியை மெய்ப்பிக்கிறது. பெரியவளாகிட்ட எனும் சொல்லால் சிறுவர்களின் எல்லையை நாமேதான் தீர்மானிக்கிறோம் இல்லையா? செல் விழுந்து தலை சிதறிச் சாகும் தயாளினியின் இறப்பு கதிரின் மனதை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பதினூடாக ஒட்டுமொத்த சிறுவர்களின் மனங்களையும் நாம் உணர முடியும். அச்சம் ஒரு கட்டத்தில் வெறுப்பாகி வெறுப்பு குரோதமாகும் இடத்தில் பழிவாங்கல் உணர்வு தானாகவே சிறுவர்களை ஆட்கொள்ளும். அதுவே போருக்கு செல்வதற்கான மனநிலையை உந்தித்தள்ளும். அதை நாம் விடுதலை எனும் பெயரால் அறுவடை செய்கிறோம் இல்லையா?


நிலம்மீள் காதை என கர்ப்பநிலம்-3 வராதா எனும் ஏக்கம் புலம்பெயர்ந்து கிடக்கும் ஈழத்துச் சமூகங்களின் தாய்மண்ணை காணும் பேராவலைப் போன்றிருக்கிறது. நாவல் வருவதும் வாராது இருப்பதும் எழுத்தாளர் கையில் இருப்பதுபோல் தேசம் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் ஒட்டுமொத்த மக்களின் கைகளில்தான் இருக்கிறது. 

- சுகன்யா ஞானசூரி.

soorymicro@gmail.com


தோழர் பொதியவெற்பனின் அரை நூற்றாண்டுப் பயணம்

 


இன்று திருச்சி என்.சி.பி.எச் சென்றிருந்தபோது நான்கு சிறுநூல்கள் வாங்கிவந்தேன். அதில் முதல் நூலாக தோழர் பொதியவெற்பன் எனும் பெரும் ஆளுமையை இச்சிறுநூல் வழி இன்று கொஞ்சம் அறிந்துகொண்டேன். இதுவரை நேரில் பார்த்ததில்லை. முகநூலில் அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்த எனக்கு இது ஒரு சிறு நூல் எனினும் வீ.அரசு அவர்களின் உழைப்பு பல்வேறு தளங்களில் தோழர் பொதியவெற்பன் அவர்களை அணுகியிருக்கும் விதம் பின்வரும் தலைமுறை எடுத்தாள ஒரு துவக்கப்புள்ளியை இட்டுச் செல்கிறது. கனமான புத்தகங்களை வாசிப்பதைக் காட்டிலும் கனமான விடையமுள்ள இச்சிறு நூல்கள் எனக்கு வாசிப்பதற்கு ஏற்றதாக இருப்பதாக (ரொம்பச் சோம்பேறி ஆகிவிட்டேன்) உணர்கிறேன். வாய்ப்புள்ளோர் வாசித்துப் பாருங்கள். தோழர் பொதியவெற்பன் பொதிகைச் சித்தராக வந்து நிற்கும் இடத்தை அறிந்துகொள்ளலாம். அவரை நாம் எந்த ஒன்றிற்குள்ளும் அடைத்துவிட முடியாத தமிழின் மிகப்பெரும் ஆளுமையே.

- சுகன்யா ஞானசூரி

24/12/2020.