Sunday, August 22, 2021

நாடிலி - கையறு நிலையின் கணங்கள்- பேராசிரியர் அ. ராமசாமி.



#நாடிலி குறித்த விரிவான விமர்சனக் கட்டுரை ஒன்றினை பேராசிரியர் அ. ராமசாமி ஐயா அவர்கள் 14/08/2021 தீம்புனல் இதழில் எழுதியுள்ளார். மிக்க அன்பும் நன்றியும் ஐயா. 


//சொந்த நாட்டைவிட்டு அகதி முகாம் என்ற வெளியில் இருக்கும் தன்னிலையின் உணர்வுகளும் இருப்பும் என்பதை சுகன்யா ஞான சூரியின் கவிதைகள் விரிவாகக் கவனப்படுத்தியுள்ளன.//

//அகதி முகாமின் துயரச்சித்திரத்தின் பல நிலைகளையும் வடிவங்களையும் சொல்லும் விதமாகத்   தலைப்பிலேயே முன்வைக்கின்றன பல கவிதைகள். அவல முகாம், அகதிகள் வீடடைதல், அகதி வாழ்வு, ஏன் என்னை அகதியாக்கினீங்கள்?  நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம், அகதி முகாமில் தீபாவளி, அகதிப்பிணம், அகதிகள் முகாமில், கடல்வழி வந்த அகதி நதி பார்த்தல், அகதி வாழ்வு, குடிகார அகதியின் சலம்பல் என விதம் விதமாக முன்வைக்கின்றன.  அஞ்சலி பற்றிய அகதியின் பாடல் என்ற கவிதை அகதி முகாம் வாழ்வின் வேறொரு சித்திரத்தை அதே துயரத்தின் – இழப்பின் விளைவாக விவரிக்கின்றது.//

//இதுவரையிலான எனது வாசிப்பில் இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் பாடுகளைக் கட்டுரைகளாகவே வாசித்திருக்கிறேன். தொ.பத்திநாதன் போன்றவர்களின் அனுபவப்பகிர்வுகளும் வேறு சிலரின் சிறுகதைப் புனைகதைகளும் வாசிக்கக்கிடைத்துள்ளன. ஆனால் உணர்வுகளின் திரட்சியான கவிதை வடிவில் – அகதி முகாம்களில் படும் வேதனைகளை ஞானசூரியின் அளவுக்கு முன்வைத்த கவிதைகளை வாசித்ததில்லை. இந்தப்பாடுகளுக்கான காரணங்களையோ, கோரிக்கைகளை முன்வைத்து விடுதலையையோ கோராமல், இருப்பை மட்டுமே தீவிரமாக முன்வைக்கிறார். அதன் மூலம் ஒட்டுமொத்தமான அகதி வாழ்வின் பாடுகளாக மாற்ற முனைந்துள்ளார் என்பது குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியதாக இருக்கிறது.//

பேராசிரியரின் வலைப்பக்கத்தில் விரிவாக கட்டுரையினை வாசிக்கலாம். அதன் இணைப்பு கீழே தந்துள்ளேன். 

https://ramasamywritings.blogspot.com/2021/08/2021.html?m=1



Saturday, August 21, 2021

நாடிலி - தோழர் தேனி விசாகன் பார்வையில்


 

காற்றில் அலைவுறும் துகள்...

---------------------------------------

1


தனிமனித சாதனை மற்றும் தனிமனித படைப்பு ஆகியவை முன்னிலைப் படுத்துவது மீண்டும் அதிகாரப் போக்குகளையே நிறுவுகின்றன என்ற ஒரு கருத்தினை நாம் பரிசீலிக்க வேண்டுமென்றாலும்கூட, அதில் நாம் கவனங்கொள்ளத்தக்க அரசியல் இருக்கிறதென்றாலுங்கூட, ஒரு படைப்பு தனிமனிதனை எவ்வாறு முன்னிலைப்படுத்திட முடியும் என்கிற கேள்வியையும் கேட்டாக வேண்டியிருக்கிறது. ஒரு சமூகம் பற்றிய கருத்துகளடங்கிய படைப்பை ஒரு தனிமனிதன் எழுதியிருந்தால், அப்படைப்பு அத்தனி மனிதனை மட்டுமே முன்னிலைப்படுத்துமா...? 


2


சுகன்யா ஞானசூரி எழுதிய "நாடிலி" என்கிற கவிதைத் தொகுப்பை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக என்னாலான இந்த சின்னஞ்சிறிய அளவிலான குறிப்புகளை எழுதுவதற்கு எனக்கு நிறைய மெனக்கெடல் தேவைப்பட்டது. ஒரு மனிதனுக்கு சில குணங்கள் இயல்பில் அமையும் என்பதைப் போல ஞானசூரி அமைதியான, இதயக்குளிர்மை கொண்டவராக இருக்கிறார். ஆனால் ஒருவரைத் தொற்றிக்கொள்ளும் பதற்றம் இயல்பானது அல்ல என்பதைப் போல, அவரின் உடலும் மனமும் எப்போதும் படபடப்பாகவே இருக்கிறது என்பதையும், முந்தைய அமைதியும் குளிர்மையும், அவரின் பதற்றத்தினை அடக்கியாண்டு வெளிப்படுவதைப் போல நானுணர்கிறேன். அப்படித் அவரைத் தொற்றிக்கொண்ட பதற்றத்திற்கு என்ன காரணம்...


3


அதிகாரத்தின் தாக்குதலுக்காளாவதிலிருந்தும், அதை எதிர்க்கும் மனநிலை கொள்வதிலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்பவன் இவ்வுலகில் ஒருவன் கூட இருக்க முடியாது. காயத்திற்கும் எதிர்ப்பிற்குமான அளவு வேண்டுமானால் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஆனால் எப்படியான நிலையிலும் எத்தனை கீழான நிலையிலும் இருக்கின்ற ஒருவனுக்குக் கூட அதிகாரத்தை எதிர்க்கும் மனநிலை அவனளவிற்காகவது வாய்க்கும், இது பொது விதி. அப்படியான ஒரு பொதுவிதி கூட பொருந்தாது போகின்ற ஒரு இனமிருக்கிறது, அது நாடிலியினம். மனமும் குரலும் மிதித்து நசுக்கப்பட்ட அவ்வினத்திலிருந்து, முன்பொருநாள் ஒரு தேசத்தின் செல்லப் பிள்ளையாயிருந்த ஒரு கவிஞன் வந்து பாடுகிறான் தோழர்களே கேளுங்கள்... உப்புக்குச்சப்பாக ஒப்புக்கேனும் அல்லது சொல்வதற்கேனும் ஒரு நாட்டின் பெயரைக் கொண்டுள்ள தோழர்களே மனதுவைத்துக் கேளுங்கள்... 


இயற்கையை ரசித்தபடி

இன்னல்கள் ஏதுமின்றி

இன்பமாய்ச் சென்ற பேருந்துப் பயணம்

இப்போதெல்லாம் சலிப்பையே தருகிறது

மனதுக்கு ஒட்டாத இசையும்

மரங்களைத் தொலைத்த சாலையும்

இன்ப துன்பங்களைச் சுமந்தபடி

பேரிரைச்சலோடு கதறும்

கைப்பேசி உரையாடல்களும்

கொஞ்கம் புத்தகமும்

சன்னலோர இருக்கை இருந்தும்

பயனற்றுப் போகிறது

மெல்லச் சிணுங்கும் கைப்பேசியை

எடுப்பதாயில்லை...


கவிஞர் கையாண்டிருக்கின்ற பாடுபொருள் என்ன...? கவிஞர் முன்வைக்கின்ற அரசியல் என்ன...? முன்பு நாடற்றவனானவனை பின்பு ஏதுமற்றவனாக்கிவிடும் அவலமிகு இவ்வுலகிற்கு பாடம் நடத்துகின்ற பாடுபொருள் மூலமாக, துயர்மிகு அரசியலை அதிகாரத்தின் நெற்றிப்பொட்டில் அறைகிறார் ஞானசூரி. 


மஞ்சள் கனியொன்றின்

பற்குறியில்

உறைந்து கிடக்கும்

குருதியென வீச்சமெடுக்கிறது

அகதியெனும் இவ்வாழ்வு.


4


ஞானசூரியின் "நாடிலி" என்கிற தலைப்பிலான 96 பக்க கவிதைத் தொகுப்பு அவரின் "என்னுரையுடனும்" பின்பு கவிஞர் யவனிகாவின் முன்னுரையுடன் தொடங்குகிறது. அடர்த்தியான தன்னுடைய முன்னுரையில், தொகுப்பிலுள்ள ஒட்டுமொத்தக் கவிதைகளையும் சுருக்கிப் பிழியக் கிடைக்கும் ஒரு சொட்டுச் சாறாய் "நினைவிலும் வாழ்விலும் தனித்துவிடப்பட்டு, தன் வாழ்வை செப்பம் செய்தபடி புலம்பெயர்ந்த இடத்தில் தன் பிறப்பிட அகபுற கனவுகளை அல்லது புகலிடப் பதற்றத்தை இன்னும் நிலைத்தன்மை அற்ற அச்சத்துடன் கவிதைகளாக இந்நூல் பதிவு செய்திருக்கிறது என்கிறார். ஞானசூரியின் கவிதைகள் அனைத்திலும் ஒரு அகதி மனம் ஆதிக்கம் செய்கிறது. மனிதன் அகதியாகிப் பார்த்திருக்கிறோம், பார்த்துவருகிறோம். மனம் அகதியானால்...? அம்மனம் படைப்பு மனமாகவும் மாறிப்போனால்...! மனமெங்கிலும் வலி! வலி! வலி! படைப்பெங்கிலும் வலி! வலி! வலி! அப்படியான ஒரு வலியை, வாசிக்கும் வாசகனின் மனத்தையும் மூளையையும் நேரடியாகத் தாக்குகின்ற கவிதைகளைத் தன்னுடைய தொகுப்பில் வைத்திருக்கும் ஞானசூரியின் கவிதை மொழியானது வளமும் எளிமையும் கொண்டிருக்கும் ஒரு சமகால வியப்பு.  ஒட்டுமொத்த நாடிலி சமூகத்திற்கான ஒற்றைக் குரலாகத் தன் கவிதைகளைக் கையளித்திருக்கும் ஞானசூரியின் படைப்பு தனிமனிதப் படைப்பு என்றாலும் கூட அது ஒரு சமூகத்தின் வலியைக் காட்டுகின்ற படைப்பாதலால், அதில் ஞானசூரி முன்னிற்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதும், அவரை நாம் முன்னிலைப்படுத்துவதும் தவறில்லை. 


அந்தரங்கத்தில் எந்தவொரு பிடிப்பின்றித் தொங்கும் ஒற்றைக் கயிறு உணர்கின்ற பதற்றம் பற்றிச் சொல்ல சொற்கள் கிடைக்குமா என்ன...? ஞானசூரிக்குக் கிடைத்திருக்கிறது. ".... வாதையிலிருந்து தப்பித்துக்கொள்ள படைப்பிலக்கியம் வழி சற்று ஆசுவாசம் கொள்கிறோம். இப்படியாக வாழ்வின் அவலங்களை, புலம்பல்களை எழுதுவதன் மூலம் எனது இறப்பைச் சற்றுத் தள்ளிவைத்து வாழ்நாளை நீட்டிக்கொள்கிறேன்..." என்று தன்னுடைய "பதற்றம்" என்பதற்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதையும் தன்னுடைய "தன்னுரையில்" குறிப்பிட்டிருக்கிறார் ஞானசூரி. 


5


காற்றில் அலைவுறும் துகள்களையெல்லாம்

தன் நீர்மைகொண்டு

தனக்கொரு கூடு நெய்யும்

சிலந்தியைப் போல்

ஒவ்வொருமுறையும்

துயர்மறந்து விடியலை நோக்கும்

என் கனவுகளை

அகதியெனும் ஒற்றைச்சொல்லில்

சிதைத்துவிடுகிறீர்கள்...


முன்பு இலங்கையைப் போன்று, பிற நாடுகளைப் போன்று, இன்று, இதோ ஆப்கானிஸ்தானிலும் நம் கண் முன்னாலேயே ஆயிரக்கணக்கான மனம் சிதைக்கப்பட்டு வருகிறது. நாளை...?


---Visagan

தொடர்பு கொள்க: 9790 350 714 

இப்போது

https://www.commonfolks.in/books/d/naadili 

இணையத்திலும் நாடிலி நூல் கிடைக்கிறது.


Friday, August 6, 2021

நாடிலி - வி.ரங்கராஜன் வழக்கறிஞர், திருச்சி மாநகர தமுஎகச தலைவரின் பார்வையில்.


 

#நாடிலி 


"எனது இனத்தின் அழிவை

இந்த உலகமே

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது

இன்றும் 

மௌனமாக

கடப்பதொன்றைத் தவிர

நாம்தான்

வேறென்ன செய்தோம் "


-------------------------------------------------------------


அகதிகளின்

வருத்தமும் கோபமும்

மீண்டும் மீண்டும் 

பதிவு செய்ய படுகிறது.


செய்தியாக 

கடந்து போகின்றோம் !


வலியை எப்பொழுது

உணர போகின்றோம் ?


அகதிகள் இல்லா

உலகம் உருவாக்குவோம் !!


அகதிகளின்

வலியை கடத்துவதில்,

தவிர்க்க இயலா படைப்பு !!

சுகன்யா ஞானசூரி-யின்

நாடிலி..


- வழக்கறிஞர் வி. ரங்கராஜன்

தமுஎகச மவட்டத் தலைவர்

திருச்சி மாவட்டம்.

நாடிலி - எழுத்தாளர் வாசு முருகவேல் பார்வையில்



நாடிலி - சுகன்யா ஞானசூரி
-

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்
என் பாதம் பதித்து 
நடக்கும் 
இடத்தில் மட்டும் 
நிழல் தேடி
என்னோடு அலைந்து 
எரிகிகிறது
ஒருபிடி நிலம்

கவிஞர் பிரமிளின் இந்தக் கவிதையைத்தான் என்னுடைய "புத்திரன்" நாவலின் தொடக்கத்தில் பதிவு செய்திருந்தேன். கவிஞர் சுகன்யா ஞானசூரி தன்னுடைய "நாடிலி" கவிதைத் தொகுப்பின் முன்னுரையை அதே பிரமிளின் கவிதையுடன்தான் தொடங்குகிறார். நாங்கள் அகதிகளாக அலையும் காலம் முடிவற்று நீண்டு கொண்டே செல்கிறது ஒரு பிடி நிலம் தேடி. அகதிகள் என்ற வார்த்தையிலும் பல அரசியல் இருக்கிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் "அகதிகள்" என்ற அடையாளத்துடனும் ஒரு அணி பங்கேற்கிறது. அதில் ஏன் ஈழத்தமிழர்கள் இல்லை என்று தமிழக நண்பர் ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பி இருந்தார். உலகெங்கும் ஈழத்தமிழர் பரந்து வாழ்வதால் எல்லோரும் அகதிகள் என்ற அளவில் அவருடைய புரிதல் இருக்கிறது. தாய் நிலத்தை பிரிந்த வலி என்பது அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால், ஈழத்தவர் ஒவ்வொருவரின் நிலையும் ஒன்றல்லவே. பெரும்பாலான ஈழத்தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று விட்டார்கள். அகதியாக வந்து இறங்கியது முதல் இந்த நிமிடம் வரை அகதியாகவே வாழ்கிறவர்கள் என்றால் இந்திய நிலத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் மட்டும் தான். அதிலும் முகாமுக்கு உள்ளும் - வெளியிலும் கூட அன்றாட சிக்கல்கள் மாறுபடுகின்றன. பாரிசிலும், லண்டனிலும், ரொரன்டோவிலும் இருந்து எழுத்துவது போலல்ல ஒருவன் தமிழகத்தில் அகதியாக இருந்து எழுதுவதும் / குரல் கொடுப்பதும். அகதி நீ அரசியல் பேசாதீர். அம்மணமாக அடித்து துரத்த வேண்டும். இப்படி எத்தனை வசவுகள். கம்யூனிஸ்ட் பெரியாரிஸ்ட் என்று எத்தனை இஷங்கள் கழுத்தை நெரிக்கின்றன. ஈழத்தமிழன் தலை விதி அப்படி !.

இன்னும் இருக்கிறது . இன்னும் நிறையவே இருக்கிறது. அகதியாக இறக்கும்  வரையிலும் எழுதமுடியாதவை நிறைய இருக்கிறது.
-

அகதிகள் வீடடைதல்

புழுதிகள் அடங்கி வெப்பம் தணியும்
கோடையின் இரவுகளைத்தான்
வரவேற்று மகிழ்கிறோம்
தார் சீற்றின் கீழே
அடுப்பின் வெக்கைக்குள்
வெதும்பிய குரல்கள் பேசிக்கொண்டிருக்கின்றன
இதோ
மரத்தினடியில்தான் கோடையின் பகல்கள்
சீட்டாட்டமாகவும்
விரல் சுண்டும் கேரம் போர்டாகவும்
ஊர் பேச்சோடு நகர்ந்தபடி இருக்கிறது சூரியன்
இதற்காகவே நாங்கள் மரங்களை வளர்த்தோம் 
உங்களுக்கு 
அவர்களோடு உறவென்ன இருக்கப்போகிறது தெரியாது
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெட்டாஷ் சீற்றுக்கு மாறியிருக்கிறது
பத்துக்குப் பத்து என்பதொரு கணித சூத்திரம்
இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
கல்லறையின் அளவை
அந்திக்கருக்கலில் விடைபெற்றுச் செல்லும்
சூரியனைப் போல் மெல்ல விடைபெறுகிறோம்
மரங்களை விட்டு
வீடுகளுக்குள் வெளிச்சம் பரவுகிறது
மண்ணெண்ணெய்க் குப்பி விளக்கிலிருந்து
குண்டு பல்புக்கு மாறிவிட்டோம்
புழுக்கத்தின் நாற்றம் மிகக் கொடியது
இரவுகளை
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்
கோடையில் பெய்யும் 
பனியின் வெம்மையில்
குளிர் மெல்லப் பரவுகிறது
போர்த்தி உறங்குவதற்குள் விடியல் துவங்கிவிடுகிறது
மீண்டும் மரங்களோடு உறவாடுதலும்
அகதிகள் வீடடைவதும் தொடர்கதையாகிறது
மறந்துவிட்டேன்
நாளை வந்து கையெப்பம் இட்டுச் செல்லும்படி ஆணை

-

வாழ்த்துகள் Suganya Gnanasoory  🖤