Friday, October 23, 2015

எங்கதெ-நாவல் வாசிப்பு அனுபவம்

"எங்கதெ" நாவல். ஆசிரியர்: இமையம் (இயற்பெயர்: அண்ணாமலை).
ஆண் பெண் உறவுகளில் எழுகின்ற உணர்வுகளையும், அது சார்ந்த பிரச்சினைகளையும் கடலூர் வட்டார மொழியோடு பேச்சு வழக்கில் விநாயகம், கமலா உறவின் நிலைகளைச் சொல்லிச் செல்கிறது. விநாயகத்தின் மனநிலை இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்குள் இல்லாமல் இருக்காது... இன்றைக்கு செய்தித் தாள்களில் அதிக இடத்தை ஆக்கிரமிக்கின்ற செய்திகளே இக்கதையிலும் நிகழ்கிறது... அதேபோல கணவனற்ற பெண் இரு பெண் குழந்தைகளோடு இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், மேலதிகாரிகளின் பாலியல் ரீதியான நெருக்குதலால் எத்தகைய அவமானங்களை சுமக்கிறார்கள்.....ஆண் அனைத்தையும் எளிதாகவே கடந்து செல்கிறான்....நெருடலாகவே உள்ளது... கமலாவைப் போலல்லாது எவ்வித ஆணின் வாசனை நுகராது சாதிக்கின்ற பல பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. காலத்தே பயிர் செய்திருந்தால் விநாயகம் சரியான தடத்தில் பயணித்திருக்கக் கூடும். முடிவை வாசிப்பாளர் எண்ணத்துக்கு விட்டுவிட்டார்.
கிராமங்களுக்கும் நகரங்களுக்குமான வாழ்க்கை நிலை உண்மையை உரக்கச் சொல்கிறது. கையாலாகாதவன் மன நிலையை இதைவிட வேறு எப்படி விவரித்திட முடியும்.... இறுதி முடிவை எடுக்கும் கணத்தில் விநாயகத்தின் மனதுக்குள் எழுகின்ற குடும்பம், தெரு, மக்கள், கிராமத்தின் அழகென மீண்டும் ஒருமுறை பார்த்துவிட மனம் துடிக்கிறது... பின்னாலான அதன் வெறுமைகளும் விநாயகத்தைப் போல் நம்மையும் ஆட்கொண்டு விடுகிறது.

(பின்குறிப்பு: இது வாசித்த எனது எண்ணமே தவிர விமர்சனம் கிடையாது. இந்த நாவலை வாசிக்கச் சொல்லி கொண்டுவந்து தந்துதவிய மார்கண்டன் முத்துச்சாமி, பெரம்பலூர் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். கல்குதிரை, உயிர் எழுத்து, உயிர்மை என தங்கள் அறிமுகத்தால் வாசிக்கத் துவங்கியிருக்கிறேன். நன்றி ஐயா...)

- சுகன்யா ஞானசூரி,
20/09/2015.

No comments:

Post a Comment