தமிழ்நாட்டில் ஈழ அகதிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும்
(ஒரு அகதியின் ஒப்புதல் வாக்குமூலம்) - சுகன்யா ஞானசூரி.
காலம்தான் எவ்வளவு வேகமாகச் சுற்றிக் கொள்கிறது. ஒரு சொடக்குப் போடுவதற்குள் காலம் கடந்து விட்டதைப் போலிருக்கிறது நினைவின் தாழ்வாரத்தில் கடந்த காலம். பொங்குமாக்கடலின் அலை நுரைகளில் உப்புக் கரிப்பை வாழ்வு சுவைத்துக் கொண்டிருக்கிறது. அத்தனை விரைவாக நாம் நாடு திரும்பிவிடுவோம் அதுவரையில் உயிரைத் தக்கவைக்க ஒரு பாதுகாப்பான நிலம் தேடிப் புறப்பட்ட பாதங்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே இங்கு தங்கிவிட்டன இல்லை வேர் விட்டன என்பதே பொருத்தமாகும். "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்" என்ற வார்த்தைகள் நீர் மேல் எழுத்தாய்க் கலைந்து போனது. நிம்மதி தேடிப் புறப்பட்ட இவ்வாழ்க்கை நிர்கதியாகி நிற்கிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த துயர்பட்ட வாழ்வென்றே மூன்றாம் தலைமுறையும் கேள்வி கேட்கத் துவங்கிவிட்ட பின்பும் அனைவரின் கள்ள மெளனங்கள் புரியாத புதிராகவே உள்ளது. இது என் ஒருவரின் குரல் மட்டுமல்ல தமிழகத்தின் இருபத்தெட்டு மாவட்டங்களில் உள்ள நூற்றி ஆறு முகாம்களின் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஒட்டுமொத்தக் குரலாகவே உள்ளது. இங்கு அகதிகள் என்போர் ஒரு தனிப்பட்ட மதம் சார்தோ, பிரதேசம் சார்ந்தோ இல்லை. சைவர்கள், வேதக்காரர்கள், இஸ்லாமியர்கள் எனவும், மலையகத்தோர், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் சார்ந்தோர் என கலந்துபட்ட விழிம்புநிலைச் சமூகமாகவே அகதிகள் என்னும் அடையாளத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.
முகாம் எனும் முள்வேலி:
இதுவொரு திறந்தவெளிச் சிறைச்சாலை என்பதே பொருத்தமானது. ஒவ்வொரு முகாமும் மாவட்ட எல்லைகளுக்கு அப்பால் பொட்டல் வெளிகளிலும், வறண்ட பகுதிகளிலும், சுடுகாட்டு நிலங்களிலுமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் அருகில் உள்ள உள்ளூர் மக்கள் அச்சப்படும் படியான தோற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் நாளடைவில் தேவைகளின் பொருட்டு சந்திக்கவும், பொருட்களை விற்கவும் வாங்கவுமாக முகாம்களுக்குள் சாதாரண மக்களைத் தவிர வட்டிக்கு கடன் கொடுப்போரும், வியாபாரிகளும் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். முகாம் கழிவறை என்பது ஆரம்பத்தில் கருவேலங் காடுகள், தைலமரக் காடுகள், முந்திரி மரக் காடுகள் மற்றும் சுற்றியுள்ள பற்றைகள் போன்றவையே இருந்தன. பிற்பாடு ஐந்து வீட்டுக்கு ஒரு கழிவறை என சில தொண்டு நிறுவனங்களின் கருணையால் உருவாக்கப்பட்டன. இப்போதும் அதுவே தொடர்கிறது. ஒரு முகாம் சிறியது எனில் குறைந்தபட்சம் நூற்றைம்பது குடும்பங்களும், பெரியது எனில் அறுநூறு குடும்பங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கோழிப்பண்ணைகளிலும், பழைய குடோன்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டமைப்பு குதிரை லாயங்களைப் போன்று பத்து முதல் இருபது வீடுகள் சேர்ந்தாற்போல் லைன் (line) தொடர்ச்சியான வீடமைப்பைக் கொண்டது. அடுத்தவர் வீட்டு விம்மல் ஒலி துல்லியமாகக் கேட்கும்படியாக இருந்தது. தார் சீற்று என்று சொல்லப்படுகின்ற கறுப்பு அட்டையால் அமைக்கப்பட்டிருந்த ஆரம்பகால வீடுகள் தறப்பால்களால் சுற்றப்பட்டு இருந்தன. பின்னர் ஒற்றை செங்கல் வைத்து கட்டப்பட்டு ஆஸ்பெஸ்டாஸ் சீற்றுக்கு தரம் உயர்த்தப்பட்டிருந்தது. தற்பொழுது தமிழக அரசு அரசு ஊழியர்களின் தொகுப்பு வீடுகளைப்போல் சிறந்த வீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அடிபம்புகள் இருந்தநிலை மாறி நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து சீராக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் குடிநீருக்காக பல தோட்டக் கிணறுகளைத் தேடிச் சென்று கிணற்றின் சொந்தக்காரர்களின் மோசமான திட்டுக்களில் கூனிக்குறுகி நின்ற நாட்கள் நினைவை விட்டு நீங்காமலே உள்ளது.
கல்வி:
அகதிகளாகி வந்த ஆரம்ப நாட்களில் கல்வி என்பது எட்டாக் தனியாகவே பார்க்கப்பட்டது. பின்னர் ஆரம்பக் கல்வியை முகாம்களுக்கு அருகிலிருந்த பள்ளிகளில் பயில அனுமதி வழங்கப்பட்டது. பிறகு உயர்கல்வி பயில அனுமதிக்கப்பட்டது. முன்னால் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கி பட்டப்படிப்புகள் வரையிலும் பயில அனுமதி வழங்கியிருந்தார். இந்த ஒதுக்கீடுகள் சில தொண்டு நிறுவனங்களின் தவறான போக்கால் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலிதா அவர்களால் குறைக்கப்பட்டது. பின்னர் அது முற்றாக நிறுத்தப்பட்டது. கலை அறிவியல் துறைசார் பட்டப்படிப்புகள் தவிர பிற துறைகளுக்கு எம்மவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர். மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து கல்வி மத்திய அரசின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் நீட் நுழைவுத்தேர்வு எனும் அரக்கன் முகாம் மாணவர்களின் மருத்துவக் கனவுகளை தகர்த்து விட்டது. இதுவரையில் முகாமிலிருந்து மருத்துவம் பயின்றவர்கள் முகாம்களுக்குள் எவ்வித செயல்பாடுகளையும் முன்னெடுக்காத சூழலில் இதுகுறித்து கவலைப்படுவதில் பிரியோசனம் இல்லை என நாம் கடந்து போக நினைத்தாலும் தொடர்ச்சியாக நடுவண் அரசு செயல்படுத்தி வரும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்பது இன்னும் பல்வேறு உளவியல் சிக்கல்களுக்கு எம் மாணவர்களை இட்டுச் செல்லும் என்பதே நிதர்சனம். மருத்துவம், வேளாண்மை, சட்டம் மற்றும் கடல்சார் படிப்பு, போன்றவை எம் மாணவர்களுக்கு கிடைக்காமல் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது பொறியியல், கலை அறிவியல் மற்றும் டிப்ளமோ கல்விகளும் நுழைவுத்தேர்வு எனும் அரக்கத்தனமான செயலால் கல்வியற்ற சமூகத்தை நோக்கி நகர்த்தும் துர்ப்பாக்கிய சூழல் நெருக்கி நிற்கிறது.
வேலைவாய்ப்பு:
பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்பது இங்கு பெரிய உத்தியோகங்கள் என ஒன்றும் இல்லை. முகாம்களில் அடைபட்டிருந்த மக்கள் அரசு வழங்கிய பணக்கொடையிலும், ரேசன் பொருட்களிலுமே தங்களின் கால்வயிற்றை நிரப்பி வந்தனர். சில முகாம்களில் கட்டுப்பாடுகள் வரையறைக்கு உட்பட்டு நிர்மாணிக்கப்பட்ட சூழலில் வெளியே காலையில் வேலைக்குச் சென்று மாலைக்குள் முகாம்களுக்குள் திரும்பும்படியான இருவேளை கையெழுத்திடும் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இது ஒரு சிறிய விடுதையுணர்வை எமக்கு வழங்கியது என்பதே நிதர்சனம். முகாம்களை ஒட்டியுள்ள கடைகளில் சொற்ப சம்பளத்தில் எடுபுடி வேலை, கட்டுமானப்பணிகளில் கொத்தனார், சித்தாள் பணிகள், கல்லுடைத்தல், வர்ணம் பூசுதல் வேலைகள் எமக்கு இப்போதும் செய்யக்கூடியதாக உள்ள அனுமதிக்கப்பட்ட வேலைகளாக இருக்கின்றன. சில படித்த இளையோர்கள் தங்களின் அகதி அடையாளங்களை மறைத்து படிப்பிற்கு ஏற்ற மேல் வேலைகளுக்கு செல்லத் துவங்கினர். இப்போதும் அப்படியே தொடர்கிறது. படித்தும் பெரிய வேலைகளுக்கு செல்ல முடியாது என்ற எண்ணம் படிக்கின்ற வயதிலேயே வேலைக்குச் செல்லத் தூண்டுகிறது. அப்படியான சூழலே இங்கு இருக்கையில் கல்விக்கு செலவு செய்ய மனம் விரும்புவதில்லை என்பது எதார்த்தம்தான். அகதி என்ற சொல் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரும் சுமையாகவும், சவாலாகவும் இருக்கிறது என்பதே உண்மை.
சமூகச் சூழலும் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும்:
"வீடு எப்படியோ அப்படியே நாடும்" என்பார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அகதிகள் முகாம்கள் அமைந்திருக்கின்ற இடங்களில் சுற்றியுள்ள சாதிய, மதப் பண்பாட்டுக் கூறுகள் சமீபகாலமாக முகாம்களுக்குள்ளும் தலைகாட்டத் துவங்கியுள்ளது. பெரும்பான்மையான ஆதிக்கம் கொண்ட சாதியை தங்களின் சாதிய அடையாளமாக வரித்துக் கொள்ளும் போக்கு ஆரோக்கியமற்ற இளைய சமூகத்தை உருவாக்கியிருக்கிறது.
அரசின் மதுபானக் கடைகள் முகாம்களுக்கு அருகில் இருப்பதால் மதுப்பழக்கம் அகதிகள் முகாமுக்குள்ளும் ஒரு கலாச்சாரமாக பரவியுள்ளதைக் காண முடிகிறது. எல்லாக் கொண்டாட்டங்களிலும் மதுபானம் தவிர்க்க முடியாத ஒன்றாக பல குடும்பளின் சீரழிவுக்கும் இன்றைய இளைஞர்களால் ஏற்பட்டிருக்கிறது. மதுபோதையால் விபத்துக்கள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது.
உலக தாராளமயமாக்கலும் நுகர்வுக் கலாச்சாரமும் அகதிச் சமூகத்திற்குள்ளும் ஊடுருவி சமூகச் சிக்கல்களை தோற்றுவித்து வருகிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் கண்காணிக்கும் க்யூப் பிரிவு புலனாய்வு அமைப்புகள் இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இம்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோர், எழுத்தாளர்கள், படைப்பார்கள், அறிவுஜீவிகள் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகள் ஒரு தீவிரவாதச் செயல்பாடாக உறுத்துவதால் உடனே விசாரணை எனும் பெயரில் முடக்குவதே முழுநேர நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர் என்பதே நிதர்சனம்.
இங்கு ஒவ்வொரு சமூகமும் சீர்பெற்ற ஆரோக்கியமான சமூகமாக வேண்டும் எனில் பேரறிஞர் சொன்னதுபோல் தங்களின் வீடுகளில் இருந்துதான் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அரசின் சட்டங்களும் கட்டுப்பாடுகளும்:
முகாம்களில் காவல் நிலையம் ஒரு காவல் அதிகாரி மற்றும் புலனாய்வு அதிகாரி என்ற மட்டத்தில் செயல்படும். தாசில்தார் மாதாந்திர தணிக்கையின் போது வருவார். வெளியே செல்லும்போதும் உள்ளே வரும்போதும் காவல் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த நடைமுறை தற்சமயம் தளர்த்தப்பட்டு எவ்வித ஜனநாயக தேர்தல் விதிமுறையின்றி அதிகாரிகளின் சைகைகளுக்கு கட்டுப்படுகின்ற விசுவாசமான ஒருவரை முகாம் தலைவராக அதிகாரிகளே கைகாட்டும் முகாம் தலைவரிடம் சொல்லி விட்டுச் சென்று வரலாம். இவைகள் எழுதப்படாத சட்டங்களாகவே இன்றும் தொடர்கிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அகதிகளுக்கு ஏற்றதாக இல்லை. குறிப்பாக தமிழ் அகதிகளுக்கு. 1955 அரசியல் அமைப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்ட போதும் தமிழ் அகதிகளுக்கான வாசல் அடைக்கப்பட்டே இருக்கிறது. 2019 ல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மார் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது. ஆனால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக உள்ள தமிழ் அகதிகளுக்கு அதில் எந்தவொரு வரியும் குறிப்பிடாது தவிர்த்திருக்கிறது. திருத்தப்பட்ட 1955 சட்டம் 21 ன் பிரிவு 1987 க்குப் பிறகு ஆவணங்கள் இன்றி வந்தவருக்கு குடியுரிமை மறுக்கிறது. தமிழ் அகதியானவர் இந்தியப் பிரஜையை திருமணம் செய்தாலும், அவர்களுக்கு பிறக்கும் இந்தியக் குழந்தைக்கும் இந்தியப் பிரஜாவுரிமையை மறுக்கிறது. ஆக எந்த வகையிலும் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்காமல் தவிர்க்கின்றனர். இந்திய அரசைப் பொறுத்தமட்டில் தமிழ் அகதிகள் சட்டவிரோதக் குடியேறிகள் என்றே வரையறுக்கிறார்கள்.
முடிவாக:
ஐக்கிய நாடுகள் சாசனத்தில் அகதிகளாக வருபவர்கள் அவர்களது விருப்பத்திற்கு எதிராக அவர்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படாமல், அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, மத உரிமை போன்றவைகள் வழங்கப்பட வேண்டும் எனவும்,
அதேவேளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்ததற்காக அவர்களை தண்டிக்கக் கூடாது என்றும், அவர்கள் நாட்டிற்குள் சுதந்திரமாக வாழ விடவேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளுக்கான சாசனத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதைக் காரணமாக்கி தமிழ் அகதிகளை சட்டவிரோதக் குடியேறிகளாகவே இந்திய அரசு அணுகி வருகிறது.
அகதிகளை தண்டிக்கப் பயன்படுகின்ற சட்டம் ஏன் வாழ்வதற்கு பயன்படாமல் போகிறது என்கிற புதிர் மட்டும் இன்னும் விளங்காத கேள்வியாகவே உள்ளது.
- சுகன்யா ஞானசூரி
19.02.2023.
No comments:
Post a Comment