சுகன்யா ஞானசூரியின் 'நாடிலி '...
************************************
நாம்
அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்
யாதும் ஊருமில்லை
யாவரும் உறவுமில்லை
-என்று, கணியன் பூங்குன்றனுக்கு, எதிர்நிலை எடுக்கிற கவிதைகளோடு வந்திருக்கிறார் Suganya Gnanasoory.
காரணம் தலைப்பிலிருக்கிறது, 'நாடிலி '.
ஆம்.நாடிலிகளுக்கு நாடுள்ளவர்களின் மதிப்பீடுகளோடும் பெருமிதங்களோடும் உடன்பட முடிவதில்லை.
கையறுநிலையில்
கரையொதுக்கப்பட்டு
காலத்திற்கும் மாறாத வடுவொன்றை
சுமந்தலைபவர்கள்
நாம்
என்று, மேலும் விவரிக்கிறார்.
கடல் மீதும்
சிறுதுண்டு நிலம்
தேடும்
அகதியின் பாதம்
என, இன்னும் கொஞ்சம் அழகியல் கூட்டிச் சொல்கிறார்.
கால்நூற்றாண்டு அகதிவாழ்வில்
ஆஸ்பெஷ்டாஸ்கீற்றுக்கு
மாறியிருக்கிறது
பத்துக்குப் பத்து என்பதொரு
கணிதசூத்திரம்
என்று, அகதிமுகாம் வீடுகளை விவரிக்கும் கவிஞர், கடைசியில்,
இன்னும் மாற்றாமலிருக்கிறார்கள்
கல்லறையின் அளவை
எனச்சொல்லி, அதிர்ச்சியூட்டுகிறார்.
அகதிமுகாமில் தீபாவளி, அகதிப்பிணம் என அகதி மனநிலையிலேயே அதிகக் கவிதைகள் இருந்தாலும்,மாறுபட்ட பொருண்மைகளும் உண்டு.
கல் வீட்டுக்கொரு மழையும்
மண் வீட்டுக்கொரு மழையும்
எப்போதும் பெய்வதேயில்லை
மழை
மழையாக மட்டுமே பெய்கிறது
எனத், தத்துவ அழகியல் பேசுகிறார்.
அதிகாரமே இல்லாத
அகதிக்குத்தான்
எத்தனை
வண்ண வண்ண
அடையாள அட்டைகள்
என, அட்டைகள் சூழ்ந்த வாழ்வின் அவலம் பேசுகிறார்.
அனைவரும் அகதிகளாக உணரும் காலத்தில், நிலத்தில், கூடுதல் பொருள் பெறுகின்றன கவிதைகள்.
பிரதிக்கு
சுகன்யா ஞானசூரி - 97903 50714
விலை: ரூ 110.
No comments:
Post a Comment