Friday, January 15, 2016

அன்றைய ஒரு பொங்கல் நாளில்.....

அன்றைய ஒரு
பொங்கல் நாளில்தான்
செங்கரும்புகள்
எமக்குக் கசந்தது.
அன்றைய நாளின்
உதயசூரியன் கூட
பிரகாசமாய் எழும்பவில்லை.
எங்கள் சனங்களெல்லாம்
ஆரவாரமாய் எழும்பிவிட்டார்கள்...
யுத்தத்தின் மத்தியிலும் - எமக்கு
இனிப்பாகவே இருந்தது
ஏனெனில் இது
தமிழர் திருநாளல்லவா?
திட்டமிட்டே மறக்கடிக்கப்படுகிறது
தமிழர் திருநாட்கள்
எதிரிகளால் இம்மண்ணில்!
அடுப்பின் புகை
எழும் முன்பாகவே
கரும் புகையொன்று
எழுந்து மண்டியது
பெரும் சத்தத்துடன்.
வீசிச் சென்ற
விமானத்தின் ஓசை
அடங்கிய பின்பும்
ஆதவன் வரவேயில்லை!
அழும் குரல்கள்
மெல்ல உயர்கிறது!
சிதறிப் போன
பொங்கல்ப் பானையருகே
வீழ்ந்துகிடக்கிறாள் பாட்டி....
துண்டாகிய தலையோடு
மண்ணை முத்தமிட்டபடி.
- சுகன்யா ஞானசூரி.
15.01.20016


1 comment:

  1. "கொலுசு மின்னிதழ்" மற்றும் "பொள்ளாச்சி இலக்கிய வட்டம்" நடாத்திய தமிழர் திருநாள் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை இது.

    ReplyDelete