அரூபா - கோ. கலியமூர்த்தி
ஒரு பிரதி முன்வைக்கும் கருத்துகளை நாம் படைப்பாளரின் அந்தரங்கத்தோடு ஒப்பிட்டு அலசுவது படைப்புக்கு நாம் செய்யும் துரோகம். பிரதி என்ன சொல்ல வருகிறது என்பதை மட்டுமே நாம் உற்று நோக்க வேண்டும். ஒரு பெண் காதல், காமம் குறித்து ஒரு பிரதியை முன்வைத்த பிறகு ஒருவேளை இப்படித்தான் இருப்பாரோ? அப்படித்தான் இருப்பாரோ என்ற எண்ணங்களால் துளைத்தெடுக்கும் துயரம் தமிழ் இலக்கிய வெளியில் இன்னும் தொட்டுத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் ஆண் படைப்பாளி முன்வைக்கும் பிரதியை இப்படியெல்லாம் துளைத்தெடுப்பதில்லை. பெண் என்பவள் இப்போதும் போகத்துக்கானவள் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு இது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் துணைத் தலைவரும், பேச்சாளரும், கவிஞருமான அன்புத் தோழர் கோ. கலியமூர்த்தி அவர்களின் "அரூபா" மானசீகமான அன்புள்ளம் கொண்ட அனைவருக்குமானவள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வந்தவராகவும், தங்கிச் சென்றவராகவும், அல்லது நிரந்தரமாக தங்கியவராகவும் அரூபாக்கள் இருக்கலாம். அரூபாக்கள் இடத்தில் அரூபன்களை பெண்கள் பொருத்திக் கொண்டு கவிதைக்குள் உள்நுழைவதில் கடினமில்லை.
தோழர் கோ. கலியமூர்த்தி அவர்களின் அரூபா ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விசையங்களை மறைபொருளாக பேசுகிறார். அல்லது கவிஞர் அரூபமாகிவிடுகிறார். காதலும், மழையும் அரூபாவின் உலகத்தில் அதிகமாகப் பொழிகிறது. ஐந்திணைகளிலும் வெவ்வேறு வகையாக மழை பொழிவதை காட்சியாக்கியுள்ளார். பாரதி கண்ணம்மா வை தன் காதலியாக்கிப் பாடியுள்ளதைப் போல், ஆண்டாள் தன் பாசுரங்களில் திருமாலை அரூபமாக்கி பாடியதுபோல், தன் சகிகளை அரூபாவாக்கி நம் முன்னால் ஒரு ரூபத்தை உருவாக்கிக் காட்டுகிறார்.
தொண்ணூறுகளுக்கு முன்னான தோல்வியுற்ற, அல்லது நிறைவேறாது போன தன் காதலின் வசந்த காலத்தை மட்டுமே பேசுவது அல்ல. சமூகத்தின் அவலங்களையும் அரூபமாக பேசுகிறார். இரட்டைக் குவளை முறை, சாதிய அடக்குமுறை, வன்புணர்வு, நிறபேதம், அரசியல் என சமூகத்தின் அவலங்களையும் கவித்துவமாக சொல்கின்ற இடத்தில் அரூபா வெற்றி பெறுகிறாள். சிறுகோட்டுப் பெரும்பழமாக காதலும் காமமும் விருட்சமாகி நிற்கும் கவிதைகளில் அரூபாவை இப்படிச் சொல்கிறார்
"காதல் ஒரு பேய் வீடு
சாந்திபெறா ஆவிகளின் தீராக்காமம்".
காதலின் (இந்த சமூகத்தின் மீதான காதல் என்றும் கொள்ளலாம்) பித்து நிலை என்பது ஒரு சித்தரின் மனநிலைதான்.
"சிந்தனை முற்றிய சித்தம்
சித்தம் பரவசம் சிலிர்க்கும் பித்தம்".
"தன்னை மறக்கும் பித்தர்களுக்கே
தன்னைக் காட்டும் தரிசனம் அரூபா" என ஒரு சித்தரின் மனநிலையில் அரூப தரிசனத்தைக் கண்டடைய துடிக்கிறார். ஆத்திகம் நாத்திகம் இரண்டுக்கும் இடையில் அரூபாவைக் கண்டடைகிறார்.
"நானோ தொழில்நுட்பம் கோலோச்சும் காலத்திலும்
காற்றும் மழையும் காலமும் தின்றது போக
பாறையில் எஞ்சிய தொல்குடி ஓவியம்"
அரூபாவை நாம் அகழாய்வு செய்துகொண்டே போகலாம் அல்லது அவரவர் அரூபங்கள் நினைவோடைகளில் மேல் எழலாம். அர்த்தம் என்று தனியாக ஒன்றுமில்லை. பொருள்படுத்திக் கொள்வதில்தான் உருவாகிறது அர்த்தம். சமகாலத்தோடு நாஸ்டால்ஜியாவை கலந்து செய்த உணர்வே அரூபா.
கவிஞர்கள் சொற்களில் எப்போதும் நிர்வாணத்தைப் போல் அம்மணங்களை விரும்புவதேயில்லை. வாழ்த்துக்கள் கவிஞருக்கு.
விலை: ₹80
வெளியீடு: வெற்றிமொழி வெளியீட்டகம், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 97151 85309.
No comments:
Post a Comment