Tuesday, March 13, 2018

எல்வின் கண்ட பழங்குடிகள்

வெரியர் எல்வின் இங்கிலாந்தில் கென்ட் மாகாணத்தில் 1902ல் பிறந்தவர். 1964ல் இந்தியாவில் தன் வாழ்வின் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டவர்.

பக்தவச்சல பாரதி அவர்களது அறிமுக உரையில் சொல்லப்பட்டது போல "தமிழில் எழுதப்பட்ட தன்வரலாறுகளை விட தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட தன்வரலாறுகளே மிகுந்த கவனம் பெற்றவை."

இங்கிலாந்திலிருந்து கிறித்துவ திருச்சபை பணியாளராக இந்தியா வந்து, இந்தியத்துவால் ஈர்க்கப்பட்டு கிறித்துவ சபையிலிருந்து விலகி ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே இந்திய விடுதலை இயக்கத்தை ஆதரித்து, இந்தியப் பழங்குடிப் பெண்ணை மணந்து நான்கு மகன்களுக்கும் இந்தியப் பெயர்களையே சூட்டி, இந்திய அரசில் பணியாற்றி, இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியராகவே மாறி பத்ம பூஷண் விருது பெற்று இந்தியாவிலேயே உயிர் துறந்த மானிடவியலாளரே வெரியர் எல்வின்.

மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் வாழ்ந்த ஒருவர் கீழை நாட்டுக் கலாச்சாரத்தில் அதிலும் பழங்குடிகள் கலாச்சாரத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி தன் வாழ்க்கை முழுவதையும் அவர்களோடு ஒன்றிப்பழகிய ஒரு தன்னிகரற்ற மாமனிதர். அவர்களைப் பற்றிய யாரும் அறிந்திடாத பல்வேறு விடயங்களை நேரில் சென்று வாழ்ந்து வெளி உலகிற்கு அறிமுகம் செய்வது சாகசமாகவே உணரமுடிகிறது.

இலங்கை, ஆப்ரிக்கா, இந்தியாவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளின் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக்கூறுகள், மொழி, காதல், உறவுமுறைகள், உணவுகள், தொழில் என பல விடையங்களை பதினோரு தலைப்புகளில் இந்நூல் விவரிக்கிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு பிறகு சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களும் இந்த ஆதிவாசிகள் மீது சீர்திருத்தம் எனும் பெயரால் நிகழ்த்திய கொடுமைகளையும், அதனால் பழங்குடி மக்கள் தங்கள் இயல்பான சுதந்திரத்தை இழந்துவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். சுதந்திர இந்தியா பழங்குடிகளின் சுதந்திரத்தை பறித்தே விட்டது. வனங்களை அரசே நிர்வாகம் செய்யத் துவங்கியது. அவர்களது விவசாய நிலங்களை கையகப் படுத்தியிருக்கிறது. இயல்பான அவர்களது நடனங்களை, கலைகளை அவர்கள் இழந்துவிட்டார்கள்.

இந்த நூலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாசகர் வட்டம் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறது. பின்னர் முப்பத்தாறு ஆண்களுக்குப் பின் அதாவது 2003ல் விழுதுகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சில செய்திகளை கூடுதலாக இணைத்து இப்போது அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் (1910-2006).

வெரியர் எல்வின் இந்தியப் பழங்குடிகளின் வாழ்வியலை வெளி உலகு அறியச் செய்த விடிவெள்ளி என்றால் மிகையல்ல.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:10
தலைப்பு: எல்வின் கண்ட பழங்குடிகள்
ஆசிரியர்: வெரியர் எல்வின்
வெளியீடு: அடையாளம்
மொத்தப் பக்கம்: 224
விலை: ₹160 

4 comments:

  1. அருமையான அறிமுகம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்,மிக்க மகிழ்ச்சி...

      Delete
  2. எழுத்தின் நடையும், விளக்கங்களும் ரொம்ப ரொம்ப அழகு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையில் மகிழ்கிறேன். அன்பும் நன்றிகளும் என்றென்றும்...

      Delete