Friday, May 12, 2023

சாத்தான்களின் அந்தப்புரம்

 சாத்தான்களின் அந்தப்புரம் 



நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதைப் பிரதியினை வாசித்துக் கொண்டிருந்தேன். சற்று ஓய்வறைக்குச் சென்று திரும்புகையில் மனைவி வாசித்துக் கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட சில கவிதைகளை அவரை வாசிக்கச் சொன்னேன். தன்னியல்பாக வரி பிரித்து வாசித்ததைக் கேட்டதும் எனக்கு வியப்பாகவே இருந்தது. அன்பாக முத்தங்களை வழங்கிவிட்டு தொகுப்பை மேலும் வாசித்து முடித்தேன். கிட்டத்தட்ட அத்தொகுப்பு வெளிவந்து பத்தாண்டு ஆகப்போகிறது. ஒரு தொகுப்பு ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் வாசிப்பவருக்கு புதிய அனுபவங்களையும், அதிர்வுகளையும் வழங்கும் எனில் அது சிறந்த படைப்பாகிறது. அத்தகைய படைப்பில் இத்தொகுப்பும் ஒன்று என்றால் மிகையாகாது.


\\உங்கள் நிர்வாணத்தை 

ஒன்றுமில்லாமல் செய்யத் துணிந்த நாட்களில்தான் 

நீங்கள் எங்களை ஒன்றுமில்லாதபடிக்கு 

தள்ளிவைத்து தெய்வமாக்கினீர்கள்//


தாய்வழிச் சமூகத்தை புறந்தள்ளி ஆண்வழிச் சமூகமாக ஆதிக்கம் பெற்ற மேட்டிமைத் தனத்தை, பெண் உழைப்பின் மீதான சுரண்டலை பகடி செய்யும் சிறந்த கவிதை. 


பெண் ஒடுக்குமுறை, பெண் உடல்மீதான அத்துமீறல் என சமூகத்தின் அழுத்தப்படுகள் ஒருபுறம் எனில் வீட்டில் கணவனால், உறவுகளால் ஏற்படும் அழுத்தப்பாடுகள் மறுபுறம் என நைந்துகிடக்கும் மனம் கவிதையாகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது. 


இலகுவான சொற்களும், நல்ல முதிர்ச்சியான சொற்பிரயோகமும் இத்தொகுப்பை சிறப்புறச் செய்கிறது. இவர் பொதுவுடைமை சிந்தாந்தத்தில் ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார் என்பதையும் அறியமுடிவதால் சமூகம் குறித்த அதிலும் சமூகத்தில் பெண்களின் இடம் குறித்த கவனப்படுத்தலை கவிதைகளின் வாயிலாக நம்மோடு உரையாடுகிறார்.

அப்படித்தான் நான் பார்க்கிறேன். 


ஆண் × பெண் ஆண் × ஆண் பெண் × பெண் பெண் × ஆண் என இருமை கொண்ட பழைய வாசிப்பை விலக்கி தனிமனிதர் × பொதுமனிதர் எனும் பார்வையில் வாசிக்கையில் புதிய பார்வைகள் புலப்படுகிறது. திறக்கப்படும் உடல் மற்றும் அண்டங்களின் சக்கரவர்த்தி என்ற கவிதைகள் இதற்குச் சிறந்த சான்றாக அமைகின்றன. திணிப்பு எனும் கவிதை நுகர்வுக் கலாச்சாரத்தை திணிக்கும் விளம்பரங்களை தோலுரிக்கிறது. 


மேலோட்டமாக வாசிப்பவர் கண்களுக்கு இத்தொகுப்பு கணவன் மனைவியின் அல்லது ஒரு ஆண் பெண் ஊடல் மற்றும் கூடல் என்பதாகமட்டுமே தெரியுமெனில் அது அவர்களின் வாசிப்பின் போதாமையாக மட்டுமே கொள்ளப்படும். உடலரசியலின் நுண்ணரசியல் சதிராட்டங்களை சாவதானமாக கவிதையாக்கித் தந்துள்ளார் தோழர் தேவி எனும் நறுமுகை தேவி அவர்கள். 


இது ஒரு புது எழுத்து வெளியீடு.


- சுகன்யா ஞானசூரி

12.05.2023.