கடைசி இலை – பிறமொழிக் கதைகள்
- சுகன்யா ஞானசூரி
மொழி பெயர்ப்பு என்பது மூலப் படைப்புக்கும் நாம் வாசிக்கும் மொழிக்கும் இடையிலான ஒரு அன்யோன்யத்தை உருவாக்குவது. கதையின் மாந்தர்களோடு இணைந்தே நாமும் பயணிப்பது. குறிப்பாக மூலப் படைப்புக்கு களங்கம் இல்லாமல் ஆதார ஸ்ருதியாக இருப்பது.
பன்முக மேடை ஒருங்கிணைத்த க. சி. சிவகுமார் சிறுகதைப் போட்டியில் பங்குபற்றியிருந்தேன். பரிசும் பெற்றிருந்தேன். அதற்காக அனுப்பப்பட்ட பரிசுப் பொதியில் பல விலைமதிப்பில்லாத புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். அவற்றிலிருந்து மணிப்புரி கதைகளை வாசித்தபோது இந்தியாவின் ஒரு பகுதியினை அறிய முடிந்தது. இதேபோல் “கடைசி இலை” தொகுப்பை வாசித்து முடித்ததும் கன்னடத்துக்கும், கொங்கனிக்கும், பீகாருக்கும், குஜராத்துக்கும், வங்கத்துக்கும் ஏன் அமெரிக்காவின் மான்ஹட்டனுக்கும், க்ரீசுக்கும் போய்வந்தது போலிருந்தது. மூல மொழியில் அனைத்தையும் வாசிக்க முடியாத குறைகளை, மொழிபெயர்ப்பு இலகுவாக்கி இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். எழுத்தாளர் மாதா இதனை சாத்தியமாக்கி உள்ளார்.
தொகுப்பில் முதலாவதும் கடைசியானதும் கதைகளான ஓ. ஹென்றியின் “தேவன் தந்த பரிசு” “கடைசி இலை” சிறுகதைகள் அன்பின் வெளிப்பாட்டை, மனிதர்கள் சக மனிதர்கள் மீது கொண்டுள்ள கருணையினை, ஒருவருக்கொருவர் கொண்டுள்ள மகத்தான காதலை, விட்டுக்கொடுப்பினை, தன்னம்பிக்கையினை குறைவான பக்கங்களில் நிறைவாக செய்துள்ளன.
கன்னடத்தில் இருந்து யூ. ஆர். அனந்தமூர்த்தியின் “எதிர்பாராத சந்திப்பு” வேறு வேறு ஆண் பெண் இருவரும் எடுக்க இருக்கும் முடிவு எதிர்பாராத சந்திப்பில் மனம் மாறி அவரவர் வாழ்வுக்குத் திரும்புதல். லோகித் நாயக்கரின் “பாம்புக் குட்டியும் கொடூரத் தந்தையும்” மான் ஹட்டனில் வாழ்ந்தாலும் சாதிப் பாகுபாடு படுத்தும் பாடும், பெயரை மாற்ற எடுக்கும் முடிவால் இந்தியர்களின் சாதிய மனம் மாறிவிடுமா என்ற கேள்விகளை எழுப்புகிறது. குவெம்புவின் “கொத்தடிமை” கதை சுப்பன் எனும் பத்து வயது சிறுவனின் அதாவது கவுடர் எனும் பண்ணையின் கொத்தடிமையின் மரணம் என கன்னடத்தில் கதைகள் நல்ல தரத்துடன் எழுதப்படுகிறது என்பதற்கு சாட்சியாக உள்ளன.
கொங்கனி மொழியிலிருந்து தாமோதர் மௌச்சாவின் “பார்க்கர்” இரண்டு சிறுமிகளூடாக இந்தியாவின் மிக முக்கியமான மாட்டுக் கறி அரசியலை இலைமறை காயாக அற்புதமாக சொல்லியுள்ளார். அதேபோல் சமீபத்தில் நிகழ்ந்த பெருந்தொற்றுக் காலத்தின் புலப்பெயர்வு அதனால் நிகழ்ந்த மரணங்கள், மக்கள் மனங்களின் இடைவெளிகளை, அடையாளம் தெரியாமலே இறந்தவர்களை புதைக்ககூட வழியற்று புலம் பெயர்ந்த மக்களின் வலிகளை பேசுகிறது “அது யாருடைய பிரேதம்?” சிறுகதை. பெருந் தொற்றுக் காலத்தை பேசும் மற்றுமொரு சிறுகதையாக உருது எழுத்தாளர் குல்சாரின் “ஆன்லைன்” கதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடைவுக் காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களையும், அறிவியல் வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்ட செயலிகளின் பயன்களையும், அது தற்காலத்தில் நிகழ்த்தி வரும் மாறுதல்களையும் சரியாக அவதானித்து எழுதியுள்ளார். குறிப்பாக ஆன்லைனில் நிகழும் திருமணங்கள், குடும்பம் நடாத்துதல் என பல்வேறு விடையங்களைப் பேசுகிறது. தமிழில் இப்படியான அடைவுக்காலக் கதைகள் வந்துள்ளனவா என்று தேடுகிறேன்.
மணிப்பூரி மொழியின் இம்போச்சா எழுதிய “தண்ணீர்” ஒரு அரசியலைப் பேசினால், ஓம் பிரகாஷ் எழுதிய “கொத்தடிமை ஜனநாயகம்” எனும் இந்திக் கதை மற்றோர் அரசியலைப் பேசுகிறது. ஹிமான்சி செலாட் எழுதிய குஜராத் கதையான “ஏழாவது மாதம்” மதக் கலவரத்தைப் பேசுகிறது. கொத்தடிமை ஜனநாயகம் பஞ்சாயத்து தேர்தலின் சாதியக் கொடூரத்தைப் பேசுகிறது. ஏழாவது மாதம் மதத்தைக் காரணம் காட்டி கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை எடுத்துக் கொல்லும் கொடூரத்தைப் பேசுகிறது. உண்மைச் சம்பவங்களை அடியொற்றிய கதைகளாக இவை இருக்கின்றன.
கங்கா விமல் பிரசாத் எழுதிய இந்திக் கதையான “பயணிகள்” இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல் ஒவ்வொரு தேசத்தவரும் மற்றொரு தேசத்தை நினைத்துப் பெருமைப்படுவதும், நேரில் செல்லும்போது நாம் அவ்வளவு மோசமாக இல்லை என சமாதானம் ஆகுவதும் போலானது. கிரேக்க நாட்டுக்கு சுற்றுப்பயணம் போகும் இந்தியக் குடும்பம் கிரேக்கத்தில் சந்திக்கும் வயதானவருடன் நிகழும் உரையாடல்களில் கிரேக்கத்தின் கலாசார சீர்கேடுகளும், பண்பாட்டுச் சிதைவுகளும் அப்பெரியவர் வாயிலாக இவர்களுக்கு கடத்தப்படுகிறது. இந்தியா குறித்து அவர் பெருமையாக கூறுகிறார். ஆனால் இந்தியக் குடும்பம் இந்தியாவின் சமகாலம் குறித்தும், மோசமான அரசியல் நிலைப்பாடு குறித்தும் அப்பெரியவருக்கு உண்மையைக் கூற முடியாமல் வெப்பியாரப்பட்டுத் திரும்புகின்றனர்.
பினோத் கோஷலின் வங்கச் சிறுகதையான “குறுஞ்செய்தி” யார் என்றே தெரியாமல் உரையாடுகின்றன. இறுதியில் மகள் உரையாடியது தந்தையுடன் என்பது திருப்பமாகிறது. கைபேசிகளின் வளர்ச்சி ஒருபக்கம் குடும்ப உறவுகளைத் தொலைத்திருக்கிறது. அருகருகே இருந்தும் தனித்திருக்கச் செய்கிறது. பிறந்தநாள் பரிசாக தந்தை மகளிடம் ஒரு பரிசு கேட்கிறார். வெள்ளைத் தாளில் உன் தாய் மொழியில் ஒரு கடிதம் எழுதிக் கொடு என்கிறார். கடிதங்கள் எந்த அளவுக்கு மக்களை உணர்வுடன் வைத்திருந்தன என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரியாத ஒன்று. கடந்த காலத்தினரிடம் கேட்டால் விடிய விடியக் கதைகளாகச் சொல்வார்கள்.
இந்தத் தொகுப்பைப் போல் அரசியல் பேசும் கதைகள் சமகாலத்தில் தமிழில் எழுதப்பட்டுள்ளனவா என்ற கேள்வி (என்னளவில்) எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நல்லதொரு சிறப்பான மொழிபெயர்ப்பு வேலையினை பன்முக மேடை செய்திருக்கிறது.
ஓ ஹென்றி சொல்வதைப் போல் கலையின் மதிப்பு அழகில் இல்லை. அதன் பயனில் உள்ளது என்கிறார். அரசியலை அழகியலுடன் முன்வைக்க முடியும் என்பதற்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே சாட்சி.
வெளியீடு: பன்முக மேடை
விலை: ரூபாய் 250/-