காற்றில் அலைவுறும் துகள்...
---------------------------------------
1
தனிமனித சாதனை மற்றும் தனிமனித படைப்பு ஆகியவை முன்னிலைப் படுத்துவது மீண்டும் அதிகாரப் போக்குகளையே நிறுவுகின்றன என்ற ஒரு கருத்தினை நாம் பரிசீலிக்க வேண்டுமென்றாலும்கூட, அதில் நாம் கவனங்கொள்ளத்தக்க அரசியல் இருக்கிறதென்றாலுங்கூட, ஒரு படைப்பு தனிமனிதனை எவ்வாறு முன்னிலைப்படுத்திட முடியும் என்கிற கேள்வியையும் கேட்டாக வேண்டியிருக்கிறது. ஒரு சமூகம் பற்றிய கருத்துகளடங்கிய படைப்பை ஒரு தனிமனிதன் எழுதியிருந்தால், அப்படைப்பு அத்தனி மனிதனை மட்டுமே முன்னிலைப்படுத்துமா...?
2
சுகன்யா ஞானசூரி எழுதிய "நாடிலி" என்கிற கவிதைத் தொகுப்பை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக என்னாலான இந்த சின்னஞ்சிறிய அளவிலான குறிப்புகளை எழுதுவதற்கு எனக்கு நிறைய மெனக்கெடல் தேவைப்பட்டது. ஒரு மனிதனுக்கு சில குணங்கள் இயல்பில் அமையும் என்பதைப் போல ஞானசூரி அமைதியான, இதயக்குளிர்மை கொண்டவராக இருக்கிறார். ஆனால் ஒருவரைத் தொற்றிக்கொள்ளும் பதற்றம் இயல்பானது அல்ல என்பதைப் போல, அவரின் உடலும் மனமும் எப்போதும் படபடப்பாகவே இருக்கிறது என்பதையும், முந்தைய அமைதியும் குளிர்மையும், அவரின் பதற்றத்தினை அடக்கியாண்டு வெளிப்படுவதைப் போல நானுணர்கிறேன். அப்படித் அவரைத் தொற்றிக்கொண்ட பதற்றத்திற்கு என்ன காரணம்...
3
அதிகாரத்தின் தாக்குதலுக்காளாவதிலிருந்தும், அதை எதிர்க்கும் மனநிலை கொள்வதிலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்பவன் இவ்வுலகில் ஒருவன் கூட இருக்க முடியாது. காயத்திற்கும் எதிர்ப்பிற்குமான அளவு வேண்டுமானால் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஆனால் எப்படியான நிலையிலும் எத்தனை கீழான நிலையிலும் இருக்கின்ற ஒருவனுக்குக் கூட அதிகாரத்தை எதிர்க்கும் மனநிலை அவனளவிற்காகவது வாய்க்கும், இது பொது விதி. அப்படியான ஒரு பொதுவிதி கூட பொருந்தாது போகின்ற ஒரு இனமிருக்கிறது, அது நாடிலியினம். மனமும் குரலும் மிதித்து நசுக்கப்பட்ட அவ்வினத்திலிருந்து, முன்பொருநாள் ஒரு தேசத்தின் செல்லப் பிள்ளையாயிருந்த ஒரு கவிஞன் வந்து பாடுகிறான் தோழர்களே கேளுங்கள்... உப்புக்குச்சப்பாக ஒப்புக்கேனும் அல்லது சொல்வதற்கேனும் ஒரு நாட்டின் பெயரைக் கொண்டுள்ள தோழர்களே மனதுவைத்துக் கேளுங்கள்...
இயற்கையை ரசித்தபடி
இன்னல்கள் ஏதுமின்றி
இன்பமாய்ச் சென்ற பேருந்துப் பயணம்
இப்போதெல்லாம் சலிப்பையே தருகிறது
மனதுக்கு ஒட்டாத இசையும்
மரங்களைத் தொலைத்த சாலையும்
இன்ப துன்பங்களைச் சுமந்தபடி
பேரிரைச்சலோடு கதறும்
கைப்பேசி உரையாடல்களும்
கொஞ்கம் புத்தகமும்
சன்னலோர இருக்கை இருந்தும்
பயனற்றுப் போகிறது
மெல்லச் சிணுங்கும் கைப்பேசியை
எடுப்பதாயில்லை...
கவிஞர் கையாண்டிருக்கின்ற பாடுபொருள் என்ன...? கவிஞர் முன்வைக்கின்ற அரசியல் என்ன...? முன்பு நாடற்றவனானவனை பின்பு ஏதுமற்றவனாக்கிவிடும் அவலமிகு இவ்வுலகிற்கு பாடம் நடத்துகின்ற பாடுபொருள் மூலமாக, துயர்மிகு அரசியலை அதிகாரத்தின் நெற்றிப்பொட்டில் அறைகிறார் ஞானசூரி.
மஞ்சள் கனியொன்றின்
பற்குறியில்
உறைந்து கிடக்கும்
குருதியென வீச்சமெடுக்கிறது
அகதியெனும் இவ்வாழ்வு.
4
ஞானசூரியின் "நாடிலி" என்கிற தலைப்பிலான 96 பக்க கவிதைத் தொகுப்பு அவரின் "என்னுரையுடனும்" பின்பு கவிஞர் யவனிகாவின் முன்னுரையுடன் தொடங்குகிறது. அடர்த்தியான தன்னுடைய முன்னுரையில், தொகுப்பிலுள்ள ஒட்டுமொத்தக் கவிதைகளையும் சுருக்கிப் பிழியக் கிடைக்கும் ஒரு சொட்டுச் சாறாய் "நினைவிலும் வாழ்விலும் தனித்துவிடப்பட்டு, தன் வாழ்வை செப்பம் செய்தபடி புலம்பெயர்ந்த இடத்தில் தன் பிறப்பிட அகபுற கனவுகளை அல்லது புகலிடப் பதற்றத்தை இன்னும் நிலைத்தன்மை அற்ற அச்சத்துடன் கவிதைகளாக இந்நூல் பதிவு செய்திருக்கிறது என்கிறார். ஞானசூரியின் கவிதைகள் அனைத்திலும் ஒரு அகதி மனம் ஆதிக்கம் செய்கிறது. மனிதன் அகதியாகிப் பார்த்திருக்கிறோம், பார்த்துவருகிறோம். மனம் அகதியானால்...? அம்மனம் படைப்பு மனமாகவும் மாறிப்போனால்...! மனமெங்கிலும் வலி! வலி! வலி! படைப்பெங்கிலும் வலி! வலி! வலி! அப்படியான ஒரு வலியை, வாசிக்கும் வாசகனின் மனத்தையும் மூளையையும் நேரடியாகத் தாக்குகின்ற கவிதைகளைத் தன்னுடைய தொகுப்பில் வைத்திருக்கும் ஞானசூரியின் கவிதை மொழியானது வளமும் எளிமையும் கொண்டிருக்கும் ஒரு சமகால வியப்பு. ஒட்டுமொத்த நாடிலி சமூகத்திற்கான ஒற்றைக் குரலாகத் தன் கவிதைகளைக் கையளித்திருக்கும் ஞானசூரியின் படைப்பு தனிமனிதப் படைப்பு என்றாலும் கூட அது ஒரு சமூகத்தின் வலியைக் காட்டுகின்ற படைப்பாதலால், அதில் ஞானசூரி முன்னிற்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதும், அவரை நாம் முன்னிலைப்படுத்துவதும் தவறில்லை.
அந்தரங்கத்தில் எந்தவொரு பிடிப்பின்றித் தொங்கும் ஒற்றைக் கயிறு உணர்கின்ற பதற்றம் பற்றிச் சொல்ல சொற்கள் கிடைக்குமா என்ன...? ஞானசூரிக்குக் கிடைத்திருக்கிறது. ".... வாதையிலிருந்து தப்பித்துக்கொள்ள படைப்பிலக்கியம் வழி சற்று ஆசுவாசம் கொள்கிறோம். இப்படியாக வாழ்வின் அவலங்களை, புலம்பல்களை எழுதுவதன் மூலம் எனது இறப்பைச் சற்றுத் தள்ளிவைத்து வாழ்நாளை நீட்டிக்கொள்கிறேன்..." என்று தன்னுடைய "பதற்றம்" என்பதற்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதையும் தன்னுடைய "தன்னுரையில்" குறிப்பிட்டிருக்கிறார் ஞானசூரி.
5
காற்றில் அலைவுறும் துகள்களையெல்லாம்
தன் நீர்மைகொண்டு
தனக்கொரு கூடு நெய்யும்
சிலந்தியைப் போல்
ஒவ்வொருமுறையும்
துயர்மறந்து விடியலை நோக்கும்
என் கனவுகளை
அகதியெனும் ஒற்றைச்சொல்லில்
சிதைத்துவிடுகிறீர்கள்...
முன்பு இலங்கையைப் போன்று, பிற நாடுகளைப் போன்று, இன்று, இதோ ஆப்கானிஸ்தானிலும் நம் கண் முன்னாலேயே ஆயிரக்கணக்கான மனம் சிதைக்கப்பட்டு வருகிறது. நாளை...?
---Visagan
தொடர்பு கொள்க: 9790 350 714
இப்போது
https://www.commonfolks.in/books/d/naadili
இணையத்திலும் நாடிலி நூல் கிடைக்கிறது.
No comments:
Post a Comment