Friday, March 11, 2016

அடையாளம்....

நீங்கள்
வெற்றியும் பெறலாம்
தோல்வியும் தழுவலாம்
ஓட்டுக்கள் பிரிந்தால்
நட்ட நடுவிலும் நிற்கலாம்
பேரம் நிகழ்த்தியபடி.

இம்முறையும்
உங்கள் தேர்தலுக்கு
நாங்கள்
பகடைகளாவதை அறிவோம்.

சாதிய மரணத்துக்காகவும்
மதவெறி மரணத்துக்காகவும்
எதிர் முழக்கமிடும்
எழுத்தர்களும், உழுத்தர்களும்
எமக்காக வரப்போவதில்லை
இன்னும் பல
ரவீந்திரன்கள் மரணித்தாலும்!

இயற்கையாகவும்
செயற்கையாகவும்
நிகழும் உபத்திரவங்களை
எங்கே சொல்ல?
எப்படிச் சொல்ல?

பெருங் குரலெடுத்துக்
கத்தத் திராணியற்று
விசும்பலோடு நகர்த்துகிறோம்
தகரக் கொட்டிலுக்குள்.

அரசின் பதிவேட்டிலும்
இறப்புச் சான்றிதழிலும்
அங்க அடையாளங்களோடு
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...
மிச்சம் மீதியாயிருக்கும் உயிரை
காப்பாற்றப் போராடும்
அடிமையான அகதி நாங்கள்
வேறென்ன அடையாளம் சொல்ல?

- சுகன்யா ஞானசூரி,

3 comments:

  1. "பெருங் குரலெடுத்துக்
    கத்தத் திராணியற்று
    விசும்பலோடு நகர்த்துகிறோம்
    தகரக் கொட்டிலுக்குள்." என்ற
    அருமையான வரிகளை வரவேற்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகளும் மகிழ்ச்சியும்

      Delete