மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழி பேசும் சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், கலை இலக்கியத்தினை பிற மொழி பேசும் சமூகங்களின் மொழியில் அறியத் தருவது. தருமொழி, பெறுமொழி, வழிமொழி என மூன்றாக மொழிபெயர்ப்பின் தன்மையை குறிக்கிறார் முனைவர் ம. இளங்கோவன். தருமொழி என்பது மூல நூல். பெறுமொழி என்பது எந்த மொழிக்கு பெயர்க்க உள்ளோமொ அதுவே. வழிமொழி என்பது எடுத்துக்காட்டாக ரஷ்ய மூல நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டுவருவதாகும். பெரும்பாலும் தமிழில் வழிமொழி வழியாகவே நிறைய படைப்புகளை கொண்டுவருகின்றனர்.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் யாவும் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" - மகாகவி பாரதி. மகாகவியின் கூற்றினை மெய்ப்பிற்கும்படியாக தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பாளர்கள் (என் வாசிப்பின் சிற்றறிவின் நினைவில்) சோவியத் ருஸ்யாவிலிருந்தும், லத்தீன் அமெரிக்காவிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும், சீனம், வங்காளம், மலையாளம் என பன்மொழிகளின் அதி உன்னதமான படைப்புகளை தமிழுக்குத் தந்துகொண்டே இருக்கிறார்கள். எம்.ஏ.சுசீலா, எஸ்.பாலசுப்ரமணியன், வெ.சிறிராம், ஜி.குப்புசாமி, பிரம்மராஜன், சோ.தர்மன், தேவதாஸ், அமரந்தா, த.ந. குமாரஸ்வாமி, கே. கணேஷ், வீ.ப.கணேசன், ஏ.ஜே. கனகரட்ணா, இந்திரன், சமயவேல், கார்த்திகைப் பாண்டியன் போன்றவர்களின் பங்களிப்பில் தமிழில் பல்வேறுபட்ட இலக்கியச் சுவைகளை நாம் சுவைத்து வருகிறோம். சரி இப்படியே தமிழுக்கு இறக்குமதி செய்து சுவைத்துககொண்டிருந்தால் எம் தமிழ் சீரும் சிறப்புமாக வளர்ந்து விடுமா? தமிழ் மொழியினை பிற மொழி பேசுவோரின் மொழிகளில் கொண்டு சென்றால்தானே எம் தமிழின் சிறப்புகளை பிறர் அறியச் செய்ய முடியும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?
கவிஞர் அமரன், லதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தமிழ்க் கவிதைகளை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்கின்றனர். சமீபத்தில் எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் அவர்கள் ஐந்து மொழிகளில் தமிழ் எழுத்துக்களை கொண்டு சேர்க்கும் சிறப்பினை செய்து வருகிறார். நாம் மாவுச் சண்டைகளுக்கும், மன்னர்களின் செய்கைகளுக்குமாக மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறோம். "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" - மகாகவி பாரதி. எனும் மகாகவியின் இந்த வரிகளை மெய்ப்பிக்கத் துவங்கியிருக்கும் இவர்களை அடியொற்றி நாம் தமிழை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகம் உள்ளங்கையில் சுருண்டு கிடக்கும் இந்தக் காலத்தில் நாம் தமிழ்மொழியினை காக்கத் தவறுவோமாயின் அடுத்த தலைமுறை நம்மைக் காறி உமிழும். இது மொழித் திணிப்பல்ல. மொழிகளை காக்கும் ஒரு உத்தி. "தமிழ் வாழ்க" என உரைத்தால் மட்டும் போதாது. அவற்றை நாம் செயல்பாட்டில் காட்ட வேண்டும். தமிழ்ப்படைப்புகளை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்கும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
- சுகன்யா ஞானசூரி
24/06/2019
நீங்கள் சொல்வதை நானும் சிந்தித்துள்ளேன். தமிழ்ப்படைப்புகளை பிற மொழிகளுக்குக் கொண்டுசேர்ப்போரைப் பாராட்டுவதில் உங்களுடன் நானும் இணைகிறேன். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும்போதே பல இடர்பாடுகளை இருப்பதைக் காண்கிறேன். அவ்வாறு இருக்கும்போது பிற மொழிகளைக் கற்று மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தல் சற்று சிரமமே. அந்தந்த மொழி பேசுவோரின் சமூகப் பண்பாட்டுச் சூழல்களைக்கூட நாம் அறியவேண்டிய நிலையிலும், அதனடிப்படையில் மொழியாக்கத்தில் ஈடுபடவேண்டிய நிலையிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். தவிரவும் ஒரு மொழியைக் கற்று அதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்னும்போது பெரிய பணியாகத் தோன்றுகிறது.
ReplyDeleteஅன்பும் நன்றிகளும் ஐயா. தமிழ், தமிழ் மொழி வாழ இதுபோன்ற செயல்பாடு அவசியமான ஒன்று. அவர்களை நாம் இன்னும் பொதுச்சமூகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறைக்கு புதிய உத்வேகத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும்.வாழ்க தமிழ்...
Delete