Sunday, June 4, 2023

அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு குரல் - சுகன்யா ஞானசூரி

 







அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு குரல் 

**********

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

- கணியன் பூங்குன்றனார் 

ஒரு உலகளாவிய ஒற்றுமைப்பாடு கொண்ட பரந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒருவரால்தான் இப்படியான ஒரு வார்த்தையைச் சொல்ல முடியும். அப்படி அவர் சொல்வதற்கு நிச்சயம் ஏதாவதுதொரு ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். இதுதான் உண்மையாகவும் இருக்கக்கூடும். இல்லையெனில் சாதாரணமாக ஏன் கணியன் பூங்குன்றனார் இந்த வார்த்தைகளை உதிர்க்க வேண்டும் சொல்லுங்கள்? சரி நாம் இதுகுறித்து இன்னொரு ஆய்வுக் கட்டுரையில் பேசுவோம். விசயத்திற்கு வருகிறேன்.

சமீபத்தில் வெளியாகியுள்ள "யாதும் ஊரே யாவரும் கேளிர்" திரைப்படத்தை ஒட்டிய கதைத் திருட்டு சர்ச்சைதான். அகதிகள் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் தோழர் பத்தினாதன் கதைகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்தப் பதிலும் கூறப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு உரையாடலுக்கான கதவுகூட திறக்கப்படவில்லை. இது இன்று நேற்றல்ல கறுப்பு வெள்ளைக் காலம் தொட்டு கலர்க்கலரா ரீல் விடுகின்ற  இன்றைய காலம்வரை தொடரும் ஒரு சாபக்கேடு. 

அகதிகள் முகாம் அகம் புறம்: 

முதலில் நாம் பிற தேசத்து அகதிகளோடு தமிழ்நாட்டில் வதியும் ஈழ அகதிகளை ஒப்புமைப்படுத்திப் பார்க்கும் மோசமான நீசத்தனத்தை தூக்கிப்போட வேண்டும். இங்கே உள்ள அகதிகளிலும் திறந்தவெளிச் சிறச்சாலையான மக்கள் நெருக்கமாக வாழும் முகாம்களுக்கும், பிற போராளிக் குழுக்கள் வசிக்கும் சிறப்பு முகாமுக்கும், போதை மருந்துக் கடத்தல், ஹவாலாப் பணப் பரிமாற்றம், கடவுச்சீட்டு மோசடி என பல குற்றப்பின்னணியோடு அடைக்கப்பட்டிருக்கும் "சிறப்பு முகாம்" எனும் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குமான வேறுபாட்டை யாரும் உணர்ந்துகொள்வதே இல்லை. அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் செய்தித்தாளில் மொட்டையாக அகதி என்ற சொல்லில் செய்தியை முடித்துக் கொள்வார்கள். இப்படியான மோசமான செய்திகள் நாளடைவில் இவர்கள்மீது எப்போதும் ஒரு குற்றப்பின்னணியோடு கூடிய பார்வையை பொதுப்பரப்பில் பிம்பக்கட்டமைப்புச் செய்துவிடுகிறது என்பதுதான் எதார்த்தம். 

அகதிகள் முகாம்களுக்குள் குடியுரிமையற்று நாற்பது ஆண்டுகளாக எந்தவித சுகத்தையும் அனுபவிக்க முடியாமல் மனம் குமைந்து எமக்கான ஒரு வெளிச்சம் கிடைக்காதா என்ற அங்கலாய்ப்பில் கல்வி கற்று மேலே வந்தால் படிப்புக்கேற்ற வேலை இல்லை. சரி இந்தப் படிப்புக்கு வேறு நாடுகளில் வாய்ப்பு கிடைத்தால் கடவுச்சீட்டு எடுக்க முடியாத மோசமான சூழலில் அரசு சட்டவிரோதக் குடியேறியாக முத்திரை குத்தி வைத்திருக்கிறது. இப்படியான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் கடந்த காலத்தில் சிலர் படகில் ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தனமாக பயணித்ததையும் நாம் நாகரீகமாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இங்கே எவ்வித தீர்வுக்கும் வழியற்று இருக்கையில் மாற்றுவழி என்ன என்பதை தேடுவது மனித இயல்பு. 

சட்டவிரோதக் குடியேறியாக நடுவண் அரசு எம்மை முத்திரை குத்தி வைத்திருக்கிறது. திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாக்களில்கூட எதிரியென சித்தரித்துக் கொண்ட அண்டை நாட்டின் அகதிகளுக்கெல்லாம் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஈழ அகதிகளுக்கு அங்கே இடமில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் சரத்துகளில் கைச்சாத்திடாத காரணத்தையே இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தூக்கிச் சுமப்பார்களோ தெரியவில்லை. 

கோடம்பாக்கத்தின் அகதிகள் குறித்த சினிமாவுக்கான கச்சாப்பொருட்கள் சிறப்பு முகாம் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. ஏனெனில் இவர்கள் யாரும் சாதாரண மக்கள் வசிக்கும் முகாம்களுக்குள் அனுமதியின்றி செல்லவோ, உரையாடவோ வழியில்லை என்ற எதார்த்தத்தினை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். செய்தித்தாள்களில், சமூக ஊடகங்களில் வருகின்ற செய்திகளை வெட்டி ஒட்டி பல தமிழ் சினிமாக்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

எழுத்தாளர் பத்தினாதன்: 

2007 ல் போரின் மறுபக்கம் தன்வரலாற்று நூல் வாயிலாக தமிழகத்தின் அகதிகள் பாடுகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர். பிறகு தமிழகத்தின் ஈழ அகதிகள் வரலாறு, தகிப்பின் வாழ்வு, சமீபத்தில் வெளியான அந்தரம் நாவல் மூலம் அகதிகள் முகாம்கள் குறித்த குறுக்குவெட்டுத் தோற்றத்தினை வெளியுலகு அறியச் செய்தவர். அவரது நூல்களை மேற்கோள் காட்டி சில தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. தெம்மாடுகள் நாவல் மூலம் உதயனும், ஏதிலி நாவல் மூலம் அ.சி.விஜிதரனும் எம் வாழ்வு குறித்து எழுதியவர்கள். ஆரம்பகட்டத்தில் புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் கவிதை எனும் கருவி மூலம் சிவா.மகேந்திரன், ஈழபாரதி, நடராஜா சரவணன், அ.சி.விஜிதரன், சுகன்யா ஞானசூரி போன்றவர்களோடு இன்றும் புதிய இளையவர்கள் எம் வாழ்வை வெளியுலகத்திற்கு படம்பிடித்துக் காட்டுகிறார்கள். இப்படியான அவலப்பாடுகளோடு மேலெழுந்து வரும் மக்களைத்தான் தமிழ்ச் சினிமா மிக மோசமாக சித்தரித்து வருகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் சர்ச்சை

தோழர் பத்தினாதனின் கதைகளின் காட்சியமைப்புகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பத்தினாதன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு படக்குழுவினர் இன்னமும் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து ஒரு திறந்த உரையாடலுக்கு பத்தினாதன் அழைப்பு விடுத்தபோதும் அதை அவர்கள் புறக்கணித்து அவரது முகநூல் கணக்கை முடக்கச் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது சென்னைவரை வரவைத்து அலைக்கழிப்பு செய்திருக்கின்றனர். இதுதான் பொதுவுடைமை கொள்கையாளன் என தன்னை கூறிக்கொள்ளும் இயக்குநருக்கு அழகா? ஒட்டுமொத்தமாக நான் யாரையும் குறைகூறமாட்டேன். முதலாளித்துவத்தை, ஏகபோகத்துவத்தை சமன்படுத்தி எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் கிடைக்கச் செய்வதுதானே பொதுவுடைமை? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதுதானே பொதுவுடைமை? சமீபகாலமாமா பொதுவுடைமையின் பெயரால் உழைப்புச் சுரண்டல், நிறுவனங்களின் சொத்துக்களை அபகரித்தல் என ஏகபோக முதலாளிகளாக முயற்சித்து அம்பலப்பட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் இப்படத்தின் இயக்குநரும் இருக்கிறாரா?  எல்லோருக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கிறதுதானே? 

படம் முன்வைக்கும் அரசியல்

 அகதிகள் குறித்து அபத்தமான காட்சிகளை இப்படத்தில் வைத்திருப்பதன் வாயிலாக அகதிகள் மீது மேலும் மேலும் களங்கம் கற்பிக்க நினைக்கிறார்கள். நிறவாதம் இங்கே தலைவிரித்து ஆடத்துவங்குகிறது. இனவாதத்தால் அழிந்து பட்ட சமூகம் நிறவாதத்தின் துணைக்கோடலோடு சாதிய மேட்டிமைகளை மீட்டுருவாக்கம் செய்ய முற்படுகிறது. மேலும் நாயக பிம்பக் கட்டமைப்புச் சினிமாவில் நாம் எம் வாழ்வு குறித்த எதார்த்தத்தை எதிர்பாக்க முடியாது. இதில் தமிழகத்தில் உள்ள அகதி நாயகன் வெளிநாட்டுக்கு எப்படிச் சென்றார்? அதற்கான சாத்தியக்கூறுகள் இந்திய வெளியுறவுக் கொள்கையில் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறதா? அதற்கான வாய்ப்புகள் இருப்பின் ஏன் கடல்வழியாக கள்ளத்தனமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகள் புலம்பெயரப்போகிறார்கள்? இவை எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாடு சென்ற  நாயகன் இலங்கையில் சர்வசன வாக்குரிமை நடாத்தக் கோருவது சுத்த அபத்தம். தமிழகத்தில் உள்ள அகதிகளின் குடியுரிமை குறித்தல்லவா அவர் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்? இங்கே நாற்பது ஆண்டுகளாக வசிக்கும் மக்களில் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி அவரிடம் கேள்வி கேட்டுப் பாருங்கள் எது எமக்கு அவசியமானது என்பதை பொட்டில் அடித்ததுபோல் சொல்லியிருப்பார். ஆகவே இது என்ஜிஓ (NGO) ஒன்றின் அரசியல் லாபியாகவே  தெரிகிறது.

நீண்டகாலமாக எம் மக்களின் அரசியல் பிரதிநிதிகளென தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு செயல்பட்டுவரும் ஒரு தொண்டு நிறுவனத்தின் பிரச்சார ஊதுகுழலாக இத்திரைப்படம் தன் அரசியலை முன்வைக்கிறது. இது இங்குள்ள அகதிகளை மீளவும் நாடு திரும்ப வைக்கும் தமிழ்தேசிய படுகுழி அரசியலை முன்வைக்கிறது. இத்திரைப்படப் படப்பிடிப்பில் அத்தொண்டு நிறுவனமும் சில உதவிகளைச் செய்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு எல்லோருக்குமான அரசியல் துருப்புச் சீட்டாக தமிழகத்தின் ஈழ அகதிகள் இருக்கிறார்கள். முன்னர் இருந்தது போலவே இப்போதும் ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்ற எண்ணங்களை அனைவரும் கைவிடவேண்டும். ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் எல்லா அரசியல் போக்குகளையும் புரிந்துகொண்டே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். படைப்பாளிகளும் உருவாகி வருகிறார்கள்.

தீர்வு:

ஒரு படத்தின் எட்டுக் காட்சியமைப்புகள் குற்றம் சாட்டுபவரின் படைப்புகளோடு ஒத்துப் போகும் எனில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழியிருப்பதாக சட்டம் சொல்கிறது. படைப்பையும் படத்தையும் வரிக்கு வரி காட்சிக்குக் காட்சி படித்துப் பார்த்து பக்கம் பக்கமாக அறிக்கை தாக்கல் செய்து ஆண்டுக்கணக்காக காத்திருந்தாலும் நிவாரணம் என்பது கிடைக்காது என்பதே நாம் கடந்து வந்த பாதைகள் சொல்லும் செய்தி. விசாரணையின் கரங்கள் எம் குரல்வளையை நசுக்கவே எத்தனிக்கும். குறைந்தபட்சம் இப்படியான அநீதிகள் நடைபெறுகிறது என்பதை பொதுவெளியில் வைப்பது என்பதே எமது போராட்டமாகிறது.

நிறைவாக

மீண்டும் மீண்டும் நாம் சொல்வதுதான் தமிழகத்தின் ஈழ அகதிகள் விடையம் இன்னும் எம் படைப்புகளில்கூட முழுமையாக சொல்லப்படவில்லை. ஒரே இனம், ஒரே மொழி பேசினாலும் இந்த நிலத்தில் எம் வாழ்வின் சிக்கலான கூறுகள் இன்னமும் நீடித்திருக்கிறது. அப்படி இருக்கையில் ஆளாளுக்கு ஒரு கதையை அகதிகள் கதையென கோடம்பாக்கத்தில் தூக்கிக்கொண்டு வந்தால் நேரடியாக முகாம்களுக்குள் வந்து களநிலவரம் தெரிந்து பேசுங்கள், படம் எடுங்கள். அதைவிடுத்து எம்மை குற்றப்பரம்பரைகள் ஆக்காதீர்கள் என்பதை கனிவோடு வேண்டிக் கொள்கிறோம். நாம் இப்போது எதிர்பார்த்திருப்பது எமக்கான ஒரு குடியுரிமை பெற்ற சுதந்திரமான வாழ்வை மட்டுமே. நாடற்று நாதியற்று இருக்கும் எமக்கு இப்போதைக்கு  எல்லாமே யாதும் ஊரே யாவரும் கேளிர்.

அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து 

சுகன்யா ஞானசூரி.

04/06/2023



No comments:

Post a Comment