இந்தியா, தமிழகம் வாழ் அகதிகளுக்கான அரசின் அறிவிப்புகளும், பிரதிபலிப்புகளும் எனும் நேற்றைய நிகழ்வினையொட்டிய என் கவனப்பாடு.
1.
இந்திய குடியுரிமை கோருபவர்கள் முதலில் ஈழப் பெருமைகள் பேசுவதை விடுத்து தம்மை இந்திய இறையாண்மைக்குள் இணக்கமாக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் தோழர் பத்திநாதன். இது இங்கே சரியான பார்வையாக இருக்கிறது (அதாவது தற்சமயம் குடியுரிமை கோருவதன் காலச்சூழல் பொருத்தப்பாட்டில்). இதை நாம் அடுத்த தலைமுறையில் நம் ஆவணங்கள் அத்தனையையும் அழித்துவிடுவதின் வாயிலாக துவக்கலாம். இதுவே இதற்கான சரியான துவக்கமாகவும் இருக்கமுடியும். எம் தலைமுறையிலிருந்து துவங்கும்போது உளவியல்ரீதியாக பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். மேற்குலக நாடுகளில் குடியுரிமை கோருபவர்களுக்கு இதுபோன்ற இக்கட்டான சூழல் இல்லாமை நல்லதாகப் போய்விட்டது. இன்றைய தமிழக ஈழ அகதிகள் முகாம்களில் அடையாள அரசியல்கள், சாதிய மனோபாவ வெளிப்பாடுகள் என புதிய புதிய அடையாளங்களை ஏற்று தங்களைத் தாங்களே தலைமைகளாக கட்டமைத்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் நாம் அடையாள அழிப்பைச் செய்வதில் தவறில்லை. அதேபோல் நாடு திரும்புவோரின் மீள்குடியேற்றச் சிக்கல்களை வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் அதன் மெளனம் ஒரே அர்த்தத்தை தெளிவாகச் சொல்லிவிடுகிறது. இங்கே நாடு திரும்ப ஆசையூட்டுவோரின் பேச்சை நம்பவேண்டாம்.
2.
வடக்கு கிழக்கு நிலைமைகள் என்பவைகள் ஒருவேளை தமிழீழம் என்ற ஒன்று உருவாகியிருந்தால் பேசவேண்டிய ஒன்று. அது 2009 ஆண்டோடு முடிந்து போன ஒன்று. நீங்கள் தனித்தமிழீழக் கோரிக்கை தொடர்பான உரையாடலில் வேண்டுமானால் கோரலாம். தமிழகத்தின் அகதிகள் குடியுரிமை கோரிக்கை என்பது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒன்று. மதரீதியான முன்னெடுப்புகள் கோமாளித்தனமான ஒன்று. மலர்மகள் அம்மாவின் பேச்சுகள் அகதிகள் குடியுரிமை கோரிக்கை தொடர்பானவற்றிற்கு சம்பந்தம் இல்லாத ஒன்று.
3.
இந்திய வம்சாவளித் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என பிரித்து குடியுரிமைக் கோரிக்கை கேட்பான் குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் நிகழ்ந்தாலும் ஒரு அமைப்பாக முதலில் வாய்ப்புள்ளவர்களுக்கான பாதையை அடைவது முக்கியம். அதையொட்டி மற்றவர்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்று பல்வேறு கட்டுரைகளிலும் நேர்ப்பேச்சிலும் கூறியதை தோழர் ந. சரவணனின் உரை இருந்தது. அது சரியான பாதையில் சென்று கொண்டும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
4.
சட்டத்த்தரணி இளங்கோ அய்யாவின் ஊகமான பேச்சுக்களால் எவ்வித பலனும் இல்லை. அகதிகளின் குடியுரிமைக் கோரிக்கையில் மறுவாழ்வுத் துறையின் கீழ் செயல்படுகின்ற சட்டத்தரணிகள் ஏன் பங்குபற்றாது கள்ள மெளனம் காக்கிறார்கள் என்பது எனது பலநாள் கேள்வி. 1991 இராசீவ்காந்தி படுகொலை குடியுரிமை கோரிக்கையில் சிறிய தாக்கத்தினை செலுத்துகிறதுதான். இப்போது காங்கிரஸ் இல்லாத பாஜக அரசுதானே உள்ளது. சட்டச் சிக்கல்களை எடுத்துச் சொல்லியிருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.
5.
செயற்பாட்டாளர் சுபாஷினி அவர்கள் மறுபடியும் மறுபடியும் நம்மை மறுவாழ்வுத்துறையிடமே கோருவது போன்று பேசுவது அறியாமையினால் செய்வது போல் உள்ளது. மறுவாழ்வுத்துறையின் NGO செயல்பாடு நாடு திரும்புதல் என்ற ஒற்றைச் செயல்பாட்டில் உள்ள அமைப்பு. அவர்கள் நினைத்திருந்தால் 2009 க்கு பிறகு அதனை முன்னெடுத்திருக்கலாம். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை அவர்கள் செய்கிறார்கள். நாம் அவர்களிடத்தில் மறுபடியும் எம்மை அடமானம் வைக்க முடியாது.
6.
கஸ்தம்பாடி அனோஜன் அவர்களின் பேச்சு முதிர்ச்சியான ஒன்று. பல்வேறு விடையங்களை சிறப்பாக கூறியிருந்தார். அவரை இன்னும் நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஈழ விடுதலை இயக்கங்களுக்குள் சகோதர சண்டைகள் நிகழ்ந்ததைப்போல் இங்கு இப்போது குடியுரிமை கோரிக்கை தொடர்பில் பல்வேறு குழுக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தாலும் கொள்கை என்பது இந்தியக் குடியுரிமை கோருதல் ஒன்றே பிரதானமாக உள்ளது. அது தமிழீழம் என்ற ஒன்றை இல்லாது ஆக்கியதைப்போல் ஆகிவிடாமல் எல்லோரும் ஓரணியில் நின்று இன்றைய நம்பிக்கை நட்சத்திரமான மு.க. ஸ்ராலின் அவர்களின் தமிழக அரசின் முன்னெடுப்புகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். அதேவேளை சட்டரீதியான செயல்பாடுகளை அரசோடு இணைந்து செய்யவேண்டிய பொறுப்பும் நம் முன்னால் உள்ளது. தமிழக அரசோடு இணைந்துதான் நாம் ஒன்றிய அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடும் உள்ளது. மக்களிடத்தில் அகதிகளின் குடியுரிமை கோருதல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பொறுப்புணர்ந்து செயல்படுவோம் தோழர்களே.
இவண்
சுகன்யா ஞானசூரி
06/09/2021.
No comments:
Post a Comment