Wednesday, May 8, 2024

சீரான அவதானிப்பு


 விருது வழங்கும் எல்லா அமைப்புகளும் விருதாளர்களை சீர்தூக்கிப் பார்த்து வழங்க வேண்டும் என்ற முதல் செய்தியை சீர் வாசகர் வட்டம் எம் மூப்பன் Pothi ஐயாவுக்கு விருதினை வழங்குவதனூடாக அறிவிக்கிறது. இதுவே நல்ல துவக்கம். எந்த ஒன்றிற்குள்ளும் அடைக்க முடியா பேராளுமைக்கு சீர் வாசகர் வட்டம் சரியான தெரிவாக முதல் விருதினை அறிவித்திருப்பது பெருமகிழ்ச்சி. ஐயா பொதியவெற்பன் அவர்களுக்கும் சீர் வாசகர் வட்டம் தெரிவாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 தொடரட்டும் இந்த அறப்பணி.


விருது வழங்குவோரின் குறிப்பு கீழே


சீர் வாசகர் வட்டம்


இலக்கிய விருது - 2024


கலை, இலக்கிய, தத்துவத் தளத்தில் தனித்தமிழ் இயக்கம், பெரியாரியம்,  இடதுசாரியம்  என்று பரந்துபட்ட பல்வேறு வகைமைகளில்  அரை நூற்றாண்டுக்கும் மேலாய் அரசியல் உணர்வோடு தீவிரமாய் இயங்கி வருபவர்.


1980களில் 'முனைவன்' காலாண்டிதழ் மூலம் தன் சிற்றிதழ் பயணத்தைத் தொடங்கியவர். 'சிலிக்குயில்' வெளியீடுகள் மூலம் கலகக்குரல்களை கூர்மையான விமர்சன நூல்களை வெளியிட்டவர்.  'புதுமைப்பித்தமும் பிரமிள் சித்தமும்', 'திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்', 'கருமை செம்மை வெண்மையைக் கடந்து', 'தமிழின் நிறமும் ஆரியவர்ணமும்' உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். 


தான் கொண்ட கொள்கைக்கான களத்தில் புறமுதுகிடாத போர்வீரர். தமிழில் தனித்த எழுத்துநடைக்குச் சொந்தக்காரர். ஆழ்ந்த வாசிப்பும் நுண்ணிய விமர்சனப்பார்வையும் கொண்டவர். விமர்சன உரையாடல் கலையில் வல்லவர். இன்றும்கூட நவீன ஊடக முகமாக இருக்கிற முகநூல் போன்றவற்றில்  வலதுசாரி இந்துத்துவ குழுக்களின் உளறல்களுக்கும் வரலாற்றுத் திரிபுவாதங்களுக்கும் ஆதாரங்களோடு மறுப்பு எழுதி சிம்மசொப்பனமாக திகழ்பவர்.  நேர்மையாளர். காலஓட்டத்தில் தேங்கி விடாமல் கருத்துச்செறிவோடு நதியாய்ப் பயணித்துக் கொண்டிருப்பவர். இத்தனை  சிறப்புகளுக்கு  உரியவரான எழுத்தாளர்  தோழர் பொதியவெற்பன் அவர்களுக்கு சீர் வாசகர் வட்டம் தனது முதல்  இலக்கிய விருதை அளிப்பதில் பெருமை கொள்கிறது.


விருது விழா நடைபெறும் தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி.


வாழ்த்துகளுடன் 

சுகன்யா ஞானசூரி