Friday, May 20, 2016

அப்பால் ஒரு நிலம்"போர்" எமக்கு வாழ்வின் பெரு வலியாக இருப்பினும் அது எமக்கு பல பாடாங்களைக் கற்றுத் தந்துள்ளது. பங்களா வீடும், தோட்டம் துறவுகளோடும் வாழ்ந்த மக்கள் விலங்குகள் வாழும் காடுகளில் தார்ப்பாய்க் கொட்டில்களுக்குள் வாழ்வைத் தகவமைத்துக் கொண்டனர். இது எம் மக்களை பல வகையிலும் இந்த நூற்றாண்டின் மகத்தான மனித வாழ்வை கட்டமைக்கச் செய்துள்ளது. பல்வேறுபட்ட தேசங்களின் போரிலிருந்து ஈழத்தின் போரை வெறுப்பது தவறு. இது ஒரு இனத்தின், ஒரு மக்கட்கூட்டத்தின், நாகரிகத்தை, கலை, கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கத் துடிக்கின்ற ஒரு மனித இனத்தின் வாழ்வைக் காப்பாற்ற, இருப்பைத் தக்கவைக்க முனையும் ஒரு மரபுவழி இனக்குழுவின் இறுதி ஆயுதம்.

"ஈழம்" தமிழ் இனம் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த, வருகின்ற தாய் நிலம். ஆணிவேர் ஆழப்பாய்ந்த அந்நிலத்திலிருந்து அறுத்தெறிய முனைவது எவ்வளவு கயமை நிறைந்தது? கொடியவர்கள் அதைத்தான் செய்தார்கள். "இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடத்தைப் பிடிப்பார்கள்" எனும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஆதிக்குடிகளை அழித்தொழித்துவிட்டு இன்று வந்தேறிகள் வாழ்கிறார்கள். இருப்பினும் இலக்கியத்தினூடே அது தன்னை மீளக் கட்டமைத்து வாருகிறது. அழித்தொழிக்கப்பட்ட இனம் இலக்கியத்தினூடே தன்னை மீளக் கட்டமைத்துக் கொள்வது அவசியத் தேவையும்கூட.

"தமிழ் இலக்கியம்" இன்று மூன்று வகையாக தன்னை கட்டமைத்துள்ளது. முதலாவது தமிழகத்திலிருந்து எழும் இலக்கியம். இரண்டாவது ஈழத்திலிருந்து எழும் இலக்கியம். மூன்றாவது புலம்பெயர் தேசங்களிலிருந்து எழுகின்ற மூன்றாம் இலக்கியம். மூன்றாம் இலக்கியம் பெரும்பாலும் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களாலேயே இயற்றப்படுகின்றது. இவ்வகை இலக்கியம் புனைவுகளுக்கு அப்பாற்பட்ட எதார்த்தமான, வாழ்வியலின் உண்மைகளை திரிபற்று உரைப்பவை. இத்தகைய மூன்றாம் இலக்கியப் பரப்பிலிருந்து வெளிவந்திருக்கிற குணா கவியழகன் அவர்களது "அப்பால் ஒரு நிலம்" நாவல் புறவாழ்வின் எதார்த்தத்தை செப்புகின்ற அற்புதமான போரின் வாழ்விலக்கியம்.

"அப்பால் ஒரு நிலம்" உலக வரைபடத்தில் தமிழகத்தின் கீழ் ஒரு கண்ணீர்த் துளிபோன்ற நில அமைப்பைக் கொண்டது. ஈழத்தின் வரைபட அமைப்பைப் போலவே மக்கள் வாழ்வும் கண்ணீர் சூழ அமையும் என்பதை யூகித்திருக்க முடியாதுதான். ஆனால் விதி அப்படித்தான் அமைத்து வைத்தது. வடக்குக், கிழக்குப் பிரதேசங்களின் வளங்களை சிதைத்தழித்த கொடியவர்களையும், அவற்றையெல்லாம் முறியடித்து வளப்படுத்தி ஆட்சி புரிந்த புலிகள் அமைப்பையும் நாம் மறந்துவிட முடியாது. மறுத்துவிடவும் முடியாது. 1994 இறுதி தொடக்கம் 1996 மத்திய கால இடைவெளியில் யாழ் குடாநாட்டில் பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து பின்பு 1996 செப்டம்பரில் தமிழகத்திற்குள் புலம்பெயர்ந்த இடைவெளிக்குள் அனுபவித்த வேதனைகள் ஏராளம். இக்கால வேதனைகளை மீள வாசிக்கையில்தான் எத்தனை விடயங்களை அசைபோட வைக்கிறது.  இந்தக் கால இடைவெளியில் இயக்கம் சிறுசிறு வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் மொத்தத்தில் யாழ்குடா நாட்டை இராணுவத்திடம் இழந்து பாரிய பின்னடைவைச் சந்தித்தது. போரின் பின்னடைவில் தளபதி தண்டிக்கப்படுவதும், மீளக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை மீட்டுருவாக்கம் செய்வதும். அஅதற்காக எடுக்கப்படுகின்ற சிரத்தைகளும். அதில் ஏற்படும் உயிர்பலிகளும், அவற்றைப் பொருட்படுத்தாது விடுதலை எனும் இலக்கை நோக்கி பயணப்படுவதும் மணியின் பாஷையில் சொல்லப் போனால் ஊசியடிப்பது போல் உள்ளது. எவ்வித போலிகளுமற்று. புலிகளின் அமைப்பில் மிகவும் திறமையும், சாகசமும் மிகுந்த, எதிரிக் குகைக்குள் நுழைந்து உளவறியும் வேவுப் புலிகளின் வாழ்வை இவ்வளவு நுட்பமாக எவராலும் சொல்லிவிட முடியாது.

அடுத்து என்ன நடக்கும், நாளை உயிரோடு இருப்போமா? எதுவும் நிச்சயமாய்த் தெரியாமல் கூடியிருக்கும் சக போராளிகளோடு பன்பலடிப்பதும், பகிர்ந்துண்பதும் என இவ்வளவு எளிமையானவர்களை, இளகிய மனம் படைத்தவர்களை சிங்களமும், உலக வல்லாதிக்கமும் இணைந்து எப்படி அழித்தொழித்தது இவர்களைக் கொடியவர்களென. மாபெரும் தவறை தமிழினத்திற்கு உலக வல்லாதிக்கம் இழைத்திருப்பதை மறந்துவிட முடியாது.

றோமியோ கதாபாத்திரம் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணாவையே நினைவுகூர்கிறது.

துரோகத்தின் விளைவால் முள்ளிவாய்க்காலில் எமது போர் முடிக்கப்பட்டாலும் அது தந்த இரணங்களை மறக்கவியலாது. அப்பால் ஒரு நிலம் எமது அடுத்த தலைமுறைக்கு ஒரு ஆவணம். போலிகளைக் கொண்டு உண்மைகளை மூடிமறைக்க எத்தனிப்போருக்கு மத்தியில் கொரில்லா யுத்தமுறையிலிருந்து மரபுவழி யுத்த முறைக்கு கட்டமைத்து சிறப்புற நிர்வாகம் செய்த உத்தமர்களை இன்னும் ஆவணமாக்க வேண்டும். ஈழ இலக்கிய வெளியில் ஒரு மைல்கல்லாகவே பார்க்கிறேன். இது எமது அடுத்த தலைமுறையினருக்கு போரின் வடிவத்தை மாற்ற, இழந்துபோன அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்யவல்லது. இவற்றோடு நின்றுவிடாமல் எம்மினத்தின் அடையாளத்தை, இன்ப துன்பங்களை, வாழ்வியல்ப் போர்களை ஆவணப்படுத்த வேண்டுமாக.
- சுகன்யா ஞானசூரி.
19/05/2016