Tuesday, July 9, 2024

சீராளனுக்கு வழங்கப்பட்ட சீர்மிகு விருதும் சீராளனின் சீரான செவ்வியும்

 



சீராளனுக்கு வழங்கப்பட்ட சீர்மிகு விருதும் சீராளனின் 

சீரான செவ்வியும்

– சுகன்யா ஞானசூரி.


இரா. விஜயன் அவர்களால் எடுக்கப்பட்ட நேத்தாஜி முதல் பொதிகைச் சித்தர் வரை எனும் செவ்வி பல்வேறு திறப்புகளையும், புதிய தேடுதல்களையும் மேற்கொள்ளச் செய்யும் அற்புதமான நூல். சீர் வாசகர் வட்டம் வழங்கிய சீர் விருது நிகழ்வில் அனைவருக்கும் இலவசமாக வழங்கபப்பட்ட சிறு பிரதி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு இணையாக நாற்பத்தெட்டு பக்கங்களில் அளவான கேள்விகளால் நிறைவானதும், தெளிவானதுமான பதில்களால் அமைந்திருப்பது சிறப்பு. அன்றைய நாளில் இரவுப் பணி என்பதால் நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. ஆனாலும் தோழர் அரசெழிலன் அவர்கள் இந்நூலினை எனக்கு அனுப்பித் தந்தார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

இந்நூலினை இன்று (09.07.2024) வாசித்து முடித்தபோது அரைநூற்றாண்டுக்கு முன்னால் நானும் பயணித்து திரும்பியதைப் போலிருந்தது எனலாம். (ஏற்கனவே பேராசிரியர் வீ.அரசு அவர்கள் எழுதிய தோழர் பொதிய வெற்பனின் அரை நூற்றாண்டுப் பயணம் எனும் குறுநூலும் உண்டு. இது உலகத் தமிழ் பண்பாட்டு மையம் விருது அமைப்புக்கு வீ.அரசு அவர்கள் எழுதிய கடிதம் என்பதும் அறிய முடிகிறது பக்கம்: 48). பல தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், தொடர் செயல்பாடுகள், வெளியீடுகள், தோழமைகள், முரண்பாடுகள், போராட்டங்கள் என பல்வேறு விடையங்களை நதியின் போக்கில் சொல்லிச் செல்லும் பொதி அய்யாவின் நினைவாற்றல் மலைப்பாக இருக்கிறது.

முனைவன் இதழ் ஆரம்பித்து சிலிக்குயில் வரையில் அவரது செயல்பாடுகள் இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் எனலாம். ஈழத்து படைப்புகளை அறிமுகம் செய்ததில் சிலிக்குயிலின் செயல்பாடு அளப்பரியது. ஜெயமோகன் உடனான கடிதப் போக்குவரத்து பக்:25, ரவிக்குமார் உடனான முரண்பாடு பக்:24, அ.மார்க்ஸின் இஸ்லாமியச் சார்பு, பொதியின் சித்தர் நிலைப்பாடு என பல்வேறு அம்சங்களுடன், புதுமைப் பித்தனைக் கண்டடைந்ததும், பிரேமிளை கண்டடைந்ததும், அருட்பா மருட்பா யுத்தத்தின் பின்னணியும், இலக்கிய ரசனையும், விமர்சனமும், விண்ணப்பித்துப் பெறும் விருதுகளுக்கு கண்டனம் செய்து சுயமரியாதை அரசு இந்த நிலையை மாற்ற வேண்டும் என குரல் கொடுத்ததும், கலைஞரின் எதிர்பார்ப்பும், ஆனைமுத்து அய்யாவின் பதிலும், தமிழ்தேசியம், பொதுவுடைமை, தலித்தியம், திராவிடம் என பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளும், அவற்றின் முரண்பாடுகளும் என பல்வேறு விடையங்களை தெளிவான பார்வையில் முன்வைக்கிறார். தமுஎகச அமைப்பிலிருந்து வெளியேறியபோது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியது. தொகை நூல்களின் பெரும்பணி அளவிட முடியாத ஒன்று.     

கடந்த காலத்தை வாசிப்பதும், சமகாலத்தை வாசித்து எழுதுவதும் எதிர்காலத்தில் பேரும் புகழோடும் இருப்பதற்கு மட்டுமல்ல. இப்புவி இன்னும் எத்தனை காலங்களுக்கு இருக்கும்மட்டும் நம் மொழி, பண்பாடு, வாழ்வியல் என்பன மீட்டுருவாக்கம் செய்ய ஏதுவாக அமையும். அந்த மொழி சீரும் சிறப்புமாக அமையும் என்பதன் பொருட்டுமே என்பது என் எண்ணம். இப்படியான ஒரு விடையத்தையே பொதி அய்யா எவ்வித சமரசமும் இன்றி செயல்படுத்தி வந்துள்ளார். இவரைப் போன்றவர்கள் இப்போது சொற்பமே.

படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் கல்விப்புலம் எவ்வாறு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. கல்விப் புலங்களில் இருப்பவர்கள் செய்ய வேண்டியவற்றை தனி ஒருவனாக பொதி அய்யா செய்திருக்கிறார். இந்நூலில் கல்விப்புலத்தில் சூது, வாதோடு செயல்பட்டவர்களை சுட்டிக் காட்டவும் தயங்கவில்லிலை.

தோழர் பொதிய வெற்பனின் அரை நூற்றாண்டுப் பயணம் நூல் குறித்து நான் முன்னர் சொல்லியது போலவே “எந்த ஒன்றிற்குள்ளும் அடைக்க முடியாத பேராளுமை” என்பது போலவே. சீராளனுக்கு வழங்கப்பட்ட சீர்மிகு விருதும் சீராளனின் சீரான செவ்வியும் என்பதும் இந்நூலுக்கு பொருத்தமாகிறது. நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

 

வெளியீடு: சீர் கலை இலக்கிய விழா 2024 சிறப்பு வெளியீடு

விலை: ரூபாய் 30