Sunday, October 25, 2015

லிமரைக்கூ கவிதைகள் நிரல்-2


24.

தெய்வங்கள் கேட்டதா பலி?
படையலும் பந்தியுமாய் கொடையிட்ட மக்கள்
மனங்களில் இல்லை வலி!
25.
விநாயகர் ஊர்வலத்தில் கலவரம்
போதையில் பாதை மாறிய இளைஞர்கள்
இதுவே உண்மை நிலவரம்!
26.
இன்னும் நீளுது வறுமை
மக்களின் வரியில் ஆடம்பரச் செலவுகள்
அரசின் கஜானா வெறுமை!
27.
தமிழகத்தின் சிறப்பு முகாம்
அகதிகள் நலனில் அக்கறையற்ற
அரசின் இன்னொரு முகம்!
28.
சம்மதத்திற்கான அறிகுறி
சொல்லியது நாணல் கொண்ட
பெண்ணின் முகக்குறி!
29.
பேருந்தில் இருந்த ஓட்டை
பெண் விழுந்த அவலக் காட்சி
கேவலமாக்கியது அரசு நாட்டை!
30.
குழந்தைகள் மரணம்
அரசைத் தவிர மக்களுக்கு
ஆறாத இரணம்!
31.
உழைப்புக் கேற்ற ஊதியம்
எந்தத் துறையிலும் இதுவரை கிட்டவில்லை
சங்கங்கள் அரசுடன் மோதியும்!
32.
காட்டாறாய் வரவில்லை காவிரி
கடமைடைவரை நீரில்லை; பயிரிட்ட கழனி
பூண்ட கோலமோ தலைவிரி!
33.
தெருவுக்குத் தெரு கட்சி
தெளிவற்ற கொள்கை; மலிவான அறிக்கை
இதுதான் மக்கள் ஆட்சி!
34.
சொகுசாய்ச் செல்கிறது பயணம்
விபத்துகள் நேர்வது சகஜம்; நாற்கரச்
சாலை தந்த உபயம்!
35.
புத்தம் சரணம் கச்சாமி
காணி நிலத்தினில் இலட்சம் தமிழரைக்
கொன்றழித்துப் போட்டது ஏன்சாமி!
36.
மக்கள் கூட்ட நெரிசல்
சல்லாபம் தேடும் பொல்லாத
வக்கிர உடல்களின் உரசல்!
37.
மரங்கள் இல்லை காட்டில்
வனப்பாய் இருக்கிறது வண்ணக் குரோட்டன்கள்
வனத்துறை அமைச்சரின் வீட்டில்!
38.
பறித்த மலர்கள் கட்டிலில்
விடிந்ததும் முடிந்தது வாடிய மலர்களை
வீசினர் குப்பைத் தொட்டியில்!
39.
பதுக்கியவருக்கு வழங்கப்பட்டது வாய்ப்பு
முன்வரவில்லை பெயர்ப் பட்டியல் தருவதற்கு
தொடர்கிறது வரி ஏய்ப்பு!
40.
ஆற்று மணல் கொள்ளை
நிலத்தடி நீர் வற்றிய பூமியில்
மூன்று போகமும் இல்லை!
41.
வட்டிக் கடையில் அடகு
மூழ்கியது நகையோடு வைத்த மீனவன்
கடலில் உடைந்த படகு!
42.
மலர் தேடிவந்த வண்டு
கடித்தது ஆத்திரம் கொண்டு தேன்
மலரைச் சூடிய பெண்டு!
43.
உணவுதேடி வருகிறது தேனீ
மலர்களற்ற செடிகள் சுமந்த காணி
நிற்கிறது வெட்கத்தில் கூனி!
44.
எழுதினான் இறுதி மடல்
நிறைவேறாத காதல் நிம்மதியற்று; காதல்
நோய் சுமந்த உடல்!
45.
நடையைக் கட்டின வயல்நண்டுகள்
நாகரிக உலகில் பார்க்க முடிவதில்லை
நாற்று நடும் பெண்டுகள்!
46.
முடித்தார் தலைவர் நடைப்பயணம்
தேர்தலில் வென்றதும் மக்களை மறந்து
செல்வார் இன்ப சுற்றுப்பயணம்!

 - சுகன்யா ஞானசூரி,

No comments:

Post a Comment