Friday, October 23, 2015

இதழியல் முன்னோடியும் எனது பின்(னோ)னூட்டமும்!

இதழியல் முன்னோடியும் எனது பின்(னோ)னூட்டமும்!
                                    
                        - சுகன்யா ஞானசூரி.

      உரைநடைக் கவிஞன், புதுமைகள் புகுத்திய புதுக் கவிஞன் என இன்றுவரை பாரதியை அறிந்தேன்.பாரதிதான் இன்றைய இதழியல்களுக்கெல்லாம் முன்னோடி என்பதை இப்போதுதான் அறிய முடிந்தது. துபையில் வசித்து வருகின்ற அய்யா கிருஷ்ணசாமி இராமதாசு அவர்கள் பி.டி.எப் எனும் ஒளிப்பட வடிவில் என் மின்னஞ்சலுக்கு அனுபியிருந்த "இதழியல் முன்னோடி எங்கள் பாரதி" எனும் நூல் வழி...... பாரதியின் 115 வது பிறந்தநாள் பரிசாக மணிமேகலைப் பிரசுரம் பதிப்பித்திருக்கும் பொக்கிசம். இந்தப் பரிசைப் பெற பாரதி உயிருடன் இருந்திருந்தால் எப்படி உவகை கொண்டிருப்பான். அளவிட முடியாதது. காலம் கடந்த வாசிப்பு; ஆனால் கதைப்பதற்கு ஏராளம்........ படித்து முடித்ததும் நெஞ்சு கனத்துப் போனது.....

      1904 நவம்பர் மத்தியில் ஆரம்பித்து (சுதேச மித்திரன் சென்னை) 1920 நவம்பரில் மீண்டும் அதே சுதேச மித்திரன் சென்னை பதிப்பில் பணியாற்றிய காலத்திற்கு இடையில் நிகழ்ந்த பாரதியின் இதழியல் பணிகள் தொடர்பான அரிதிலும் அரிதான ஆய்வுத் தொகுப்பு. இலங்கையைச் சேர்ந்த ஆய்வறிஞர் தமிழ்மணி மானா அவர்களது அற்புதப் பணியால் கிடைத்த அரிய பொக்கிசம். பாரதி பணியாற்றிய ஒவ்வொரு இதழும் அவனது கனவுகள், தொலைநோக்குப் பார்வைகள், அர்ப்பணிப்பு, தரம் என நீளம்.....

       ஈழத்தை சிங்களத் தீவென பாடியதிலும், இந்தியை அனைவரும் ஒருமித்த பொது மொழியாக கற்க வேண்டுமென கூறியதாலும் பாரதியிடம் நான் முரண்பட்டு நின்றேன். அவன்மீது எனக்கு அடக்கமுடியாத கோபம் இருந்தது. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்றவனா இப்படி உரைத்தான்? புதுக்கவிதைகளின் முன்னோடி, முண்டாசுக் கவிஞன் இவனா இப்படிக் கூறியது என்ற கோபமே இதுநாள்வரை என்னுள் இருந்தது. தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் நேசிக்கும் ஒருவனுக்கு இந்த வரிகள் கோபத்தை தருவதில் வியப்பொன்றும் இல்லைதானே. என்செய்ய அவன் கக்கிவிட்டுச் சென்ற கோபம்தானே இங்கு எச்சமாய்த் திரிகிறது.

       ஒரு பத்திரிகை நடாத்துவது அவ்வளவு சாமானியமான வேலை இல்லை என்பது பாரதியைப் படித்தவர்கள், அதிலும் இந்த நூலை வாசித்தவர்கள் புரிந்து கொள்வர். பத்திரிக்கைத் துறை பாரதியின் கனவுத் துறையெனில் மிகையில்லை. அனல் கக்கும் எழுத்துகளால் இந்த அடிமை தேசத்தை விடுதலை நோக்கி நகர வைத்தவனை இறந்த பின்பு இடுகாடு கொண்டுசெல்ல ஒரு சிலரைத் தவிர (20 அல்லது 23 நபர்கள்?) யாரும் வரவில்லை என்பது வேதனை. அதிலும் பத்திரிகை துறையில் உள்ளவர்கள் வராமல் போனது அவமானம். பெருமாள் முருகனுக்கு விடப்பட்ட மிரட்டல், கன்னட எழுத்தாளன் கொலையென இன்றும் எதிர்ப்புத் (வலைத்தள போராளிஸ் தவிர்த்து) தெரிவிக்க மறுத்துதானே வருகிறார்கள் சக எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும். இறந்துவிட்ட காக்கையை சூழ்ந்துகொண்டு கரைந்து கரைந்து தங்களின் துக்கத்தை, ஒற்றுமையை, இருப்பைக் காட்ட சக காக்கைகள் மறப்பதில்லை. மனித இனம்?

        பாரதியின் வாழ்வில்தான் எத்தனை இன்னல்கள்?  39 ஆண்டுகால வாழ்க்கைக்குள் எவ்வளவு அறிவுப் பொக்கிசங்களை யாத்துள்ளான். வறுமைப் பிடியிலும் தன் எழுத்தின்பால் தீராக் காதல் கொண்டவனிடம் எழுத்தை விற்கும் வியாபார எழுத்தாளர்கள் கற்கவேண்டியது நிரம்ப..... பெண்ணியம், கல்வி, ஆன்மீகம், விடுதலை வேட்கை, மொழிபெயர்ப்பு என அத்தனை இதழ்களிலும் முன்னோடியாய் தடம் பதித்துள்ளான். பாரதி எழுத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் அவன் மனைவி செல்லம்மாவுக்கு நன்றி கூறுவதையும் மறந்துவிடக் கூடாது. தலைமறைவு வாழ்க்கையிலும் தளராது எழுதிட மறுப்புக் கூறாத மனைவி செல்லம்மாவுக்கு நன்றி கூறுவதில் தவறில்லையே?

        ஆங்கிலம், சமசுகிருதம், இந்தி, பிரஞ்சு மொழிகளில் புலமை பெற்று இருந்தாலும் பாரதி தமிழ் மொழியின் அவசியத்தை, தாய்மொழிக் கல்வியின் அவசியத்தையும் (இன்றைக்கு உள்ளவர்களைப் போல் வெளியில் ஒரு மொழியை எதிர்ப்பதும் தமது வாரிசுகளுக்கு உள்ளுக்குள் அந்த மொழியை கற்பிப்பதும் இல்லாதவன்) உயர்த்திப் பிடித்ததால் என் மனதுக்குள் சம்மணம் போட்டு அமர்ந்துவிட்டான். தன் தமிழ் உரைநடையில் பிறமொழிக் கலப்பின்றிப் பார்த்துக் கொண்டதால் தமிழ்த்தாயின் தலைமகன் என்பது பொருத்தமே. பாரதியை விமர்சனம் செய்தவர்கள் பின்னாளில் பிரபல்யம் பெற்றவர்களாக உருவானதையும் அறியமுடிகின்றது. அதுதான் பாரதியின் எழுத்துநடை.

      1910-14 வரையான காலத்தில் கடுமையான வறுமையில் வாடினாலும் பாரதியின் எழுத்துகளுக்கு வறுமையில்லை. இறப்பதற்கு முன்பும் அன்பர் நீலகண்ட பிரம்மசாரியிடத்து "அமானுல்லா கானை" (ஆப்கானித்தான் அரசன்) பற்றி ஒரு கட்டுரை எழுதி நாளை ஆபிசுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என கடமை தவறாத மகாகவி உறங்கியவன் எழவேயில்லை. "அமிர்தம்" "சித்திராவளி"(கேலிச் சித்திர இதழ்) கனவு இதழ்களைத் துவக்குவதற்கும் விடுதலை தேசத்தை கண்குளிரக் காண்பதற்கும் அந்த மகாசக்தி வல்லமை தரவில்லையே.... காலன் அழைத்துச் சென்றுவிட்டான்......அவனுக்கும் பாரதிமேல் கொள்ளை ஆசை போலும்.

            பாரதியின் உடல் இந்த மண்ணை விட்டுப் பிரிந்தாலும் இன்னும் உயிர்ப்புடன்தான் உலவுகிறான் எழுத்துகளினூடே.......

                                 =====  +  =====

நூல் : இதழியல் முன்னோடி எங்கள் பாரதி

ஆசிரியர் : தமிழ்மணி மானா (இலங்கை)

பதிப்பு : மணிமேகலைப் பிரசுரம் (லேனா தமிழ்வாணன்)

பதிப்பு ஆண்டு : 1997

விலை : ரூ. 17/-

(பின் குறிப்பு : இது எனது வாசிப்பு அனுபவம் மட்டுமே) 
--

No comments:

Post a Comment