Tuesday, March 28, 2023

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்.

- சுகன்யா ஞானசூரி



கடல் யாரோ ஒருவரின் துயரத்தை உள்வாங்கி கரையில் மோதித் தெறிக்கிறது என்ற த. அகிலனின் சிறுகதையில் உள்ள வரிகள் அவ்வளவு எளிதாகக் கடந்துவிடும் ஒன்றல்ல. 

நீர் தன் இருப்பிடத்திற்கேற்ப்ப தன் வடிவத்தைக் காட்டுவதைப் போலவே இங்கு மரணம் தன் அரூப வாசத்தை நுகரச் செய்கிறது. யுத்த வாதைகளில் இனியும் சப்பிப் போட எதுவும் இல்லாதபடிக்கு புதிய புதிய விமானங்களின் குண்டுவீச்சுகள், வித விதமான எறிகணைகள் என பலதரப்பட்ட முதலாளிய வர்க்கங்களின் ஆடம்பரப் பசிக்கு எளிய உணவாகிப் போனதென்னவோ சனங்கள், விலங்குகள், புல் பூண்டு தாவரங்கள் என சகலமும் மரணத்தின் வாசனையை நுகர முடியாமல் எனது பன்னிரண்டாவது வயதில் வெளியேறினேன் என்பதை விடவும் வெளியேற்றப்பட்டேன் என்பதே பொருத்தமாகும். 

1995 வரையில் வன்னி நிலம் எத்தகையது என்பதை நான் அறியவில்லை. அந்த ஆண்டின் பாரிய இடப்பெயர்வான யாழ் வெளியேற்றம் (1990 களில் முதல் யாழ் வெளியேற்றம் எம் சகோதரர்களுக்கு நடந்த பிறகான சில ஆண்டுகளில்) பூநகரிக்கும் ஆனையிறவுக்கும் நடுவே கிளாலி நீரேரி வழியாக வன்னி நிலத்தில் கால்பதிக்க வைத்தது. பெரு வனங்களும் பெரு வெளிகளுமாக அச்சம் தருவதாக இருந்தாலும் புதிய அனுபவமாக இருந்தது அப்போது. அது சிறுவர்களுக்கே உரிய மனம். கிளிநொச்சி, மாங்குளம், கனகராயன்குளம், கொல்லர் புளியங்குளம், மல்லாவி, வலைப்பாடு இப்படியாக 1996 செப்டம்பர் வரையிலான காலகட்டத்துக்குள் எத்தனை இடப்பெயர்வு. மலேரியா, நெருப்புக் காய்ச்சல், பாம்புகளோடு உறக்கம், காட்டுப் பன்றிகள் தொல்லை இப்படி நிறைய நிறையவே புதிய அனுபவங்களை வன்னி மண் தந்திருந்ததை த. அகிலனின் "மரணத்தின் வாசனை" சிறுகதைகள் தொகுப்பு மீண்டுமொரு நினைவுப் பயணத்திற்குள் என்னை அழைத்துச் சென்றன என்றால் மிகையாகாது. 

எம்.ரி 90 வண்டிகள் இப்போது (யப்பான் கோண்டா தயாரிப்பு) ஹீரோ கோண்டா ஆகிடுச்சு என்ற வரிகளை வாசிக்கையில் மலேரியா காய்ச்சல் கண்ட அப்பாவை கொல்லர் புளியங்குளம் முகாமிலிருந்து மாங்குளம் சந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு அப்பாவின் எம்.ரி 90 மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற நினைவுகளை மீட்டிச் சென்றது. 

போர் தின்ற சனங்களிடம் சொல்வதற்கு நிறைய நிறைய கதைகள் இருக்கிறது. இவைகளை ஒருபோதும் இலக்கியமாக யாரும் ஏற்பது இல்லை. இட்டுக்கட்டிய புனைவுகளையே போரிலக்கியம் என்று கூவிக் கூவி விற்கும் விற்பன்னர்களையே இன்றைய நவீன உலகம் அலங்கரித்து வருகிறது. 

அகிலனின் கதைகளுக்குள் இந்திய இராணுவத்தின் அடாவடியால் பாம்பு கடித்து மருத்துவமனை கொண்டு செல்ல முடியாமல் இறக்கும் அப்பா, ஊரைப் பிரிந்து இடம்பெயர்ந்து திரும்பி வருகையில் சிதறுண்ட கற்குவியலாய் இருக்கும் கோயிலை காணச் சகியாத அம்மம்மாவின் இறப்பு, காதல் நிறைவேறாத சித்தியின் இறப்பு, ஒருதலைக் காதலியான காயத்திரியின் இறப்பு, பள்ளி நண்பனின் இறப்பு, தெரியாத போராளி  ஒருவரின் மரணம் இப்படி பல்வேறு மரணங்களை தன் கதைகளுக்குள் உயிரோட்டமாக்கித் தந்துள்ளார். அத்தனை இறப்புகளுக்கும் போரும், போர்க்கருவிகளும், ஆக்கிரமிப்பாளர்களும், இடப்பெயர்வுகளும் காரண காரியங்களாகி நிற்பதை யாரும் நம்புவதேயில்லை. விதியின் மீது பழி போட்டு கடந்துவிடுவது எளிதாகி விடுகிறது. எளிய மனிதர்களால் அதைத்தவிர வேறென்ன செய்துவிட முடியும்? 

சில கதைகள் தேவைக்கு அதிகமாக நீண்டு செல்வதும், ஒரே லயத்தில் சொல்லல் முறை இருப்பது சுணக்கத்தை ஏற்படுத்தினாலும் அத்தனை கதைகளும் சிறு திருப்பங்களோடு மையக் கருவை சரியாக வந்தடைகின்றன. இதுவே எழுத்தின் வெற்றியுமாகும். 

அலைகளின் மீதலைதல் எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பில் "கடல் மீது/ கால் நனைப்பதாய்/ மறந்தும் மிதித்து விடாதீர்கள்/கரைதேடி அலைகளின் மீதலைகிறது /அவர்களின் ஆன்மாக்கள் என எழுதியிருப்பேன். அது என் கண்முன்னால் மூழ்கடிக்கப்பட்ட படகில் இறந்துபோனவர்களுக்காக எழுதியவை. இப்போதும் அந்த நாட்களை நினைத்தால் நெஞ்சம் பதறவே செய்கிறது. கரையென நம்பி மணல் திட்டுக்களில் இறக்கிவிட்ட படகோட்டிகளும், மணல்திட்டில் மூழ்கி இறந்து போனவர்களும் தப்பிப் பிழைத்தவர்களும் என ஒரு பெருங் கூட்டமாகவே 1996களில் தனுஷ்கோடி கரைகளில் கால் பதித்தோம். தாயையும் சகோதரிகளையும் காப்பாற்றிவிடும் எத்தனத்தில் கானல் நீர் முகத்துவாரத்தில் மூழ்கிச் சாவெய்துபவனின் கரம்பற்ற இயலாமல்போன குறுகுறுப்பை "கரைகளுக்கு" என்ற சிறுகதை புலப்பெயர்வின் விடியலை வைகறைக்குள் புதைத்துச் செல்லும் கதை. 

மொத்தம் 12 சிறுகதைகள். ஒவ்வொன்றும் விதவிதமான மரணத்தின் வாசனையை சாம்பிராணிப் புகையாட்டம் திணறச் செய்கிறது. அதன் வாதைகளிலிருந்து தப்பித்தால் நீங்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். 


நூல்: மரணத்தின் வாசனை

ஆசிரியர்: த. அகிலன் 

வெளியீடு: வடலி 

விலை: ₹160.

No comments:

Post a Comment