Sunday, February 2, 2020

தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்- ஓவியர் புகழேந்தி



2006 ல் முதல் பதிப்பு கண்டு, 2018ல் ஐந்தாம் பதிப்பாகவும் திருத்தப்பட்டும், விரிவுபடுத்தப்பட்டும் வந்திருக்கும் தொகுப்பு. ஒரு ஓவியன் தூரிகைகளால் தற்சமயம் இழந்து போன ஒரு தேசத்தை எழுத்தின்வழி ஆவணப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தில் இருந்து தமிழீழத்திற்குப் பயணப்பட்ட ஓவியர் தான் கண்டதையும் தன்னைக் கண்டதையும் தொகுப்பாக்கித் தந்திருப்பது பொய்மைகளற்ற நேரடிச் சாட்சியம்.

"ப்ராஜெக்ட் பேக்கன்" திட்டத்தின்படி 2009 ல் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ அரசாங்கத்தின் அத்தனை கூறுகளையும் 2004ல் முதன்முதலாகப் பயணப்படும் ஓவியர் புகழேந்தி அவர்கள் மீண்டும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓவியம் பயிற்றுவிக்க செல்வதும் தமிழீழ நிலமெங்கும் ஓவியங்களை காட்சிப்படுத்துவதும், ஓவியங்களை பார்வையிட்ட போராளிகள், பொதுமக்கள், மாணவர்கள் எழுதிய குறிப்புகள் என ஒவ்வொரு ஊர்வாரியாக பதிவு செய்துள்ளார். இவர்களில் யாரும் உயிரோடு இருப்பார்களா? காணாமலாக்கப்பட்டவர்களுக்குள் இருப்பார்களா? என்பதை நினைக்கும்போது மனசு கனதியாகிறது. பெரும்பாலான போராளிகளும், தளபதிகளும், இல்லை என மனம் நம்ப மறுக்கிறது.

1943ல் மா வோசேதுங்கின் சென்சேனைப்படை யேனான் பகுதியையும், 1974ல் எரித்திரியா விடுதலை இயக்கம் அஸ்மாறா எனும் தலைநகரையும் இழந்து பின் மீட்டெடுத்த வரலாறு போலத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ் மண்ணை இழந்து பின்னர் படிப்படியாக வெற்றிகொண்டு வரும் சந்தர்ப்பத்தில் சமாதானத்தின் பெயரால் வேவு பார்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்டு நந்திக்கடலில் தோற்கடிக்கப்பட்டார்கள். தோற்கடிப்பின் பின்னால் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் மட்டுமல்லாது எமது மக்களின் சாதிய மனோபாவமும், பிறர் பிள்ளைகள் களமாட தம்பிள்ளைகள் காப்பாற்றும் முகமாக மக்கள் மனம் மாறியதன் பின்னணிகளும் முக்கிய பங்காற்றியுள்ளன. நாம் நிலமிழந்து, நாடிழந்து ஏதிலிகளாக இருக்கும் இந்நேரத்தில் தனித்துவமான வரலாறிழந்து போய்விடும் துயரார்ந்த சூழலில்தான் அரசமைப்புகளும் சமூகச் சூழலும் நிறுத்தியிருக்கிறது.

விழிநீரைச் சுண்டிவிடும் விரலாக ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள் தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலில் தமிழீழ அரசாங்கத்தின் அத்தனை துறைகளையும் பற்றி துறைசார்ந்தவர்களோடு நேரடியாக உரையாடி அவற்றைத் தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாகச் சென்று அவற்றின் களநிலவரங்களையும், நிலக்காட்சிகளையும், வளங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். வரலாற்றுப் புரட்டுகளுக்கு இடமளிக்காதபடி தேதி, மாதம், ஆண்டு விபரங்களோடு பல்வேறு போராட்டங்களையும், நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தியுள்ளார். மணலாறு விஜயனின் "மெளனப் புதைக்கழிக்குள்"  நூலை ஓவியர் வாசிப்பதனூடாகவும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகளை வெளியுலகிற்கு காட்சிப்படுத்துகிறார். பெரும்பாலும் பொதுவெளிக்கு வராத படுகொலைகள் பலவற்றை இந்நூல் வழி அறியத்தருகிறார். நாவலுக்குள்ளும் செல்லாமல், பயணக் கட்டுரைக்குள்ளும் செல்லாமல் புதிய வடிவொன்றில் இந்நூல் வந்துள்ளது.

ஒவ்வொன்றையும் நான் இங்கே விவரித்து எழுதிவிட்டால் அதுவொரு நூலாகிவிடும் அபாயமிருப்பதால் சுருக்கமாக எழுதிவிடுகிறேன். நான் எழுதுவதைக் காட்டிலும் ஒவ்வொருவரும் இந்த நூலை வாசித்தால் மட்டுமே உங்களால் நிதர்சனத்தினை தரிசிக்க முடியும். இப்படியான ஒரு நூல் எம்மிடம் இருக்கிறதா என்ற கேள்விக்கு கேள்வியோடு நிற்காமல் பதிலளிக்கும் முகமாக ஆவணமாக்கி அனைவர் முன்னும் தந்திருக்கிறார்.

எப்போதும் அலைபேசியில் உரையாடும்போது ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள் ஒன்றைச் சொல்லி மனம் வெதும்புவார். எந்த தமிழகம் விடுதலை வேட்கையோடு செயல்பட்ட புலிகளை ஆதரித்ததோ அதே தமிழகத்தில் புலிகளை கொச்சைப்படுத்தி எழுத களம் அமைத்துத் தருகிறார்கள். இது தெரியாமலே பலர் இந்த புதைக்குழிக்குள் வீழ்ந்துகிடக்கின்றனர். ஆயிரம் கைக்கொண்டு தடுத்தாலும் சூரியனை மறைத்திடத்தான் முடியுமா? என்பார். உண்மைதானே? சமீபத்தில் நடந்துமுடிந்த சென்னை புத்தகச் சந்தையில் எதிரும் புதிருமாக எழுதிவந்த ஈழ எழுத்தாளர்கள் ஒன்றாய் நின்றிருந்த காட்சியை காண நேர்ந்தது. இதுவொரு நல்ல முன்னேற்றம்தான். இவர்கள் ஒன்றாகியது கண்டு கிண்டலாகவும், தூற்றியும் எழுதியவர்களையும் காணமுடிந்தது. "நாம் ஒன்றாதல் கண்டு எம் பகைவர் எங்கோ மறைந்தனர்" என்ற கவிஞரின் வரிகளே நினைவிற்கு  வருகிறது.

வெற்றிபெற்றவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள். அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தோற்கடிக்கப்பட்டவர்களை மேலும் காயப்படுத்துவதாகவே அமைகிறது. தோற்கடிக்கப்பட்டோர் எழுதும் வரலாறுகள் எப்போதும் அனைவருக்குமானதாக அமையும். நாம் நம் வரலாறுகளை மீட்டெடுக்க இதுபோன்ற ஆவணங்கள் இன்றியமையாத ஒன்று. ஈழவரலாற்றில் புலிகளின் தமிழீழ அரசின் வரலாற்றை அறிந்துகொள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய அவசியமான நூல் இதுவென்பேன்.

- சுகன்யா ஞானசூரி
02/02/2020

பதிப்பகம்: தோழமை
விலை: 400.