Monday, September 23, 2019

வெக்கை - பூமணி


ஒரு நாவலை வாசிக்கும்போது வாசிப்பவரின் வாழ்வில் நிகழ்ந்த ஏதோவொரு நிகழ்வு இழையோடியிருந்தால் வாசிப்பின் கனதியை உணர முடியும். இவற்றில் ஒன்றையேனும் நான் அனுபவிக்கவில்லையே என வசிப்பவரின் மனதில் ஏக்கத்தையேனும் உருவாக்கும். "பூமணியின் வெக்கை" எனக்கு முதல்வகை வாசிப்பையே தந்தது.

ஒரு சமூக அமைப்பில் உறவுமுறைகள், வர்க்கம், பொருளாதாரம், அரசியல், சூழலியல், மூலதனம் இன்னபிறவென அங்கம் வகிக்கும். அல்லது ஒன்றையொன்று சார்ந்து இருக்கும். இவற்றில் ஏதோவொன்றில் உராய்வு ஏற்படுகையில் பகை பற்றிக்கொள்கிறது. இது ஒவ்வொரு சமூக அமைப்பிலும் இயல்பான ஒன்று. அப்படி இயல்பாக கரிசல் மண்ணின் வட்டார மொழியோடு அந்த மண்ணின் வெக்கையை வாசிக்கும் ஒவ்வொருவர் மனங்களுக்கும் கடத்திவிடுகிறார்.

இது கொழகொழப்பான திரவத்தின் வெக்கையோடு துவங்குகிறது. ஒரு பழிவாங்கும் கதையென தட்டையாக நாம் சொல்லிவிட முடியாது. இலக்கிய அழகியலோடு கரிசல் மண்ணின் வாழ்வை முப்பது ஆண்டுகளுக்கு பின்பு இன்றும் பொருத்திப் பார்க்க முடிகிறது. காலங்கள் வேண்டுமானால் மாறலாம். காட்சிகள் சமகாலத்திலும் எவ்வித மாற்றங்களும் இன்றி தொடர்ந்தபடிதான் இருக்கிறது.

சிறுவன் சிதம்பரம், சிதம்பரத்தின் தந்தை பரமசிவம், சிதம்பரத்தின் அம்மா, தங்கச்சி, சிதம்பரத்தின் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, சிறுவயதில் இறந்து போகும் சானகி, வடக்கூரானால் அநியாயமாக கொல்லப்பட்ட சிதம்பரத்தின் அண்ணன், சிதம்பரத்தின் நாய் என இவர்களுக்குள் உள்ள அன்பு, பாசம் என்பவற்றால் வடக்கூரானை கொன்ற பின்னால் ஏற்படும் அலைச்சல் என சொற்ப கதைமாந்தர்களை வைத்து குறைவான பக்கங்களில் நிறைவாக தந்திருக்கிறார் வெக்கையை.

வடக்கூரானை கொன்ற நாள் துவக்கம் கோர்ட்டில் ஆயராகும் நாளுக்குள் உள்ள எட்டு நாட்களுக்குள் கரிசல் மண்ணின் காடு, மலை, வயல், வரப்பு, கண்மாய், வாய்க்கால், சுடலை, என இரவு பகலாக இடம் மாற்றி இடம் மாற்றிச் செல்லும் தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல்களாகட்டும், அத்தை மேலான பாசமாகட்டும், மாமனின் தைரியமாகட்டும், அம்மாவின் வைராக்கியமாகட்டும் ஒவ்வொரு பாத்திரமும் கனகச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கிறது.

இளங்கன்று பயமறியாது என்பார்கள். அப்படியாகத்தான் அவன் மரம் ஏறி பதனிப் பானையை கொண்டாந்து சோறாக்கிவிட்டு மீண்டும் அதே இடத்தில் கட்டுவதும், தேன் எடுப்பது, அத்தைக்கு பிடிக்குமென கருவேலம் பிசின் சேகரிப்பது, கரும்புத் தோட்டத்தில் மலங்காட்டுப் பன்றியை வெடி வைத்துக் கொல்லலாமா என நினைப்பதும் அந்த வயசுக்குரித்தான துடுக்குத்தனங்கள்.

தந்தை என்பவர் எப்போதும் பிள்ளைகளுக்கு வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் ஆசான். நீச்சல் கற்றுக்கொள்ள சுரைக்குடுவைகளை கேட்டவனை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு நீச்சலின் முதல்படியான பயத்தை போக்குவது முக்கியமானது. 1994 ல் யாழ் அச்சுவேலி மண்ணில் அப்போது எனக்கு பத்து வயது எங்கள் வயல் கிணற்றுக்குள் இடுப்பில் கயிறை கட்டிக்கொண்டு தேங்காய் வத்தையில் நீந்தும்போது வத்தையை தட்டிவிட்டு மூழ்கவிட்ட கணங்கள் எனக்குள் வந்து செல்கிறது. அந்த நீச்சல் பயிற்சி பின்னாளில் 1996ல் தனுஷ்கோடி கடலில் அகதியாக இறக்கிவிட்டபோதும் 1997 ல் புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை அகதிகள் முகாமுக்கு அருகில் உள்ள கண்மாய்க்குள் குளிக்கும்போது மூழ்கிய உடன்பிறப்புகளை காப்பாற்றியது என நினைவுகளை கிழப்பிவிட்டுச் செல்கிறது.

பெண்பாத்திரங்களின் இளகிய மனங்கள் தங்கள் வீட்டு ஆண்களுக்கு ஒரு பிரச்சினை என வருகையில் எப்படி இறுக்கமடைகிறது என்பதை அம்மா, அத்தை, சித்தி போன்றவர்களின் கொந்தளிப்பான மனங்கள் வெளிப்படுத்துகிறது. அதிலும் மாமாவை கட்டிவந்த நாள்முதல் பயந்த சுபாவமாக இருந்த அத்தை தைரியமானவளாக மாறுவது, தலைமறைவாக இருக்கும் மாமாவுக்கு காட்டுக்குள் சாப்பாடு எடுத்துப் போவது பெண்களின் இயற்கையான மனோவெளியை காட்டுகிறது.

சிறு நிலத்தைக் கூட விட்டுவைக்காமல் ஏமாற்றி மிரட்டி எழுதி வாங்கும் வடக்கூரான், ஜின்பேக்டரி முதலாளி போன்றவர்கள் செய்யும் அக்கிரமங்களும், அவர்கள் செய்த கொலைகளுக்கு தண்டிக்கப்படாமல் பெரிய மனிதர் எனும் போர்வையில் போலிஸின் அனுசரனையோடு வெளியே உலாவுவது என பணநாயகம் படுத்தும் பாட்டை தோலுரித்துக் காட்டுகிறார். பரமசிவத்தின் விவசாய நிலத்தின் மீதான வடக்கூரானின் கண் பகையை உருவாக்குகிறது. ஞாயத்தின்படி விவசாயம் செய்து சாப்பிட நினைப்பவனை அதிகாரத்தின் துணையோடு அடக்கியொடுக்க முனைபவர்களை தோலுரித்துக் காட்டுகிறார்.

பண்ணை நிலங்களின் பின்னணியில் எத்தனை ஏழை, எளிய மனிதர்களின் விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டிருக்கும்? வியர்வை சிந்த பாடுபட்டவர்களுக்கு இரத்தமும், கண்ணீருமே மிச்சமாகிறது.

வெற்றிப் படங்களைத் தரும் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற பெயரில் இந்த நாவல் திரைப்படமாக வெளியீடு காண இருக்கிறது. ஒட்டுமொத்த நாவலையும் திரைக்குள் குடுக்க முடியாது. குறைந்தபட்சம் கதையில் பங்கம் இல்லாமல் இருந்தால் சிறப்பு. 

- சுகன்யா ஞானசூரி
23/09/2019

No comments:

Post a Comment