தமிழகம் வாழ் ஈழ ஏதிலிய படைப்பாளிகளுக்கான பயிலரங்கு.
இடம்: வேலூர்
நாள்: 26/03/2017
மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் பத்துக்குப் பத்து அளவு கொண்ட வீடுகளிலும் சீலை மறைப்புகளுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்ற ஈழத்து ஏதிலியர்கள் மத்தியில் பல திறமையாளர்கள் இருந்தும் இலக்கியப் பொதுவெளியில் அவர்களுக்கான இடம் இதுநாள்வரை வெற்றிடமாகவே இருந்து வருகிறது. இந்த வெற்றிடத்தை போக்கும் விதமாக 26.03.2017 அன்று வேலூர் மாநகரத்தில் 5 மாவட்ட முகாம்களில் இருந்து வாசிப்பு மற்றும் எழுத்தின்மீது ஆர்வம்கொண்ட 30 பேரை ஒருங்கிணைத்து பயிலரங்கு ஒன்றினை நடாத்தி புத்தொளி பாய்ச்சியிருக்கிறார்கள்.
இதில் முதல் கட்டமாக சிறுகதை மற்றும் கவிதைகளை எவ்வாறு உருவாக்குவது, உருவாக்கிய படைப்புகளை எவ்வாறு பொதுவெளியில் முன்வைப்பது போன்றவை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.
எழுத்தாளர் திரு.ஜி.முருகன் அவர்கள் சிறுகதை உருவாக்கம் பற்றி மிக அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அவரது சிறுகதைகளில் சிறு உயிரினங்களும் முக்கிய அங்கம் வசிக்கின்றன. ஒரு கதையை எழுதி முடித்ததும் அது சரியான வடிவத்துக்கு வரும்வரை திரும்பத் திரும்ப வாசித்து சரிசெய்ய வேண்டும் என்றார்.நீங்கள் சொல்ல வரும் விஷத்துக்குள் அதீதமான புனைவுகளை உள்நுழைக்க வேண்டிய அவசியம் தேவையில்லை என்பதோடு நேர்மையோடு ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.
எழுத்தாளரும் கவிஞருமான திரு அகரமுதல்வன் அவர்கள் கவிதை உருவாக்கம் மற்றும் அது தொடர்பான உரையாடலை முன்வைத்து பேசுகையில் இத்தனை ஆண்டுகால முகாம் வாழ்வில் ஒரு படைப்பாளியைக்கூட உருவாக்க இயலாமல் போனது நமது இனத்துக்கு கிடைத்த சாபக்கேடு என்றார். யூத மக்களை கொன்றழித்த அவலத்தை, அதுதொடர்பான வரலாற்றை பதுங்குகுழிக்குள் இருந்துகொண்டு எழுதியது 14 வயதே ஆன ஒரு சிறுமி. நமக்கும் இத்தகைய பொறுப்பு இருப்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அகதிதானே தவிர அடிமைகள் இல்லை.ஒவ்வொருவரும் இலக்கியத்தினூடாக நமது வரலாற்றை உருவாக்க வேண்டும் என்றார்.
எழுத்தாளர் திரு பத்தினாதன் அவர்கள் காலச்சுவடு பத்திரிக்கையில் பணியாற்றுகின்ற முகாம் படைப்பாளி. 1990 முதல் 1999 வரையில் மதுரை உச்சப்பட்டி முகாமில் வசித்தவர். அகதிகள் தொடர்பான இரு நூல்களை எழுதியுள்ளார். இன்றைக்கு பொதுவெளியில் அகதிகள் தொடர்பான விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். அகதிச் சமூகத்தில் நிகழும் அவலங்களை நாம் இலக்கியங்களினூடாக பிறரிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
இலக்கிய வெளியில் தமிழகம் வாழ் ஈழ ஏதிலிகளின் நிலை குறித்து முகாம் படைப்பாளர்கள், கவிஞர்கள் சு.சிவா, சுகன்யா ஞானசூரி, நடராஜா சரவணன், சரோகராஜ் மற்றும் செந்தூரன் போன்றவர்கள் முகாம்களில் படைப்பாளர்கள் இல்லை என்பதை மறுத்தார்கள். இருக்கிறார்கள், அவர்களை அடையாளப்படுத்த தவறிவிட்டார்கள். அவர்களின் படைப்புகளை அங்கீகரிப்பதற்கான தளம் அப்போது கிடைக்கவில்லை, முகாம்களில் இருந்துகொண்டே சு.சிவா, சுகன்யா ஞானசூரி போன்றவர்கள் கவிதைத் தொகுப்புகளை வெளியீடு செய்திருக்கிறார்கள், சிற்றிதழ் (வேர் விடும் நம்பிக்கை) நடத்தியிருக்கிறார்கள், இப்படி திறமையானவர்கள் ஒவ்வொரு முகாமில் கண்டடைய முடியாமல் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறை படைப்பாளிகளை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இப்பொழுது எம்மிடத்தில் இருக்கிறது. அதற்க்கு புதிதாக எழுத வருபவர்கள் செய்ய வேண்டியது படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இலக்கியங்கள் குறித்த வாசிப்புகளையும் முன்னெடுக்க வேண்டும். பெண்கள் எழுதுவதற்கு முன்வரவேண்டும், முகாம்களில் உள்ள நூலகங்கள் பராமரிக்கப்பட வேண்டும், ஒன்றுகூடி விவாதிப்பதை விரிவுபடுத்த வேண்டும், அரசியல் இலக்கியங்களையும் தேடி வாசிக்க வேண்டும், நமது பண்பாடுகள் தொன்மங்கள் குறித்து அறிந்து எழுத வேண்டும் என்ற ஆலோசனைகளை முன்வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு செய்திருந்த JRS திருச்சபையின் பணியாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் இந்த நிகழ்வோடு இது முடியாமல் தொடர வேண்டும் என வாழ்த்தி நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் ரூபாய் 500 க்கும் அதிக மதிப்பிலான நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. புலம்பெயர் இலக்கியத்தில் தமிழகம் வாழ் ஈழ ஏதிலியர் இலக்கியமும் முக்கிய அங்கம் வகிக்கும் என்னும் நம்பிக்கை துளிர்திருக்கிறது.
நிகழ்வு தொகுப்பு
சுகன்யா ஞானசூரி
28/03/2017
அருமையான முயற்சி
ReplyDeleteஇம்முயற்சி தொடர்ந்தால்
பலருக்கு நன்மையே!
மிக்க நன்றிகள்
ReplyDeleteபாராட்டத்தக்க முயற்சி நண்பரே ! வாழ்த்துகள்
ReplyDelete