Friday, October 23, 2015

ஐன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்-கவிதைத் தொகுப்பு

ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்-வைகறை

ஒரு வாசிப்பாளனின் பார்வையில்.....

கவிஞர் வைகறை அண்ணன் அவர்களுடனான எனது அறிமுகத்தை முதலில் சொல்லிவிட்டு நூலின் உள்ளே செல்வதே உசிதமாகும்.
ஆகத்து (07/08/2015) மாதம் 7ம் திகதி கவிஞரும் எனது நண்பருமான ஈழபாரதி அவர்களது இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அப்போதுதான் நண்பர் ஈழபாரதி கவிஞர் வைகறை அண்ணன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர் நீண்டகாலம் என்னோடு பளகியவரைப்போல் கதைத்துக் கொண்டிருந்தவர் சட்டென்று ஒரு நூலை கொடுத்து இதை வாசித்து உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் என்று கொடுத்ததே ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்காப்படுகிறான் கவிதை தொகுப்பு. மிக நேர்த்தியான வடிவமைப்பு.

நூலைப் பற்றி...........

ஜெய்குட்டி தான் இந்த நூலின் அத்தனை கவிதைகளிலும் நாயகன். ஒவ்வொரு கவிதையிலும் ஜெய்க் குட்டி நம் இல்லத்து குழந்தையாகவே வலம் வருகிறான் கவிதைகளை வாசித்து முடித்த பின்னரும். ஒவ்வொரு வீட்டிலும் நிரல்யா (என் செல்ல மகளது பெயர்), நவீன், தமிழ் என ஜெய்குட்டி போல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எல்லாராலும் குழந்தைகள் கொண்டாடப் படுகிறார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். குழந்தைகளை கொண்டாடச் சொல்கிறது இந்த நூல். குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் குழந்தைகளை கொண்டாட மறந்து விடுகிறோம் என்பதை ஒவ்வொரு கவிதையும் உணர்த்திச் செல்கிறது.

குழந்தை இலக்கியம் படைக்கும் எத்தனை கவிஞர்கள் தம் குழந்தைகளை பாடியிருகிரார்கள்? தம் மகனை இந்தக் கவிதைகளினுடாக வைகறை அண்ணன் கொண்டாடிவிட்டார் என்றால் மிகையில்லை. இந்த தொகுப்பு நவீன குழந்தை இலக்கியம் என்பதும் சரியே.கவிப் பேராசான் மீரா அவர்களுக்கு அடுத்தபடியாக தம் பிள்ளையை பாடிய கவிஞர் என்ற பெருமை பெற்றுவிட்டார். பிள்ளைகளைக் கொண்டாடும் பெற்றோராக இருந்தால் நிச்சயம் பிள்ளைகள் பெற்றோரைக் கொண்டாட மறக்க மாட்டார்கள்.

கவிதைகளைப் பற்றி.....

தூத்துக்குடி மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் கவிஞர் கொஞ்சக் காலம் தருமபுரியின் ஒரு மலைக் கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். அந்த சூழல் அவரது ஜெய்க் குட்டிக்கு ஒவ்வாமையை கொடுத்திருக்கிறது. அதில் எழுந்த வரியாகவே நான் இதைப் பார்க்கிறேன். நுழை வாயிலேயே நம்மை ஆவலோடு அடுத்த பக்கத்தை புரட்ட வைக்கிறான் ஜெய்க் குட்டி. கவிஞர் இங்கேயே வெற்றி பெற்றுவிட்டார்.

அடர்வனம்
உள்நுழையத் தயங்கும் ஜெய்க் குட்டி
புரட்டுகிறான் அடுத்த பக்கம்.....

கூண்டுக் கிளியை திறந்துவிட்ட ஜெய் குட்டி மகிழ்ச்சியில் பறவை பறந்த வானத்தை பார்த்து புன்னகைக்கிறான். ஜெய் குட்டியின் பார்வையின் விசாலத்தை கவிஞர் அழகாய்ச் சொல்கிறார்,

முற்றத்திலிருந்து
வானம் பார்க்கிறான்
அங்கே
விரியத் தொடங்கியிருந்தது
அவன் புன்னகைக்கும் ஒரு சிறகு.....

வண்ண மீன்களைப் பார்த்து இரசிக்கும் ஜெய் குட்டியின் கண்களை தொட்டிக்கு அப்பால் இருந்து பார்க்கும் கவிஞர் இப்படி விவரிக்கிறார்,

எனது வண்ணமீன் தொட்டிக்குள்
இன்னும்
பயணித்துக் கொண்டுதானிருக்கின்றன
கூடுதலாய் ஒரு ஜோடி
கருப்பு வெள்ளை மீன்கள்!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததே உப்பு மூட்டை சுமத்தல் மற்றும் யானை சவாரி. அதிலும் தந்தையின் முதுகில் யானைச் சவாரி எவ்வளவு மகிழ்வைத் தரும் அந்தக் குழந்தைக்கு. ஜெய் குட்டியும் அப்படித்தான் சவாரி செய்கிறான். வலியெடுத்த தந்தையின் காலுக்கு ஜெய் குட்டியின் அன்பு முத்தமே வலி நீக்கும் மருந்தாகிறது,

யானை ஏறி மகிழ்கிறான்
என் முட்டி வலிக்க வலிக்க,
நிறைவாய் வைக்கிறான் முத்தமொன்றை
என் வலியின்மேல் மலரென.

கவிஞரின் கவிதை தாகத்தை இந்த ஜெய் குட்டி இப்படிக் கிளறிக்கொண்டே இருக்கிறான் பாருங்கள்,

புரட்டிக் கொண்டிருந்தான் ஜெய்குட்டி
ஒரு புத்தகத்தை.......
...........     ...................
ஓடிவரும் ஜெய்குட்டியை
வாரியணைத்து முகர்ந்து பார்க்கிறேன்
எழுத்துகளின் வாசனையை
இன்னும் சில கவிதைகளுக்காக!

குழந்தைகளின் உலகம் விசித்திரமானது, விசாலமானது, ஒளிவு மறைவற்றது. அவர்களது உலகை நாம் உணரத் தொடங்கி விட்டால் அதை விட்டு வெளிவர மனம் ஒப்பாது. ஜெய்குட்டியின் தோழி ஜெனி. ஜெனி குடும்பம் வீடு மாறிய பின்பு வேறொரு குடும்பம் அங்கு குடியிருக்க வருகிறது. வந்த குடும்பத்தில் குழந்தை இல்லை. எப்படி ஜெய்குட்டி எதிர்கொள்வான்? கனக்கும் வரிகளால் கவிஞர் அதை தருகிறார்,

இனி ஜெய்குட்டிக்கு அதிகரிக்க கூடும்
பக்கத்து வீட்டின் தூரம்....

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெரும்பாலும் பதில் சொல்ல முடிவதேயில்லை. அப்படித்தான் கவிஞருக்கும் ஒரு அனுபவம் நிகழ்ந்திருக்கிறது,

பதில் சொல்லத்
தாமதப்படுத்துவதன் மூலம்
தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன்
ஒரு தோல்வியை.......

குழந்தை அன்பாய்க் கொடுக்கும் முத்தங்களில்தான் எதனை எதனை இன்பம். நம்மை நாமே மெய் மறந்து விடுவோம். கவிஞரும் அப்படித்தான் இரண்டு முத்தங்களை வாங்கியதில் வானமாகவும் கடலாகவும் நிறைவாகக் கவிதையை முடிக்கிறார்,

நிறைந்து கிடக்கிறேன் நான்
பாதி கடலாகவும்;
பாதி வானமாகவும்;
இரண்டே இரண்டு முத்தங்களால்.

ஜெய்குட்டி கவிதைகளால் மனதை நிறைத்து விடுகிறான். குழந்தைகளைக் கொண்டாடுவோம் வாருங்கள். என் நிரல்யா குட்டியை கொண்டாட நான் கிளம்பிவிட்டேன். நீங்கள்?

ஆசிரியர்: வைகறை

வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்,
                    பிள்சின்னாம்பாளையம்,
                    சமத்தூர்-642123,
                    அழைக்க: 90955 07547; 98422 75662.

விலை: ரூபாய் 50/=

ஆசிரியரின் பிற படைப்புகள்: ஒரிஜினல் தாஜ்மஹால்(2008)
                                                    நிலாவை உடைத்த கல் (2012)
இது இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு.

நந்தலாலா.காம் எனும் இணைய இதழையும் நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment