Thursday, December 12, 2019

தமிழக வாழ் ஈழ அகதிகளும் இந்தியக் குடியுரிமையும்

#CAB

2009 ல் தி.மு.க-காங் கைவிட்டதாகக் கதறிய எம் உறவுகளே 2019 ல் அ.தி.மு.க-பாஜக முதுகில் குத்திவிட்டதே. என்ன செய்யப் போகிறோம்? ஈழத்தமிழர்கள் மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள்.

இந்து ஈழம் பெற்றுத்தர மத்திய அரசு முன்வருமென சொன்ன அந்த புரட்சிப் பாவலனை நினைத்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத் தலைவரின் செயல்பாடுகள் மிகவும் மோசமான ஒன்று. அவர் அகதிகளின் பிரதிநிதித்துவத் தலைவர் இல்லையே?

போரில் பயந்து ஓடியவர்கள்தானே நீங்கள்? இங்கே நாங்கள் உயிரோடு வாழவில்லையா? போர்தான் முடிந்து விட்டதே நாடு திரும்பி அறப்போராட்டம் செய்யலாம்தானே? என்பது போன்ற இழிவான சொற்களை வீசிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத்திலே (நாம் நம்பிக்கொண்டிருக்கும் நாடு) இருக்கின்ற இளைஞர்களில் சிலர். அறப்போராட்டம் தோற்றுத்தான் ஆயுதப் போரட்டத்துக்குள் தள்ளப்பட்டோம் என்கிற வரலாறு கூடவா இவர்களுக்குத் தெரியவில்லை? சரி இப்போது இப்படிப் பேசுகின்ற இவர்கள் தங்களுடைய காணிகளை இங்குள்ள அகதிகளுக்கு (நாடு திரும்பும் பட்சத்தில்) பகிர்ந்தளித்து வாழ்வதற்கு தயாராக முன்வருவார்களா? வரமாட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள அகதிகளைப் பார்த்து வீசும் வசைச்சொற்களை அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களில் உள்ள "புலம்பெயரிகளை" (அவர்கள் அகதிகள் என்ற சொல் இழிவானது என்பதால் புதிதாக கண்டடைந்து மாற்றாக பயன்படுத்தும் சொல்) நோக்கி வீசமாட்டார்கள். ஏனெனில் அங்கிருந்து கிடைக்கின்ற பணம்தான் காரணம்.  அங்கிருந்து அவர்கள் பாடுபட்டு அனுப்புகின்ற செல்வங்களில் வசதியாக இருந்துகொண்டு எப்படி வேண்டுமானாலும் தமிழக அகதிகளை உதாசீனப்படுத்தலாம் என்கிற வீராப்பை இவர்களுக்கு யார் வழங்கியது? இங்குள்ள அகதிகள் உங்களுக்கு கிள்ளுக்கீரைகளா?

தமிழினம் பண்டைய காலந்தொட்டு ஒற்றுமையின்மையாலே பல்வேறு குழுக்களாக பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதுதான் வரலாறு. என்றைக்குமே இவர்கள் ஒற்றுமைக்கான காய்களை முன்னகர்த்த மாட்டார்கள்.

தமிழகத்தில் வாழ்கின்ற 63000 பேரில் 30000 பேர் வரை இந்திய வம்சாவழியினர். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இருநாட்டு அரசுகள் காகிதங்களில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களால் வாழ்விழந்து நிலமிழந்தவர்கள். இவர்களை அங்கேயும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இங்கும் இப்போது கைவிட்டு விட்டார்கள். போர்க்காலத்தில் கடல் தாண்டிய ஒரே தவறு சட்டவிரோத குடியேறிகளாக்கியது. இனி என்ன செய்வது? இன்னொரு பாரிய இடப்பெயர்வுக்கு நாம் தயாராகுவதைத் தவிர. சாதிய வன்மங்களும், மத பேதமைகளும், வர்க்க முரண்களும் கொண்ட இலங்கைக்கு அனுப்புவதைக் காட்டிலும் இந்துமகா சமுத்திரத்தினுள் எல்லோரையும் கொன்றழித்துவிடுங்கள்.

தமிழக அதிகளைக்குறித்து அக்கறையோடு இந்திய மக்களவையில் குரல்கொடுத்த, குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முனைவர் இரவிக்குமார், தொல். திருமாவளவன் மற்றும் திமுக வின் நல்லுள்ளங்களுக்கு இந்நேரத்தில் அகதிகளாகிய நாம் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

அகதிகளாகிய நமக்குள்ளும் பல்வேறு குழுவாதங்கள் இருப்பதை ஒத்துக்கொண்டு அடுத்தகட்ட முன்னகர்வை மேற்கொள்வோம்.

- சுகன்யா ஞானசூரி
12/12/2019

Wednesday, September 25, 2019

யாவும் சமீபித்திருக்கிறது- கடங்கநேரியான்

யாவும் சமீபித்திருக்கிறது- கடங்கநேரியான்.

வாழ்வின் அலைக்கழிவுகள், நிலத்தின் மீதான பற்றுதல், சாவின் மீதான இளக்காரம், தனித்திருப்பவனின் மன வேட்கைகள் என தத்துவார்த்தமான எளிய நடையில் கவிதைகளை யாத்திருக்கிறார் என்பதனைக் காட்டிலும் கவிதைகள் அவரை ஆட்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு கவிதையையும் வாசித்து முடித்ததும் அங்கிருந்து புதியதொரு கவிதை வாசிப்பவர் உள்ளத்தில் ஊற்றெடுப்பதை உணரலாம். தத்துவ விசாரங்களைத் தாண்டி எதார்த்த வாழ்வினை அத்தனை கவிதைகளும் வாசிப்பவர் நெஞ்சுக்கு எடுத்துச் செல்கின்றன. இழந்துவிட்ட வாழ்வினை மூளை தேடிக்கொண்டிருக்கக்கூடும் நினைவுகளில்.

இன்றைய அதிகார வர்க்கங்கள் ஆட்டுவிக்கும் நிலையில் ஒரு மந்தியென ஆட மறுப்பவர்கள் தம் ஆதிமிருகத்தை கண்டடைவர்.

"மரண மாலை" ல் உள்ள குறுங்கவிதைகளை வாசித்தால் அதிகாரத்தின் போதையில் ஆடுபவர்கள், பணம், பதவி போகம் என சம்போசித்திருப்வர்கள் பற்றற்று போகும் சாத்தியக்கூறுகள் கவிதையை உள்ளார்ந்து ஏற்பதில் இருக்கிறது.

"எழுத்தாளர்கள்" கவிதையில் தமிழ் எழுத்துலகை பீடித்திருக்கும் யார் ஆகச் சிறந்தவர் என்ற கேள்வியை எழுப்புகிறது. நாளை மற்றொரு நாளே என இலக்கிய குழுவாத சச்சரவுகளில் காயக் கட்டுகளோடு மருத்துவமனையில் கண்ணயரும் எழுத்தாளன் வேறு யாருமல்ல கடங்கநேரியானே. அவ்வளவு பகடியும், வேதனைகளும் நிறைந்திருக்கின்றன அக்கவிதைகளில்.

எப்போதும் வென்றவர்களே வரலாற்றை எழுதுகின்றனர் என்பார்கள். வென்றவர்கள் கூறும் வரலாற்றைக் காட்டிலும் தோற்றவர்கள் கூறும் வரலாறு அதிக அழுத்தம் மிகுதியானது. இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் உலக வல்லரசுக்களின் பொருளாதார சந்தைக்கும், சுரண்டலுக்கும் தடையாக இருப்பார்கள் என்ற காரணத்தால் தோற்கடிக்கப்பட்ட தமிழீழத்தின் போராட்ட வரலாறு "மாவீரன்" கவிதையில் உள்ளவாறுதான் சமகாலத்தில் பார்க்கப்படுகிறது.

புலம்பெயர் நிலத்தில் மனப்பிறழ்வுகளை உருவாக்கும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் "யாவும் சமீபித்திருக்கிறது"  வாசிப்பு எனக்கு தப்பித்தலைத் தருகிறது. 

சுகன்யா ஞானசூரி
25/09/2019.

Monday, September 23, 2019

வெக்கை - பூமணி


ஒரு நாவலை வாசிக்கும்போது வாசிப்பவரின் வாழ்வில் நிகழ்ந்த ஏதோவொரு நிகழ்வு இழையோடியிருந்தால் வாசிப்பின் கனதியை உணர முடியும். இவற்றில் ஒன்றையேனும் நான் அனுபவிக்கவில்லையே என வசிப்பவரின் மனதில் ஏக்கத்தையேனும் உருவாக்கும். "பூமணியின் வெக்கை" எனக்கு முதல்வகை வாசிப்பையே தந்தது.

ஒரு சமூக அமைப்பில் உறவுமுறைகள், வர்க்கம், பொருளாதாரம், அரசியல், சூழலியல், மூலதனம் இன்னபிறவென அங்கம் வகிக்கும். அல்லது ஒன்றையொன்று சார்ந்து இருக்கும். இவற்றில் ஏதோவொன்றில் உராய்வு ஏற்படுகையில் பகை பற்றிக்கொள்கிறது. இது ஒவ்வொரு சமூக அமைப்பிலும் இயல்பான ஒன்று. அப்படி இயல்பாக கரிசல் மண்ணின் வட்டார மொழியோடு அந்த மண்ணின் வெக்கையை வாசிக்கும் ஒவ்வொருவர் மனங்களுக்கும் கடத்திவிடுகிறார்.

இது கொழகொழப்பான திரவத்தின் வெக்கையோடு துவங்குகிறது. ஒரு பழிவாங்கும் கதையென தட்டையாக நாம் சொல்லிவிட முடியாது. இலக்கிய அழகியலோடு கரிசல் மண்ணின் வாழ்வை முப்பது ஆண்டுகளுக்கு பின்பு இன்றும் பொருத்திப் பார்க்க முடிகிறது. காலங்கள் வேண்டுமானால் மாறலாம். காட்சிகள் சமகாலத்திலும் எவ்வித மாற்றங்களும் இன்றி தொடர்ந்தபடிதான் இருக்கிறது.

சிறுவன் சிதம்பரம், சிதம்பரத்தின் தந்தை பரமசிவம், சிதம்பரத்தின் அம்மா, தங்கச்சி, சிதம்பரத்தின் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, சிறுவயதில் இறந்து போகும் சானகி, வடக்கூரானால் அநியாயமாக கொல்லப்பட்ட சிதம்பரத்தின் அண்ணன், சிதம்பரத்தின் நாய் என இவர்களுக்குள் உள்ள அன்பு, பாசம் என்பவற்றால் வடக்கூரானை கொன்ற பின்னால் ஏற்படும் அலைச்சல் என சொற்ப கதைமாந்தர்களை வைத்து குறைவான பக்கங்களில் நிறைவாக தந்திருக்கிறார் வெக்கையை.

வடக்கூரானை கொன்ற நாள் துவக்கம் கோர்ட்டில் ஆயராகும் நாளுக்குள் உள்ள எட்டு நாட்களுக்குள் கரிசல் மண்ணின் காடு, மலை, வயல், வரப்பு, கண்மாய், வாய்க்கால், சுடலை, என இரவு பகலாக இடம் மாற்றி இடம் மாற்றிச் செல்லும் தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல்களாகட்டும், அத்தை மேலான பாசமாகட்டும், மாமனின் தைரியமாகட்டும், அம்மாவின் வைராக்கியமாகட்டும் ஒவ்வொரு பாத்திரமும் கனகச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கிறது.

இளங்கன்று பயமறியாது என்பார்கள். அப்படியாகத்தான் அவன் மரம் ஏறி பதனிப் பானையை கொண்டாந்து சோறாக்கிவிட்டு மீண்டும் அதே இடத்தில் கட்டுவதும், தேன் எடுப்பது, அத்தைக்கு பிடிக்குமென கருவேலம் பிசின் சேகரிப்பது, கரும்புத் தோட்டத்தில் மலங்காட்டுப் பன்றியை வெடி வைத்துக் கொல்லலாமா என நினைப்பதும் அந்த வயசுக்குரித்தான துடுக்குத்தனங்கள்.

தந்தை என்பவர் எப்போதும் பிள்ளைகளுக்கு வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் ஆசான். நீச்சல் கற்றுக்கொள்ள சுரைக்குடுவைகளை கேட்டவனை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு நீச்சலின் முதல்படியான பயத்தை போக்குவது முக்கியமானது. 1994 ல் யாழ் அச்சுவேலி மண்ணில் அப்போது எனக்கு பத்து வயது எங்கள் வயல் கிணற்றுக்குள் இடுப்பில் கயிறை கட்டிக்கொண்டு தேங்காய் வத்தையில் நீந்தும்போது வத்தையை தட்டிவிட்டு மூழ்கவிட்ட கணங்கள் எனக்குள் வந்து செல்கிறது. அந்த நீச்சல் பயிற்சி பின்னாளில் 1996ல் தனுஷ்கோடி கடலில் அகதியாக இறக்கிவிட்டபோதும் 1997 ல் புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை அகதிகள் முகாமுக்கு அருகில் உள்ள கண்மாய்க்குள் குளிக்கும்போது மூழ்கிய உடன்பிறப்புகளை காப்பாற்றியது என நினைவுகளை கிழப்பிவிட்டுச் செல்கிறது.

பெண்பாத்திரங்களின் இளகிய மனங்கள் தங்கள் வீட்டு ஆண்களுக்கு ஒரு பிரச்சினை என வருகையில் எப்படி இறுக்கமடைகிறது என்பதை அம்மா, அத்தை, சித்தி போன்றவர்களின் கொந்தளிப்பான மனங்கள் வெளிப்படுத்துகிறது. அதிலும் மாமாவை கட்டிவந்த நாள்முதல் பயந்த சுபாவமாக இருந்த அத்தை தைரியமானவளாக மாறுவது, தலைமறைவாக இருக்கும் மாமாவுக்கு காட்டுக்குள் சாப்பாடு எடுத்துப் போவது பெண்களின் இயற்கையான மனோவெளியை காட்டுகிறது.

சிறு நிலத்தைக் கூட விட்டுவைக்காமல் ஏமாற்றி மிரட்டி எழுதி வாங்கும் வடக்கூரான், ஜின்பேக்டரி முதலாளி போன்றவர்கள் செய்யும் அக்கிரமங்களும், அவர்கள் செய்த கொலைகளுக்கு தண்டிக்கப்படாமல் பெரிய மனிதர் எனும் போர்வையில் போலிஸின் அனுசரனையோடு வெளியே உலாவுவது என பணநாயகம் படுத்தும் பாட்டை தோலுரித்துக் காட்டுகிறார். பரமசிவத்தின் விவசாய நிலத்தின் மீதான வடக்கூரானின் கண் பகையை உருவாக்குகிறது. ஞாயத்தின்படி விவசாயம் செய்து சாப்பிட நினைப்பவனை அதிகாரத்தின் துணையோடு அடக்கியொடுக்க முனைபவர்களை தோலுரித்துக் காட்டுகிறார்.

பண்ணை நிலங்களின் பின்னணியில் எத்தனை ஏழை, எளிய மனிதர்களின் விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டிருக்கும்? வியர்வை சிந்த பாடுபட்டவர்களுக்கு இரத்தமும், கண்ணீருமே மிச்சமாகிறது.

வெற்றிப் படங்களைத் தரும் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற பெயரில் இந்த நாவல் திரைப்படமாக வெளியீடு காண இருக்கிறது. ஒட்டுமொத்த நாவலையும் திரைக்குள் குடுக்க முடியாது. குறைந்தபட்சம் கதையில் பங்கம் இல்லாமல் இருந்தால் சிறப்பு. 

- சுகன்யா ஞானசூரி
23/09/2019

Monday, July 29, 2019

கடவுளின் முகம்?

நடுநிசி தாண்டிய மாநகரத்தின் சாலையில்
நடந்துகொண்டிருக்கிறேன்.
இரண்டாம் காட்சி முடிந்த திரையரங்கென
சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது.

இயலாதவனின் குறியெழுப்பத்தினதாக
இருளைப் போக்கும் முயற்சியில் தோல்வியுற்று
மின்னும் விளக்கின்மீது காற்று
தூசிகள்கொண்டு தழுவிச் செல்கிறது.

பெயர்தெரியாப் பூச்சிகளின் சப்தத்தில்
கானகத்தின் படிமம் வந்து செல்கிறது.

நடைபாதைகளில் உறங்கும் இத்தேசத்தின் கடவுள்களை
நாளொரு அறிவிப்பின் பெயரால் இல்லாதழிக்க
சைத்தான்கள் பல்வேறு அவதாரங்களில் அரிதாரமிடுகிறது.

யாசகப் பாத்திரங்கள் சுத்தமாயிருக்கிறது
கடவுள் கருணை காட்டுவதேயில்லையென
விசனத்தோடு உறங்காமல் புரண்டுகொள்கிறது பசித்த வயிறு.

கடவுளின்மீது மோகித்திருக்கும் கலாச்சாரக் காவலர்களுக்கு
சைத்தான்கள் பரிசளித்திருக்கும் சொற்கள்
பல்லிளித்துக்கொண்டிருக்கின்றன சுவர்கள்தோறும்.

கருவறை புழுக்கம் தாளாமல்
தூமைத்துணியை மாற்றிவர
ஆலயத்திலிருந்து வெளியேறிய கடவுள்
சைத்தானால் வழிமறிக்கப்பட்ட அந்த முடக்கில்
அவசர ஊர்தி யாரையோ சுமக்கத் துவங்கியது.
இரவு என்பது உறங்குவதற்கில்லை என்ற
யவனிகாவின் கவிதைகளோடு உறங்கிப்போனவன்
விரித்த காலை செய்தித்தாளில்
வன்புணர்ந்து கொல்லப்பட்டவளின் முகம்
நேற்றைய இரவில் பார்த்த கடவுளுடையதாயிருந்தது.

- சுகன்யா ஞானசூரி
28/07/2019

Sunday, July 14, 2019

ஜாம்பழம்

என் மகளின் கையில் இருக்கும் இப்பழத்தினை ஈழத்தில் ஜாம்பழம் (jam fruit) என்போம். இங்கே தேன்பழம், சீனிப்பழம், நெய்ப்பழம் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். அற்புதமான இனிப்புச் சுவையுடையது. மரம் நல்லா சடைத்து நிழல் தரும் வகையானது.

ஈழத்தில் நான் படித்த கொன்வேன்ற் (அச்சுவேலி-பலாலி போகும் சாலையில்) பள்ளியில் முதன்முதலில் இம்மரத்தினை பார்த்திருக்கிறேன். பழம் பறித்து தின்றது மீண்டும் நினைவிலாடுகிறது.

இப்போது குடியிருக்கும் வீட்டைச் சுற்றி ஐந்து மரம் நிற்கிறது. பழமோ பழுத்து விழுகிறது. பறவைகள் அதிகமாக வந்து சந்தோசத்தை அள்ளித் தருகிறது. பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னாங்க சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து என்று.

அடர்த்தியாக பற்றைபோல மண்டிக் கிடந்த இந்த மரங்களை சில மாதங்களுக்கு முன்பு தறிக்க வேண்டும் என குடியிருக்கும் வீட்டின் ஓனர் அம்மா சொன்னபோது தடுத்துவிட்டு சில கிளைகளை மட்டும் வெட்டி சரிசெய்ததின் பலனை இந்தக் கோடையில் உணர்ந்து கொண்டனர்.

பறவைகளின் உன்னத சப்தங்களோடு காலை விடியல் அற்புதமான கவிதை.

- சுகன்யா ஞானசூரி
14/07/2019.

Monday, June 24, 2019

மொழிபெயர்ப்பு...மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழி பேசும் சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், கலை இலக்கியத்தினை பிற மொழி பேசும் சமூகங்களின் மொழியில் அறியத் தருவது. தருமொழி, பெறுமொழி, வழிமொழி என மூன்றாக மொழிபெயர்ப்பின் தன்மையை குறிக்கிறார் முனைவர் ம. இளங்கோவன். தருமொழி என்பது மூல நூல். பெறுமொழி என்பது எந்த மொழிக்கு பெயர்க்க உள்ளோமொ அதுவே. வழிமொழி என்பது எடுத்துக்காட்டாக ரஷ்ய மூல நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டுவருவதாகும். பெரும்பாலும் தமிழில் வழிமொழி வழியாகவே நிறைய படைப்புகளை கொண்டுவருகின்றனர்.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் யாவும் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" - மகாகவி பாரதி. மகாகவியின் கூற்றினை மெய்ப்பிற்கும்படியாக தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பாளர்கள் (என் வாசிப்பின் சிற்றறிவின் நினைவில்) சோவியத் ருஸ்யாவிலிருந்தும், லத்தீன் அமெரிக்காவிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும், சீனம், வங்காளம், மலையாளம் என பன்மொழிகளின் அதி உன்னதமான படைப்புகளை தமிழுக்குத் தந்துகொண்டே இருக்கிறார்கள். எம்.ஏ.சுசீலா, எஸ்.பாலசுப்ரமணியன், வெ.சிறிராம், ஜி.குப்புசாமி, பிரம்மராஜன், சோ.தர்மன், தேவதாஸ், அமரந்தா, த.ந. குமாரஸ்வாமி, கே. கணேஷ், வீ.ப.கணேசன், ஏ.ஜே. கனகரட்ணா, இந்திரன், சமயவேல், கார்த்திகைப் பாண்டியன் போன்றவர்களின் பங்களிப்பில் தமிழில் பல்வேறுபட்ட இலக்கியச் சுவைகளை நாம் சுவைத்து வருகிறோம். சரி இப்படியே தமிழுக்கு இறக்குமதி செய்து சுவைத்துககொண்டிருந்தால் எம் தமிழ் சீரும் சிறப்புமாக வளர்ந்து விடுமா? தமிழ் மொழியினை பிற மொழி பேசுவோரின் மொழிகளில் கொண்டு சென்றால்தானே எம் தமிழின் சிறப்புகளை பிறர் அறியச் செய்ய முடியும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?

கவிஞர் அமரன், லதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தமிழ்க் கவிதைகளை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்கின்றனர். சமீபத்தில் எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் அவர்கள் ஐந்து மொழிகளில் தமிழ் எழுத்துக்களை கொண்டு சேர்க்கும் சிறப்பினை செய்து வருகிறார். நாம் மாவுச் சண்டைகளுக்கும், மன்னர்களின் செய்கைகளுக்குமாக மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறோம். "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" - மகாகவி பாரதி. எனும் மகாகவியின் இந்த வரிகளை மெய்ப்பிக்கத் துவங்கியிருக்கும் இவர்களை அடியொற்றி நாம் தமிழை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகம் உள்ளங்கையில் சுருண்டு கிடக்கும் இந்தக் காலத்தில் நாம் தமிழ்மொழியினை காக்கத் தவறுவோமாயின் அடுத்த தலைமுறை நம்மைக் காறி உமிழும். இது மொழித் திணிப்பல்ல. மொழிகளை காக்கும் ஒரு உத்தி. "தமிழ் வாழ்க" என உரைத்தால் மட்டும் போதாது. அவற்றை நாம் செயல்பாட்டில் காட்ட வேண்டும். தமிழ்ப்படைப்புகளை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்கும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

- சுகன்யா ஞானசூரி
24/06/2019

Saturday, June 1, 2019

நிலவெளி- இதழ் அறிமுகம்

எல்லா இதழ்களும் முதலில் வருவது போல் இறுதிவரை வருவதில்லை சிற்றிதழ்களின் ஆயுள் என்பது அதில் வரக்கூடிய படைப்புகளை பொருத்து மாறுபடுகிறது. ஆரம்பத்தில் காத்திரமான படைப்புகளை தரும் சிற்றிதழ்கள் போகப்போக தேய்ந்து போகிறது. நிலவெளியின் போக்கினை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொல்லியல் துறை சார்ந்த நல்ல விளக்கங்களை தொல்லியல் அறிஞர் திரு சாந்தலிங்கம் அவர்கள் மூலமாக தெளிவுபட வைத்திருக்கிறது அவருடனான நேர்காணல். கள ஆய்வின் மூலமே நாம் தொல்லியல் எச்சங்களை காணமுடியும். அதுவல்லாமல் சமூக வலைத்தளங்களில் இருந்து கொண்டு தொல்லியல் அறிஞர்கள் ஆக பெயர் எடுக்க முடியாது என இன்றைய தலைமுறையின் சோம்பல் போக்கினை சுட்டிக்காட்டுகிறார்.

என். ஸ்ரீராமின் துருத்தி நடனம் வட்டார வழக்கில் எழுதப்பட்ட சிறுகதை. அரிச்சந்திர புராணக் கதை நிழலாக கதையை நகர்த்திச் செல்கிறது. வட்டார மொழியில் சொல்லப்படும் கதைகள் எப்போதும் தனிக்கவனம் பெறக்கூடியவை. ஆனால் குமாரசெல்வாவின் கட்டுரை வட்டார மொழி எழுத்தாக்கத்தில் அடையும் சிக்கல்களை படைப்பு நிலையிலிருந்து பேசுகிறது. அடக்குமுறையாளர்களின் மொழிக்கும், அடக்கப்பட்டவர்களின் மொழிக்குமான வேறுபாடுகள் பாரிய அளவினதாக இருக்கிறது. ஒவ்வொரு பொருட்களுக்குமான அர்த்தங்கள் அவர்களுக்கும் இவர்களுக்கும் பேசும் வார்த்தைகளில் வேறுபடுகிறது. இவற்றை ஒவ்வொன்றாகச் சொல்லி விளக்கிச் சொல்லும்போது ஏற்றத்தாழ்வு கொண்ட வட்டார மொழிகளின் இருமுகத்தை அறிய முடிகிறது.

இப்படி இவைகள் இருக்க மூன்றாவதாக நாடற்று அகதிகளாக தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களில் வசித்து வரும் ஈழத்தமிழ் அகதிகள் மூன்று தசாப்தங்களாக தங்கள் மொழிகளை, அடையாளத்தை அந்தந்த வட்டாரத்தின் வழக்கில் தொலைத்து நிற்கும் அவர்களுக்கு குடியுரிமை ஒன்றே தீர்வாக அமையும். அந்த குடியுரிமையின் சட்ட சிக்கல்கள் பற்றியும், தமிழக அரசியல்வாதிகளின் தெளிவற்ற வாக்குறுதிகள் என நண்பர் தொ. பத்திநாதனின் கட்டுரை விளக்குகிறது. "நாடற்ற அகதிகளின் வலியும் வேதனையும் பொதுவெளியில் கவனப்படுத்துமாறு சூழல் மாறியிருப்பது நம்பிக்கையளிக்கிறது." எனும் சொற்கள் சத்தியத்தின் வார்த்தைகள். எமக்கான சாதகமான இச்சூழலை நாங்கள் விவாதித்துதான் தெளிவுபடுத்த முடியும்.

குழுவாத அரசியலற்ற தமிழர், தமிழ்மொழி வளர்ச்சி சார்ந்தும், அடுத்த தலைமுறைகள் உண்மையை குழப்பமின்றி தெரிந்துகொள்ளும் ஒரு ஆவணமாக நிலவெளி  தொடர்ந்து சிறப்புற வெளிவர வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்களுடன்
சுகன்யா ஞானசூரி
01/06/2019

Friday, April 19, 2019

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

தமிழக நண்பர்கள் சிலரது முகநூல் பக்கத்தில் ஈழத் தமிழர்கள் மீதும், ஈழ அகதிகள் மீதும் ஒவ்வாமை இருப்பதைக் காண முடிந்தது. இதை பாசிசவாதிகள் செய்திருந்தால் நாம் கடந்து செல்லலாம். அல்லது சிறு கண்டணத்தையாவது பதிவு செய்யலாம். ஆனால் கருஞ்சட்டைக்காரர்களும், செஞ்சட்டைக்காரர்களும் ஆகிய எம் நண்பர்கள், தோழர்கள் செய்திருப்பதுதான் மனசை வலிக்கச் செய்கிறது.

"அம்மணமாக ஓட விடுவோம் என்பதும்",  "உங்களுக்குத்தான் ஓட்டு உரிமை இல்லைல மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே", உன் எல்லையோடு நீ நின்றுகொள்". என எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? இப்படியான மனநிலை பாசிச மனநிலை இல்லையா? இதைத்தான் பெரியாரிசமும், கம்யூனிசமும் கற்றுத் தருகிறதா? தேசமற்று அலையும் அகதி தேசியங்களை பேசக்கூடாதா? அவர்களுக்கு அந்த உரிமை இல்லையா? இது தனிநபர் சார்ந்த பிரச்சினை என தோழர்கள் யாரும் சமரசம் செய்வீர்களா?

தொப்புள்க்கொடி உறவுகள் எனச் சொல்வதெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா? அகதிகள் மீதான உங்கள் பார்வை முற்போக்கு முகமூடி அணிந்த பாசிச மனம்தானா?

அகதிகளில் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள், பெரியாரிசம் பேசுபவர்கள், கம்யூனிசம் பேசுபவர்கள் என பலர் இருக்கிறார்கள். அது அவரவர் புரிதல் சார்ந்தது. அவரவர் சமூக, மனநிலை சார்ந்தது. நாம் நல்லவற்றை புரிய வைக்க முயற்சி செய்யலாமே ஒழிய கட்டாயப்படுத்தக்கூடாது. ஏற்றுக்கொள்ளவில்லை எனில் சகிப்புத் தன்மையோடு கடந்து செல்ல வேண்டும். இதைத்தான் நான் வாசித்த பெரியாரும், அம்பேத்கரும், மார்கஸும் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். நீங்கள் எப்படி இவற்றிலிருந்து தவறினீர்கள்?

2009 ன் பேரழிவுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் சிறுபான்மையாக இருக்கும் நாம் தமிழ், தமிழர் எனும் உணர்வோடு, தொப்புள்கொடி எனும் உறவோடு உங்களோடு பெரும்பான்மையாக உணர்ந்தோம். ஆனால் உங்களிலிருந்து இப்படியான வன்மத்தோடும், ஒவ்வாமையோடும் வருபவர்களைக் கண்டு நாங்கள் அச்சப்படுகிறோம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதெல்லாம் வெறும் சொல்லல்ல என்பதை நம்பும் அதேநேரம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

- சுகன்யா ஞானசூரி
18/04/2019

Saturday, April 13, 2019

நன்றேது? தீதேது?


நன்றேது? தீதேது?

கிட்டத்தட்ட பத்து ஆளுமைகளுடனான உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். தரமான தாள், சிறப்பான வடிவமைப்பு மற்றும் பொக்கேற் நாவல் அளவிலான கையடக்க உருவாக்கம் என சிறப்பாக இருந்தாலும், ஒற்றுப் பிழைகளும், பத்தாவது உரையாடல் ஒன்பதாவது உரையாடலின் தொடர்ச்சியா அல்லது தனி உரையாடலா எனும் குழப்பமான அச்சமைப்பும் சரி செய்யப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பதிப்பகத்தின் கவனக்குறைவையும் அவதானிக்க முடிகின்றது.
உரையாடல்கள் பற்றி நான் சொல்வதைக் காட்டிலும் ஆளுமைகளின் என் மனதைத் தொட்ட பொன்னெழுத்துக்களை தந்திருக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.

என் கவிதைகளின் அரசியல் பேசும்போது அவர்களுடைய கவிதைகளின் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்.
- கடங்கநேரியான்.

வணிகத்தன்மையான நூல்களை விற்றுத்தான் இலக்கியத்தரமான நூல்களையே பதிப்பிக்க முடிகிறது. பதிப்பகத்தின் பெயரை தக்க வைப்பதற்கு இலக்கியமும், இலக்கியத்தை தக்கவைக்க வணிகமும் தேவைப்படுகிறது.
- தோழமை பூபதி.

இந்திய இலங்கை இலக்கியச் சந்தையில் புலி எதிர்ப்புதான் இப்போது நல்ல வரவேற்பு. அதுதான் செளகரியமானதும் பாதுகாப்பானதும் கவனத்தை ஈர்க்கக்கூடியதுமாய் மாறிவிட்டது.
- தீபச்செல்வன்.

தமிழகத்தில் ஈழ விடுதலை தொடர்பாக பேசியவர்கள், பேசிக்கொண்டிருப்பவர்கள், பேசப்போகிறவர்கள் எல்லோருக்கும் பின்னால் ஒரு குழுமனப்பான்மையும் சூழ்ச்சியும் இருக்கிறது.
- யுகபாரதி.

குடும்ப அமைப்பிற்குள்ளும், பொது வெளியிலும் தாங்கள் நினைப்பவற்றையெல்லாம் செய்ய முடியாதவர்களாகவே பெரும்பாலான பெண்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
- தமிழ்நதி.

தமிழினத்தின் பீடையான சாதி, வர்க்க, பாலின ஆதிக்கத்தன்மைகள் களையப்பட்ட, அனைத்து தமிழ் மக்களும் சமத்துவம் என்கிற ஒரே விசையில் உரிமைகளும் பண்பாடுகளும் மீட்டெடுக்கப்பட்டு தமிழர் நிலம், அவர்களின் வளம் என்பதோடு முற்போக்கு மிக்க தேசியமாக தமிழ்த்தேசியம் இருக்க வேண்டும்.
- திருமுருகன் காந்தி.

முகாம்களில் உள்ளவர்களின் குரல் சுடுகாட்டின் அமைதியாக்கப்பட்டிருக்கிறது.
- பத்திநாதன்.

சிவப்பணுக்களும் வெள்ளையணுக்களும் நம் உடலின் உள்ளே போராடும் வரைதான் வாழ்க்கை. அது போராட்டத்தை நிறுத்தும்போதுதான் நமக்கு மரணம் சம்பவிக்கும்.
- தேன்மொழி தாஸ்.

தங்கள் மதத்தில் நிர்வாணத்தை மார்க்கமாகக் கொண்டவர்கள், ஒரு இனத்தை நிர்வாணமாக்கிப் புசித்ததும், கொண்டாடியதும் நாகரீக உலகம் இதைப் பார்த்திருந்ததும் மனிதகுலப் பண்பாட்டுக்கே அவமானமாகும்.
சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களின் அரசியலுக்குள் உலக அதிகார நாடுகளின் அரசியல் தலையீடு செய்தால் அது ஒரு மனிதப் பேரழிவையே பரிசளிக்கும் நயவஞ்சகமானது என்பதற்கான எடுத்துக் காட்டாக முள்ளிவாய்க்கால் அழிவு நிகழ்ந்து விட்டது.
- குணா கவியழகன்.

விடுதலையே அரசியலைத்தான் குறிக்கிறது. பக்திப் பூர்வமாக அணுகினால் பிரபாகரன் வருவார் என்பதை மட்டுமே நம்பிக்கொண்டு போராட்டம் ஒருகட்டத்தோடு முடங்கி விடும். அரசியல் பூர்வமாக அணுகினால் பிரபாகரன் வந்தாலும் வராவிட்டாலும் ஏன் வருவதாக சொல்லிக்கொண்டே இருந்தாலும் போராட்டம் அடுத்த கட்ட தேவையினை நோக்கி நகரும்.
- மகா.தமிழ் பிரபாகரன் (விகடன் மாணவ நிருபர்).

Saturday, April 6, 2019

உயிர் எழுத்தும் நானும்...

உயிர் எழுத்தும் நானும்

நீண்ட நாட்களாக உயிர் எழுத்து இதழில் எனது ஒரு கவிதையாவாது வந்துவிட வேண்டும் எனும் அவா இருந்து வந்தது. கடந்தாண்டு உயிர் எழுத்து நிறுத்தப்படுகிறது என முகநூல் பதிவுகள் வழி அறிந்து மனவருத்தம் கொண்டிருந்த சமயத்தில் உயிர் எழுத்து மீண்டும் வெளிவரும் எனும் அறிவிப்பு அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. 2013ல் உயிர் எழுத்து இதழை அறிமுகம் செய்து வாசிக்கத் தந்தவர் ஐயா மார்க்கண்டன் முத்துச்சாமி Markandan Muthusamy அவர்கள்.


கடந்தாண்டு உயிர் எழுத்து மறுபிறப்பு எடுத்து இரண்டாவது மாதத்தில் 16/07/2018 அன்று எனது ஏழு கவிதைகளை அனுப்பி வைத்திருந்தேன். நம்பிக்கை இல்லாமல்தான். அந்த ஆண்டுக்கான சந்தாவினை கட்டிவிட்டு, சில புத்தகங்களையும் வாங்கி வரலாம் என நானும், ஐயா மார்க்கண்டன், அண்ணன் மணிகண்டன் திருநாவுக்கரசு Manikandan Thirunavukkarasu ஆகியோருடன் 22/07/2019 அன்று முதல் முறையாக உயிர் எழுத்து அலுவலகம் செல்கிறேன். அப்போதுதான் நான் உயிர் எழுத்து ஆசிரியர் சுதீர் செந்தில் Sudheer Sendhil அவர்களை பார்க்கிறேன். குடோனைத் திறந்துவிட்டு உங்களுக்கு பிடித்த புத்தகங்களை எடுத்துக்கொள்ள சொன்னார்.


அப்போது நடந்த உரையாடல் என்றும் என்னால் மறக்கவே முடியாது. எனது கவிதைகள் குறித்து ஆகஸ்ட் மாதம் இதழில் வெளியாகும் இருக்கும் இதழில் ஒரு பையன் சிறப்பாக கவிதை எழுதியிருக்காரு. அதில் கடைசி கவிதை சின்னதா இருந்தாலும் ஆழமாக இருக்கிறது என மார்க்கண்டன் ஐயாவிடம் அச்சுக்கு போயிருக்கும் இதழின் புரூப்பை தந்து வாசித்துப் பார்க்கத் தந்திருந்தார். இந்தக் கவிதைகளை எழுதிய பையன் இவர்தான் என என்னை அறிமுகம் செய்து வைத்தார். கனவு போலவே இருக்கிறது இன்னும்.


அந்த மகிழ்ச்சியை நொறுக்கும் விதமாக ஏப்ரல் 2019 இதழ் தலையங்கம். மீண்டும் உயிர் எழுத்து தன் இயக்கத்தினை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதழ் நடாத்தும் துயரம் என்ன என்பதை தமிழக முகாம்களில் வாழும் ஈழ அகதி மாணவர்களுக்கான "வேர் விடும் நம்பிக்கை" இதழை இற்றைவரை கொண்டுவர இயலாமல் இருப்பதினூடாக நான் அறிந்து கொள்கிறேன்.


உயிர் எழுத்து பலருக்கான முகவரி தந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதில் என்னையும் அடையாளப்படுத்தியிருக்கும் உயிர் எழுத்து இனி வராது என்னும் அறிவித்தல் அகதியான துயரத்தில் மீண்டும் ஒரு துயரத்தை தருகிறது.

வேதனைகளோடு
- சுகன்யா ஞானசூரி.