Monday, March 19, 2018

வேங்கையின் மைந்தன்

மும்முடிச் சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டுவித்த மாமன்னன் இராஜேந்திர சோழர் காலத்தில் நிகழும் வாழ்வின் நிலைகளை, செப்பேடுகள், கல்வெட்டுக்கள், களநிலவரங்கள் ஆகியவற்றின் துணையோடு கற்பனைப் பறவையின் சிறகுகளை தாராளமாய் பறக்க விட்டிருக்கிறார் ஆசிரியர் அகிலன்.

கொடும்பாளூர் இளவரசர் இளங்கோவேள் இங்கு கதையின் நாயகனாக வலம் வந்தாலும், தன்னடக்கத்தோடு இராஜேந்திர சோழரையே முதன்மைப்படுத்தி நிற்கிறார். ஈழத்திலிருந்து பாண்டியர்களின் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் இழந்த மணிமுடியை ரோகணத்து இளவரசி ரோகினியின் துணையோடு மீட்டு வருவதும், ரோகிணி மீதான காதலும், பின்நாளில் நிகழும் ஆபத்துகளும், பாண்டியர்கள், மேலை சாளுக்கியர்கள், போன்றவர்களின் சூழ்ச்சிகள் என விறுவிறுப்பாக செல்கிறது.

இங்கும் பொன்னியின் செல்வரோடு பயணித்த வந்தியத்தேவன் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் இளங்கோவோடு திரிகிறார்.

வீரமல்லன் எனும் நட்பின் பகைமையும், மல்லன் மாறன் எனும் நட்பின் தியாகமும் இருவேறு துருவங்களாக நிற்கின்றன.

அருண்மொழி இராஜேந்திரரின் புதல்வி அப்படியே பொன்னியின் செல்வனின் குந்தவைப் பிராட்டியை நினைவில் கொண்டுவருகிறார். இளங்கோவின் முறைப் பெண்.

இளங்கோ-ரோகிணி-அருண்மொழி என முக்கோணக் காதல் கதையில் கங்கை கொண்ட சோழபுரத்தின் உருவாக்கமும், கொடும்பாளூர் நகரின் நிர்மூலமும் என தொடரும் கதை கடாரத்தை இளங்கோ இராஜேந்திர சக்கரவர்த்திக்காக வெற்றிகண்டு வருவதுடன், அரசகுல தர்மத்தின்படி இருவரையும் கைத்தலம் பற்றுவதில் முடிவு பெறுகிறது.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:11
தலைப்பு: வேங்கையின் மைந்தன்-நாவல்
ஆசிரியர்: அகிலன்
மொத்தப் பக்கம்: 646 (மின்நூல்)

No comments:

Post a Comment