Friday, November 26, 2021

பாக்களத்தம்மா - எங்கள் கதை

அன்பின் தோழர் புலியூர் முருகேசன் அவர்களுக்கு தோழமை வணக்கங்கள். 


நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலம் என்றே நம்புகிறேன்.


பொதுவாக கடிதம் எழுதி நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது. தங்களின் பாக்களத்தம்மா வாசித்ததும் தங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் எனத் தோன்றியது. கடிதம் வழிதான் உயிரோட்டம் உள்ளவற்றை கூறமுடியும் என்பது கடித வரலாறு. 


கருத்த வானம் குமுறிக் கொண்டிருக்கும் இன்றைய (26/11/2021) காலையில் பாக்களத்தம்மாவை வாசித்து முடித்தேன். நவம்பர் 7 அன்று கும்பகோணம் பக்கங்கள் நிகழ்வுக்குப் பிறகு அம்மா சத்திரம் தோழர் சரவணன் இல்லத்தில் நீங்கள் உங்களின் பாக்களத்தம்மா நாவலை எனக்கு தந்தீர்கள். நாவல் வெளியாகி சரியாக பதினொரு மாதங்கள் ஆகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு பெரிய துயரார்ந்த கதையை நாவலாக்கியுள்ளீர்கள். இருபது வருசத்துக்கு முன்னால் (அப்போது எனக்கு 17 வயசு) எங்கள் குடும்பத்தில் நடந்த துயர நிகழ்வுகளை நான் மீண்டும் நினைத்துப் பார்ப்பேன் என நினைக்கவில்லை. பாக்களத்தம்மா இன்று அத்தனையையும் மீண்டும் நினைவுபடுத்தி நெஞ்சை கனதியாக்கிவிட்டார். 


அகதியாகி வந்த நிலத்தில், முருகனின் தீவிர பக்தையான அம்மம்மாக் கிழவியின் மரணத்திற்குப் பிறகு எங்கள் பெரிய குடும்பம் எப்படிச் சிதறியது, யாரால் சிதறியது என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். என் அம்மாவின் உடன்பிறந்தவர்களால் அப்பாவும் அம்மாவும் ஏமாற்றப்பட்ட நாளில் நவீன வளர்ச்சி எங்களின் வாடகை சைக்கிள் கடையையும் காவு வாங்கியது. பெயிண்ட் வேலை, வார்னிஷ் பூச்சு வேலை, அறுப்பு வேலை என அப்பாவுக்கு ஒத்தாசையாக வேலை பார்த்த நாட்களை மீண்டும் பாக்களத்தம்மா நினைத்துப் பார்க்க வைத்துள்ளார். வசதியான முறையில் வாழ்ந்த பிள்ளைகள் இப்படி பாதியில் கஷ்டப்படுவதை நினைத்து தந்தை கண்கலங்கி புலம்பியதை கண்கூடாகப் பார்த்தவன் நான். இன்றும் அந்த நிகழ்வுகள் வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதே எங்கள் அவாவாக இருக்கிறது.


உடன்பிறப்பால் ஏமாற்றப்பட்ட பிறகும் தன் நான்கு பிள்ளைகளையும் பட்டதாரியாக்கியே தீருவேன் என்ற வைராக்கியத்தில் தாலிக்கொடியைக்கூட வித்து சாதிச்சுக் காட்டிய என் பெற்றோருக்கு இன்று பிள்ளைகள் தலையெடுத்து, பேரப்பிள்ளைகளோடு சந்தோஷமாக இருந்தாலும் அந்த ஏமாற்றத்தின் வடு அவ்வப்போது நெருடுவதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பேச்சு காட்டிவிடும். வாழ்ந்த வீட்டை இழந்து,  நிலத்தினை இழந்து எல்லாவற்றையும் தாண்டி நாங்கள் வாழ்வது ஆச்சரியமான ஒன்றுதான். அது இவர்கள் முன்னால் நாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற அம்மாவின் சபதமே. பெண்களால்தான் இந்த உலகம் இன்னமும் உயிர்ப்போடும், உறுதியோடும் இயங்குகிறது என்றால் மிகையில்லை.

வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் கதைகள் மிகவும் ரணமானது. பாக்களத்தம்மா அப்படியான ஒரு வாழ்வியலின்  கதை. நாகையா போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருப்பதுதான் உறவுகள் அறுபடாமல் கொண்டிழுக்கிறது. அவைகள் நல்லபடியாக செல்லும்பட்சத்தில் வாழ்கின்ற அக்குடும்பத்தின் கெத்தாகும். அதுவே தீதாகையில் வெறுமையே மிஞ்சும். 


மூக்குத்திக் காசிக்குப் பிறகு நான் வாசிக்கும் தங்களின் நாவல் இது. இரண்டுக்கும் இடையிலான காலவெளியில் தங்களின் எழுத்து மெருகேறியிருக்கிறது. பரமபத விளையாட்டைப் போலவே வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் மிகுந்தது. ஒரு தொன்மக் கதையாடலையும் ஊடுபாவாக  இந்த நாவலில் நிகழ்த்திக் காட்டும் சாத்தியம் இருந்தும் ஏன் அதனைத் தவறவிட்டீர்கள்? அப்படி இருந்திருந்தால் நாவல் எனும் வகைமைக்கு ஒரு முழுமை கிடைத்திருக்கும் என்பது எனது அவதானிப்பு. அகதியெனும் மனநிலை நீங்கி  புலியூர் நிலத்தில் நீங்கள் கால்பதித்து வாழ வாழ்த்துகிறேன்.


எங்கள் கதையை எழுதிய தங்களுக்கு ஆயிரம் முத்தங்கள் தோழா.

- சுகன்யா ஞானசூரி

26/11/2021.