Friday, March 30, 2018

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஒரு துன்பத்திலிருந்து மீண்டு எழும்போது மறு துன்பம் அழுத்தினால் அகம் புழுங்கித் தவியாய் தவிக்கும். ஒரு கதாசிரியராக இருந்தால் எழுதிச் செல்வார். ஓவியராக இருந்தால் படமாய் காட்சிப்படுத்தியிருப்பார். அதுவே ஒரு சாமானிய அதிலும் ஒரு பெண்ணாக இருந்தால் அழுதுதானே ஆற்றுப்படுத்துவாள். அப்படியாகத்தான் இங்கே கங்கா கட்டமைக்கப்படுகிறாள்.

ஆர்.கே.வி எனும் எழுத்தாள கதாபாத்திரத்தின் வாயிலாக ஜெயகாந்தன் பிம்பம் முழுக்க முழுக்க அப்படியே தெரிகிறது. கங்கா, கனகா(கங்காவின் அம்மா), வெங்கி மாமா(கனகாவின் அண்ணன்), கணேசன்(கங்காவின் அண்ணன்), பிரபு, மஞ்சு(பிரபுவின் மகள்), மற்றும் கதாசிரியர் ஆர்.கே.வி. எனும் பாத்திரங்களைச் சுற்றியே இந்நாவல் முழுவதும் பின்னப்பட்டுள்ளது.

ஆர்.கே.வியின் கதையினூடாக கங்கா தனக்கான வாழ்வைத் தேடிச் செல்கிறாள். மழை நாளொன்றில் காரில் லிப்ட் கேட்டுச் செல்லும் அப்பெண் அவனால் சிதைக்கப்படுகிறாள். அவன் யார்? எந்த ஊர்? என எதுவும் அவளுக்குத் தெரியாது. அதை அறிந்துகொள்ளும் மன நிலையிலும் அவள் இல்லை. இந்த உண்மைகளை அவள் தன் தாயிடம் சொல்ல அது பெரும் பிரச்சினையாக வெடிக்க, அவள் அண்ணன் அவளையும் அம்மாவையும் வீட்டை விட்டு துரத்த, அவளை அவளது மாமா வந்து அழைத்துச் சென்று படிக்க வைத்து உதியோகத்துக்குச் செல்லவும் உதவுகிறார். பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு அவள் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை தேடிச் செல்வதும், அவனுக்கென ஒரு குடும்பம் இருப்பதையும் அவள் அறிகிறாள். அதன் பிறகு அக்கதை கங்காவின் போக்கிலேயே நகர்கிறது.

எழுபதுகளில் ஒரு பெண்ணின் அகமனப் போராட்டங்களை, அது எழுப்பும் வினாக்களுக்கான பதில்களையும் கங்கா, கனகா, மஞ்சு மூலமாக அக்ரஹாரத்தின் மொழியில் சொல்லியிருக்கிறார். அக்கினிப் பிரவேசம் கதையிலிருந்துதான் இக்கதை துவங்குகிறது. ஜெயகாந்தன் விமரிசனங்களுக்கு உட்படும் விதமாகவே எழுத்துலகில் இருந்திருக்கிறார். யாரும் தொடாத விடையங்களையே கருவாக படைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

சில நேரங்களில் சில மனிதர்கள் எப்போதும் புரிந்துகொள்ளப்படாத மனிதர்களின் அகம் மற்றும் புற மனப் போராட்டங்களின் வாழ்வு பற்றியே பேசுகிறது. நிராகரிப்பின் வலிகள் அவை.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:13
தலைப்பு: சில நேரங்களில் சில மனிதர்கள் - நாவல்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
வெளியீடு: மீனாட்சி புத்தக நிலையம்
மொத்தப் பக்கம்: 412

5 comments: