Saturday, July 31, 2021

நாடிலி தொகுப்பு குறித்து சுப்ரா. வே. சுப்ரமணியம் பார்வை

 







“ நாடிலி “ – கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் – சுகன்யா ஞானசூரி . [ 97903 50714 ]

வெளியீடு – கடற்காகம் வெளியீடு .

விலை – ரூ 110 . [ முதல் பதிப்பு ஜூன் 2021 ]

மா . ஞானசூரி எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் 1984 ல் பிறந்து , 1996 ல் தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர் . தற்சமயம் திருச்சியில் வசித்து வருகிறார் . அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது .

தொகுப்பின் தலைப்பே போதும் உள்ளிருக்கும் கவிதைகள் வாசிப்பவர்களிடம் உருவாக்கப்போகும் வலிகளை உணர்த்துவதற்கு .

வருமானம் தேடி புலம் பெயர்தல் வேறு ; வாழ்விடம் இழந்து , வாழ்வாதாரம் இழந்து வலியோடு புலம் பெயர்தல் வேறு . வந்த இடத்திலும் தனியொரு அடையாளம் இன்றி அகதி என்ற ஒற்றை அடையாளத்தோடு வாழ்தல் தரும் வலி மிகப் பெரிது . அந்த வலி குறித்து பல புதினங்களும் , சிறுகதைகளும் வந்து கொண்டேயிருந்தாலும் கவிதை என்ற வடிவத்தில் அவை வாசிப்பவர்களிடமும் அந்த வலியை எளிதாகக் கடத்தி விடுகின்றன . இந்த தொகுப்பு முழுவதும் அத்தகைய வலி தரும் வரிகள்தான் . பழைய நினைவுகள் தரும் வலிகளையும் , வந்த இடத்தில் அனுபவிக்கும் வலிகளையும் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார் கவிஞர் . கவித்துவமான வரிகளையும் மீறி வாசித்து முடிக்கையில் நம்மிடம் எஞ்சி நிற்பவை வலி …. வலி…. வலி …. தவிர வேறொன்றுமில்லை .

அரசின் பதிவேட்டில் / அங்க அடையாளங்களோடு

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மிச்சம் மீதியாயிருக்கும்

உயிரைக் காக்கப் போராடும் / “ அடிமையான அகதி நாங்கள் “

வேறென்ன அடையாளம் சொல்ல ? 

அகதிகள் முகாம்களில் நிகழும் கொடுமைகளை பட்டியலிட்டு முடிக்கிறார் ஒரு கவிதையை - 

உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரிவதைப் போல

யாழினிகள் தெரிவதில்லை . 

முகாம்களில் வாழ்விடம் என்பது ஒருவகையான வெற்றிடமே எனக் காட்டும் வரிகள் -

பத்துக்கு பத்து என்பதொரு கணித சூத்திரம்

இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்

கல்லறையின் அளவை . 

அகதி வாழ்வு என்பது எவ்வளவு கொடுமையான மனநிலையைத் தருகிறது இந்த வரிகளில் -

மஞ்சள் கனியொன்றின் / பற்குறியில்

உறைந்து கிடக்கும் / குருதியென வீச்சமடிக்கிறது

இந்த வாழ்வு . 

பழைய நினைவுகளில் மூழ்கியெழுந்து வெளியேறி தற்போதைய வாழ்வு நிலையை எளிமையான வரிகளில் கடத்திச் செல்கின்றது கவிதை ஒன்று - 

சீவல் தொழிலற்று

சீவியம் போன மூத்த குடியானவன் பிள்ளை

பனை நிழலும் அற்றுப்போனான் . 

கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளை சற்றே மாற்றிப் போட்டுள்ள வரிகளின் வீரியம் எவ்வளவு வெப்பத்தைக் கொணர்கிறது -

சமுத்திரத்தின் பெருவெளியில்

படகுகளோடு மூழ்கிய குழந்தைகளையொதுக்கும்

கரையில் நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்

யாதும் ஊருமில்லை / யாவரும் உறவுமில்லை . 

அகதிகளின் வாழ்வில் எதுவுமே நிரந்தரமல்ல எனினும் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை தனக்குள்ளாகவே உருவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி ?

அன்றன்றைக்குப் பெய்யும் / மழையை

அன்றன்றே ரசித்துவிடு / பிறிதொரு நாளில்

அது அதுவாகவும் நாம் நாமாகவும்

இருப்போமா தெரியாது .  

 


வாழ்வு தேடி வந்த இடத்திலும் வாடிக்கையான கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன – ஆனால் எவ்வளவு மனப்புழுக்கம் !

கந்து வட்டியில்தான் இந்த வருடமும்

எமக்கான தீபாவளி / அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது .  

தங்களது வலிகளை பிறரிடம் பகிர்கையில் எத்தனை சோகத்தை மனதில் தேக்கி வைத்திருந்தால் இந்த வரிகள் உருவாகும் –

இடப்பெயர்வின் வலிகளை

அகதியானவர்களிடத்து கேட்டுப் பாருங்கள்

கண்ணீரில் மிதக்கும் வாழ்வில்

நீந்த முடியாது அலைவுறுவீர்கள் . 

இந்த வரிகளை வாசிக்கையில் நமக்குள் ஏற்படும் குற்ற உணர்வை அவ்வளவு எளிதில் உதறிச் செல்ல முடியாது - 

போரை எவரும் விரும்பி ஏற்பதில்லை

ஆனால் அதுதரும் / விளைவுகள் குறித்து அச்சப்படுகிறேன்

போர் திணித்த இடப்பெயர்வில்

எப்படி நீங்கள் என்னை / அகதியென விளிக்கிறீர்கள் ?  

மழை குறித்துதான் எத்தனை கவிதைகளை வாசித்து விட்டோம் . ஆனால் அந்த மழை ஒரு நாடிலியின் பார்வையில் வேறு ஒரு உணர்வுகளை உருவாக்கி விடுவதை உணர்த்தும் வரிகள் -

யார் / கவிழ்த்துவிட்டது / அந்த மதுப்புட்டியை ?

இப்படிப் / பொங்கி வழிந்தோடுகிறதே

நிலமெங்கும் வெள்ளமென அகதிகளின் கண்ணீராய் . 

எவ்வளவுதான் வேதனைகள் சூழ்ந்திருந்தாலும் இயற்கையை இரசிக்காமல் இருக்க முடியவில்லைதான் . ஆனால் அந்த இயற்கையும் ஒரு சுய பச்சாதாபத்தைத்தானே உருவாக்கி விடுகிறது -

தாயகமிழந்த என்னை / நீங்கள்

அகதி என்றழைப்பதைபோல்

சாயமிழந்த வண்ணத்துப்பூச்சிகளை

என்ன பெயரால் அழைக்கிறீர்கள் ?  

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்று காலக் காட்சிகள் ஒரு நாடிலியின் பார்வையில் தொற்று குறித்த பயத்தைவிட தனது எதிர்காலம் குறித்த அச்சத்தை மட்டுமே உருவாக்கி விடுகின்றன என்பதை உணர்த்தும் ஓர் ஒப்புமை -

ஊடகத்தில் நிரம்பி வழியும் / பெருந்தொற்றில்

சாலைகள் மரணித்துக் கிடக்கின்றன

நிச்சயமற்ற எதிர்காலத்தின் / சூனியத்துழலும் ஏதிலிபோல்

அச்சம் ஒவ்வொரு இல்லத்திலும் அடைந்திருக்கிறது . 

புலம் பெயர்ந்த வலியை மிகுதியாகப் பேசினாலும் , உலகின் பொதுவான பிரச்சினைகளையும் பாடுபொருளாகக் கொண்டு சில கவிதைகளைத் தருகிறார் – சற்றே பகடி கலந்து தன் வலி மறக்கும் முயற்சியாக .

மேலைத்தேய கார்ட்டூன்கள்

அறிவையும் அன்பையும் போதிக்கும்வேளையில்

அடைக்கல தேசத்தின் கார்ட்டூன்கள் நஞ்சூட்டுகின்றன . 

சிறு சிறு வார்த்தைகள்தான் ; ஆனால் எத்தனை அர்த்தம் பொதிந்தவை –

கடல்மீதும் / சிறுதுண்டு நிலம்

தேடும் / அகதியின் பாதம் . 

ஒரு சில வரிகள் படைப்பாளியின் குரல் வழியே அனைத்து நாடிலிகளின் மனக் குமுறல்களையும் வலி பொதிந்து தருகின்றன -

அடைக்கலமான தேசத்தில் / நடைப்பிணங்களாய்த் திரிகின்றோம் / நினைவில் / ஊரைச் சுமந்தபடி . 

*************************************

தினந்தினம் இப்படி இறப்பதைக் காட்டிலும்

போர் நிலத்தில் / ஒரு கணம்

இறந்தே போயிருக்கலாம் / புலம் பெயராது . 

வாசிக்கும் யாரையும் உலுக்காமல் விடாது இந்த வரிகள் -

துயர்மறந்து விடியலை நோக்கும் / என் கனவுகளை

அகதியென்னும் ஒற்றைச் சொல்லில் / சிதைத்துவிடுகிறீர்கள் . 

தொகுப்பை வாசித்து முடித்ததும் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வு குறித்த வலி மிகுந்த உணர்வுகளை நம்மிடம் கடத்தி விடுவதன் மூலம் படைப்பாளி அவரது முயற்சிக்கான முழு பயனையும் அடைந்து வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் ; நாடிலிகளின் வலி குறித்த வலிமையான வரிகளைத் தாங்கிய தொகுப்பு .   

- சுப்ரா .

Sunday, July 25, 2021

நாடிலி குறித்து திருச்சி தமுஎகச தோழர் நந்தகுமார்


 

நாடிலி ..


அன்பு நண்பர் சுகன்யா ஞானசூரியின் "நாடிலி" கவிதை நூல் படித்தேன்.


முதல் கவிதை முதல் கடைசி கவிதை வரை...புலம் பெயர்ந்த தமிழர்களின் வலி மட்டுமே.


அவரை சந்திக்கும் போதெல்லாம் ...இலங்கை பிரச்சனை குறித்தும், போர்க் காலச் சூழல் குறித்தும், அவரின் பால்ய வயதில் அவர் சந்தித்த வலிகள், அங்கிருந்த அரசியல் சூழல், சிறு வயது பாலகனாய் இருக்கும் போது படகில் வரும் போது படகில் ஓட்டை விழுந்து உயிரை பணயம் வைத்து வந்து சேர்ந்த வலிகள் எல்லாம் பகிர்வார்.   இடையிடையே சிறு புன்னகை அவரின் வலியை மறைத்து,  அந்த புன்னகை கொள்ளை கொள்ளும் அழகு.  அழைத்துப் பேசும் போதும், இடையிடையே கலகலவென சிரித்து சுவாரஸ்யமாக்குவார் உரையாடலை .


கவிதையும் அப்படியே...வலிகள் சொற்களாகியுள்ளது.....அவரின் மென்மயான புன்னகை கவித்துவம்  ஆகியுள்ளது.


முழுக்க முழுக்க வலிகளா என்று தோன்றினாலும்...நெருப்பில் நின்றவன் ...நெருப்புச் சுட்ட வலிகளைத் தானே சொல்லுவான் என சமாதானம் கொள்கிறது மனது .


அந்த வகையில் ஆகச் சிறந்த படைப்பாக வெளியாகி உள்ளது நாடிலி.....


அட்டை படமே சொல்லும் உள்ளடக்கத்தை ...அருமையாக வடிமைத்த ஜெய ஸ்ரீ  கிராபிக்ஸ் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.


கவிஞனின் ரசனை அறிந்து மிக அழகாக, நேர்த்தியாக வடிமைத்து ...வாம்ம்மா மின்னல் கணக்கா...மிக விரைவாய் வெளியிட்ட கடற்காகம் பதிப்பகத்தாருக்கு நன்றியும் வாழ்த்தும்..


கால் நூற்றாண்டு அகதி வாழ்வில் 

இழந்து போன 

எனது ஊரையும் தெருவையும் 

நினைவுகளில் இயக்கிப் பார்ப்பேன் 

முன்பெல்லாம் 

நினைவுகளில் அவை  அப்படியே தான் இருக்கிறன்றன 

எவ்வித மாற்றங்களும் இன்றி 

இப்போது 

விஞ்ஞானப் புரட்சிகள் 

அனைத்தையும்   அம்மணமாக்கி விடுகிறன்றன 

கடவுச் சீட்டு எடுக்க முடியாத தேசத்தின் 

முகாமிலிருந்து 

கைப்பேசியின்

கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் காணுகின்றேன் 

நான் 

நடந்து திரிந்த குச் ச்சொழுங்கையில் 

சிறுவர்களின் பாதச் சுவடுகளை 

நசுக்கிச் செல்லும் சப்பாத்துக் கால்களை ...


இப்படி ...நூல் முழுக்க அவரின் கனவு தேச ஏக்கங்களை நமக்கு கடத்தி கண்ணீர் வரவைக்கிறார் 


உடனே வாங்கி கண்ணீரை பரிசாக பெறுங்கள்....


சிறந்த கவிஞரான இவர்...சம கால இலங்கை எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி....குணா கவியழகன் போன்றவர்களின் வரிசையில் இடம் பெறுவார் விரைவில் ..


நாம் பேசியது போல சீக்கிரம் ஒரு நாவல் எழுதுங்க தோழர் .....காத்திருக்கிறோம் ...உங்கள் கண்ணீரை எங்கள் கரங்களால் துடைக்க ....


நூலைப் பெற : +91 97903 50714 

விலை: ₹110

நன்றி ...