Thursday, March 26, 2026

ஆயுள் ...

ஆயுள்...

பேராசையின் 
கொழுத்த தீயில் 
பற்றியெரிகிறது அகிலம்  
அதள பாதாளம் வரை 
சென்று திரும்பும் 
அதன் நாவுக்கு 
குருதியின் சுவை 
இன்னும் இன்னும் 
தேவையாக இருக்கிறது
சிதிலங்களும் ஓலங்களும் 
நகரும் சித்திரங்களாக 
நடுக்கூடத்தில் வர்ணணைகளோடு 
இரைந்து கொண்டிருக்கிறது.
பாதிப்பின் சாராம்சத்தினைப் பொறுத்து 
சந்தைப் பொருட்களின் 
அத்தியாவசியத்தினைப் பொறுத்து 
உள்நாடு வெளிநாடு எனும் 
புதிய அலகால் அளவிடப்படுகிறது 
போர்.
ஒவ்வொருவர் வீட்டுச் 
சமையலறையிலும் இப்போர் 
பெருந்தாக்கம் செலுத்தத் துவங்கியிருக்கிறது 
பெருந்தொற்றுக் காலத்தின் 
முற்றடைப்பினைப் போன்றதொரு 
பேரவலத்தின் அபாயச்சங்கொலி 
மெல்ல மெல்ல எழுகிறது.
இன்னும் நாம் வரிசையில் 
முண்டியடித்துக் கொண்டிருக்கிறோம் 
அகிலத்தின் மூலை முடுக்கெங்கும் 
நீதியின் முழக்கம் விண்ணை முட்ட 
தெருவில் இறங்குங்கள் 
தோழர்களே செங்கொடியோடு‌
மிச்சமிருக்கும் இந்தப் பூவுலகின் 
ஆயுள் 
நம்மால் மட்டுமே கொஞ்சம்‌
நீள்ஆயுள் பெறும்.

- சுகன்யா ஞானசூரி 
26.03.2026