Tuesday, April 28, 2020

முன் '96' பின் (நினைவோடைக் குறிப்புகள்)

முன் '96' பின் 
(நினைவோடைக் குறிப்புகள்)பகுதி-1

"96" எனும் திரைப்படம் பலருக்கும் ஒரு நினைவினை ஆழ்மனதிலிருந்து கிளறிவிட்டு பல ரைட்டப்புகளை எழுத வைத்திருக்கிறது. சிலரது ரைட்டப் சிரிப்பாக இருந்தது. சிலரது ஒருதலை ராகமாக இருந்தது. 96 ஐ முன்வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரைட்டப் முகநூல், டிவிட்டர் என எழுதியதை வாசித்தபோது எனக்கும் சிந்தையில் ஒரு பொறி தட்டியது. 96 படம் அல்ல அதாவது 1996 எனது வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திருப்புமுனையாக அமைந்த ஆண்டு. ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு புலம்பெயர்ந்த ஆண்டு. அதனால்தான் நான் இந்த 96ஐ 96 க்கு முன் பின் என இரண்டாக பிரித்து எனது நினைவுக் குறிப்புகளை எழுதினால் என்ன என்று தோன்றியது. 

நினைவுக் குறிப்புகள் எழுதுவதற்கு நீ நிறைய அனுபவங்களை பெற்றுவிட்ட வயோதிபனா என என் உள்மனம் என்னை நக்கலாக வினவினாலும் கொரோனாவின் கொடுங்காலத்தில் நாளை என்பது நிச்சயமற்று இருப்பதால் கிடைத்த அனுபவங்களை குறிப்புகளாக தொகுத்து எனது வலையில் ஏற்றி வைக்க முடிவு செய்தேன். 2015 ல் இருந்து வலைப்பதிவில் எழுதத் துவங்கிய நான் இதுவரை 89 பதிவுகளை மட்டுமே பதிவேற்றியிருக்கிறேன். இனிமேல் நானும் புதுமையாக எழுத வேண்டும் எனும் முயற்சியில் இருந்தபோதுதான் இப்படி ஒன்றை நான் எழுதினால் என்ன என்ற கேள்வி முன்வந்து நின்றது. அந்தக் கேள்வியின் செயல்வடிவே இந்த நினைவோடைக் குறிப்புகள். 

நினைவோடைக் குறிப்புகள் எழுதும்போது சில வேண்டாத விடையங்களையும் சொல்லிவிட்டால் அதனால் ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் என்ன செய்வது என தயங்கி நின்றபோது வள்ளுவனாரின் 

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு'

எனும் இந்தக் குறளே என்னை எழுதத் துணிய வைத்தது. 

தமிழீழத்தின் வன்னிப் பெரும் நிலத்தின் வலைப்பாடு எனும் கடற்கரையிலிருந்து பின்னேரம் ஆறு மணியளவில் புற்பட்டு தமிழ்நாட்டின் தனுஷ்கோடி கடற்கரைக்கு காலையில் எட்டு மணியளவில் (கிட்டத்தட்ட 14 மணித்தியாலங்கள் நாம் இந்துமா சமுத்திரத்தில் பிரயாணித்திருந்தோம். ஏன் இவ்வளவு மணித்தியாலம் ஆனது என்பதை பின்னால் விரிவாக சொல்கிறேன்.) புலம்பெயர்ந்த 96 ல் எனக்கு வயது 12. நாளை தமிழீழம் மலரும் சுதந்திர தேசத்திற்கு நாம் விரைவில் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையோடு வந்து இங்கேயே கால் நூற்றாண்டைத் தொட்டுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. 

கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல் ஒன்றில் 'கவிதைக்குப் பொய் அழகு' என்ற போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒரு கவிஞன் இறந்தகாலத்தை நிகழ்காலத்தில் காட்சிப்படுத்தவும், எதிர்காலத்தை நிகழ்காலத்தில் முன்னறிவிப்புச் செய்யும் அதி உன்னதமான படைப்பு மனம் வாய்க்கப் பெற்றவர்கள். அவர்கள் எப்படி பொய் அழகு எனலாம் என என் மனம் குமுறிக் கிடந்த அந்நாளில் எம் உணர்ச்சிப் பாவலன் காசி ஆனந்தன் அவர்களின் 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டில் அடிமை விலங்கு தெறிக்கும்' என்ற கவிதை வரிகள் எம் தேச விடுதலையின் முன் அனுமானத்தை கட்டியம் கூறுவதாக இருப்பதாக நண்பர்களோடு சிலாகிப்பேன். அதேபோல் சுப்ரமணிய பாரதியின் 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' என்ற கவிதைகளையும் அன்றைய நாளில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தபோது எனது முதல் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையில் தமிழர் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என புதிய ஏட்டினில் பாடல் சமைப்போம் என எழுதினேன். உணர்ச்சியின் வேகத்தில் எழுதப்படுகின்ற பாடல்கள் பொய்த்துப் போனதை 2009 களுக்குப் பிறகு உணர்ந்துகொண்டேன். நம்பிக்கை தகர்ந்துபோன நாட்கள் அவை. உப்புக் கடல் நீரேரிக்குள் மொத்தக் கனவினையும் புதைத்த மே நாளது. இப்போதுகூட சங்கப் புலவன் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளை உச்சரிக்க தகுதியற்றவர்களாக அகதி முகாமுக்குள் அடைபட்டு இருக்கிறோம். கவிதைக்குப் பொய் பேரழகுதான். வாழ்வோ பெருந் துயரம்.

(தொடரும்)

Tuesday, April 7, 2020

அப்பல்லோ

அப்பல்லோ - சுகன்யா ஞானசூரி யின் வாசிப்பிலிருந்து....

அண்டனூர் சுரா மூன்று நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்பு என குறுகிய காலத்திற்குள் பலப் பரிசுகளுக்கும் பாராட்டுக்கும் உரியவராகி வருகிறார். அப்பல்லோ இவரது மூன்றாவது நாவல்.

அப்பல்லோ என்றதும் கிரேக்கத்தின் கடவுளென நம்பப்படும் உண்மையின் கடவுளை சமகாலதினருக்கு நினைவுக்கு வராதபடிக்கு செய்ய சமகால நிகழ்வொன்று சாட்சியம் ஆகிப்போனது. தினம் ஒரு அறிக்கையும், அவலமான கூத்தும் நிகழ்ந்த இடம் அது. இங்கிருந்துதான் அண்டனூர் சுரா தன் கதையை துவக்குகிறார். ஆதி மருத்துவ குடிகளின் அழிவை சொல்ல ஹோமரின் காப்பியங்களின் கதாபாத்திரங்களை நாவலின் கதாபாத்திரங்களாக்கி ராஜா காலத்து கதையில் நம்மையெல்லாம் அழைத்துச் சென்றாலும் பல்வேறு நிகழ்வுகளை, வரலாற்று சம்பவங்களை கதைகளினூடாக வாசிப்பவர்களிடத்து கடத்துகிறார்.

ஆரிய திராவிட யுத்தம் இக்கதையில் பிரதானமாக இருக்கிறது. தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் மந்திர தந்திரங்களை பயன்படுத்தி மன்னனை ஆட்டுவிக்கும் மந்திரவாதிகள் மருத்துவ குடியை வதைத்து அழிக்கின்றனர். வெண்மணி படுகொலையையும், கூடவே ஈழத்தின் இறுதிப் படுகொலையையும் நினைவுபடுத்துகிறது.

பல்வேறு சம்பவங்களை சிறப்பான ராஜா காலத்து கதை வழி சொல்லும் சுராவுக்கு நன்றாக கதை சொல்ல வந்திருக்கிறது. காட்சிகளின் வர்ணனை சிறப்பாக இருக்கிறது. நாட்டார் வழக்குகளின் சொற்றொடர்களையும் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். அதேவேளையில் மிகு புனைவு வாசிப்பவருக்கு அயர்ச்சியையோ அல்லது சிரிப்பையோ வரவழைக்கும். இந்நாவலிலும் அது போலான வேகத்தடைகள் இருக்கவே செய்கின்றன. கொங்கையும் பிருஷ்டம் மட்டுமே பெண் உடல் இல்லை. பெண் உடல் மீதான மிகு வர்ணனையும், ஆங்கில படப் பாணியில் பாயும் விலங்கைப் போல் அந்த மருத்துவன் காடுமேடெல்லாம் பாய்வதும், யுத்தம் முடிந்து இரண்டு மாதங்களின் பின்னும் ஒருவன் உயிரோடு இருப்பது போன்ற நிகழ்வுகள் சினிமாத்தனமாக இருக்கிறது.

மூன் மன்னனின் சோரியாசிஸ் நோயும், மருத்துவ குடிகள் மயிர் மழிக்கும் குடியாகி போனதன் பின்னுள்ள தந்திரங்களும் சூழ்ச்சிகளும், காதுகள் கால்களில் இருந்தால் அந்த அரசும் மக்களும் என்னாவார்கள்? அதன் பாரதூரம் எத்தகையது என்பதையும் அந்தக் காலே அம்மன்னனுக்கு எமனாய் அமைவதையும், காலை தொழுதவர்கள் ஆட்சிக் கட்டிலுக்கு வந்தால் என்ன ஆகும் என்பதையும், அன்று முதல் இன்று வரை மருத்துவ கனவை சிதைக்க கொண்டுவரும் திட்டங்களும், திருத்தங்களும், நீட்டின் கொடுமைகள் என கதையின் போக்கில் எள்ளலோடு சொல்லிச் செல்கிறார்.

"முக்கோணக் காதல் கதைபோல் இது முக்கோண அரசின் அரசியல் கதை".

அப்லாஸ் எனும் வாரிசின் பெயரின் ஊடாகவே நாம் அப்பல்லோவை கண்டடைகிறோம். இங்கு அப்பல்லோ மருத்துவக் குடில் அல்ல மருத்துவக் குடியின் எச்சம்.

சரித்திரப் புனைவை தொய்வின்றி பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்து எதார்த்தமாக வாசிப்பதற்கு தங்குதடையின்றி கதை சொல்வதில் கல்கி, சாண்டில்யன், அகிலன், பாலகுமாரன் வரிசையில் அண்டனூர் சுராவும் இடம் பெறுகிறார்.

சுரா இந்த நிலையோடு தேங்கி விடாமல் மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தர வேண்டும்.

கால்களற்ற மெனிலாஸை அந்த தாழிக்குள் புதைப்பதாக கனவு காணும் சிறுமி சிந்தி போல் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமான அந்த சந்தேகம் தீராமல் இருக்கிறது. உண்மையிலேயே அவரது கால் வெட்டி எடுக்கப்பட்டதா?

ஆசிரியர்: அண்டனூர் சுரா
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ₹245