1.தட்சனையால் கொச்சையான
புனிதம்...
திருமணம்.
2.வானவீதியில்
கண்டன ஆர்ப்பாட்டம்...
கார்மேகம்.
3.கோடையில் வழிந்தோடும்
வற்றாத ஜீவநதி...
வியர்வை!
4.நிறைய முகங்கள்
பெயர் தெரியாமல்
இதயப் புகைப்படத்தில்!
5.ஆறறிவு கொண்ட
மிருகம்...
மனிதன்.
6.ஒளிரும் மகிழ்வில்
ஆனந்தக் கண்ணீர்
எரியும் மெழுகுவர்த்தி!
7.அழகிப்போட்டியில் வெற்றியோ
புல்லாள் தலையில்
பனித்துளிக் கிரீடம்.
8.காமனோடு காலன்
உருவாக்கிய கூட்டணி...
எயிட்ஸ்!
9.தன் வயித்தெரிச்சலை
காட்டுது புகைச்சலாக...
அடுப்பு.
10.மற்றவர்களின் தேவைக்காக
நாள்தோறும் உயிர்துறக்கிறது
தினசரி நாட்காட்டி.
11.தரிசாய் ஆவது
இவர்களது வாழ்வும்தான்
முதிர்கன்னி.
12.தூசு தட்டப்படாமல்
ஏக்கத்தோடு நூலகத்தில்
புத்தகங்கள்.
13.நிலவாளின் களியாட்டத்தில்
சிந்திய பழரசம்
பனித்துளிகள்!
14.இளந்தளிர்களுக்கு
வழிவிட்ட தியாகிகள்
சருகுகள்.
15.நவீன உலகில்
தொலைந்துபோன வார்த்தை
மனிதம்.
16.மனிதர்கள்
இரையாகிப் போனார்கள்
இலவசங்களுக்கு.
17.ஜனநாயகக் கடமை
ஜனங்களுக்கு தொந்தரவு
தேர்தல்!
18.கொலைக் குற்றவாளிகளே
பொது இடங்களில்
புகைப்பவர்களும்!
19.காற்றில் கரைவது
புகை மட்டுமல்ல
உயிரும்.
20.இருப்புப் பாதையெங்கும்
அட்டைப்பூச்சி...
இரயில்கள்.
21.பள்ளி மைதானங்கள்
கவலையில் குழந்தைகள்
விடுமுறையில்!
22.பூங்காக்கள் மகிழ்கிறது
குழந்தைகளின்
குதூகலத்தில்.
23.கருவறைக்கு
இரும்புக் கதவு
கடவுள் சந்நிதி.
24.நாடிருந்தும்
நாடோடிகளாய்
ஈழத்தமிழர்.
25.காட்சிப் பிழைகளாய்
காவியத் தமிழர்
ஈழதேசத்தில்.
- சுகன்யா ஞானசூரி,
அருமையான கவிதைகள் நண்பரே! ஒவ்வொன்றும் எதார்த்தமாய்,,,,,,,,,! நன்றி
ReplyDelete